Wednesday, 11 December 2024

போபால் விஷவாயு துயரத்தின் 40வது ஆண்டு --டிசம்பர் 3

போபால் விஷவாயு துயரத்தின் 40வது ஆண்டு 

பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேர வேண்டிய
இழப்பீடு இன்னும் மறுக்கப்படுகிறது

--L S ஹெர்டினியா


    2024 டிசம்பர் 3 போபால் விஷவாயு பெருந்துயரின் 40வது ஆண்டு. அந்த நாளில் (1984, டிசம்பர் 3) போபால் நகரின் வெளியே அமைந்த பூச்சி மருந்து உற்பத்தி செய்த அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம், யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் ஆலை கக்கிய மெதில் ஐசோ சைனைடு இரசாயன வாயு ஆயிரக் கணக்கானவர்- களைக் கொன்று குவித்து, இலட்சக் கணக்கான மக்களை உடல் ஊனமுற்றவர்களாக்கியது.

        நகரின் நச்சு வாயு பாதித்தவர்களுக்குக் கடந்த நாற்பது ஆண்டுகளும் வாழ்க்கை ஏற்ற இறக்கம் நிறைந்ததாக, பல நேரங்களில் இறக்கமே கூடுதலாக அமைந்து கடந்தன. துயரம் முடிவுக்கு வருவது தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. 

அவர்களது ஏமாற்றங்களின் பட்டியல் முடிவற்று நீண்டது. செயல்படாத ஆலை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்ட ரசாயனக் கழிவுகள் அழிக்கப்படுமென அவர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். நகரின் மீது மரணங்களை மழையாய்ப் பொழிந்த குற்றத்திற்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்ற நம்பிக்கை இருந்தது. விஷவாயு பாதிக்கப்பட்டவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட,பின்னர் இந்திய அரசால் எடுத்துக்கொள்ளப்பட்ட, BMHRC (போபால் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்) மருத்துவமனை செயல்பாடுகளில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையும் இருந்தது. விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் உயர் நட்டஈடு கிடைக்கும் என்பது மேலும், ஒரு நம்பிக்கை.

ஆனால் அனைத்து நம்பிக்கைகளும் நிறைவேற்றப்படாத ஏமாற்றமே நீடிக்கிறது. இரசாயனக் கழிவு கொட்டப்பட்ட இடத்தில் அப்படியே கிடக்க, விஷவாயு பேரழிவின் குற்றவாளிகள் அற்ப தண்டனையுடன் தப்பியது மட்டுமல்ல, அத்தண்டனையும்கூட அமல்படுத்தப்படவில்லை; மற்றும் BMHRC மருத்துவமனை, அதிலிருந்து சிறந்த முன்னணி மருத்துவர்கள் தொடர்ந்து வெளியேறியதைப் பார்த்தது.

பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் இழப்பீடு கோரிய மேல்முறையீட்டு மனுகள் தள்ளுபடியான நிலையில், ஒன்றிய அரசால் தாக்கல் செய்யபட்ட சீராய்வு மனுவையும் (க்யூரேடிவ் பெட்டிஷன், பாதிக்கப்பட்ட தரப்பிற்கு வழங்கப்பட்ட இறுதி வாய்ப்பு) 2023 மார்ச் 14ல் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

க்யூரேட்டிவ் மனு பெருந்துயரின் 26 ஆண்டுக்குப் பிறகு, அதாவது இழப்பீட்டுத் தீர்வுக்குப் பிறகு, 2010 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, தற்போது டௌவ் கெமிகல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யூனியன் கார்பைடு கார்ப்ரேஷனிட- மிருந்து கூடுதல் நிதியாக 7,400 கோடிக்கு மேல் கோரியது.

(சர்வதேசச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக சேவை தன்னார்வ அமைப்பான) கீரின்பீஸ் மற்றும் பல்வேறு இந்திய, வெளிநாட்டு முகமைகள் யூனியன் கார்பைடு ஆலையின் உள்ளும் புறமும் சுற்றியுள்ள பகுதிகளி- லிருந்து மண், நிலத்தடிநீர், கிணற்று நீர் மற்றும் காய்கறி முதலியவற்றின் மாதிரிகளைச் சேகரித்து நடத்திய ஆய்வில், (இரும்பு, தாமிரம், மெக்னீஷியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துகள் எனினும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் அவையே உயிருக்கு விஷமாக மாறும் தன்மையுள்ள ஹெவி மெட்டல் என்றழைக்கப்படும்) கன உலோகங்கள் மற்றும் இரசாயனக் கூட்டுப்பொருள்கள் அதிக அளவில் கலந்து அபாயகரமான தீங்கிழைக்கும் வகையில் மாசுபடுத்தியதைக் காட்டுகிறது.
     மண் மாதிரிகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, மண்மாதிரியில் பாதுகாப்பு அளவைவிட 6ஆயிரம் மடங்கு கூடுதலாகப் பாதரசம் (மெர்க்குரி) இரசாயனத் தனிமம் செறிவாக உள்ளதைக் கண்டறிந்தது! அப்பகுதியில் 100கும் அதிகமான ஆழ்துளைக் கிணறுகளின் நீர் மனித நுகர்வுக்கு அருகதை அற்றது எனப் பிரகடனப்படுத்தியது. அப்பகுதியின் மண், நீர், தாவரங்களை மெல்ல விஷமாக்கியது யூனியன் கார்பைடு ஆலை வளாகத்தில் குவிக்கப்பட்ட 350 மெட்ரிக் டன் இரசாயன நச்சுக் கழிவுகள். அக்கழிவு மண்ணுக்குள் ஊடுருவி பிறகு கடந்த 40 ஆண்டுகளில் படுக்கை வாட்டத்தில் எங்கும் பரவியது. கழிவை அகற்ற எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்தன.
           விஷவாயு துயரை விளைவித்த குற்றவாளிகளுக்கு அளிக்கப்- பட்ட தண்டனையைப் பொருத்த வரை, 15 ஆண்டுக்கு மேல் நீடித்தச் சட்டப் போராட்டத்திற்கு பிறகு, யூனியன் கார்பைடு கார்ப்ரேஷன் இந்தியா நிறுவனத் தலைவர் கேஷப் மகேந்திரா மற்றும் 7 பேர் ‘அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்திய’தற்காகக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்; போபால் நீதிமன்றம் அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது! எனினும் சில மணி நேரத்தில் அவர்கள் பிணையில் வெளியே வந்தனர். அது நிகழ்ந்தது ஜூன் 2010.

      ஆகஸ்ட் 2010ல் இவ்வழக்கின் ப்ராசிக்யூடிவ் தரப்பு முகமை CBI தாக்கல் செய்த க்யூரேடிவ் மனுவை உச்சநீதிமன்றம் அனுமதித்த போது, நம்பிக்கைகள் மீண்டும் துளிர்விட்டன; ஏனெனில், க்யூரேடிவ் மனு என்பது, உச்சநீதிமன்றம் தான் வழங்கிய தனது தீர்ப்பை மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தச் சம்மதிப்பதாகும். 1996 தீர்ப்பு குற்றவாளிகள் மீதான ‘கொலையில் முடியாத கொலைக் குற்றம்’ (‘culpable homicide not amounting to murder’, அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம்) என்பதிலிருந்து ‘அலட்சியம் காரணமாக மரணத்தை விளைவிப்பது’ என்பதாகக் குற்றச்சாட்டின் வீரியத்தை நீர்த்துப்போகச் செய்தது; அதன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே விதிக்க முடியும்.

      எனினும் விஷ வாயு பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் அமைப்புகளுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாக உச்சநீதி மன்றம் 2011 மே 11ல் அந்த மனுவைத் தூக்கி எறிந்தது.

    உலகின் தொழிற்சாலைகளில் நிகழ்ந்த பேரழிவுகளின் தலைமை வில்லனான, யூனியன் கார்பைடின் அன்றைய தலைவர், வாரன் ஆன்டர்சன் அந்நிறுவனத்திலிருந்து அமெரிக்காவில் மிக அமைதியான ஓய்வுகாலத்தை அனுபவித்த பிறகு, நியூயார்க் மருத்துவமனை ஒன்றில் 2013 செப்டம்பரில் தனது 92வது வயதில் இறந்தார். ஒருபோதும் விசாரணையை அவர் சந்திக்கவில்லை, அவரை நாட்டிலிருந்து வெளியேற்றி இங்கு கொண்டு வர வேண்டும் என்ற

முறையீடுகள் இந்திய அரசால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. 2002ம் ஆண்டில் அப்போதே, “வெளிநாட்டில் இந்தியா” (இந்தியா அப்ராடு) என்ற இதழின் பத்திரிக்கையாளர் சக்தி பட், அதிகச் சிரமமின்றி, நியூயார்க்கில் ஆன்டர்சன் இல்லத்தைக் கண்டறிந்தார். அதே நேரத்தில்தான், இந்திய, அமெரிக்க அரசுகளால் “ஆன்டர்சன் முகவரி தெரியாது” என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

     விஷவாயு பாதித்தோர்கள் கோபமும் ஏமாற்றமும் அடைந்த மூன்றாவது பிரச்சனை இழப்பீடு. பாதிப்புக்கு ஆளானோர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம், 4700 இலட்சம் டாலர் வழங்கச் சம்மதித்து, 1989ல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு எட்டப்பட்டது. அந்த இழப்பீட்டுத் தொகை மத்தியப் பிரதேச அரசு அளித்த இறந்தவர்கள் புள்ளிவிபர அடிப்படையில் கணக்கிடப்பட்டது. அப்பேரழிவில் 3000 பேர் இறந்ததாகவும், 1,02,000 மக்கள் காயங்களால் பாதிக்கப்பட்டதாகவும் ம பி அரசின் மதிப்பீடு. 

எனினும் விஷவாயுவில் தப்பியோர்களது அமைப்புகள் உண்மையான எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாக இருக்கும் என வாதிடுகின்றன. வழக்குகளின் அடிப்படையில் இறந்தவர்கள் 15,274 மற்றும் காயமடைந்தோர் 5.73 லட்சம் மக்கள். 2010ல் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்ற ஆண்டு நிராகரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் அமைப்புகள் பலமுறை மீண்டும் மீண்டும் முறையிட்டும், மாநில அரசோ அன்றி ஒன்றிய அரசோ இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கையை அந்த மனுவில் திருத்தம் செய்ய அக்கறை காட்டவில்லை.

    அவர்களின் நீண்ட கால குறைபாடு, அமெரிக்க அரசோ அன்றி, இந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் மன்றங்களோ ஆயிரக் கணக்கானவர்களின் மரணத்திற்குத் துக்கப்படவும், அவர்களுக்கு உரிய நியாயத்தையும், நியாயமான போதுமான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தரவும் அக்கறைப்படவில்லை, எதுவும் செய்யவில்லை என்பதுதான்.

      அவர்களுடைய மற்றொரு வருத்தம், அரசு தன்னையே தங்களின் முழுமுதல் சட்டப் பிரதிநிதி என்று பிரகடனப்படுத்தியதன் மூலம், யூனியன் கார்பைடு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெறும் தங்களின் சட்டபூர்வ உரிமையை இந்திய அரசு பறித்துவிட்டது என்பதாகும்.

   இதன் மத்தியில், விஷவாயு பாதித்தோர்களின் அமைப்புகள் அத்துயர நிகழ்வின் 40வது ஆண்டின்போது, கேன்சர் மற்றும் உயிர்க்கொல்லி சிறுநீரக நோய்களால் துன்பப்படும் பாதிக்கப்பட்ட -வர்களுக்குக் கூடுதல் இழப்பீடு நிவாரணம் கோரி உச்ச நீதி மன்றத்தில் புதிய முறையீடுகளைத் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். 


--நன்றி : நியூஏஜ் (2024, டிச.8 –14)

--தமிழில் : நீலகண்டன்,

                                                                                                                    என்எப்டிஇ, கடலூர் 




 





No comments:

Post a Comment