Thursday 11 February 2021

சோஹன் சிங் ஜோஷ்

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து:

சில சித்திரச் சிதறல்கள் 26

சோஹன் சிங் ஜோஷ் :


1937 தேர்தல்களில்  வென்ற சிபிஐ சட்டமன்ற உறுப்பினர்

--அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் (2020 டிசம்பர் 27 – 2021 ஜனவரி 2 இதழ்)

            அமிர்தசரஸ் மாவட்டத்தின் ஆஜ்நல்லா தாலுக்கா, சேதன்பூர் கிராமத்தில் 1898 நவம்பர் 18ம் நாள் சோஹன் சிங் ஜோஷ் பிறந்தார். அவரது குடும்பம் கீழ்மட்ட நடுத்தர வகுப்பு ஜாட் சமூகத்தைச்  சேர்ந்த விவசாயக் குடும்பமாகும். தந்தை லால் சிங், தாயார் தயாள் கவுர்.

            சீக்கியர்கள் மத்தியில் குரு சிங் சபா இயக்கம், சமயம் மற்றும் கல்வி சார்ந்த மேம்பாட்டுக்குப் பாடுபட்டது. இதன் பலனாய் சேத்தர்பூரில் நிறுவப்பட்ட தொடக்கப்பள்ளியில் சோஹன் சிங் சேர்ந்தார். பின்னர் கிருத்துவ மிஷனரிப் பள்ளியான மாஜிதா மிஷன் நடுநிலைப் பள்ளியில் கற்றார். 1916ல் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்ற பிறகு அமிர்தசரஸில் உள்ள கால்சா கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் ஏழ்மை காரணமாகப் படிப்பைப் பாதியில் கைவிட்டார்.

பாம்பேயில்

            அப்போது முதல் உலகப் போரால் (1914 –18) பொருளாதார நெருக்கடிகள் வளர்ந்த காலம். சோஹன் சிங்கின் போர்மேன் தொடர்பால் பாம்பேயில் அவருக்கு ஒரு வேலை கிடைத்தது. அங்கிருந்து ஹூப்ளி சென்று ‘எலெக்ட்ரீஷியன் கிளர்க்’ என்ற விநோதமான பணியில் சேர்ந்தார்: பகல் பொழுதில் எலெக்ட்ரீஷியனாகவும் மாலையில் எழுத்தராகவும் பணியாற்றும் வேலை. ஹூப்ளியில் இருந்த மக்கள் சீக்கியர் எவரையும் பார்க்காத காரணத்தால் அவரை சீக்(கியர்) என்பதற்குப் பதில் ’ஷேக்’ என்று அடையாளப்படுத்தினர்.

            பாம்பே திரும்பிய சோஹன் சிங் சீக்கியர்கள் சபாவின் செயலாளர் ஆனார். அப்போது அவர் தினக்கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றியுள்ளார். சில காலத்திற்குப் பிறகு சென்சார் (பத்திரிக்கை தணிக்கை) துறையில் மாதம் ரூ100 ஊதியத்தில் பணி கிடைத்தது; அதன் பலனாய் பல புரட்சியாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் கத்தார் பார்ட்டி முதலானவைகளை அறிந்து கொள்ளும் பெரு வாய்ப்பாக அமைந்தது. (கைப்பற்றப்படும்) அக்கடிதத் தொடர்புகளை யெல்லாம் அவர் படிக்க வேண்டியிருந்தது; பின்னர் அவற்றை அழித்துவிட வேண்டும். தணிக்கைத் துறையின் பணியால் அவர் லாபமே அடைந்தார். 1918ல் அது மூடப்பட்டு விட்டது.  

            பின்னர் மாஜிதாவில் ஆசிரியர் வேலையில் சேர்ந்தார்.

