Friday 22 May 2020

சட்டமும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் : தி வயர் கட்டுரை தமிழாக்கம்


சட்டமும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களும்
          திரட்டப்பட்டத் தொழிலாளர்களுக்குப் பலவிதமான உரிமைகளும் அதற்கான சட்டங்களும் இருப்பதை நாமறிவோம். திரட்டப்படாத தொழிலாளர்களின் நிலைமை, அவர்களுக்கான ஊதியம், சலுகை முதலியவற்றைப் பாதுகாக்கப் பெரிய அளவில் சட்டங்கள் இல்லை. இன்று பெரும் போராட்டம் மற்றும் தியாகத்தால் வென்றெடுத்த தொழிலாளர் நலச் சட்டங்களே நீர்த்துப் போகச் செய்ய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முயல்வதைப் பார்க்கிறோம்.
          கரோனா தொற்று பாதிப்பால் இலட்சக் கணக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படும் துயரங்களை நாளும் பார்க்கும்போது – அவர்களுக்கென எந்தச் சட்டமும் நமது நாட்டில் இல்லை என்றே கருதப்பட்டது. ஆனால் உண்மை இதற்கு மாறானது என்பதைத் தோழர் பட்டாபி முகநூலில் பகிர்ந்த கட்டுரையிலிருந்து தெரிந்து கொண்டபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நமது நாட்டில் சட்டம் இருக்கிறது, ஆனால் ஆள்வோருக்கு அமல்படுத்தத்தான் மனமில்லை. அண்ணல் அம்பேத்கர் சரியாகவே எச்சரித்தார்: “சட்டம் சிறப்பானதாக இருந்தால் மட்டும் போதாது”
          தோழர் பட்டாபி பகிர்ந்த கட்டுரை வழக்கறிஞர் சாத்விக் வர்மா (சுதந்திர லா சேம்பர்ஸ் அமைப்பின் நிறுவன வழக்கறிஞர்) மே 20ல் எழுதியது. அதன் தமிழாக்கம் வருமாறு:
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்பால்
நம்_அனைவரின் ஒட்டுமொத்த தவறு
        மாநிலங்களுக்கு இடையே இடம் பெயரும் தொழிலாளர் (பணிநியமனம் மற்றும் சேவை நிபந்தனைகள் ஒழுங்குபடுத்துதல்) சட்டம்,1979” என்ற Inter-State Migrant Workmen (Regulation of Employment and Conditions of Service) Act, 1979 ஒரு சட்டம் இருப்பது சமீபகாலம் வரை பெரிதும் அறியப்படாமல் இருந்தது. சட்டத்தைக் கொண்டு வந்தபோது இருந்த நிலைமை:  பரிவு காட்டப்பட வேண்டிய இவர்கள் பெரும் கட்டுமான ப்ராஜெக்டுகளில், பணிநேர வரையறை இல்லாது பணியாற்றுவதற்காக ஒப்பந்ததாரர்களால் நியமிக்கப்பட்டு மோசமாக நடத்தப்பட்டதுடன் முறையாக கூலியும் வழங்கப்பட்டதில்லை. அப்போதிருந்த சட்டங்களின் போதாமையால் புதிய சட்டம் தேவை எனக் கொண்டுவரப் பட்டதே இந்தச் சட்டம். சட்டத்தின் காரணம் மற்றும் நோக்கமாகப் பின்வருமாறு கூறப்பட்டது: “மாநிலங்களுக்கு இடையே இடம் பெயரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாத, திரட்டப்படாதவர்களாக இருப்பதால் சாதாரணமாக அவர்கள் மிகக் கடுமையான, சாதகமற்ற நிபந்தனைகளின் கீழ் உழைக்க வேண்டியதாகிறது; அத்தகைய மோசமான கஷ்டங்களைப் பார்க்குமிடத்து, நிர்வாகரீதியாகவும், சட்டரீதியாகவும் சில ஏற்பாடுகளை –அவர்கள் பணியாற்றச் செல்லும் மாநிலத்திலும், எந்த மாநிலத்திலிருந்து பணியமர்த்தப்படுகிறார்களோ அந்தச் சொந்த மாநிலத்திலுமாக இரண்டிலும் -- அவர்களைச் சுரண்டலுக்கு எதிராகத் தேவையான திறன்மிகு வகையில் பாதுகாக்க வேண்டியுள்ளது”
