Saturday 9 May 2020

1945, மே 9 - பாசிசத்தை முறியடித்த 75வது ஆண்டு


நாஜிகளின் பாசிசத்தை வெற்றி கொண்டதன்
பவள விழா


1945, மே 9 - பாசிசத்தை முறியடித்த 75வது ஆண்டு

உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் கூட்டறிக்கை
      
  பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா முதலிய நாடுகள் உட்பட பல நாடுகளின் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளுடன் இணைந்து இந்தியாவின் சிபிஐ, சிபிஐ(எம்) கட்சிகள் சுதந்திரத்தின் பெயரால், அமைதி மற்றும் உண்மையின் பெயரால் பாசிசத்திற்கு எதிராகவும், யுத்தங்களுக்கு எதிராகவும் வெளியிட்ட கூட்டறிக்கை:
        இரண்டாவது உலக யுத்தத்தில் நாஜி பாசிசத்தை வெற்றி கொண்ட நிகழ்வு சரித்திரத்தில் மிக முக்கியமானது. அந்த நினைவு போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். காரணம் அந்த வெற்றிக்குப் பின்னால் சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் கூட்டமைப்பு ஆற்றிய ஒப்பற்ற பங்கு, உலகம் முழுவதுமிருந்த கம்யூனிஸ்ட்களும் பாசிச எதிர்ப்பாளர்களும் வகித்த போற்றுதலுக்குரிய பாத்திரத்தை மறக்கடிக்கச் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே அந்நினைவை, வெற்றியைக் கண்ணின் மணியெனப் போற்றிக் காத்திடல் வேண்டும்.
        முதலாளித்தும் உண்டாக்கிய நாஜி-பாசிசம், ஏகாதிபத்திய முதலீடுகளின் மிக மோசமான வன்முறையின் பயங்கரவாத வெளிப்பாடாகும். ஆக்கிரமிப்பு நோக்கத்தோடு மூண்டெழுந்த இந்த யுத்தத்திற்கு நாஜி-பாசிசமே காரணம்; அதனால் ஏழரை கோடி மக்கள் மாண்டனர், அவர்களில் இரண்டே முக்கால் கோடி பேர் சோவியத் குடிமக்களாவர்; இதைத் தவிரவும் நாஜிகளின் சித்திரவதை முகாம்களில் சொல்லொண்ணா கொடுமைகளுக்கு ஆளோனோர் பல லட்சம். வரலாற்றின் அந்தக் கறுப்புப் பக்கங்களை எவ்வாறு மறக்க முடியும், ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்காவால் வீசப்பட்ட அணுகுண்டுகள் மற்றும் அது ஏற்படுத்திய அழிவுகள்; அதுவும் யுத்தம் முடிந்த தருவாயில், இராணுவரீதியாக எந்த நியாயமும் இல்லாமல், தனது அணுஆயுத வல்லாண்மை ஆற்றலைக் காட்டுவதற்கென்றே, உலகளாவிய நாடு பிடிக்கும் பேராசையால் நிகழ்த்தப்பட்ட கொடுமை அது.
        ஏகாதிபத்தியங்களின் உள்முரண்பாடுகள் நாளும் முற்றியதால் இரண்டாவது உலக மகாயுத்தம் (1939--45) விளைந்தது என்றாலும், அதன் மற்றொரு நோக்கம் அன்றலர்ந்த உலகின் முதல் சோஷலிச அரசாம், யுஎஸ்எஸ்ஆரை இளங்குருத்திலேயே ஒழிப்பதுதான்; அதற்கு உதாரணமாக, ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டு நாடு பிடிக்கும் பேராசை கொண்ட நாஜி ஜெர்மனிக்கு ஆதரவாகப் பிரட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியதைக் கூறலாம்.  
        1945, மே 9 சரித்திர வெற்றியின் பவளவிழாவைக் கொண்டாடும் வகையில் கீழே இவ்வறிக்கையில் கையெழுத்திட்ட கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் தங்கள் கொண்டாட்டங்கள் உலகளாவிய தொழிலாளர் வர்க்க மற்றும் மக்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும் வெளிப்படுத்துகிறது என்ற புரிதலில் தெளிவாக உள்ளனர்.
Ø நாஜிபாசிசக் கும்பலுக்கு எதிராகப் போர்க்களத்தில் வீரச்சமர் புரிந்து இன்னுயிர் ஈந்த வீரர்களுக்குப் புகழஞ்சலி செலுத்துவோம்! நாஜிகளுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கங்கள், வீரஞ்செறிந்த சோவியத் மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியால் வழிநடத்தப்பட்ட செம்படையினர், அவர்கள் ஆற்றிய பெரும் பங்கு மாஸ்கோ, லெனின்கிராடு, ஸ்டாலின்கிராடு போர்க்களங்களின் வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப் பட்டிருக்கின்றன. காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து அவர்கள் வீரம் விளைவித்த வெற்றியின் பவளவிழா இது!
Ø நாஜிஜெர்மனி மற்றும் அதன் கம்யூனிஸ்ட் எதிர்ப்புக் கூட்டாளி நாடுகளை வெற்றி கொண்டதில் சோவியத் சோஷலிசக் குடியரசின் தீர்மானகரமான பங்கை, சோவியத்தின் வலிமையின் வர்க்க குணாம்சத்தை, சோவியத் மக்களின் பங்கேற்பை, அந்த மக்களை வழிநடத்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை இப்படி ஒட்டுமொத்தமாகக் காட்சியளித்த சோஷிலிச முறைமையை நினைவில் நிறுத்திப் போற்றுவோம்!  புரட்சிகர இயக்கத்தின் மாபெரும் வரலாற்றுப் பாரம்பரிய வெற்றியின் பவளவிழா இது!  
Ø மக்கள் மற்றும் தொழிலாளர்களின் சமூக, தேசிய விடுதலையைப் பெற்றுத் தந்த இந்த வெற்றி வழங்கிய முன்னேற்றங்கள்தான் எத்தனை எத்தனை! சமூக முற்போக்குச் சக்திகளை முன்னேறச் செய்து உலக அமைதியைச் சாத்தியமாக்கியது; ஐரோப்பிய நாடுகளுக்குள் சோஷலிசத்தை விரிவுபடுத்தியது; ஆசிய, லத்தின் அமெரிக்க நாடுகளில் சோஷலிசம் மலரச் செய்தது மட்டுமல்ல, முதலாளித்துவ நாடுகளிலும் கூட தொழிலாளர் இயக்கங்கள் வலிமைபெற வழிவகுத்து, தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவளித்து வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தி, நாடுகளை விடுதலைபெறச் செய்து காலனியச் சாம்ராஜ்யங்களை முடிவுக்கு கொண்டுவரச் செய்த மாண்புகளை நினைவூட்டும் வெற்றியின் பவளவிழா இது!  
Ø இன்று உண்மைகளைச் சிதைத்து வரலாற்றை மூடி மறைத்து நாஜி பாசிசத்தை முறியடித்த சோவியத் மற்றும் கம்யூனிஸ்ட்கள் ஆற்றிய பங்கைச் சிறுமைப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன; இரண்டாம் உலகப்போர் துவங்க சோவியத் யூனியன்தான் காரணம் என நியாயமற்ற வகையிலும் தவறாகவும்கூட குற்றம்சாட்ட முனைந்துள்ளனர்; அவர்களின் நோக்கம், நாஜி பாசிசம் வளர்வதற்கும் உலக யுத்தம் வெடிப்பதற்கும்கூட பெருமுதலாளிகள் மற்றும் அவற்றின் அடிவருடிகளான அரசுகளே வழிவகுத்தன என்ற தங்களின் பொறுப்பைத் துடைத்தெறிவதுதான். இப்படிச் செய்வதன் மூலம் வரலாற்று உண்மைகளை மூடிமறைக்கவும் பாசிசத்திற்கு மறுவாழ்வளிக்க முனைகின்றனர்; சோவியத் விடுதலைப் படைகள் ஆற்றிய அளப்பறிய நினைவுச் சின்னங்களையும் ஞாபகங்களையும் அழித்து கம்யூனிச எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பாளர்கள் கம்யூனிஸ்ட்கள் என்றாலே குற்றவாளிகளென ஆக்கவும் முயல்கிறார்கள்.  அவர்களுடைய கேடுகெட்டப் பிரச்சாரத்தைக் கண்டிக்கவும் நிராகரிக்கவும் வேண்டுமென வற்புறுத்தும் வெற்றியின் பவளவிழா இது!
Ø ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கம்யூனிச எதிர்ப்புத் தீர்மானங்கள் மற்றும் சேறுவாரிஇறைக்கும் வரலாற்றுத் திரிபு முயற்சிகளின் நோக்கம் சோஷலிசத்தைப் பாசிச அரக்கனுக்குச் சமமானதாகக் காட்டுவதே. அவர்களுடைய முயற்சிகளைக் கண்டிக்கவும் நிராகரிக்கவும் வேண்டுமென வற்புறுத்தும் வெற்றியின் பவளவிழா இது!
Ø முதலாளித்துவ முறைமையின் ஆழமான நெருக்கடியிலிருந்து “வெளியேறும் வழி”யாகப் பாசிசத்தையும் போரையும் கருதுகின்ற ஒரு போக்கு தீவிரமான ஏகாதிபத்தியப் பிரிவுகளின் மோசமான திரிபுவாதிகளிடம் அதிகரிப்பது குறித்து எச்சரிக்கிறோம்; அந்த மனிதத்தன்மையற்ற போக்கு இன்றைக்கும் –கோவிட் 19 பெருந்தொற்று உலகை அச்சுறுத்தும் நிலையிலும்—வெளிப்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். குறிப்பாக, ஏகாதிபத்திய அமெரிக்கா, நேட்டோ, ஐரோப்பிய யூனியன் மற்றும் அதன் கூட்டாளி நாடுகளும் முதலாளித்துவ சக்திகளும் (பொருளாதாரத்) தடை, முற்றுகை மற்றும் நாடுகள் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுவது குறித்து எச்சரிக்கும் வெற்றியின் பவளவிழா இது!
Ø அமைதிக்கான போராட்டம், சமூக முன்னேற்றம் மற்றும் சோஷலிசம் என்பன பிரிக்க முடியாத உறுதிப்பாடாக வேண்டுமென இன்று உழைக்கும் வர்க்கம், தொழிலாளர்கள் மற்றும் உலக மக்கள், பாசிசத்தை வழி மறிக்கும் அரசியல் சக்திகளிடம் வேண்டி நிற்கிறது; ஏகாதிபத்தியத்திற்கு, ஏகாதிபத்திய ஆக்ரமிப்புக்கு மற்றும் பெரும் துன்பதுயரங்களை இழைக்கும் புதிய போர் முஸ்தீபுக்கு  எதிரான போராட்ட இயக்கங்கள் நிகழ்த்தப்பட வேண்டுமென நம் கடமையை நினைவூட்டும் வெற்றியின் பவளவிழா இது!
இன்றைக்கு உலகில் தொழிலாளர்களும் பொது மக்களும் மோதி எதிர்கொள்ளும் சூழ்நிலை, மக்களின் இறையாண்மை மற்றும் தேசங்களின் விடுதலை, தொழிலாளர்கள் மற்றும் குடிமக்களின் உரிமைகள் காக்கப்பட ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்ட இயக்கங்கள் மேலும் வலிமை பெற வேண்டியதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு வற்புறுத்துகிறது. பாசிசத்தை உற்பத்தி செய்த முதலாளித்துவ முறைமை, யுத்தங்களையும் அநீதிகளையும், இன்றைய முரண்பாடுகள் மற்றும் அபாய நெருக்கடிகளுக்கும்கூட காரணமாகிறது. அன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பு பாசிசத்தை வெற்றி கொண்டது போல இன்றைக்கும் கம்யூனிஸ்ட்கள் மற்றும் எங்கெல்லாம் முதலாளித்துவச் சுரண்டலுக்கும் ஒடுக்குதலுக்கும் ஆளாகிய மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள்தாம் மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான பாதையைத் திறக்கிறது, வளமைக்கும் வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறது.
பாசிசத்திற்கு எதிரான வெற்றியின் பவளவிழா வாழ்க!
இன்னுயிர் ஈந்த வீரர்களுக்குப் புகழஞ்சலி செலுத்துவோம்!
வாழ்த்திசைப்போம் செம்பதாகைகளை உயர்த்தி!
--செய்தி : நியூஏஜ்
--தமிழில் : நீலகண்டன்,
  என்எப்டிஇ, கடலூர்



No comments:

Post a Comment