அகாலி இயக்கத்தில்

            புனித தர்பார் ஸாஹேப் திறவுகோல்களைக் கைப்பற்றிய அரசு அதனை மீண்டும் அவர்களிடம் வழங்க மறுத்தது. இதனால் ‘சாவிக(ளைத் திரும்பக் கொடு) இயக்கம்’ பஞ்சாபின் சீக்கியர்கள் மத்தியில் தொடங்கியது. தன்னெட்ட் என்ற துணை காவல் கண்காணிப்பாளர் அச்சாவிகளை வைத்திருந்தார். சீக்கியர்கள் அதனைப் ‘பந்த்’இன் பிரதிநிதிகளிடம் வழங்கக் கோரினர். (சமஸ்கிருதத்தில் பந்த் எனில் பாதை, வழி எனப் பொருள்படும். ஒரு சமய குருமார் வழியைப் பின்பற்றுபவர்கள் அந்தப் பந்த் பிரிவைச் சார்ந்தவர் என அழைக்கப்படுவர்)

            சோஹன் சிங் பல கண்டனக் கூட்டங்களை ஏற்பாடு செய்து அனல் கக்கும் உரைகளை ஆற்றினார். அவரது அந்த ‘ஜோஷீலா’ (உற்சாகம் நிறைந்த) சொற்பொழிவுகளால் மிகவும் பிரபலமானார். இதனால் அவர் தன்னை ‘ஜோஷ்’ என்று அழைத்துக் கொள்ள, சோஹன் சிங் ‘ஜோஷ்’ ஆனார். இயக்கத்தின் வலிமை காரணமாகச் சாவிகளைக் குருத்வாரா பிரபந்தக் கமிட்டியிடம் அரசு திரும்ப ஒப்படைக்கும் கட்டாயம் ஏற்பட்டது.

            ஜோஷ், சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (எஸ்ஜிபிசி) மற்றும் சிரோன்மணி அகாலி தளத்தின் உறுப்பினர் மட்டுமல்ல எஸ்ஜிபிசியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். பின்னர் அவர் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஆனார்.  

காங்கிரஸ் கட்சியில்

            1920களின் தொடக்கத்தில் இரண்டு முறை கைது செய்யப்பட்ட ஜோஷ், ‘நபா மகாராஜா’ நிகழ்வின் தொடர்பாக 1923 முதல் 26 வரை பல நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்தார். மகாராஜா அகாலிகளுக்கு ஆதரவாக இருந்ததால் பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரைப் பதவியிலிருந்து 1923 ஜூலையில் தூக்கி எறிந்தனர். ஜோஷ் மற்றும் பலரும் சொல்லமுடியாத கொடுமைகளைச் சந்தித்தனர்.  

            விடுதலைக்குப் பிறகு ஜோஷ் காங்கிரஸில் பணியாற்றத் தொடங்கினார். அதனோடு கூட ‘க்ருதி’ (தொழிலாளி) என்ற மாதாந்திர இதழ் வெளியிடும் பொறுப்பையும் ஏற்றார். அந்த இதழை மார்க்சியம் சார்ந்த இதழாக பாங்க் சிங் ‘கனடியன்’, கரம் சிங் சீமா இவர்களுடன் சேர்ந்து 1925ல் சந்தோக் சிங் தொடங்கினார். அதன் முன்னோடிகள் வெளிநாட்டில் இருந்த கத்தார் இயக்கத்தின் வேரடித் தொடர்புடையவர்கள். அந்த வெளியீட்டை ரஷ்யக் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் பத்திரிக்கை ‘பிராவ்தா’ வரவேற்றது. 

            விடுதலை இயக்கத்தில் ‘க்ருதி’ பத்திரிக்கை வரலாற்றுப் பங்களிப்பை ஆற்றியது. இந்தப் பத்திரிக்கையில் இதனோடுதான் பகத் சிங் பல மாதங்கள் பணியாற்றி மார்க்சியத்தின் தொடக்கநிலை அறிமுகத்தைப் பெற்றார்.