          சட்டம் உள்ளது என்பது ஒன்று; அந்தச் சட்டம் திறமையாக அமல்படுத்தப்படுகிறது என்பது அதற்கு மாறாக முற்றிலும் வேறான பிறிதொன்று. சமீபகாலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் சொல்லொண்ணா துயரங்கள், இந்தக் குரலற்ற உழைப்பாளிகள் பால் நமது சட்டங்கள் மற்றும் சட்டநீதி முறைமையின் பெரும் தோல்வியைக் காட்டும். அது மட்டுல்ல, ஒரு சமூகம் என்ற வகையில் நாம் அனைவருமே அந்தத் தோல்விக்குக் கூட்டுப் பொறுப்பானவர்கள் என்பதே உண்மை.  மத்திய அரசு, மாநில அரசுகள், சட்ட அமலாக்க முகமைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடிமைச் சமூகம் என அனைவருமாக ‘மலர்ந்து பூரிக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியவர்கள்’ எனப் புகழப்படும் இந்திய மக்களின் ஒரு பிரிவினராகிய இந்தத் தொழிலாளர்களை மிகப் பரிதாபகரமாகக் கைவிட்டு விட்டன.
          சட்ட ஷரத்துகளைப் பார்ப்பதற்கு முன் சில புள்ளி விபரங்கள்: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 5.6 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள். அவர்கள் இந்தி பேசும் மாநிலங்களான உபி, பீகார் ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசிலிருந்து ‘கனவு நகரங்களான’ மகாராஷ்டிரா(மும்பை) மற்றும் டெல்லிக்குச் சென்று பெரிதும் முறைசாராத / அமைப்பு சார பிரிவுகளில் தினக் கூலிகளாக, செல்லத்தக்க அடையாள அட்டையோ, தற்காலிகமாக இடம்மாறி இருத்தலுக்கான சான்றுகளோ இன்றி பணியாற்றுபவர்கள். 1991 மற்றும் 2001 கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 55 சதவீதம் உயர, 2001 மற்றும் 2011 க்கு இடையே 33 சதமாகக் குறைந்தது. அதற்குக் காரணம் அவர்கள் சொந்த மாநிலத்தில் பிற மாவட்டங்களுக்கு அல்லது பிற ‘பெரிய நகரங்க’ளை நோக்கியே இப்போதும் நகர்கிறார்கள்.  
          கனவுகளை நிறைவேற்றுவதாக ஆசை காட்டி இவர்களைச் சிக்க வைக்கும் காண்டிராக்டர்கள் இந்தச் சட்டத்தின்படி லைசென்ஸ் பெறுவது –அதிலும் தொழிலாளர்களின் சொந்த மாநிலத்தின் அதிகாரிகளிடமிருந்தும், பணிநியமனமாகும் மாநிலத்திலும் லைசென்ஸ் பெறுவது – கட்டாயமாகும். நிறுவனங்களும் பணியில் அமர்த்தும்முன் பதிவுச் சான்று பெற வேண்டும். அந்த லைசென்சில் மாநிலங்களுக்கு இடையே இடம் பெயர்தல், ஊதியம், வேலை நேரம், ஊதிய நிர்ணயம் மற்றும் பிற வசதிகள் பற்றிய ஏற்பாடு முதலியவற்றைக் குறித்து வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் மற்றும் இடப் பெயர்ச்சிக்கான படி (displacement allowance) குறித்து வெளிப்படையான ஷரத்து உள்ளது. அவர்களுக்கு வழங்க வேண்டியவைகளில் பொருத்தமான தங்குமிட வசதி, போதுமான மருத்துவ வசதி மற்றும் (பணியிடப்) பாதுகாப்பு உடை குறிப்பிடப்பட்டுள்ளது.
