Tuesday, 17 November 2026

நியூ ஏஜ் தலையங்கம் -- வாக்குரிமை, நாடாளுமன்ற அமைப்புகளின் பயன்பாடு குறித்து ஏங்கெல்ஸ்

 நியூ ஏஜ் தலையங்கம் (நவ.15 –21)

அனைவருக்கும் வாக்குரிமை மற்றும்

நாடாளுமன்ற அமைப்புகளின் பயன்பாடு

குறித்து ஏங்கெல்ஸ்

1820 நவம்பர் 28ல் பிறந்த ஃபெடரிக் ஏங்கெல்ஸ் அவர்களின் 206வது பிறந்த தினம்.  அவரது கருத்துக்களின் நிலைத்திருக்கும் பொருத்தப்பாட்டை –குறிப்பாக சுரண்டல் அடிப்படையிலான முதலாளித்துவ முறையால் விளைந்த பொருளாதாரச் சமத்துவமின்மை சூழலில்– இது வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

ஃபெடரிக் ஏங்கெல்ஸ் ஜெர்மன் தத்துவவாதி, அரசியல் கோட்பாட்டாளர், வரலாற்றாளர், பத்திரிக்கையாளர் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் ஆவார். காரல் மார்க்ஸ் உடன் சேர்ந்து

ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கை மற்றும் மூலதனம் (கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ & தாஸ் கேபிட்டல்) ஆகிய நூல்களைத் தொகுத்தார். ஏங்கெல்ஸும் நவீன கம்யூனிசத்தை விளக்கினார். அவரது இந்தப் படைப்பு மக்களின் உணர்வு நிலையில் ஆழமாகச் செல்வாக்கு செலுத்தியது. மிகுந்த செல்வாக்குச் செலுத்திய நூல்களில் ஒன்றான இது சோசலிசப் புரட்சிக்கான பாதையை  அமைத்தது.

ஃபெடரிக் ஏங்கெல்ஸ் பெயர் வரலாற்று ரீதியில் காரல் மார்க்ஸ் உடன் இணைந்த

ஒன்றாயிற்று. காரல் மார்க்சின் ஆத்மார்த்தமான நெருங்கிய நண்பரான அவர், தன்னளவில்
அசாதாரணமான கோட்பாட்டாளர்
; மார்க்ஸுடன் இணைந்து மார்க்சியத்தை உருவாக்கிய இணை படைப்பாளர். 

அது மாற்றத்தின் காலகட்டம், நிலப்பிரபுத்துவம் மறைந்து கொண்டிருந்த அதே வேளையில் 1780களில் ஜேம்ஸ் வாட் நீராவியின் ஆற்றலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தருணம்; இயற்கையின் மேலாண்மை சரிந்து, பெருமளவில் தொழில் மயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் முதலாளித்துவம் உதயமான மாற்றத்தின் கட்டம். மேலும் மார்க்ஸ் எழுதிய ”பிரான்சில் வர்க்கப் போராட்டம்” நூலுக்கு அறிமுகத்தை ஏங்கெல்ஸ் எழுதிய தருணமும் கூட.

தொழிலாளர் வர்க்கத்திற்கும் அதன் கட்சிகளுக்கும் பொது வாக்குரிமை (Universal Suffrage) கோரிக்கை பிரச்சனையை மார்க்ஸுடன் சேர்ந்து ஏங்கெல்ஸ் எழுப்பினார். தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காகத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம், ஜனநாயக வழிமுறைகளின் மூலம் வலுப்பெற்று வந்தன.  

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இருவருமே வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் மற்றும் எப்போதும் அவர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை எதிர்த்தனர். இங்கிலாந்தில் சாசன இயக்கம் (Chartist movement) ஏறத்தாழ பத்தாண்டு காலம் (1830 முதல் 1840 வரை). தொடர்ந்தது. மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இருவரும் அவர்களின் கோரிக்கைகளை ஆதரித்தனர்; அக்கோரிக்கைகள் அரசியல் ரீதியானதும் மற்றும் உலகம் முழுவதுமுள்ள  தொழிலாளர் வர்க்கத்தால் உடனடியாகத் தேவை என வற்புறுத்தியவையாகும். அந்தக் கோரிக்கைகளில் ஒன்று 10 மணி நேர வேலை நாள், மற்றொரு கோரிக்கை பாட்டாளிகளுக்கு வாக்குரிமை. அவை இரண்டுமே முக்கியமானவை மற்றும் ஜனநாயகத்தை ஆதரிப்பவை. அக்காலகட்டம் சகோதர ஜனநாயகவாதிகள் (ஃபிரட்டர்னல் டெமோகிரெட்ஸ்) சாசன இயக்கத்திற்கு ஆதரவாக வெளியே வந்த தருணமும் ஆகும்.

