நியூ ஏஜ் தலையங்கம் (நவ.1–7)
மாபெரும் அக்டோபர்
புரட்சி
அது ஒரு கனவு நிலை. அத்தனை இரத்தம் சிந்தல் மற்றும் துன்பங்கள்
இருந்த போதும், அது ஓர் உச்சகட்ட இலக்காகவே நீடித்தது; இதற்காகவே பெருந்திரள் மக்களுடன் கம்யூனிஸ்டுகள் தங்கள் இன்னுயிரைத்
தியாகம் செய்தனர். நெருக்கடிக்கு மத்தியிலும், முன்னேறிச்
சென்ற அவர்களை எதனாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அனைத்தும் மக்களுக்குச்
சொந்தமாக ‘குடிமக்கள் சொன்னபடி குடி வாழ்வு, மேன்மையுறக் குடிமை நீதி…எழுந்தது பார் குடியரசு” என்பதைக்
கண்ட உலகிற்கு அது ஒரு பெரிய அதிசயம். உலகின் பிற பகுதிகளை முதலாளித்துவம் ஆட்சி
செய்த நிலையில், கோடிக்கால் பூதமாக எழுந்த சோசலிசம் ஒரு
சவாலாக அவர்கள் முன் நின்று வெருட்டியதால், ஏகாதிபத்தியம்
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இருக்க முடியவில்லை.
அது ஒரு புதிய சமூக–பொருளாதார அமைப்பு முறையாக விரைவாக உருவானது.
தொழிலாளி வர்க்கம் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றது. அவர்கள்
தங்கள் உலகத்தை உருவாக்கி, மேலும் வலிமை பெற, ஏகாதிபத்தியம்
மறையத் தொடங்கியது. பழைய சுரண்டும் வர்க்கங்கள்
தங்கள் வாழ்வை நீட்டிக்கச் செய்த நோக்கத்தை இழந்தன. புதிய பாதை அவற்றைத் தீர்மானகரமான
தருணத்தை நோக்கி இட்டுச் சென்றது; அத்தகைய தருணத்தில்,
முரண்படும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான பகைமையை முடிவுக்குக்
கொண்டு வரும் சாத்தியத்தை அவற்றால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அனைத்துச்
சுரண்டப்பட்ட வர்கங்களுடன் தொழிலாளி வர்க்கமும் ஈடுபட, சோவியத்
சோசலிசக் குடியரசுகள் ஒன்றியத்தின் தலைமையில் புதிய
சமூகத்தைக் கட்டமைப்பதற்கான போராட்டம் தொடர்ந்தது.
1917ம் ஆண்டின் அக்டோபர் புரட்சி உலகின் முதலாவது
சோசலிச அரசு உருவானதை அடையாளப்படுத்தியதுடன் இருபதாம் நூற்றாண்டின் உலக அரசியல்,
பொருளாதாரம் மற்றும் வரலாற்றை அடிப்படையில் மாற்றி அமைத்தது.
‘இரு அதிகார மையம்’ (‘dual power’) என்ற
ஆட்சி முறையின் பரஸ்பர சக்திகளைப் பிரித்து நீக்குவதன் மூலமே புரட்சி மேலும்
முன்னேற முடியும் என்பது அக்டோபர் புரட்சியின் முக்கிய அம்சமாகும்.
1917 பிப்ரவரி புரட்சி வெற்றிக்குப் பிறகு ரஷ்யாவில் தற்காலிக அரசு
(புரவிசனல் கவர்ன்மெண்ட்) மற்றும் பெட்ரோகிராட் தொழிலாளர்கள் மற்றும் வீரர்களின் பிரதிநிதிகள் அமைப்பு (பெட்ரோகிராட் சோவியத்) ஆகிய
இரு அதிகார மையங்கள் உருவாகி இணையாகச் செயல்பட்டன. 1917 அக்டோபர்
புரட்சியானது, பெயருக்கு முறையான அதிகாரத்தைப் பெற்ற
முதலாளிகளின் தற்காலிக அரசை முற்றிலுமாக நீக்கிவிட்டு உண்மையான மக்கள் பலம் கொண்ட–
அதாவது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின்– சோவியத்
அமைப்பிடம் முழு அதிகாரத்தையும் ஒப்படைத்தது. [அதன் மூலம் ஒரு தேசத்திற்குள்
இரண்டு அரசாங்கங்கள் என்ற இந்த இரட்டை அதிகார முரண்பாட்டைத் தீர்த்து வைத்த
வரலாற்று நிகழ்வு இது]. நடைமுறையில் முதலாளிகளின் தற்காலிக அரசிடம், போலீசோ இராணுவமோ இல்லை; அதன் காரணமாக அதனால்
சோவியத்துக்களுக்கு எதிராகப் பலவந்தமாக எதுவும் செய்ய முடியவில்லை. சோவியத்துகள்,
முதலாளித்துவ (பூர்ஷ்வாசி) வர்க்கத்திடம் அதிகாரத்தைத் தாமாக
முன்வந்து ஒப்படைக்கக் காரணம், அவர்கள் மீது கொண்ட மாயையான
சில நம்பிக்கைகளே ஆகும். ஆனால் பெரும்பான்மை மக்களின் வெளிப்படையான மற்றும் மறுக்க
முடியாத ஆதரவு சோவியத்துக்களுக்கு இருந்தது.
எனவே மாமேதை லெனின், அந்த மாயையில் இருந்து மக்களை விடுவிக்கும்
உத்தியைக் கடைப்பிடித்து அமைதியான வழிகளில் புரட்சியின் வெற்றியைச் சாதித்து
இரட்டை அதிகார முறைக்கு முடிவு கட்டினார்
விளாடிமிர் லெனின் இதனை இரு வெவ்வேறு வர்க்கங்களின் சர்வாதிகாரங்கள் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட (Interlocking) ஒரு தற்காலிக நிலைக்கு வழி வகுத்த குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு என்று
ரஷ்யப் புரட்சியின் முக்கிய முழக்கங்கள் 3 : அமைதி, ரொட்டி மற்றும் நிலம். ரஷ்யப் புரட்சியானது
முதல் உலகப் போர் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பொது நெருக்கடியிலிருந்து உருவானது.
ரஷ்ய மக்களுக்கும் உலகம் முழுமைக்கும் அமைதி மிக முக்கியமான தேவை என்ற காரணத்தால்
முதல் உலகப் போரில் இருந்து அது விலகியது. அமைதியைச் சாதித்த அடிப்படையில்
ரொட்டியும் நிலமும் கூட முக்கியமானவை. இவ்வாறு இந்த இலட்சிய நோக்கங்கள் ஒட்டுமொத்த
மக்கள் கூட்டத்தின் அக்கறையையும் உள்ளடக்கியது; எனவே அவை
ஜனநாயகத் தன்மை கொண்டவையாக இருந்தன.
முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் தங்கள் ஏகபோக ஆதிக்கத்தை இழந்தன; அவை
நேருக்கு நேர் ஒரு புதிய சக்தியை எதிர்கொள்ள வேண்டி வந்தது. ‘ஆகா வென்றெழுந்தது பார்’ என்ற இந்தப் புதிய சக்தி
வளர்ந்து, புதிய சமூகத்தை இலவசமாகக் கட்டி எழுப்பும் 20
கோடி மக்களின் தினசரி வாழ்விலிருந்தும், லட்சோப
லட்சம் உழைக்கும் மக்கள் கூட்டத்தின் விழிப்புணர்விலிருந்தும் வலிமை பெற்றது;
அந்தக் காணரும் வீரர்கள் அந்தப் பணிக்காகக் கைமாறு எதையும் எதிர்பார்க்காமல் உழைத்த தொழிலாளர்களின் அர்ப்பணிப்பிலிருந்தும்
அது வலிமை பெற்றது.
இது, அனைத்து உழைக்கும் மக்கள் வாழ்விலும், முன்னேற்றத்தை விரும்பும் அனைத்து நேர்மையான நண்பர்கள் வாழ்விலும் ஒரு
தீர்மானகரமான தருணமாக அமைந்தது: இது அவர்களின் அரசியல், கருத்தியல்
மற்றும் நன்னெறி சார்ந்த அணுகுமுறை நிலைப்பாடுகளைத் தீர்மானித்தது. இது, பழைய சுரண்டும் வர்க்கத்தை மாற்றி, ஒரு புது
வர்க்கம் அதிகாரத்திற்கு வந்து அமர முடியும் என்பதை இறுதியில் நிரூபித்தது.
ஏகாதிபத்தியச் சங்கிலியை நொறுக்கி உடைக்க முடியும் என்பது இறுதியில் நிரூபிக்கப்பட்டது. உழைக்கும் வர்க்கம் அதன் கடமை பொறுப்புகளில்
விழிப்புணர்வுடன் இருக்கும் என்ற நிபந்தனையில் வெற்றிக்கு இட்டுச் செல்லும் புதிய
பாதை மனித குலத்திற்கு உண்டு என்பது இறுதியாக
நிரூபிக்கப்பட்டது. அக்டோபர் புரட்சியின் வெற்றி மணியோசை நமது வர்க்க எதிரிகளான
முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு அவர்களின் சாவு மணியாக ஒலித்தது.
அதன் காரணமாகத்தான் 1917 அக்டோபருக்குப் பிந்தைய தொடக்க ஆண்டுகளில்,
பழைய முதலாளித்துவ ஒழுங்கிற்கு
எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் பெரும் சீற்ற
அலையாக ஒரு வலிமையான இயக்கம் எழுந்தது. இந்த இயக்கம்
முதலாளித்துவ மற்றும் காலனித்துவ நாடுகள் அனைத்தையும் ஆட்கொண்டது; அந்தக் கட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் இறுதி வெற்றியை அந்நாடுகளில்
அது ஈட்டித் தரவில்லை என்ற போதிலும், அது ஒரு புதிய
இயக்கத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அந்த இயக்கம் தொடர்ந்து வலிமை அடைந்து
தனது அணி வரிசைகளைத் தூய்மைப்படுத்தி சரி செய்து கொண்டு, அமைதி
மற்றும் சுதந்திரத்திற்கான பரந்த போராட்ட முன்னணியாக உருவெடுத்தது.
அக்காலகட்டத்தின் அந்த ஆண்டுகளின்போது அனைத்து நாடுகளைச் சேர்ந்த
உழைக்கும் மக்களில் சிறந்த பிரிவினர் உண்மையிலேயே புதிய மற்றும் தீர்மானகரமான
ஒன்றைப் பெற்றுக் கொண்ட உணர்வைப் பெற்றனர்; அது வேறொன்றுமல்ல, (ரஷ்யாவின்)
போல்ஷிவிசத்தின் அனுபவமே ஆகும்; மக்களும் இதை புரிந்து
கொள்ளத் தொடங்கினர். இந்த அனுபவம் வெற்றிக்கு இட்டுச் செல்லும் பாதையைக் காட்டியதால்
அவர்கள் தங்கள் நோக்க இலக்கின் மீதும், அதன் தவிர்க்க
முடியாத வெற்றியின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டனர்.
அக்டோபர் புரட்சியானது, காலனிய ஆட்சியைத் தூக்கி எறிந்த தேசிய விடுதலைப்
போராட்டங்களின் சங்கிலித் தொடர் நிகழ்வுகளுக்கு
வித்திட்டது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம், முதலாவது
சோசலிசப் புரட்சியின் வெற்றியுடன், உயர் கட்டத்தை எட்டியது..
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்
தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ரஷ்யப் புரட்சியிலிருந்து ஊக்கம் பெற்றன.
மேலும் சோவியத் ஒன்றியம் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்குத் தனது ஆதரவை
வழங்கியது.
உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கமும் உழைக்கும் மக்களின் பிற பிரிவினரும் புதிய தாராளமயக் கொள்கையின் தாக்குதல்,
சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்திய அடிமைப்படுத்தலுக்கு
எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு 1917 சோசலிசப் புரட்சி ஒரு வழிகாட்டும் ஒளிவிளக்கு ஆகும். அனைத்துப் புரட்சிகர
மற்றும் முற்போக்குச் சக்திகளுக்கும் அக்டோபர் புரட்சி ஓர் ஊக்கமளிக்கும் கலங்கரை
விளக்கமாக உயர்ந்தோங்கி நிற்கிறது.
வர்க்கமற்ற மற்றும் சுரண்டலற்றச் சமூகத்திற்காகப் பாடுபடும் அனைவருக்கும் அக்டோபர் புரட்சியானது,
‘வருங்காலம் சோசலிசமே’ என்ற செய்தியை அறிவிக்கிறது.
அக்டோபர் புரட்சி நீடு வாழ்க!
–தமிழில் : நீலகண்டன்,
என் எஃப் டி இ, கடலூர்.



No comments:
Post a Comment