          இந்தச் சட்டத்தில், சட்ட அமலாக்கத்தைக் கண்காணிக்கச் சோதனை அதிகாரி (இன்ஸ்பெக்டர்)கள் முறையான அரசால் நியமிக்கப்படுவது மட்டுமல்ல, தொழிலாளர்களின் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், பணியாற்றும் மாநிலத்தின் நிறுவனங்களைச் –சட்ட அமலாக்கத்தை உறுதிப்படுத்துவதற்காகச்-- சென்று பார்வையிடவும் வகை செய்யப்பட்டுள்ளது. சட்டம் பின்பற்றப்படாது தவறும் நிறுவனங்களின் மீது, சிறைதண்டனை உட்பட,  ஒரளவு கடுமையான தண்டனைகள் கூறப்பட்டுள்ளது. இதில் வருத்தத்திற்குரியது, பெரும்பான்மையான இந்தத் தொழிலாளர்கள் தங்களின் உரிமைகள் குறித்து அறிந்ததும் இல்லை, பணியையும் ஊதியத்தையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் கேள்வி கேட்கத் துணிந்ததும் இல்லை; பொதுவாகக் காண்டிராக்டர்கள் இவர்களைக் கைக்கும் வாய்க்குமாகப் பற்றாக்குறை இருத்தலிலேயே எப்போதும் வைத்திருப்பர். (தற்போதைய தொழிலாளர் சட்டங்களை ஒத்தி வைக்க முயலும் உபி, மபி, ராஜஸ்தான், குஜராத் மாநில அரசுகளின் திருத்தங்களில் ‘தொழிலாளர் நலத்துறை இன்ஸ்பெக்ஷன்/ தண்டனை என்பதே இல்லை. தொழில் துவங்குவதை எளிதாக்குகிறார்களாம்)
          தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களைச் சீரமைக்க, “பணியிடப் பாதுகாப்பு, உடல்நலன் மற்றும் பணிநிலமைகளுக்கான குறுங்குறி (Code) 2019” பாராளுமன்றத்தில் 2019 ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய 13 சட்டங்களை  உள்ளடக்கிச் சீரமைத்த இந்த மசோதாவில் மற்றவற்றோடு புலம் பெயர் தொழிலாளர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓர் ஒப்பந்ததாரர் மூலமாகப் புலம்பெயர் தொழிலாளர்கள் நியமிக்கப்படும்போது, அவர் லைசென்ஸ் பெற்றவராக இல்லாத பட்சத்தில், அவ்வாறு நியமனமாகும் புலம்பெயர் தொழிலாளர்கள் --அவர்கள் பணியாற்றும்-- நிறுவனங்களே அவர்களை நேரடியாக நியமித்த  முதன்மை பணி நியமனராக (பிரின்சிபல் எம்ப்ளாயராக) கருதப்படுவர் என இந்தக் குறுங்குறி சட்டபூர்வமாக வகை செய்கிறது. இந்தச் சட்டம் வற்புறுத்திக் கூறுகிறது, ‘புலம் பெயர் தொழிலாளர்கள் இடப்பெயர்ச்சி படி பெறுவதற்கு உரிமை உள்ளவராவர்; அந்த இடப்பெயர்ச்சி படியானது அவர்கள் பெறுகின்ற மாத ஊதியத்திற்கு 50 சதவீதத்திற்குச் சமமான தொகையாகும் எனவும் வரையறுத்துள்ளது.