‘க்ருதி கிசான் கட்சி’ அமைத்தல்

            சிந்தனைச் சிற்பி ம சிங்காரவேலரும் மற்றவர்களும் 1923 மெட்ராஸில் ‘தொழிலாளர் விவசாயிகள் கட்சி’ (WPP) என்ற அமைப்பை நிறுவி லேபர் கிசான் கெஜட் என்ற இதழையும் வெளியிட்டனர். அதுமுதல் பஞ்சாப் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் அக்கட்சி கிளைகள் அமைக்கப்படலாயின. 1927ல் ஹோஷியாபூரில் ஜோஷ் தலைமையில் க்ருதி கிசான் பார்ட்டி அமைக்கப்பட்டது. 1928 மீரட்டில் நடந்த அதன் அகில இந்தியக் கூட்டத்தில் பஞ்சாப், பாம்பே, பெங்கால், உ.பி. முதலான பிரதேசங்களிலிருந்து சார்பாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சோஹன் சிங் ஜோஷ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் ஆனார்.

            1928 ஆகஸ்ட் 12ல் பஞ்சாபின் அமிர்தசரஸில் க்ருதி தோழர்கள் முன்முயற்சியால் தொழிலாளர் விவசாயிகள் கட்சி அமைக்கப்பட்டது. இதே குழு இதற்கு முன் 1927லேயே தொழிலாளர்கள் மாநாட்டையும் ஏற்பாடு செய்து நடத்தியது. WPP கட்சியின் இரண்டாவது மாநாடு 1928 செப்டம்பர் 29ல் லியால்பூரிலும் மூன்றாவது மாநாடு 1929 மார்ச் 10 அன்றும் நடைபெற்றன. அதில் (எல்லாம் விதிவிட்ட வழி என்ற) ஊழ் கோட்பாட்டை ஜோஷ் கடுமையாக எதிர்த்து உரையாற்றி, போராடி மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை தந்தார்.  

            சோஹன் சிங் ஜோஷ் தலைமை தாங்க WPP கட்சியின் அகில இந்திய மாநாடு கல்கத்தாவில் 1928 டிசம்பர் 21 முதல் 23 வரை நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புடைய மாநாடு அது. அதில்தான் பூரண சுதந்திரம் என்ற கோரிக்கையைக் காங்கிரஸ் கட்சி ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 50ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் பூரண சுயராஜ்யத்தைக் கோரியது. ஓராண்டிற்குள் காங்கிரஸ் கட்சியை அக்கோரிக்கையை ஏற்கச் செய்வேன் என காந்திஜி உறுதிமொழி அளித்தது மட்டுமல்ல, அந்த வாக்கை அவர் காப்பாற்றவும் செய்தார்.

 ‘நவஜவான் பாரத் சபா’ (இந்திய இளைஞர்கள் சங்கம்) அமைப்போடு தொடர்பு கொண்ட சோஹன் சிங், அந்த அமைப்பு சைமன் கமிஷனுக்கு எதிராகத் தொடங்கிய மிகப் பெரும் இயக்கத்தில் பங்கேற்றார். அந்த அமைப்பில்தான் பகத் சிங் ஊக்கமளிக்கும் வகையில் பணியாற்றினார். எனவே பகத் சிங்கை உருவாக்குவதில் ஜோஷ் மிக முக்கிய பங்கு வகித்தார்.

மீரட் சதி வழக்கு (1929 – 33)

நாடு முழுவதிலிருமிருந்து சோஹன் சிங் ஜோஷ் உட்பட கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கத்தின் 32 ஆகப் பெரிய தலைவர்களைக் கைது செய்து மீரட்டில் பிரத்தேகமாகக் கட்டப்பட்ட சிறையில் அடைத்தனர். அவர்களுள் பஞ்சாபிலிருந்து அப்துல் மஜீத் மற்றும் கேதார்நாத் சேகல் இருவரும் இருந்தனர். அந்த நேரத்தில் ஜோஷ்தான் பஞ்சாப் நவஜவான் சபாவின் தலைவராக இருந்தார்.  

