Saturday, 27 June 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு 150 --அபுல் ஓலா : சுதந்திர இயக்கம் கட்டிய பெருந்தலைவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு 150 


அபுல் ஓலா : சுதந்திர இயக்கம் கட்டிய பெருந்தலைவர்

–அனில் ரஜீம்வாலே

அபுல் ஓலா அல்லது ஜஃப்ருதீன் அஹமத் பீகாரைச் சேர்ந்த அபூர்வமான சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்பாளர்; மிகக் கடினமான மற்றும் ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் வகுப்பு ஒற்றுமைக்காகப் போராடியவர். அவரது பெயர் ஏறத்தாழ மறக்கப்பட்ட ஒன்று எனினும், அவரது பங்களிப்புகள் இன்னும் வாழ்கின்றன.

தொடக்க கால வாழ்க்கை 

அபுல் ஓலா 1918 ஆகஸ்ட் 7ல் பீகார், கயா மாவட்டத்தில் சாட மசூதி (Chata Masjid) அருகில் பாட்டம் பிரிட்ஜ் மொஹல்லாவில், அறிவார்ந்த கருத்துக்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகங்களுக்குப் புகழ்பெற்ற ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். (மொஹல்லா எனில் அண்மையிடம் என்று பொருள்). அவரது தந்தை மௌலானா கைருத்தீன் ஷாஹிப், கிலாபத் இயக்கம் மற்றும் ஜாமியாத் இஉலிமா-இ-ஹிந்த் அமைப்புகளின் தீவிர உறுப்பினர். கயாவில் காஸ்மியா மதராசா நிறுவப்பட அவரே பொறுப்பு. அவர் ஓர் ‘அலீம்’ (கற்றறிவாளர்), அபுலின் தாத்தாவும் கூட ஓர் ‘அலீம்’.

அபுல் ஓலா தனது தொடக்கக் கல்வியை உருது, அரபு மற்றும் பெர்சியன் மொழியில் அவரது அம்மா வழி தாத்தா மௌலானா அப்துல் கஃபார் வழிகாட்டலின்கீழ் பெற்றார். மனப்பாடமாகத் திருக்குர்ஆனை அவர் அறிவார்! அவரது தந்தை அவரை ‘ஹாபீஸ் குர்ஆன்’ என ஆக்க விரும்பினார். (முழுமையான திருக்குர்ஆனையும் மனனம் செய்து ஒப்பிக்க கூடிய ஒரு முஸ்லீம் ‘ஹாபீஸ் குர்ஆன்’ என்று அழைக்கப்படுகிறார்)

அரசியலில்

அபுலின் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி என அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடும்ப உறுப்பினர்கள் வழக்கமாக ராட்டையில் கதர் நூல் நூற்பவர்கள். கயா மாவட்ட அம்வானின் கெந்தூய் (Amwan, Kendui) கிராமத்தில் 1922ல் காங்கிரஸ் அமர்வு நடந்தது. அபுலின் தந்தை அவரது நான்கு வயது மகனை அந்த மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அபுல் ஓலா கயா ஜில்லா பள்ளியில் படித்தார். ஒரு மாணவராக இருந்தபோது முன்னணி புரட்சியாளரும் விடுதலைப் போராட்ட வீரருமான ஷியாம் பர்த்தாவர் உடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பர்த்தாவர் எதிர்காலத்தில் கயா சதி வழக்கில் ஒரு தலைவராக ஆனவர்.

ஒரு மாணவர் தலைவராக அபுல் MORN என்ற பெயரில் ஓர் இரகசிய அமைப்பை ஏற்படுத்தினார். அப்பெயர் நான்கு புரட்சியாளர்கள் பெயரின் முதல் எழுத்தை இணைத்து வந்தது: அந்த நால்வர் –மோட்டோ, ஓலா, ராஜ்டியோ மற்றும் நாகேந்திரா. அது 1935 –36 காலகட்டம். பர்த்தாவர் அந்த அமைப்பைத் தலைமை ஏற்று நடத்தினார். தலைமறைவு இரகசிய  நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர்கள் ஏராளமாகப் படிப்பது வழக்கம். 

ஷியாம் சரண் பர்த்தாவர் கயா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் பிரிட்டிஷாருக்குச் சேவை புரிந்தபோதும் அவர் மெல்ல ஒரு புரட்சியாளராக உருவானார். அவரது தந்தை அடிக்கடி பிரிட்டிஷ் அட்டூழியங்களின் கதைகளை விவரிப்பது வழக்கம்

1920களில் கயாவில் செயல்பட்ட தீவிரமான இளைஞர் அமைப்பு, யுவக் சங். 1928ல் லாலா லஜபதி ராய் லத்தியால் கடுமையாகத் தாக்கப்பட்டு மரணம் அடைந்தபோது, இளைஞர்கள் சங்கத்தின் நடவடிக்கைகள் அதிகரித்தன. கயாவிலிருந்து 12 மைல் தள்ளி இருந்த ஓர் இடத்தில் இரகசிய  கூட்டம் நடத்தப்பட்டது; அக்கூட்டத்தில் பகத்சிங், சூர்யா சென், பர்த்தாவர் மற்றும் பிறர் கலந்து கொண்டனர்.

மற்றொரு கூட்டம் கயா சந்த் சௌரா மொஹல்லாவில் சாம்பத் கலியில் நடத்தப்பட்டது. புரட்சியாளர்கள் மீது பிரிட்டிஷ் அரசு அடக்குமுறைகளை அதிகரித்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் ஆய்வாளருக்கு ஒரு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஓலாவின் கூற்றுப்படி அக்கடிதம் பின்வருமாறு அமைந்தது: “உங்களுக்கு உபதேசங்கள் அல்லது அரசியல் உரையை வழங்குவது எனது நோக்கம் அல்ல. உங்கள் கடமைகளை ஆற்றும்போது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்குச் சாதாரணமாக அறிவுரை கூறுகிறேன்; மற்றும் நட்பு ரீதியான அறிவுரையை நீங்கள் உண்மையுடன் எடுத்துக் கொள்ள தவறினால், முன்பு முடிந்துபோன சான்டர்ஸ், லோமென் (போன்ற அதிகாரிகள்) மற்றும் பிறர் தலைவிதியை நீங்கள் நினைவு கொள்ள வேண்டும். தங்களின் மேம்பட்ட நடத்தைக்குச் சான்றளிக்க நான் இரண்டு வாரம் அனுமதிக்கிறேன். இல்லையெனில், உங்களின் மரண தண்டனை ஆணைக்கு ஒப்புதல் அளிப்பதில் நான் மகிழ்ச்சியுடன் சம்மதிப்பேன், பிறகு இங்கிலாந்து முழுவதும் சேர்ந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. நான் தங்களுக்குத் தோட்டாக்களை அனுப்புகிறேன், அதன் நினைவு –ஒருக்கால் நீங்கள் நல்ல மனிதராக மாறும் பட்சத்தில்– உங்களைச் சரியான பாதையில் வழிநடத்தும் என நான் நம்புகிறேன்; இல்லாவிடில், தங்கள் ஆணவம் காரணமாக அதற்கான தருணம் எழும் எனில், அந்தத் தோட்டக்கள் தங்கள் சுய பாதுகாப்புக்கு உதவலாம்”

மாணவர்கள் அமைப்பு 

கயாவில் 1936ல் கயா மாவட்ட மாணவர்கள் அசோசியேஷன் அமைக்கப்பட்டது. கூட்டம், ராய் பக்கராவில் விசாலமான பங்களா(கோதி)வில் ஸ்ரீ நாராயன் ஜிண்டால் ‘வக்கீல்’ தலைமையில் நடந்தது.  பாட்னாவின் புகழ் பெற்ற பிளீடர் பாபு பல்தேவ் சகாய் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். கூட்ட அமைப்பாளர்களின் முன் வரிசையில் ஓலா செயலாற்றினர். 1937ல் கயா ஜில்லா பள்ளியில் ஓலா பள்ளி மாணவர்கள் அமைப்பு ஒன்றைத் திரட்டி அமைத்தார். அந்த அமைப்பின் வரைவு விதிகளைக்கூட அவர் தயாரித்தார். சமூக அமைப்பு மாதிரியில் அது அமைந்தது.

அந்தமான் கைதிகள் விடுதலை இயக்கம்

நாடு முழுவதும் ‘அந்தமான் கைதிகள் விடுதலை இயக்கம்’ தந்த அழுத்தத்தின் காரணமாக ஷியாம் சரண் பர்த்தாவர் பிற கைதிகளுடன் அந்தமானில் இருந்து 1937ல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானதும் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். நேஷனல் ஃப்ரண்ட் என்ற கட்சிப் பத்திரிக்கையின் பத்து பிரதிகள் கயாவுக்கு வருவது வழக்கம். அவற்றையும் மெட்ராஸில் இருந்து பதிப்பிக்கப்பட்ட நியூ ஏஜ் மாத இதழையும் ஓலா விநியோகித்தார். மாணவர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் அறிவாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல் அமைப்பின் ஆவணங்கள் மற்றும் நூல்களையும்கூட அவர் விநியோகித்தார்.

கிராந்தி, சின்கரி மற்றும் காலிஷ் (Kranti, Chingari and Khalishபுரட்சி, தீப்பொறி, ஏக்கம்) போன்ற பருவ இதழ்களும் பதிப்பிக்கப்பட்டு வந்தன; அவற்றையும் தனது நண்பர்களிடம் ஓலா விநியோகித்தார். இந்தப் பருவ இதழின் பெயரில் கயாவில் “காலிஷ் பார்க்” என்ற பூங்கா பெயரிடப்பட்டது.

ஓலா, பர்த்தாவர் மற்றும் மற்றவர்கள் நகரத்தின் முன்னணி பிரமுகர்கள் உட்பட முற்போக்கு சிந்தனையாளர்கள் அமைப்பு ஒன்றையும் அமைத்தனர்.

மாணவர் இயக்கம் மற்றும் ஓலா கைது

கயா ஜில்லா மாணவர்கள் அமைப்பு என்ற பதாகையின் கீழ் 1938ல் அபுல் ஓலா மாணவர்களின் பெரும் இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தினார். கல்லூரி முதல்வருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றினர். இதையடுத்து ஓலாவுக்குப் பள்ளியில் அனைத்து வசதிகளும் பறிக்கப்பட்டன. தனது நடவடிக்கைகளை அவர் தொடர்ந்தார், ஜெகனாபாத்தில் நடைபெற்ற மாவட்ட மாணவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.  புகழ் பெற்ற விடுதலைப் போராட்ட வீரர் பேராசிரியர் அப்துல் பாரி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். ஓலா அதன் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவர்.

1938ல் மாணவர்களின் பரவலான வேலை நிறுத்தத்தின்போது ஓலா கைது செய்யப்பட்டு கயா மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நகரம் முழுவதிலும் மாணவர்கள் தெருவில் இறங்கி கண்டனப் போராட்டம் நடத்தினர். அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையும் வழக்கறிஞர்கள் நூலகத்தையும் சூழ்ந்து கொண்டு, “சிறைக் கதவுகளை உடையுங்கள், ஓலா பாய் (சகோதரர் ஓலாவை) விடுதலை செய்” என முழக்கமிட்டனர். பீகார் மாகாண மாணவர்கள் சம்மேளனத்தின் இரண்டு தலைவர்கள், ஹரி கிஷோர் தாக்கூர் மற்றும் மூன்ட்ரிகா சிங், கயாவுக்கு விஜயம் செய்து ஓலாவின் விடுதலையைக் கோரினர்.

கதார் இயக்கத்தில் 

இந்திய நாடு முழுவதும் குறிப்பாக வட இந்தியாவில் இந்த நேரத்தில் கதார் இயக்கம் பரவியது, கதார் கட்சி, கீர்த்தி (கடின உழைப்பாளி) மற்றும் கீர்த்தி லேஹர் (உழைப்பாளர் இயக்கம் அல்லது அலை) என்ற இரு இதழ்களை முறையே உருது மற்றும் குர்முகி மொழியில் பிரசுரித்தது. [குர்முகி, பஞ்சாபி மொழியை எழுதப் பயன்படும் முதன்மையான எழுத்துமுறை. இது 16-ஆம் நூற்றாண்டில் சீக்கியர்களின் 2வது குருவான குரு அங்கத் உருவாக்கியது.]

ஷியாம் சரண் பர்த்தாவர், அபுல் ஓலா மற்றும் பிற தோழர்கள் கதார் கட்சியின் பணிகளிலும், கட்சிப் பருவ இதழ்கள் பிரசுரம் மற்றும் அதன் விநியோகத்திலும் ஈடுபட்டனர். இந்தக் காலகட்டத்தில் கயாவில் சின்கரி (Chingari, தீப்பொறி) மற்றும் கலீஷ் (Khalish ஏக்கம் /மனக்குமுறல்) இதழ்கள் பிரசுரிக்கப்பட்டன.

கிராந்தி மற்றும் சின்கரியில் ஓலா எழுதுவது வழக்கம். சமீபத்தில் தன்வந்தரி அந்தமானில் இருந்து திரும்பி இருந்தார். ஓலாவை மீரட்டுக்கு இடம் மாறி சென்று கீர்த்தி லேகார் உருது இதழுக்கு உதவும்படி அவர் வேண்டினார். ஓலா அங்குச் சென்று ஹர்மந்தர் சிங் சோதி, பரத் சிங் மற்றும் சாதிக் கம்போங் உடன் பணியாற்றினார்.

இரண்டாம் உலகப் போர் வெடித்ததும் பிரிட்டிஷ் அரசு கீர்த்தி லேகார் இதழ் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது ஆசாத் அச்சகம் மற்றும் இதழும் அபராதத் தொகை கட்டும்படி கோரப்பட்டன. இறுதியில் செய்தித்தாளை மூடும்படி கட்டாயப்படுத்தப்பட்டது மற்றும் அதன் ஊழியர்களுக்கு எதிராக வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன.

பரத்வாஜுடன் தொடர்பு

மீரட்டில் இருந்தபோது அபுல் ஓலா புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவரும் சிபிஐ கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினருமான ஆர் டி பரத்வாஜ் உடன் தொடர்பு ஏற்பட்டது. பரத்வாஜ் வழிகாட்டலில் மீரட் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கட்சி அமைக்கப்பட்டு வந்தது. மீரட் சிபிஐ கிளையின் (செல்) உறுப்பினரானார் ஓலா. அந்தக் கட்சிக் கிளை டேராடூன் சதி வழக்கில் தொடர்புடைய ஷர்ஜங், ராஜேந்திர பால் மற்றும் பரத் சிங் மற்றும் டெல்லி சதி வழக்கில் தொடர்புடைய ‘பீகாரி தோழர்’ (அவர்தான் ஓலா) மற்றும் ஓம் பிரகாஷ் முன்னி ஆகியோர்களை உள்ளடக்கியிருந்தது.

பீகாரில் கட்சி அமைத்தல்

போலீஸ் கம்யூனிஸ்டுகள் மீது நடவடிக்கைகளைக் கடுமையாக்க, ஓலா மீரட்டில் கைதாகாமல் தப்ப வேண்டி வந்தது; அவர் இரகசியமாகப் பீகார் சென்றார். பீகாரில் சுனில் முகர்ஜியைச் செயலாளராகக் கொண்டு 1939 அக்டோபரில் முன்கர் என்ற இடத்தில் சிபிஐ நிறுவப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட மாகாண அமைப்புக் குழுவின் உறுப்பினர் சரத் பட்நாயக் கயாவில் கட்சியை அமைக்கும் பொறுப்பை ஓலாவிடம் அளித்தார். அந்த நிலைமைகளில் அது கடினமான பணியாக இருந்தது. அவரது தலைமையின் கீழ் ஒரு கம்யூனிஸ்ட் தொடக்க உட்குழு அமைக்கப்பட்டது.

போர் எதிர்ப்பு நடவடிக்கைகள் 

1939 ஜனவரியில் கயா மாவட்டத்தில் தவ்ட்நகர் அருகில் சௌராம் கிராமத்தில் ஓர் அரசியல் மாநாடு நடத்தப்பட்டது. குமார் பத்ரி நாராயணன் சிங் ஏற்பாடு செய்த அந்த மாநாட்டில் சின்கரி குழு முன்னணி பங்கு வகித்தது. பஞ்சாப் கதார் மற்றும் கீர்த்தி கட்சிகளின் உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர்; பர்த்தாவர் மற்றும் ஓலா தீவிரப் பங்காற்றினர்.

இரண்டாம் உலகப் போர் பின்னணியில் 1940ல் காங்கிரஸின் ராம்கர்க் (இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது) அமர்வின் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டு அமர்வின் அருகில் அதே நேரத்தில் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஒரு சமரச எதிர்ப்பு மாநாடு (ஆன்ட்டி காம்பரமைஸ் கான்பரன்ஸ்) நடைபெற்றது. ஷீல்பத்ர யாஜி அதன் வரவேற்புக் குழுத் தலைவர், தன்ராஜ் ஷர்மா செயலாளர். கட்சி அறிவுறுத்தல்படி தன்ராஜ் சர்மா உடன் அபுல் ஓலா நெருக்கமாகப் பணியாற்றினார். கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி (CSP)யில் இருந்தவர்கள் உட்பட விரிவான இடதுசாரி அணியினர் அதில் பங்கேற்றனர்.

ஓலா மீண்டும் தலைமறைவாகச் செல்ல நேர்ந்தது. அவர் மாணவர்கள் மத்தியில் தனது பணிகளைத் தொடர்ந்தார். (பீகார்) தர்பங்கா, லகரியாசராய் என்ற இடத்தில் பீகார் மாகாண மாணவர்கள் கன்வென்ஷன் நடத்தப்பட்டது. ஏஐஎஸ்எப் பொதுச் செயலாளர் எம் ஃபரூக்கி அதில் பங்கேற்றார். பெருமளவில் (ஏஐஎஸ்எப்) மாணவர் பெருமன்றத்தின் தலைமறைவு நடவடிக்கைகளுக்கு ஓலா உதவினார்.

கதார் கட்சி பணி தொடர்பாகப் பஞ்சாபில் இருந்து திடீரென்று சுரேந்திர மோகன் நாயக் கயாவுக்கு வந்தார். அவர் ஓலாவை அவரது தலைமறைவு மையத்தில் சந்தித்தார். கல்கத்தாவில் நடைபெற இருந்த கதார் கட்சி கூட்டத்தில் பங்கேற்க இருவரும் சேர்ந்து புறப்பட்டனர்; ஆனால் சிலர் கைது செய்யப்பட்டாலும் சுரேந்திர மோகன் மற்றும் ஓலா கைதாகாமல் தப்பினர்.

ஓலா ஓர் இரகசிய கடிதம் மூலம் லாகூர் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரும் அதை ஏற்று லாகூரை அடைந்து பாய் ஹர்பன்சிங்கைச் சந்தித்தார். அவர்கள் மாண்ட்கோமரி ஃபடேஹ்வால் (Montgomery Fatehwal) என்ற இடத்தில் ஒரு தலைமறைவு கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்தனர். 

கைது 

திரும்பி வந்ததும் ஓலா தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார் தொடர்ந்து போலீசிடம் கைதாகாமல் நழுவி வந்தார். 1941 தொடக்கத்தில் நோயுற்றிருந்த தனது தாயைச் சந்திக்க கயா சென்றார், அவரது வீட்டைப் போலீஸ் சூழ்ந்திருந்தது. அருகிலுள்ள இடங்கள் மற்றும் மொஹல்லாகள் (நகரை ஒட்டிய புறநகர் பகுதிகள்) அடைக்கப்பட்டு இருந்தன. மதிலேறிக் குதித்து ஓட முயன்ற ஓலாவைப் பெரும் போலீஸ் படை மடக்கிப் பிடித்தது. முதலில் மத்திய சிறைக்கும் பின்னர் ஹசாரிபாக் சிறைக்கும் மாற்றப்பட்டார். ‘சிறைக்குள் ஒரு சிறை’ என்ற புகழ்பெற்ற வார்டு எண் 14ல் அவர் அடைக்கப்பட்டார். இந்த வார்டில் நான்கு பகுதிகளாகச் சுமார் 60 கைதிகள்; அவர்களில் ராகுல் சாங்கிருத்தியாயன், சுனில் முகர்ஜி, கிஷோரி பிரசன்னா சிங், அலி அஷ்ரப், தன்ராஜ் சிங், காரியானந்த் சர்மா உள்ளிட்ட பெரும்பாலோர் கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

1941ன் மத்தியில், அதாவது ஜூன் 22ல் சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் தாக்குதலுக்குப் பிறகு, ஓலா உள்ளிட்ட கைதிகள் விடுதலை செய்யப்படலாயினர்

கிசான் சபாவில்

விடுதலையான பிறகு ஓலா பீகார் பிட்டாவில் நடைபெற்ற அகில இந்திய கிசான் சபா (AIKS)வின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றார். பிசி ஜோஷி மற்றும் சுனில் முகர்ஜி கதார் கட்சி மற்றும் பஞ்சாபின் கீர்த்தி கட்சியின் விவரங்கள் குறித்து ஓலாவிடம் கேட்டனர். இச்சமயத்தில் கீர்த்தி கட்சி சிபிஐயுடன் இணையத் தயாராக இருந்தது.

விரைவில் அபுல் ஓலா 1942ல் கயா மாவட்டக் கட்சி செயலாளரானார். இந்தப் பொறுப்பில் அவர் 1947 வரை நீடித்தார்.

1944 –45 காலகட்டத்தின்போது அபுல் ஓலா பிற தோழர்களுடன் சேர்ந்து பரவலாகக் கிசான் சபா அமைப்பதில் ஈடுபட்டார். ஓலாவால் சகுராபாத்தில் ஒரு பேரணி நடத்தப்பட்டது. சுவாமி சகஜானந்தா கலந்து கொண்ட அப்பேரணி மக்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அபுல் ஓலாவின் தீவிரப் பங்கேற்புடன் வேறு பல கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டன.

மன்ஸார் ரிஸ்வி உடன் சந்திப்பு 

மன்ஸார் ரிஸ்வி அல்லது மன்ஸாரூல் ஹாக் 1943ல் நடைபெற்ற முதலாவது கட்சி காங்கிரஸில் பீகாரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது சிபிஐ மத்திய குழு உறுப்பினர். அவர் பீகார் சாப்ரா பகுதியைச் சேர்ந்தவர், அலிகாரில் படித்தவர். 1924ல் உபி கான்பூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு மாநாட்டுத் தயாரிப்புக்கு அமைக்கப்பட்ட 78 பேர் குழுவில் அவர் ஒருவர். தனது சகோதரி அக்யூலா காட்டூன் (Aquila Khatoon) நகைகள் அனைத்தையும் பீகாரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் யத்தீன் அச்சகத்திற்கு (Yatin Press) நன்கொடையாக அளித்தார்.

சாப்ராவில் ஓலா சிபிஐ சார்பாக மன்சார் ரிஸ்வியைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் இணைந்து கட்சியைக் கட்டப் பணியாற்றினர். சாப்ராவுக்கு அருகில் சரண் என்ற கிராமத்தில் ஓலாவுக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. அபுல் ஓலா 1944 ஏப்ரல் 4ம் தேதி அக்யூலா காட்டூனை மணந்தார்.

தேர்தல் பணிகளில் 

1946ல் நாடு முழுவதும் நடைபெற்ற பொது தேர்தல்களில் ஓலா விரிவாகப் பணியாற்றினார். கட்சி அவரை முஸ்லிம் தொகுதிகளான சாப்ரா, சிவான் மற்றும் கோபால்கஞ்ச் இடங்களில் பணியாற்றக் கூறியது. அதே நேரத்தில் பருத்தி மற்றும் சணல் ஆலைகள், கடைகள், தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்பு, முனிசிபல் தொழிலாளர்கள், இரயில்வே பிளாட்பார்ம் கூலிகள் மற்றும் பிற தொழிலாளர்களை ஓலா திரட்டினார். மேலும் உணவு, மண்ணெண்ணெய், சர்க்கரை, எண்ணெய் முதலான பொருட்களின் பற்றாக்குறைக்கு எதிராக அவர் கண்டன இயக்கங்களை நடத்தினார்.

வகுப்புவாதக் கலவரங்களின்போது மக்களைப் பாதுகாக்கவும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிப்பதிலும் ஓலா கடுமையாகப் பணியாற்றினார். பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அவர் உணவும் தங்குமிடமும் ஏற்பாடு செய்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு 

1947க்கு பிறகு அபுல் ஓலா ஒரு வேலையில் சேர வேண்டி வந்தது; காரணம் பி டி ஆரின் குழுவாதப் போக்கு பாதை காரணமாகக் கட்சி அதன் அணிகளைப் பராமரிக்கும் நிலையில் இல்லை. அந்தப் பாதையின் விளைவுகள் கட்சிக்கு மட்டுமல்லாமல் தனிநபர் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பேரழிவு ஏற்படுத்துவதாக இருந்தது.

சியாம் சரண் பர்த்தாவர் கயா மாவட்டத்தின் ஜில்லா பரிஷத் (மாவட்டச் சபை) செயலாளரானார். ஓலா ஜில்லா பரிஷத்தில் ஒரு வேலையில் சேர்ந்தார். அவர் பிஏ மற்றும் பிஎல் பட்டத் தேர்வுகளிலும் கலந்து கொண்டார். மேலும் பீகார் மாநில உள்ளாட்சி அமைப்புகள் அக்கவுண்டன்ட் தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றார். அதைத் தொடர்ந்து ஜில்லா பரிஷத்தில் அக்கவுண்டன்ட் பதவிக்கு அவர் பணி நியமனம் பெற்றார்.

இந்தியச் சுதந்திரத்தின் வெள்ளி விழா ஆண்டில் 1972ல் ஓலா சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான தாமிரப் பட்டயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்குக் குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட்டது.

அவர் 1979ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார், பின்னர் பார் அசோசியேஷனில் வழக்கறிஞராகச் சேர்ந்தார். ஆனால் ஊழல் கோலோச்சிய நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அங்கு நிலவிய பரவலான தனிநபர் சுயநல முன்னெடுப்புகளுடன் அவரால் ஒத்துப்போக முடியவில்லை. எனவே அதைவிட்டு அவர் வெளியேறினார். ஏற்கனவே அவர் டிஸ்ட்ரிக் போர்டு குடியிருப்பைக் காலி செய்து விட்டதால் சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தார். 

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது மனைவி 1994 ஜனவரி 8ல் மரணம் அடைந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் அமைப்பில் ஓலா முன்னணி பிரமுகரானார். அதன் மாவட்டத் தலைவராகவும் மாநிலத் துணைத் தலைவராகவும் ஆனார். பின்னர் அவரது மகன்களில் ஒருவரான ஜமீலுடன் வசிக்க அவர் பாட்னாவுக்குக் குடி பெயர்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சியிலும் பெருந்திறள் இயக்கங்களிலும் அவர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டார்.

மரணம்

பாட்னாவில் 2006 ஜனவரி 1ல் அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அவர் பாட்னா டாக்டர் ஹாய் வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அதே நாள் அவர் மரணம் அடைந்தார். ஜனவரி 2ல் கயாவுக்குக் கொண்டுவரப்பட்ட அவரது உடல் கயாவில் உள்ள நியூ கரீம்கஞ்ச் கபர்ஸ்தானில் (கல்லறைத் தோட்டம்) நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் ஏராளமான சமூக மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகதின் சார்பாக உதவிக் கோட்ட அதிகாரி (எஸ்டிஓ) நல்லடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 5 மகன்கள், 4 மகள்கள், மாமனார் மாமியார் மற்றும் பிறர் உள்ளிட்ட பெரிய குடும்பத்தை அபுல் ஓலா விட்டுச் சென்றார்.

தற்போதைய இந்தக் கட்டுரையாளர் அவரையும் மற்றும் அவரது சில குடும்ப உறுப்பினர்களையும் குழந்தைப் பருவத்தில் அறியும் பேறு பெற்றிருந்தார். 

இந்திய விடுதலையின் பொன்விழாவின்போது விடுதலைப் போராட்டம் குறித்த சுருக்கமான பதிவுகளை அபுல் ஓலா எழுதினார். பீகாரில் இருந்து முதன் முதலாகச் சிபிஐ மத்திய குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட (1943 பம்பாய் கட்சி காங்கிரஸ்) மன்ஸார் ரிஸ்வியின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் எழுதினார். சுதந்திரப் போராட்டத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் பெரும் எண்ணிக்கையிலான கற்றறிந்த முஸ்லிம் இளைஞர்களைக் கொண்டு வந்த பெருமை அவரையே சாரும். அந்த இளைஞர்களில் பலரும் கருத்தியல் மற்றும் மார்க்சிய அரசியலில் பயிற்றுவிக்கப்பட்டனர்.

பீகார் வரலாற்றுக் காங்கிரஸ் மாநாடுகளில் அபுல் ஓலா அடிக்கடி நினைவு கூரப்படுகிறார்.

–நன்றி : நியூ ஏஜ் 19 (2026, மே 10– 16)

–தமிழில் :நீலகண்டன், 
என் எஃப் டி இ, கடலூர்.

No comments:

Post a Comment