          இந்தக் குறுங்குறி மசோதா 2019 இறுதியில் பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. அதனைப் பரிசீலித்த நிலைக்குழு 2020 பிப்ரவரியில் சமர்ப்பித்த அறிக்கையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து குறுங்குறியில் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது என்பது ஒருபுறம் இருக்க, மாநில அரசுகளும் மத்திய தொழிலாளர் அமைச்சகமும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்துச் சிறப்பாகத் தனியான ஓர் அத்தியாயத்தை இந்தக் குறுங்குறியில் அறிமுகப்படுத்த வேண்டும் என ஒருமனதாகக் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் நிலைக்குழு, குறுங்குறியில் ஒடிஷா மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு வசதி (டோல் பிரீ ஷராமிக் சகாயதா ஹெல்ப் லைன்), தொழிலாளர் உதவி ஒற்றைச் சாளரம் (ஹெல்ப் டெஸ்க்), இடம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான பருவகால விடுதிகள், தகாத வழியில் மனிதக் கடத்தலுக்கு எதிரான பாதுகாப்பைப் பலப்படுத்தல், இடம் பெயர்வோர் உதவி மையங்கள் அமைத்தல் போன்ற ஓடிஷா மாதிரியில் குறுங்குறியில் முன்னெடுப்புகள் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
          இப்படி சட்டம் இருக்குமானால், பிறகு ஏன் அது அமல்படுத்தப்படவில்லை? இடப்பெயர்ச்சி படிகள் வழங்கப்படாதது ஏன்? அது ஒருபுறமிருக்க, அவர்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய ஊதியம் வழங்கப்படாதது ஏன்? அரசிடமிருந்து லைசென்ஸ் பெற வேண்டிய காண்டிராக்டர், நீங்களே உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று  நிராதரவாக இவர்களைக் கைவிட்டு, மறைந்து போனது எப்படி? மருத்துவ வசதிகளும் மற்ற அடிப்படைத் தேவைகளும் செய்துதரப்படாதது ஏன்? இதில் சிலவற்றையாவது செய்து கொடுத்திருக்க முடியும் என்றால் அவர்கள் கூட்டம் கூட்டமாகச் சொந்த ஊர் நோக்கி ஓடாது தடுத்து நிறுத்தியிருக்கலாம். இவற்றிற்கான ஒரே பதில் சட்டம் ஓட்டை ஒடசலான அறதப் பழசு, வழக்கொழிந்தது, எங்குமே சுத்தமாக அமல்படுத்தப் படவில்லை என்பதே. (சட்டம் அப்படியே சட்டப் புத்தகத்தில் இருக்கும்போது) அது எவ்வாறு அப்படி நடைபெற முடியும் என ஒருவர் வியக்கலாம், ஆனால் மிகக் கடுமையான உண்மை அதுதான்.

          புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ‘சேவை, பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான தீர்வு’ வழங்கக் கூடிய ‘ஆஜீவிகா பீரோ’ என்ற அமைப்பு, உறுதியான கொள்கை வகுக்க இயலாததற்குப் பருவ காலங்களில் இடம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிபரத் தரவுகள் போதுமான அளவு திரட்டப்படாததே காரணம் என்கிறது. “கொள்கை வகுப்பதில் முக்கிய பங்காற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மாதிரி சர்வே (புள்ளிவிபரத் திரட்டு) அமைப்புகளாலும் பருவகால இடப்பெயர்ச்சி மற்றும் சுற்றி இடம்பெயர்வோர் குறித்து கண்டறிய இயலவில்லை. ஏழ்மை கோட்டிற்குக் கீழே (BPL) கணக்கெடுப்பிலும் புலம்பெயர்வோர் விடுபடுகின்றனர். இவை எல்லாவற்றையும்விட அவர்களால் சாதாரணமான தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்று, தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியாததால் அடிப்படையான குடிமகனின் உரிமையும்கூட அவர்கள் மறுக்கப்பட்டவராகின்றனர்” என்று அந்த அமைப்பு தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.
          மேற்கண்ட புள்ளிவிபர அறிக்கைகளின்படி அவர்கள் எண்ணிக்கையில் குறிப்பிடத் தகுந்த சதவீதத்தினராக இருந்தாலும், பெரும்பான்மையும் அவர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இடம்பெயர்ந்தோர் ஒருவர் கூட பட்டினியாக விடப்படவில்லை என வறட்டுத்தனமாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், அரசு திட்டங்களின் உண்மை நிலவரத்தைத் திரும்பிப் பார்க்கட்டும். சட்டத்திற்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க முயலும் கொள்கை அமலாக்க அமைப்பான ‘இன்டஸ் ஆக்ஷன்’, ஊரடங்கு காலத்தில் ஒருமாத காலம் ஒரு சர்வே ஆய்வை மேற்கொண்டது; 15 பெரும் மாநிலங்கள், 3400 குடும்பங்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 11ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்களிடம் பேசியதில் அவர்களில் 19 சதவீதத்தினரிடம் பசியாற்ற போதுமான உணவு இல்லை. அவர்களது அறிக்கையில், “பெரும்பான்மையான மற்றவர்களிடம் உணவு இருப்பு குறைவாகவே இருந்தது. இலவசமாக ரேஷன் பெற அவர்களுக்கு உரிமை இருந்தாலும் அவர்கள் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தது, அருகே இல்லாதது போன்ற காரணங்களால் இரண்டு/மூன்று மடங்கு விலைகொடுத்து வாங்க வேண்டியாயிற்று. ரேஷன் கார்டு வைத்திருந்து வாங்கப்போனால், அவர்களுக்கு உரிமை உள்ளதைவிட குறைவாகவே வழங்கப்பட்டன. அரிசி மட்டுமே வழங்கி மற்ற ரேஷன் பொருட்களான பருப்பு, எண்ணெய், சக்கரை முதலியன பலருக்கும் கிடைக்காத பொருளாயின. ரேஷனில் சேராத காய்கறி, பால், மண்ணெண்ணெய் போன்றவை வாங்குவது அடுத்த சவால். சிலர் விமர்சனம் செய்து முணுமுணுத்ததைக் கேட்க முடிந்தது, ‘எங்களுக்கு வேண்டியது ரேஷன்தானே தவிர சொற்பொழிவு அல்ல” என்று கூறப்பட்டுள்ளது.
          மற்றொரு ஆய்வறிக்கை ‘நிராதரவாக நிற்கும் தொழிலாளர்களுக்கான நடவடிக்கை வலைப்பின்னல்’ (Stranded Workers Action Network) தனது ஆய்வறிக்கையில் புலம்பெயர்ந்தோர் துயர்களை விவரிக்கிறது: ‘நிவாரணம் வழங்கும் வேகவிகிதத்தைவிட பசி, பட்டினி, துன்பத்தின் விகிதம் அளவுகடந்ததாக உள்ளது; 11ஆயிரம் தொழிலாளர்களிடம் பேசியதில் அவர்களில் பெரும்பாலானோர் சாப்பிட்டு 4 நாட்கள் ஆகி பட்டினியின் விளிப்பில் இருந்ததும், கையில் ஒருநாள் ரேஷன் மட்டுமே மீதமிருந்ததும் தெரிய வந்தது. அவர்களில் 89% தொழிலாளர்களுக்குப் பணியாற்றிதற்கான ஊதியமோ அல்லது வேறு எந்தத் தொகையுமோ வழங்கப்படவில்லை என்பதும், 78 சதமானவர்கள் கையில் வெறும் ரூ300 மட்டுமே ரொக்கம் இருப்பதும் வெளிப்படுகிறது. அவர்களது குழந்தைகளுக்குப் பெரும்பாலும் குடிப்பதற்குப் பாலுக்குப் பதில் வெறும் சக்கரைக் கரைசல் தண்ணீர் மட்டுமே உணவாகப் புகட்டப்படுகிறது.’
            (இதை மொழிபெயர்க்கும் போது தோழர் ஜீவாவின், “பாலின்றி பிள்ளை அழும், பட்டினியால் தாய் அழுவாள்; வேலையின்றி நாம் அழுவோம்” என்ற ‘காலுக்குச் செருப்புமில்லை, கால் வயிற்றுக் கூழுமில்லை, பாழுக்குழைத்தோமடா –தோழா! பசையற்றுப் போனோமடா” கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது. தோழர் ஜீவா நம்பிகைகையோடு கவிதையை நிறைவு செய்கிறார் என்பதையும் சேர்த்தே எண்ணிப்பார்க்கிறேன்:
           ஒன்றுபட்டுப் போர்புரிந் தே / உயர்த்துவோம் செங்கொடியை!
           இன்றுடன் தீருமடா – என் தோழனே -- இம்சை முறைக ளெல்லாம்!)
          இங்கு யாரும் கரோனா தொற்றைப் பழிசொல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் மனித உயிர்கள் படும்பாட்டை, தொடரும் துன்ப துயரங்களுக்கான நெருக்கடிகள் குறித்து அவ்வாறு பழி சொல்லாமல் கடந்து போய்விட முடியுமா? இந்தக் கரோனா தொற்றுதான், உழைப்புச் சக்திகளின் மீது இதற்கு முன்னரே சமூகத்தில் நிலவிய பாதிப்புகள், தாக்குதல்கள், அக்கறையின்மை முதலியவற்றையும், தொழிலாளர்நலச் சட்டங்களின் போதாமைகளையும் அம்பலப்படுத்தி வெளிக்கொணர்திருக்கிறது. இந்தச் சமூகம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கண்ணியத்தைக் களவாடி இருக்கிறது. குடிமைச் சமூகத்தைச் சேர்ந்த பலநூறு குழுக்கள் உதவிகரமாகப் பல நல்ல பணிகளைச் செய்கிறது; அந்தத் தொழிலாளர்களின் துயரக் கதைகளைச் சமூக
ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளும்போது அந்தத் தொழிலாளர்கள் நம் இரக்கத்தை, கருணையை வேண்டி இரந்து நிற்கவில்லை என்பதையும் சேர்த்தே கூறுகிறது. அவர்கள் தங்கள் உழைப்பிற்கான அங்கீகாரத்தை, தங்களுக்கு உரிய பங்கைதான் கேட்கிறார்கள். நாம் ஒட்டுமொத்தமாக ஒப்புக்கொள்வோம், அவர்களுக்கு அதனை வழங்க நாம் தவறிவிட்டோம், தோற்றோம்.
          அரசு ஆரவாரமாக அறிவித்துள்ள பல திட்டங்களும் அவர்களைச் சென்று சேர்ந்ததா என்பது ‘கேள்விக் குறியே’ என ‘இன்டஸ் நடவடிக்கைக் குழு’ தெரிவிக்கிறது. அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியவர்களில் 94 சதவீதத்தினர் ஏதேனும் ஒரு அரசு நலவாழ்வுத் திட்டத்தின் பயனைப் பெறத் தகுதி உள்ளவர்கள்; என்றாலும், சுமார் 20 சதமானவர்கள் எந்த திட்டத்தின் கீழும் எந்தப் பலனையும் பெறவில்லை.
“கவலை அளிக்கும் இந்தப் போக்கிற்குக் காரணம், திட்டப்பயனாளிகளின் வங்கிக் கணக்கோடு அவர்களின் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அப்படி இணைப்பதில் உள்ள சிரமமுமே” என ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
          நாம் எல்லோரும் கரோனா வைரஸ் பற்றி கவலைப்படும் நேரத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள், நாளும் பட்டினியையும் துயரங்களையும் சந்திப்பவர்கள், எதிர்காலம் பற்றிய கவலையிலும் ஆழ்ந்துள்ளனர். மேற்கண்ட அறிக்கையில் சரியாகவே குறிப்பிட்டுள்ளனர், ஊரடங்கு முடிந்த பிறகு அவர்களில் 48 சதவீதத்தினர் வேலையில்லாமல் விடப்படுவர்.’ வேலை கிடைக்கும் என இருப்பவர்களும்கூட தங்கள் கனவுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, தங்களைப் புறக்கணித்து, இழிவாக நடத்திய பெரிய நகரங்களுக்கு மீண்டும் ஓடிவருவதற்கும் எந்த அவசரமும் காட்டத் துணிய மாட்டார்கள்.
          சட்டத்தின் பார்வையிலிருந்து பார்க்கும்போது, இந்த நெருக்கடியின் அவலங்களிலிருந்து பாடம் படிப்போம் எனின், பாராளுமன்ற மாநிலங்களவையில் குறுங்குறி குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்போது—மசோதா சட்டமாவதற்கு முன்—சில மாற்றங்களைக் கொண்டு வர முடியும். மற்றவற்றோடு, புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த தனி அத்தியாயம் கொண்டுவரப்படுமானால் அதில் ‘ஆஜீவிகா பீரோ’வின் சில யோசனைகள் சேர்க்கப்பட வேண்டும். இடம் சார்ந்த சான்றுகள் இல்லாது எல்லா ரேஷன் கடைகளிலும் உணவு பொருட்கள் வழங்க வகைசெய்யும் ‘பொது விநியோக முறை’ (PDS) கொண்டுவர உத்தேசித்துள்ள அரசு, புலம் பெயர் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான சுகாதாரமான தங்குமிட வசதிக்கும் வகை செய்ய வேண்டும். தனி பெண் தொழிலாளி புலம் பெயர்தலுக்கும் பாதுகாப்பு மற்றும் புலம் பெயர்வோர் ஒரு சமூகக் குழுவாக சேர்ந்து வாழவும் வகை செய்தல் வேண்டும். அடிக்கடி சுற்றுக்களில் இடம்பெயர்வோர்களுக்கு நகர சுகாதாரப் பராமரிப்பு வசதிகளைப் பெறவும், அப்படி ஒவ்வொன்றையும் பெற ஆவணங்கள் கேட்டு நிர்பந்தப்படுத்துவதிலிருந்தும் விடுவிக்கப் படுவதற்கும் சட்டமியற்றல் வேண்டும்.  
          இப்போதைக்கு இடம் பெயர் உழைப்பாளிகள் நிர்வாக முறையில் நம்பிக்கை இழந்துள்ளதையும் நம்மைச் சந்தேகத்தோடுப் பார்ப்பதையும் அனுசரணையோடுப் புரிந்து கொள்ள முடிகிறது. காலம் செல்லச் செல்ல, நாமும் நம்புவோம் -- அவர்களின் ஆகக் குறைவான சேமிப்பும் தீர்ந்து போன நிலையில், அவர்களின் கனவுகளைச் சூறையாடி ஏமாற்றி வாழ்வையே பெரும் ரணகளமாக்கிய அதே நகரங்களுக்கு மீண்டும் திரும்ப வரக்கூடும்; மோசமாக இழிவுபடுத்திய நம்மையும் மன்னிக்கும் ‘பெருந்தன்மை‘ அவர்களுக்கு இருக்கலாம். அப்போது நாம்  என்ன நிகழ்ந்தது என்பதை மறவாது நினைவில் கொள்ள வேண்டும். நீதிநெறி சார்ந்த நம் புலனில், இனியாவது ஒரு தேசமாக, ஒரு சமூகமாக, பெரும் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் ஒற்றை மனித ஜீவனாக நாம் நடந்து கொள்ளும்போது, நம் நடத்தையில் ‘பிரம்ம தேவன் கலை இங்கு’ தொழிலாளிகளே என்று விளங்கும் அந்த உழைப்பாளர்களுக்கு, அவர்களுக்கு உரிய கண்ணியத்தை மரியாதையை அளிப்போம். சட்டங்களும் நீதி நெறி சிஸ்டமும் அவர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பை அளிக்க நாம் முன்வருவோம். இப்படி அவர்கள்பால் சமத்தன்மையாக நியாயமாக நடந்து கொள்ளக் கூறுவது, கற்பனா வாதமாகவோ அல்லது பழைய மக்கிப்போன சர்வதேசப் பொதுச் சட்டப் புத்தகக் கொள்கையின் துர்நாற்றமாகவோ கூட இருந்து விட்டுப் போகட்டும்; குறைந்தபட்சம் நாம் மனிதர்களாக மனிதத் தன்மையோடு நடக்கலாம்தானே!  இல்லை, அதை எதிர்பார்ப்பதுகூட அதிகப்படியான ஒன்றோ?
இந்தக் கட்டுரை முதலில் ‘தி வயர்’ இணையத்தில் மே 19ல் வெளியானது.
--தமிழில்: நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment