Tuesday 12 May 2020

பாசிச எதிர்ப்பு வெற்றி சொல்லும் பாடங்கள்



பாசிச எதிர்ப்பு வெற்றி சொல்லும் பாடங்கள்
1945,  மே 9 பாசிசச் சக்திகளை முறியடித்த 75வது ஆண்டு
--அனில் ரஜீம்வாலே
          1945 மே 9 பாசிசத்தை வெற்றிகொண்டதன் மூலம் இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்த தினம். உலக வரலாற்றிலேயே மாபெரும் அழிவுகளை ஏற்படுத்திய துயர்; உயிரிழந்த 5 கோடி மக்களில் சோவியத் யூனியனில் மட்டும் பலியானோர் 2கோடி பேர். சோவியத் செஞ்சேனை முன்னணியில் களத்தில் நின்று போராடி வெற்றிக்குக் காரணமானது.
          இத்தாலியின் பாசிசத்தையும் ஜெர்மனியின் நாசிசத்தையும் அதிகாரத்திற்கு வர அனுமதித்ததால் மனிதகுலம் அதற்கான ஆகப்பெரும்விலையைத் தர வேண்டியதாயிற்று. அமெரிக்கா, பிரட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய ஏகாதிபத்தியச் சக்திகள், தங்களின் சோவியத் எதிர்ப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, ஹிட்லர் முதலான பாசிசவாதிகளைப்  பெரும் அக்கறை காட்டி (முதலில்) ஆதரித்தனர்.
பாசிசத்தின் எழுச்சி
          குறிப்பாக முதலாவது உலகப் போருக்குப் பிறகு இத்தாலியில்  தோன்றியது பாசிசம். ‘பாஸி’ (Fasci) என்ற இத்தாலிய வார்த்தைக்குக் கட்டப்பட்ட ‘ஒரு கட்டு’ என்பது பொருள், அலங்காரமாகத் ‘தேசத்தின் ஒற்றுமை’யைக் குறிப்பதாகும். பெனிடோ முஸோலினி 1919ல் ‘இத்தாலிய பாசிசக் கட்சி’யை, இத்தாலிய ஹெகலியக் கருத்தியல்  தத்துவயியலார் கியோவனி ஜென்டைல் (Giovanni Gentile) முதலானோர் உதவியுடன் நிறுவினார். அதனுடைய சின்னம் ‘ஃபஸஸ்’ (‘fasces’) எனப்படும் கம்பிக்கட்டின் மத்தியில் ஒரு கோடரியுடன் காணப்படுவதாகும். (இத்தாலிய நீதித்துறை நீதிபதிகளின் அதிகாரத்தைக் குறிப்பதற்காக இதுபோன்றதொரு சின்னத்தைப் பயன்படுத்தி வந்தனர். அதில் கோடரி உச்சியில் இடம் பெற்றிருக்கும்)
          முதலாவது உலகப் போர் முடிவுக்கு வந்தநிலையில், ‘இத்தாலியன் போராளிகள்’ அல்லது ‘ஸ்க்வாடிரிஸ்மோ’ (Squadrismo) எனப்படும் பாசிசக் குழுக்கள் ஏற்கனவே சோஷலிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். 1920--21களில் தொழிலாளர்களின் குழுக்கள் இத்தாலிய ஆலைகளைக் கைப்பற்றினாலும், அடுத்து என்ன செய்வது என்ற திட்டமும் இல்லை, வழிநடத்தத் தலைவர்களும் இல்லை. இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட முஸோலினியின் ‘கருஞ்சட்டைக்காரர்கள்’ ரோமுக்குள் திட்டமிட்ட ஆர்பாட்டங்களை நடத்தி அக்டோபர் 1922ல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். 1926 வாக்கில் பாசிசம் முழு அதிகாரத்தைப் பிடித்தது.          
ஜெர்மனியில் நாஜிசம்
          பாசிசம் ஜெர்மனியில் நாஜிசம் என்று அழைக்கப்படுகிறது; அந்தப் பெயர் கட்சியின் பெயரிலிருந்து வந்தது. கட்சியின் பெயர், ‘தேசிய சோஷலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர்கள் கட்சி‘ (! விந்தைதானே); அது ஜெர்மானிய மொழியின் முதல் எழுத்துக்களின்படி நாட்சி அல்லது நாஜி (NAZI) என்றாயிற்று. 1920ல் ஹிட்லராலும் அவனது கூட்டாளிகளாலும் துவங்கப்பட்ட கட்சியின் தலைவர்களில் ஒருவர் ஆன்டன் டிரக்ஸியர் (நாஜி கட்சியின் முன்னோடியான அமைப்பை நிறுவிய அதிவலதுசாரித் தலைவர்).
          நாஜி கட்சி ‘புயல் அதிரடிப் படை’ (எஸ்ஏ) அல்லது ‘பிரவுன் கலர் சீருடை’ என்ற அமைப்பை ஏற்படுத்தியது; பின்னர் மேலும் அச்சுறுத்தும் வகையில் (எஸ்எஸ்)  ‘கருஞ்சட்டை சீருடை’ (பாதுகாப்புக் குழு) பிரிவை – இத்தாலியின் ‘கஞ்சட்டைக்காரர்கள்’ பாணியில் அமைத்தது. 
          முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்தியத்தில் ஏற்பட்ட கடும் பொருளாதார, அரசியல் நெருக்கடியைச் சாதகமாகப் பயன்படுத்தி பாசிசம் ஜனநாயக அமைப்புகளின் மீது தாக்குதல்களை அதிகரித்தது. வேலையில்லா இளைஞர்கள், சிறு உற்பத்தியாளர்கள், கடை வைத்திருப்போர், நடுத்தர வர்க்கம் மற்றும் பெரிய முதலாளிகளிடம் (ஆதரவாகப்) பசப்பி முறையிட்டது. போலி தேசியவாதத்தை உரத்துக் கொட்டி முழங்கியது; முதலாவது உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விகளுக்கும் அடைந்த அவமானங்களுக்கும் பிற நாடுகளே பொறுப்பு எனக் குற்றம் சாட்டியது. கம்யூனிஸ்ட்களையும், சோஷலிஸ்ட்களையும் குறி வைத்தது; உழைக்கும் வர்க்கத்தினரும் யூத இனத்தவருமே ஜெர்மனியின் பொருளாதார, கலாச்சார நெருக்கடிகளுக்கு மூல காரணம் என எதிரிகளாகக் கை காட்டியது; அனைத்திற்கும் மேலாகத் ‘தூய்மையான ஜெர்மானியர்’கள், உண்மையாக ‘ஆரியர்கள்’தான் எனக் காட்சிப்படுத்தியது.
          1929 –33 காலகட்டத்தில் ஐரோப்பா மிகப்பெரிய நெருக்கடியையும் பொருளாதார வீழ்ச்சியையும் அனுபவித்தது. ஜெர்மன் நாணயம் ‘மார்க்’ மதிப்பிழந்தது; மக்கள் சாதாரண பொருள் வாங்கவே சாக்குப் பைகளில் மார்க் நாணயங்களை எடுத்துச் செல்வது அன்றாட நடைமுறையானது. வேலையின்மை அதிகரித்து முழுமையானதன் காரணமாக வாங்கும் சக்தி அறவே அற்றுப் போனது; ஆலைகள் தங்கள் முழு திறனையும் பயன்படுத்த இயலாது வீணானது, வங்கிகள் நொறுங்கி வீழ்ந்தன போன்றவையே தினசரி காட்சியானது.
          நிதிநிறுவனங்கள் மற்றும் கொள்ளைலாப ஏகபோக முறைகள் வலிமை பெற்றன; உற்பத்தியை மையப்படுத்தி குவிக்கும் போக்கில் இரசாயன, கனரக ஸ்டீல் தொழிற்சாலை, ரயில்வே மற்றும் மின்சாரத் துறைகளில் முதலீடுகள் வேகமாகப் பாயத் துவங்கின. ஆனால் ஆயுதத் தளவாடங்கள் மற்றும் போர் தொழிற்சாலைகள் மிக அதிகமான கொள்ளை லாபம் தருவதாக இருந்தது. பிரம்மாண்டமான நிதி ஏகபோகத்தின் வலிமை வாய்ந்த பகுதி அப்போது ஆண்டுகொண்டிருந்த முதலாளித்துவ அரசுகளை முடிவுக்குக் கொண்டு வந்து ஆட்சி அதிகாரத்தில் ஹிட்லரை அமர்த்துவது என முடிவு செய்தன.
1930களில் ஜெர்மன் தேர்தல்கள்
          நிதி ஏகபோகங்களின் ஆதரவு கிடைத்த பிறகும் நாஜி கட்சியொன்றும் மக்கள் மத்தியில் அதிகச் செல்வாக்குப் பெற்றுவிடவில்லை. வெற்றியடைந்த கட்சிகளில் மிகப்பெரிய கட்சியாக வரமுடிந்ததே தவிர பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் கம்யூனிட்டுகள் உட்பட பிற கட்சிகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டபடியே இருந்தனர். அது தவறு என அவர்கள் உணர்ந்தபோது, காலம் கடந்த ஞானமாகத் தாமதமான ஒன்றாகியது. ‘இரண்டு கட்சிகளும் ஒத்துழைத்துச் செயல்படா விட்டால் வருங்காலத்தில் இருவருமே ஒரே சிறையின் அறையில் அடைக்கப்படும் நிலைகூட வரலாம்’ என ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் (KPD) பொதுச் செயலாளர் எர்னெஸ்ட் தால்மன் ஒருமுறை கூறியுள்ளார். உண்மையில் பிறகு அதுதான் நடந்தது. சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் சிலரோடு அவரும் புச்சன்வால்டு வதை முகாமில் அடைக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது வரலாறு.
          ஜனாதிபதி பதவிக்காக 1932 மார்ச் மற்றும் ஏப்ரலில் நடந்த இரண்டு தேர்தல்களில் (மன்னராட்சியின்போது இராணுவத் தளபதியாக இருந்த) ஹிண்டன் பர்க்-கிடம் ஹிட்லர் தோற்றார். ரீச் ஸ்டாக் என்றழைக்கப்படும் ஜெர்மன் பாராளுமன்றத் தேர்தலில் (1932 ஜூலை 31ல் நடைபெற்றது) மொத்தமுள்ள 608 இடங்களில் நாஜி கட்சி 37 சதவீத ஓட்டுக்களுடன் 230 இடங்களையும்; சமூக ஜனநாயக கட்சி 133 இடம் (21%), கம்யூனிஸ்ட் கட்சி 89 இடம் (14%) பெற்றனர். அடுத்து 1932 நவம்பர் 6ல் நடைபெற்ற 584 இடங்களுக்கான தேர்தலில் நாஜிகள் 196 இடங்கள் மட்டும் (33%), சமூக ஜனநாயக கட்சி 121 இடங்கள் (20%) மற்றும் கம்யூனிஸ்ட்கள் 100 இடங்கள் (16%) வாக்குகள் பெற்றனர்.  
          இப்படி ஜூலை முதல் நடந்த தேர்தல்களில் வாக்கு சதவீதமும் இடங்களும் நாஜி கட்சிக்குக் குறைந்தாலும், அந்தக் கட்சியே ஆகப் பெரிய கட்சியாக வந்தது. நவம்பர் 1932 தேர்தல் முடிவிலிருந்து தெரியவரும் உண்மை, சமூக ஜனநாயக கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருக்குமானால், அந்தக் கூட்டணி இன்னும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும் என்பதுதான்.
          இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட அரசுகள் தொடர்ச்சியான நெருக்கடிகளைச் சந்தித்து கவிழும்படியாயிற்று. இதனை நாஜிகள் தங்களுக்குச் சாதகமாக்கினர். தங்களுடைய ஆயுதம் தாங்கிய எஸ்ஏ மற்றும் எஸ்எஸ் (பிரவுன் கலர் மற்றும் கருஞ்சட்டை சீருடை) அணியினரைப் பயன்படுத்தி வன்முறை மூலம் மற்றவர்களையும் தங்களுக்குப் பணியச் செய்தனர். அப்போது ஜெர்மனியின் வேந்தராகப் (சான்சலராக) பதவியேற்ற 57 நாட்களில், கூர்ட் வொன் சிலேயிச்சர், ஹிட்லருக்கு வழிவிட வசதியாக நடத்தப்பட்ட சதியால் பதவி விலக நேரிட்டது; அச்செயலுக்கு உடந்தையாக இராணுவத்தையும் சரிகட்டினார் ஹிட்லர். வேறுவழியின்றி அதிபர் ஹிண்டன் பர்க், ஹிட்லரை –பெரிய கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில்— ரிச் ஸ்டாக் பாராளுமன்றத்தில் அரசமைக்க அழைக்க வேண்டியதாயிற்று. 1933 ஜனவரி 30 ஜெர்மனியின் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் ஒரு கருப்பு தினமாயிற்று. அதுதான் ஜெர்மனியில் நடந்த கடைசி தேர்தல்.
          இராணுவமயமாக்கல் மற்றும் வதை முகாம்களின் சகாப்தம் தொடங்கியது. 1940ல் ஜப்பானியப் பேரரசரால் ஜெனரல் கிடேக்கி டோஜோ பிரதமராக நியமிக்கப்பட்டார். பாசிச அச்சு கூட்டணியில் இணைந்த ஜப்பான், ஆசியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியதுடன், இந்திய எல்லைகளைக் கூட தாக்குதல் நடத்தியது.
இரண்டாவது உலகப் போர் (1939 – 45)
          உலகப் போருக்கு அச்சாரமாக 1934ல் ஜெர்மனி கைப்பற்றிய ஆஸ்திரியா 1938 வரை நீடித்தது; முனீச் உடன்பாட்டின்படி (பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஹிட்லருக்கு இடையே ஏற்பட்டது) 1938ல் செக்கோஸ்லாவாக்கியா ஜெர்மன் வசமாக, தொடர்ந்து தாக்குதல் நடத்தி போலந்தின் சிலபகுதிகளையும் கைப்பற்றியது. இந்த நேரத்தில் இத்தாலிய படைகள் அபிசீனியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் மே 1936ல் நுழைந்தன. ஏப்ரல் 1939ல் இத்தாலி அல்பேனியாவைக் கைப்பற்றியது. போலந்தின் மீது தாக்குதல் தொடுக்க, செப்டம்பர் 1ம் தேதி 1939ல் இரண்டாவது உலக மகா யுத்தம் தொடங்கியது.
ஜெர்மன் படைகளிடம் டென்மார்க்கும் நார்வேயும் ஏப்ரல் 1940லும், பெல்ஜியம் லக்ஸம்பர்க் 1940 மத்தியிலும் வீழ்ந்துவிட, அதே வருடம் ஜூன் மாதத்தில் பிரான்ஸ் சரண் அடைந்தது. ஜெர்மன் குண்டுவீச்சு விமானங்கள் நூற்றுக்கணக்கில்  அவ்வாண்டு செப்டம்பர் நவம்பரில் தொடர்ச்சியாக 57 நாட்கள் லண்டனில் குண்டுவீசித் தாக்குதல் நடத்த பிரிட்டன் மௌனமானது.
‘பர்பரோசா ஆப்பரேஷன்’, 1941
ஐரோப்பாவைக் கைப்பற்றிய ஹிட்லரின் பார்வை சோவியத் ரஷ்யாவின் மீது திரும்பியது. 1941, ஜூன் 22ல் ஜெர்மனி தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷ்யாவின் தலைமைத் தளபதி மார்ஷல் (ஜார்ஜி கான்ஸ்டான்டினோவிச்) ஜுகோவ், பலமுறை எச்சரித்தார்; ஆனால் ஸ்டாலின் நாஜி ஜெர்மனி பற்றிய அபாயத்தைக் குறைத்து மதிப்பிட்டார் என மார்ஷல் ஜுகோவ் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலுக்குப் பின் ஸ்டாலின் தீவிரமான முன்னணிப் பங்குவகித்து, படைகளின் சுப்ரீம் கமாண்டர் தலைமை ஏற்று படைகளைத் திறமையாக வழிநடத்தினார்.  
நாஜி ஜெர்மனியும் அதன் கூட்டாளிகளும் ’பர்பரோசா ஆப்பரேஷன்’ என்ற பெயரில் தொடுத்ததே வரலாற்றில் இதுநாள் வரையிலான மிகப்பெரிய ஆக்ரமிப்பு தாக்குதலாகும்: 190 படைப்பிரிவுகள், 55 லட்சம் படைவீரர்களோடு; 47 ஆயிரத்து 200 பீரங்கிகள், 4,300 டாங்குகள் மற்றும் 5ஆயிரம் தாக்குதல் விமானங்கள் 1941 ஜூன் 21 – 22 இரவில் 4500 கி.மீ. நீண்ட சோவியத் யூனியன் எல்லையில் ஆக்கிரமிப்புத் தாக்குதலைத் தொடுத்தன. அந்தப் பெரும்படை 27லட்சம் செஞ்சேனை வீரர்கள், 37,500 பீரங்கிகள், 2000 டாங்கிகள் மற்றும் சுமார் 2ஆயிரம் தாக்குதல் விமானங்களின் எதிர்தாக்குதலை எதிர்கொண்டன.
முதலில் சோவியத் படைகள் பின்வாங்கின. ஜெர்மானியர்கள் ஏறக்குறைய மாஸ்கோவைக் கைப்பற்றி விட்டார்கள், ஆனால் நகருக்குச் சற்று வெளியே நிறுத்தப்பட்டார்கள். வடக்குப் பகுதியில் அவர்கள் லெனின்கிராடு (தற்போதைய செயிண்ட்பீட்டர்ஸ் பர்க்) நகரைச் சூழ்ந்து விட்டார்கள். ஹிட்லர் கொக்கரித்தான், ‘பூமிப்பந்தின் முகத்திலிருந்தே அதனைத் துடைத்து அழித்து விடுவேன்’. ஜெர்மானியர்கள் 900 நாட்கள் முற்றுகையை நீடித்தும் அந்நகருக்குள் நுழைய முடியவில்லை.  தெற்குப் பகுதியில் ஸ்டாலின்கிராடுக்காக (தற்போது வால்கோ கிராடு) போர் நடந்தது. இப்படி இரண்டாம் உலகப் போர் அபாயத்தை எதிர்த்து லெனின்கிராடு முதல் மாஸ்கோ வழியாக ஸ்டாலின்கிராடு வரை படையணியின் முன்னணி வரிசை அணிவகுத்து நீண்டிருந்தது. வாழ்க்கையோட்டம் லடோகா ஏரியின் பாறையாய் உறைந்த பனியின் மீது லெனின்கிராடைத் துடிப்புடன் வைத்திருந்தது. மாஸ்கோவின் அரசு அலுவலகங்கள் மாஸ்கோவைத் தாண்டிய குய் பிஷேவ் (தற்போது சமாரா) முதலான இடங்களுக்கு மாற்றப்பட,  மாஸ்கோ தொடர்ந்து முற்றுகைப் போரை எதிர்த்து நின்றது.
ஸ்டாலின்கிராடில் முடிவான இறுதிப்போர்
ஸ்டாலின்கிராடு போர்க்களம் இரண்டாவது உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தது எனலாம். நாஜி படை வென்றிருந்தால்  (ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் எல்லையாக அறியப்படுகிற மலைத்தொடர்) காக்கசஸ், காஸ்பியன் (கடல்) மற்றும் ஆசியா அவர்களுக்குத் திறக்கப்பட்டிருக்கும்; மேலும் அவர்களது திட்டம், அதன் வழியே இந்தியாவில் ஜப்பானைச் சந்திப்பது மற்றும் துணைக் கண்டத்தையும் வெல்வது தான்.
ஜூலை – ஆகஸ்ட்டில் துவங்கி, போர் முக்கியமாக 1942 ஆகஸ்ட்23 முதல் 1943 பிப்ரவரி இரண்டாம் தேதி வரை நீடித்து நடந்தது. ஜெர்மானிய 6வது இராணுவம், 4வது பன்ஸார் (டாங்கி) படையோடும், ருமானிய, இத்தாலிய மற்றும் அங்கேரி இராணுவத்தோடு ஜெர்மனியின் லுப்ட்வேஃப் (Luftwaffe) குண்டுவீசும் வான்வழி படைப்பிரிவு ஸ்டாலின்கிராடை இடிபாடுகளின் நகராகச் சிதைத்தது; இதனால் சண்டை வீட்டுக்கு வீடு தேடிச் சென்று நடைபெறலாயிற்று. இராணுவவீரர்களும் மக்களும் வீட்டுக்கு வீடு, வாசற்படிக்கு வாசற்படி ஒவ்வொரு கதவுக்கும் ஜன்னலுக்கும் தரைத்தளங்களுக்கும் சண்டை நடைபெறுவதானது! ஜெர்மானியர்களால் ஓர் அறை பிடிக்கப்படுமானால், அதற்கடுத்த அறை சோவியத்தின் கைகளில் அகப்படுத்தப்பட்டது!!
பல லட்சக்கணக்கில் மாண்டனர், நூற்றுக் கணக்கில் டாங்கிகளும் வானூர்திகளும் சிதைத்து அழிக்கப்பட்டது. தொடர்ச்சியான ஆறுமாத யுத்தங்களுக்குப் பின் ஜெர்மனியின் 6வது இராணுவம் முழுமையாகச் சுற்றி வளைக்கப்பட்டது. ஹிட்லர் வேறு மாதிரி உத்தரவிட்ட போதிலும் அதற்கு மாறாக ஜெனரல் பீல்டு மார்ஷல் வான் பவுலஸ் மற்றும் ஜெனரல் செமிட்(Schmidt) மற்றனைவரும் சரணடைந்தனர். ஜெனரல் மான்ஸ்டின் அதிகாரத் தாக்குதல் எடுபடாது தொலைந்தது. ஜெனரல் வான் பவுலஸ் உட்பட லட்சக்கணக்கான ஜெர்மன் போர் வீரர்கள் கைதிகளாகச் சிறை பிடிக்கப்பட்டனர்.
Yeremenko, Khrushchev, Zhukov, Vatutin, Chuikov உட்பட செஞ்சேனையின் மற்ற தலைவர்களும் திட்டங்களை வகுத்துப் போரை வழிநடத்தினர்.
பேரலையைப் புரட்டிப் புறங்காணல்
முதன் முறையாக இரண்டாவது உலகப் போரில் நாஜிகள் பின்வாங்கினர். 1944 வாகில் சோவியத் படைகள் எல்லையை அடைந்து ஐரோப்பாவிற்குள் நுழைந்தது. மாஸ்கோ, லெனின்கிராடு, ஸ்மோலென்ஸ், கார்கவ், குர்ஸ்க் மற்றும் பிற போர்முனைகள் விடுவிக்கப்பட்டு அவையும் ஜெர்மானிய படைகளுக்கு எதிராகப் பொருதின. ஐரோப்பாவின் போலந்திலிருந்து பல்கேரியா வரையும், மற்றும் பிற நாடுகளிலிருந்தும் நாஜிகளின் பாசிசப் படைககளை விரட்டி அடிக்க மூன்று பைலோருஷ்யன், நான்கு உக்ரேனியன் மற்றும் பிற ‘முன்னணி’ படையணிகள் குழுக்களாக அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் Zhukov, Konev, Rokossovsky மற்றும் பிற மார்ஷல்களின் தலைமையில் வழிநடத்தப்பட்டன. 1944 மத்தியில் செஞ்சேனை வீரர்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஜெர்மானியர்களை விரட்டி அடித்தனர்.
பாசிசத்திற்கு எதிரான வெற்றி
மேற்கத்திய நாடுகள் சண்டையில் இரண்டாவது போர்முனையைத் திறக்க மறுத்தனர்; (நாடுகளைக் கூறுபோடுவதில் அவர்களுக்குச் சொந்தக் கணக்கு இருந்தது); அவர்களின் உதவி இல்லாமலேயே செஞ்சேனை முன்னேறுகிறது என்பது தெரிந்த பிறகே முடிவை மாற்றினர். எனவே அவர்கள் 1944 ஜூன் 6ல் பிரான்சின் நார்மன்டியில் இறங்கியது நிலைமையில் சிறிது நிவாரணமாக அமைந்தது.
படையணிகள் குவிக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டதால் ஜெர்மனி மற்றும் பெர்லினைக் கைப்பற்றுவதற்கான போர் மிகவும் கடுமையாக இருந்தது.1945 பிப்ரவரி மற்றும் மார்ச்சில் ஜெர்மனியிலும் ஏப்ரலில் பெர்லினிலும் சோவியத் படைகள் நுழைந்தன. ஏப்ரல் 30 அன்று ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டான். சோவியத் மற்றும் நேசநாடுகளின் படைகளிடம் ஜெர்மன் படைகள் 1945 மே 9ம் நாள் சரணடைந்தன: மார்ஷன் கீடெல் (Kietel) சரணடைவதாக மார்ஷல் ஜுகோவ் (Zhukov) மற்றும் பிறரிடம் கையெழுத்திட்டு அளித்தார். இவ்வாறாக இரண்டாவது உலகப் போர் முடிவடைந்தது.
1945 ஏப்ரல் 28 அன்று முஸோலினி மற்றும் கூட்டாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உடல்கள் பொதுவெளியில் தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டன. சர்வதேசத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி டோஜோவுக்கு 1948 டிசம்பர் 23ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாடங்கள், படிப்பினைகள்
இரண்டாவது உலகப்போர் இழைத்த தீம்புகளும் அழிவுகளும் வடுக்களாய் இன்னும் இரத்தம் கசிந்தபடி எரிச்சல் தருவதாய் உள்ளன. மனிதகுலத்தின் ஆகப் பெரிய எதிரியும் விரோதியும் என்றென்றைக்கும் பாசிசம்தான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் துயரமும், இழப்பும், தியாகமும் ஒருநாளும் மறக்கலாகாது; பாசிசக் குணக்கேடின் அபாயத்தைக் குறைத்து மதிப்பிட்டு அலட்சியமாக இருத்தலாகாது. பாசிசம் மீண்டும் தலையெடுக்காது தடுக்க வேண்டுமெனில், அதற்கான சிறந்த வழி  ஜார்ஜ் டிமிட்ரோ (1935) காட்டிய கோட்பாடான மிகப் பெரிய அளவிலான ஐக்கிய முன்னணியைக் கட்டுவதே!
(அரசியல், பொருளாதாரம், சமூக முன்னேற்றம் என்ற அனைத்துத் தளங்களிலும்-- மனிதகுலம் காக்க ஒன்றுபட்டு உழைக்க, பாசிசத்தை வென்ற தியாகிகளின் பெயரால் சபதமேற்போம்! )
--தமிழில் நீலகண்டன்,
 என்எப்டிஇ, கடலூர்
- 





No comments:

Post a Comment