அந்த ஆண்டுகளில் எங்கெல்ஸ் எழுதிய “இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை” (1845) என்ற நூல் வெளிவந்தது. அந்தப் புத்தகம் அவரது வாழ்நாள் துணைவியான, தொழிலாளி வர்க்க ஐரிஷ் பெண்மணி, மேரி பர்ன்ஸ் (Mary Burns) உதவியுடன் தொகுக்கப்பட்டது. 

லண்டன் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் ஒரு குழு வில்லியம் லவ்ட் (William Lovett) தலைமையில் அமைக்கப்பட்டது; அந்தக் குழு 1838ல் மக்களின் கோரிக்கை சாசன வரைவு ஒன்றைத் தயாரித்தது. அதில், 21 வயதான அனைத்து ஆண்களுக்கும் வாக்குரிமை மற்றும் தங்களுக்கு விருப்பமானவர்களைத் தேர்ந்தெடுக்கும் இரகசிய வாக்களிக்கும் முறை உட்பட ஆறு முக்கிய கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டன. மேலும் எந்தவிதச் சொத்து இல்லாதவரும் கூட நாடாளுமன்ற உறுப்பினராக (எம்பி) ஆவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் கோரினர்.

ஏங்கெல்ஸும் மார்க்ஸும் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை மற்றும் நாடாளுமன்ற அமைப்புகள் ஒரு ஜனநாயகத் தேசத்திற்குத் தவிர்க்க முடியாத கட்டாயமானவை என்று கருதியதோடு அவற்றிற்குப் பெரும் முக்கியத்துவமும் அளித்தனர். இன்றைய உலக மற்றும் இந்தியச் சூழலில் இவை கூடுதல் பொறுத்தமுடையவை. ஜனநாயகத் துறையில்  ஏங்கெல்ஸின் பங்களிப்புகளில், அமைதியான வடிவங்களிலான மாற்றங்களும், ஜனநாயக மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளைப் பயன்படுத்துவதும் மிக அவசிய கட்டாயமானவைகளாக மாறின. இந்தக் குறிப்பிட்ட பங்களிப்புக்கு மிகக் குறைவான கவனமே அளிக்கப்பட்டுள்ளது மற்றும் பொதுவாகப் பலருக்கும் பெரிதும் தெரியாத ஒன்று இது எனலாம். இருப்பினும் இத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு அசாதாரணமானது. உண்மையில், உலகம் முழுவதும் நாடாளுமன்ற மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் பரவியுள்ள இன்றையச் சூழலில், புரட்சியாளர்கள் மக்களின் நலன்களுக்காகப் அவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்துவரும் நிலையில், அவரது போதனைகள் முன்னெப்போதையும் விட மிகக் கூடுதலான பொருத்தப்பாட்டைப் பெற்றுள்ளன.  .

வர்க்கப் பிரிவினை உள்ள சமூகத்தில், தொழிலாளர்களைப் பொறுத்தவரை அற்ப ஊதியத்திற்காக உழைப்பது, வேலை கிடைக்காதபோது  பட்டினி கிடப்பது அல்லது அதைவிட மோசமாக ஆழமான பாதுகாப்பற்ற வாழ்க்கையுடன் அல்லாடுவது என்பதே எதார்த்தமாக இருந்தது.

“எந்த அளவு தாழ்ந்த மட்டத்திற்குத் தொழிலாளர்கள் தள்ளப்படுகிறார்கள் எனில், பொது விவகாரங்களில் ஈடுபடக் கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை; இது மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மேலும் கூடுதல் அதிகாரத்தை அளிப்பதில் முடிகிறது” என்று ஏங்கெல்ஸ் கூறினார். மேலும் பல அவதானிப்புகளை மேற்கொண்ட அவர், “குடும்பம், தனிச்சொத்து,  அரசு ஆகியவற்றின் தோற்றம்” குறித்த நூல் ஒன்றை எழுதினார்.

பெண்கள் படும் பாடுகளின் நிலை குறித்து எழுதியவர்‌ ஏங்கெல்ஸ். பெண்கள் கூடுதல் சுதந்திரத்தை அனுபவித்து, சமூக அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் மற்றும் பல முக்கிய அம்சங்ஙகளில் பெண்களை மையமாகக் கொண்டு செயல்படும் ஓர் உலகம் குறித்த சிந்தனையால் ஏங்கெல்ஸ் ஈர்க்கப்பட்டார். குழந்தையைப் பிரசவித்த சில நாட்களிலேயே பெண்கள், முதலாளித்துவச் சுரண்டும் சக்திகளால், வேலைக்குச்  செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவது குறித்த விவரங்களை ஏங்கெல்ஸ் பகிர்ந்து கொள்கிறார் .

ஏங்கெல்ஸும் மார்க்ஸும் இணைந்து தங்கள் வாழ்வை உழைக்கும் வர்க்கத்திற்காக அர்ப்பணித்தனர். அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூல காரணம் உழைப்புச் சுரண்டலே என்று அவர்கள் அடிக்கடி கூறினர். வறுமை, இளமையில் மரணம் மற்றும் நோய்கள் என அனைத்திற்கும் இந்த வர்க்க வேறுபாடு மற்றும் சுரண்டல் முறையே காரணம் என்று கூறலாம். அனைத்து உற்பத்தி சாதனங்களும் பொதுவுடமை ஆக்கப்பட வேண்டும் என்றும், அவை அனைவரின் நலனுக்காக இயங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஃபெடரிக் ஏங்கெல்ஸ் 1895ம் ஆண்டு ஆகஸ்டு 5ல் இயற்கை எய்தினார்; ஆனால் அவரது கருத்துகள் அவரை மரணம் இல்லா பெருவாழ்வு எனும் நிலைத்த புகழுக்கு உரியவர் ஆக்கின. உலகம் முழுவதும் உள்ள சமூகச் செயல்பாட்டாளர்கள் விழிப்புணர்வைப் பெறவும்  மேம்பட்ட உலகத்தை உருவாக்குவதற்காகப் பாடுபடவும்  இன்றும் அவரது படைப்புகளைப் படிக்கிறார்கள்.

ஏங்கெல்ஸும் மார்க்ஸும் வாக்குரிமைகள் மீதும்  நாடாளுமன்ற அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மீதும் எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். ஃபெடரிக் ஏங்கெல்ஸ் மட்டுமல்லாது காரல் மார்க்சும் கூட தொழிலாளர் வர்க்கம் மற்றும் அதன் கட்சிகளுக்குப் பொது வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்த பிரச்சனையை எழுப்பினார்; மேலும் இந்தப் பிரச்சனையில் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் மற்றும் ஜனநாயகப் போராட்ட வடிவங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். மக்களில் பலரும் அவர்கள் ஆயுதப் போராட்டத்தின் தீவிர   ஆதரவாளர்கள் என்ற தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். இக்கருத்தைப்போல உண்மையிலிருந்து வெகு தொலைவில் வேறு எதுவும் இருக்க முடியாது. அவர்களது படைப்புக்களில் ஆயுதப் போராட்டத்தை அவர்கள் ஆதரித்ததாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. 1830கள் மற்றும் 1840களில் இங்கிலாந்து தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாசன இயக்கம் (சாரிஸ்ட் மூவ்மெண்ட்) குறித்த மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸின் மதிப்பீட்டிலிருந்து அவர்களின் தெளிவான அணுகுமுறை நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளலாம்.

இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய சகாப்தத்தில், குறிப்பாக  21ம் நூற்றாண்டில் நாடாளுமன்ற நிறுவனங்கள் மற்றும் அனைவருக்கும் பொது வாக்குரிமை முன்பு எப்போதும் இல்லாத அளவில் பரவி உள்ளன. ஜனநாயகத்திற்கான போராட்டம், வாக்களிக்க உரிமை, கருத்துக்களை வெளியிடும்  உரிமை, ஊடகச் சுதந்திரம் மற்றும் அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்தல் போன்றவை முக்கியமான அம்சங்களாக மாறியுள்ளன; இவற்றை நம் நாட்டிலேயே நாம் தெளிவாகக் காண முடிகிறது. லத்தின் அமெரிக்கா, நேபாளம், மேற்கத்திய ஐரோப்பா முதலான நாடுகளின் நிகழ்வுகள் ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான மாற்றத்தின் வடிவங்கள் கடந்த காலங்களில் இருந்து தீவிரமாக மாறுபட்டவைகளாக இருப்பதை காட்டுகிறது.

லத்தின் அமெரிக்காவில் டஜனுக்கும் மேற்பட்ட நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளாக, இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் பெருந்திரள் மக்கள் இயக்களின் ஆதரவுடன் வாக்குப்பெட்டி மூலமாகத் தொடர்ந்து அரசாங்கங்களை அமைத்து வருவதைக் காண்கிறோம். இன்னும் இது சோசலிசம் அல்ல, ஆனால் அதற்கான அடித்தளத்தை  அமைக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் ஜனநாயகத்திற்கு மாறுதல் என்ற சூழலில் உருவாகும் சோசலிசம், ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம் முதலான நாடுகளிலிருந்து குணம்ச ரீதியில் வேறுபட்டதாக இருக்கும். இன்று ஜனநாயகப் புரட்சி முன் எப்போதையும் விட ஆகக் கூடுதலான முக்கியத்துவம் உடையது.

மார்க்ஸ்,  ஏங்கெல்ஸ் போதனைகள்படி நாடாளுமன்ற அமைப்புகளைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும் உறுதி ஏற்போம்! 

–தமிழில் : நீலகண்டன், 
என்எப்டிஇ, கடலூர்.

 

   

 

No comments:

Post a Comment