தரம்வீர் போல மன்னிப்பு கேட்டுத் தனது விடுதலையை வாங்க விரும்பவில்லை என்று சோகன் சிங் ஜோஷ் தனது அறிக்கையில் தெரிவித்தார். நான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிடுவேன் என்றார். வழக்கு விசாரணையின்போது ஜோஷ் மிக நீண்ட அறிக்கை தாக்கல் செய்தார். 1933ல் விடுதலையான ஜோஷ் மீண்டும் பஞ்சாபில் கட்சிப் பணியைத் தொடங்கினார்.  1934ல் காங்கிரஸ் சோஷலிசக் கட்சியில் சேர்ந்தார். பஞ்சாபியில் ‘பார்பட்’ (விடியல் காலை எனும் பொருள்படும் ‘Parbhat’) என்ற இலக்கிய இதழை வெளியிட்டார், மீரட்டில் இருந்தபோது வங்க மொழியையும் மராத்தியும் கற்றார்.

1937 தேர்தல்களில் எம்எல்ஏ-வாகத் தேர்வு

வரையறுக்கப்பட்ட வாக்குரிமை அடிப்படையில் நடத்தப்பட்ட 1937 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சோஷலிசக் கட்சி மிகப்பெரும் வெற்றி பெற்றது. 11 மாகாணங்களில் ஆறில் மிகப்பெரும் பெரும்பான்மையும் நான்கில் மிகப் பெரிய கட்சியாகவும் உருவானது; இரண்டில் மட்டுமே சிறுபான்மையாக வந்தது.

வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு என்பதை அனைத்து முற்போக்கு அரசியல் கட்சிகளும் எதிர்த்தன. சிபிஐ முழுமையாகச் சட்டபூர்வமான கட்சியாக இல்லாததால் எதிர்ப்புப் போராட்டம் நடத்தும் நிலையில் இல்லை. சுயேச்சையாகவும் காங்கிரஸ் மூலமாகவும் பங்குபெற கட்சி முடிவு செய்தது. பஞ்சாபில் சிபிஐ தலைமறைவாக இருந்ததால் காங்கிரஸ் கட்சி டிக்கெட்டில் தேர்தலில் போரிட்டது.

போட்டியிட்ட ஐந்து கம்யூனிட்டுகளில் நால்வர் காங்கிரஸ் டிக்கெட்டிலும், ஜோஷ், ஆஜ்நல்லா மற்றும் தார்ன் தரண் தாலுக்காக்கள் உட்பட்ட தார்ன் தரண் தொகுதியிலிருந்து ‘கம்யூனிஸ்ட்–சுயேச்சை’யாகப் போட்டியிட்டார்; சுமார் 12ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றார். கேரளா, பெங்கால் மற்றும் சில இடங்களிலும் கம்யூனிஸ்ட்கள் போட்டியிட்டனர். ஜோஷின் வெற்றியைப் பற்றி ‘தி ட்ரிபியூன்’ பத்திரிக்கை, “ஒரு கம்யூனிஸ்ட் பஞ்சாபின் ஆகப் பெரிய நிலச்சுவான்தாரைத் தோற்கடித்தார்” என்று எழுதியது.

அந்த நாட்களில் அது யாரும் அதுவரை கண்டிராத சம்பவம். அது மட்டுமல்ல; சட்டமன்ற காங்கிரஸ் குழுவின் தலைமை கொறடாவாகவும் ஜோஷ் இருந்தார். யூனியனிஸ்ட் கட்சியின் சிக்கந்தர் ஹாயட் அமைச்சரவையை அமைக்க,  காங்கிரஸ் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. 1939ல் பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஜோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1938 –39 காலகட்டத்தில் அமிர்தசரஸ், லாகூர் மற்றும் பிற இடங்களில் விவசாயிகளின் போராட்டத்தை அவர் தலைமை தாங்கி நடத்தினார்.

தியோலி முகாமும் ‘க்ருதி கம்யூனிஸ்ட்’களுடன் விவாதங்களும்

            சோஹன் சிங் ஜோஜ் மற்ற கம்யூனிட்ஸ்ட்களுடன் 1940ல் கைதாகி தியோலி தடுப்புக் காவல் முகாமில் அடைக்கப்பட்டார். சோவித் யூனியன் மற்றும் பிற இடங்களிலிருந்து திரும்பிய பல புரட்சியாளர்களும் கம்யூனிஸ்ட்களும் சேர்ந்து ‘க்ருதி கம்யூனிஸ்ட்கள்’ என்றறியப்படும் குழுவை அமைத்தனர். நவ ஜவான் சபாவும் அதனது சொந்தப் பிரச்சனைகளில் சிக்கி இருந்தது. க்ருதி கம்யூனிஸ்ட்களில் தேஜா சிங் சுவதந்தர் புகழ்பெற்றவராக இருந்தார். அவர்களுக்குச் சிபிஐ கம்யூனிஸ்ட்களுடன் தீவிரமான வேறுபாடுகள் முகிழ்க்கத் தொடங்கின. க்ருதி குழு பல நேரங்களில் தீவிர இடதுசாரி செக்டேரியன் நிலைபாடுகளை எடுத்து -- காங்கிரஸோடு உறவு மற்றும் தொடர்புடைய வேறு கேள்விகள் சம்பந்தமாக -- சிபிஐயுடன் மோதியது.

            காட்டே மற்றும் பிறரோடு சேர்ந்து ஜோஷ், மிக அமைதியாக அவர்களோடு விவாதித்து, க்ருதி கம்யூனிஸ்ட்களைச் சரியான நிலைபாடுகளுக்குக் கொண்டு வந்தார். அவர்கள் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர் என்பது வரலாறு.

            1942 மே மாதத்தில் ஜோஷ் தியோலியிலிருந்து விடுதலையானதும் நேரே லாகூர் சென்று கட்சி அலுவலகத்தை ஏற்படுத்தினார்.

சுதந்திரத்திற்குப் பின்னர்

            பிடிஆர் காலத்தில் கட்சிமீது திணிக்கப்பட்ட இடதுசாரி சாகசம் மற்றும் குழுப்போக்கு செக்டேரியன் பாதையை ஜோஷ் உறுதியாக எதிர்த்தார். அப்போது அவர் பஞ்சாப் மாநிலக் கட்சியின் செயலாளராக இருந்தார். 1948ல் அஜாய் கோஷ் தன் உடல்நலனைத் திரும்பப்பெற வேண்டி ஓய்வுக்காகச் சென்றபோது ஜோஷ்தான் அவரின் வரவேற்பாளராக இருந்து அவரோடு இரண்டு ஆண்டுகள் தங்கினார். இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் இருவரும் நெருக்கமாயினர்.

            1957ல் மாஸ்கோவில் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியின் 40வது ஆண்டுவிழாவில் அஜாய் கோஷ் தலைமையில் சென்ற குழுவில் ஜோஷ் கலந்து கொண்டார்.

கட்சியின் (1958) அமிர்தசரஸ் காங்கிரஸில் சிபிஐ தேசியக் குழு உறுப்பினாராக ஜோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் சிபிஐ மத்திய செயற்குழு உறுப்பினரானார். 1971 முதல் 1974 வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கட்டுப்பாடு குழு தலைவராகச் செயல்பட்டார். 

தமது வாழ்வின் இறுதி ஆண்டுகளில் சோஹன் சிங் ஜோஷ் பெரும்பகுதி காலம் நியூடெல்லி அஜாய் பவனில் தங்கி இருந்து இந்தியாவில் கம்யூனிச இயக்கம், அகாலி மற்றும் கத்தார் இயக்கங்கள் குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். பல சிறந்த நூல்களை எழுதினார். அவற்றில் சிபிஐ வரலாறு, அகாலி இயக்க வரலாறு குறித்த இரண்டு தொகுதிகள் மற்றும் கத்தார் இயக்கம், நினைவுக் குறிப்புகள் உட்பட பல ஆக்கங்களை எழுதிக் குவித்தார். இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளிலிருந்து ஏராளமான ஆய்வு தஸ்தாவேஜூகளைத் திரட்டினார்; இதற்காக அப்போது இன்னும் உயிருடன் இருந்த புரட்சியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பு கொண்டார்.   

சோஹன் சிங் ஜோஷ் 1982 ஜூலை 29ல் அமிர்தசரஸில் இயற்கை எய்தினார்.

            பஞ்சாப் வீர சிங்கம் சோஹன் சிங் ஜோஷ் அவர்களுக்குச் செவ்வணக்கம்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment