Tuesday, 12 November 2024

மதராஸாகள் மீதான நடவடிக்கை, முஸ்லீம்களை அன்னியப்படுத்திவிடும் -- பினாய் விஸ்வம்

                       

மதராஸாகள் மீதான நடவடிக்கை      
முஸ்லீம்களை அன்னியப்படுத்திவிடும்
-- பினாய் விஸ்வம்

    குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR) (2009 கல்வி உரிமைச் சட்டத்திற்கு இணங்கி செயல்படாத) மதராஸாகளுக்கு அரசு நிதி அளிப்பதை நிறுத்தவும், அனைத்து மதராஸாகளிலும் ஆய்வு நடத்தவும் சிபார்சுகளை அளித்தது; ஆணையத்தின்
அச்சிபார்சுகளை
யும், அதற்குப் பிறகு அதன்படி ஒன்றிய மற்றும் பல்வேறு மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளையும் உச்சநீதி மன்றம் நிறுத்தி வைத்தது. இது, சிறுபான்மையினருக்கும், நாட்டின் மதச்சார்பற்ற எண்ணம் கொண்ட மக்களுக்கும் சற்று ஆறுதல் அளித்தது. ஆனால் ஆணையச் சிபார்சுகளின்படி அரசுகளால் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் தூண்டிய அச்ச உணர்வு நீடிக்கிறது.

    குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையத்தின் முன்னெடுப்புகள், எம் எஸ் கோல்வாக்கரின் ‘சிந்தனை கொத்து’ (பஞ்ச் ஆப் தாட்ஸ்) முன்மொழிந்த கருத்தியல் தத்துவத்தால்   வழிநடத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு. அந்த ‘விச்சார் தாரா’ (தத்துவம்) மதச் சிறுபான்மையினர்களைத் தேசத்தின் பகைவர்களாகப் பிரகடனப்படுத்தியது. லோக் ஜனசக்தி கட்சி (LJP) தலைவர் ஏ கே பாஜ்பாய் இந்த நடவடிக்கைக்கு எதிராக எடுத்த நிலைபாட்டிலிருந்து, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  கூட்டணி கட்சியினர்கூட இந்த முன்னெடுப்புக்குப் பின்னே மறைந்துள்ள ஆபத்தை உணர்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

     சுதந்திர இந்தியாவின் பல முக்கியமான முற்போக்கு சட்டங்களில், 2005ம் ஆண்டின் குழந்தை உரிமைகளுக்கான ஆணையங்கள் (CPCR) சட்டம் குறிப்பிடத்தக்கது. இந்தச் சட்டத்தின் கீழ்தான் மாநில அரசுகளுக்குத் தேசிய ஆணையம் 2024 அக்டோபர் 11ல் மேற்கண்ட அறிவுறுத்தல்களைப் பிறப்பித்தது. பாலியல் பணி, பிச்சை எடுத்தல், உடல் உறுப்புகள் வணிகத்திற்காகவும்கூட இந்தியாவில், குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அவர்களில் பலரும் அரிச்சுவடி முதல் எழுத்துகளின் கல்வியும் மறுக்கப்படுகின்றனர்.

நடைமுறையில் குழந்தை மற்றும் பதின்பருவத் தொழிலாளர் (தடை மற்றும் முறைப்படுத்தல்) சட்டம் கேலிக்கு உள்ளாகிறது. துரதிருஷ்டவசமாக, இவைகளில் எது பற்றியும் தேசிய ஆணையம் அக்கறைபடுவதாகத் தெரியவில்லை. பாசிஸ்ட்டுகள் தங்களின் இரகசிய நோக்கங்களைச் சட்டவிதிகள் மற்றும் முறைப்படுத்தல்களை ஏமாற்றி பயன்படுத்தியே சாதிக்கிறார்கள் என்பதை உலகமெங்கும் வரலாறு காட்டுகிறது.

கோட்பாடும் வரலாறும்

மேலும், பிற மதக் குழுக்களைச் சார்ந்த குழந்தைகள் மதராஸா பள்ளிகளிலிருந்து தூக்கி எறிய வேண்டும் எனத் தேசிய ஆணையம் கோருகிறது. இது எப்படி இருக்கிறது என்றால், ‘பக்கெட் குளியல் நீருடன் குழந்தையையும் வீசி எறிவதைப் போல” என்று கூறியது உச்சநீதிமன்றம். பிற மதக் குழுக்களைச் சார்ந்த பல குழந்தைகள் மதராஸா பள்ளிகளுக்குச் செல்கின்றனர் என ஆணையத்தின் கூற்றே நிரூபிக்கிறது. அவ்வாறு பிற குழந்தைகள் ஏன் மதராஸாகளுக்குச் செல்ல நேர்ந்தது?

பொதுக் கல்வியை அனைவருக்கும் அளித்ததில் வெற்றிபெற்ற மாநிலமான கேரளாவின் உண்மை அனுபவங்களை நன்கு அறிந்த ஒருவருக்கு இந்தக் காட்சியைப் புரிந்து கொள்வது கடினம். ஏனெனில், கல்வி உரிமைச் சட்டம் (ஆர்டிஇ) 2009 நிறைவேற்றப்பட்ட பிறகும்கூட இந்த நாட்டில் தொடக்கக் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கவில்லை என்பதை (அனைவரும் கல்வியறிவு பெற்ற மாநிலத்தில் உள்ள ஒருவர்) அறிந்திருக்க மாட்டார். அதன் காரணமாகத்தான், மத போதனை கல்வியுடன் மதசார்பற்ற கல்வி அளித்திடும் முறைமை உருவானது; அதற்காக நிதி உதவி அளிக்க வேண்டிய கட்டாயம் பல மாநிலங்களில் அரசுக்கு ஏற்பட்டது. இந்த எதார்த்த உண்மையைத் தேசிய ஆணையம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது.

1970களின் பிற்பகுதியில் அமெரிக்க ஆதரவுடன், பயிற்சி மையங்கள் அதி தீவிர பயங்கரவாத தலிபான்களால் தொடங்கப்பட்டன; ஆப்கானிஸ்தானின் இடதுசாரி அரசைத் தூக்கி எறிவதே நோக்கம். பின்பு அந்த மையங்கள் மதராஸாகள் எனப் பெயரிடப்பட்டன.  அதே அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளாலும் முன் வைக்கப்படும் தற்போதைய இஸ்லாமிய வெறுப்பு, பயமுறுத்தல் கதையாடலுடன், வேண்டுமென்றே செய்யப்பட்ட அந்தப் பிரச்சாரம் பொருந்துகிறது. எனினும் அந்தக் கோட்பாடு, இந்திய வரலாறு மற்றும் சமூகத்தின் எதார்த்தங்களுடன் பொருந்தாத முரண்பாடுகளுடன் உள்ளது.

‘மதராஸா’ என்ற அரபு வார்த்தையின் பொருள் பள்ளிக்கூடம் மற்றும் அது தவிர வேறு எதுவும் இல்லை. அந்தப் பெயர் நீண்ட காலமாக மத போதனை பள்ளி மற்றும் மதசார்ப்பற்ற பள்ளிகள் என இரண்டிற்கும் --பிரிட்டிஷ் ஆட்சி, தனித்த காலனிய கல்வி முறையை அறிமுகப்படுத்தும் வரை-- பொதுவில் வழங்கப்பட்டு வந்தது. கட்டணமில்லாத மற்றும்

அனைவருக்கும் கல்வி முறை இல்லாத நிலையில், முஸ்லீம் அல்லாத குழந்தைகள் பலர் மதராஸாகளைச் சார்ந்தே இருந்தனர். இந்திய மறுமலர்ச்சியின் தந்தையான ராஜா ராம் மோகன் ராய், முதல் குடியரசுத் தலைவர் இராஜேந்திரப் பிரசாத், எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் மற்றும் பலர், மதராஸாகள் மற்றும் மௌல்விகளிடமிருந்து பெற்ற அறிவின் தொடக்கக் கதிர்களில் அமிழ்ந்து திளைத்தனர்.

இந்துத்துவா வகுப்புவாதிகளுக்கு இந்த வரலாற்று உண்மை சகிக்க முடியாதபடி கசக்கவே செய்யும். இந்திய வரலாறு போட்டியும் மோதலும் நிரம்பிய ஒன்றல்ல, மாறாக சகிப்பும் சகவாழ்வும் நிலவுகின்ற ஒன்று என நிறுவுவதை, நமது தற்போதைய காலத்தின் வெறுப்பு விற்பனையாளர்கள், வெறுப்புமிழ் பிரச்சாரகர்கள் விரும்ப மாட்டார்கள்.

இன்றைய நாள், வெறுப்பு நிறைந்த உரையாடல்களில் எழுந்து நின்று உண்மையை உரக்கக் கூறுவது கடினம், எனினும் உண்மையை அப்படியே கூறாது விட்டுவிட முடியாது.

டெல்லி சூல்தான் ஆட்சி நாட்களிலிருந்தே மதராஸா முறை இருந்து வருகிறது; அது அடிமை, கில்ஜி மற்றும் துக்ளக் வம்சங்களால் ஆதரிக்கப்பட்டது. (முதலாவது வம்சமான அடிமை வம்சம், பொதுவாக துருக்கிய அடிமைகள் அல்லது அவர்களின் வாரிசுகளால் ஆனதால் அப்பெயரைப் பெற்றது.) மொராக்கோ பயணியான இபின் பதூதா பயணக் குறிப்பு நூல்களிலிருந்து, முகமது பின் துக்ளக்கின் வாரிசான ஃபிரோஸ் ஷா துக்ளக் (1309 –1388) பெண்கள் மற்றும் அடிமைச் சேவகர்களுக்குக் கலை, அறிவியல், கைவினைப் பொருள் பயிற்சிகளில் கல்வி அளிப்பதற்காக இந்த வழக்கத்தை முறைப்படுத்தினார் என்பது தெளிவாகிறது.

பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாகக் கேரளாவில், கிருஸ்துவக் குழுகள், தேவாலயங்களுக்கு அடுத்துப் பரவலாகப் பள்ளிகளை –தங்கள் குழுவின் சொந்தக் குழந்தைகளுக்கும், கற்க விரும்பிய மற்றவர்களுக்கும் கல்வி அளித்திட வேண்டி—நிறுவினர். யாரிடமிருந்தும், வேறு மத நம்பிக்கை உடையவர்கள் எனினும் கூட, அறிவைப் பெறுவது என்பது அவமானமாகக் கருதப்படவில்லை. (‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்பது ஔவை மூதாட்டி அறிவுரை)

அது சமூக நீதி, தாஜா செய்வதல்ல

      சமீப ஆண்டுகளில் பொய்யான, கதைகட்டிப் புனைந்துரைக்கப்படும் செய்திகள் மூலம் கொடூரத் தாக்குதலுக்குக் கேரளா இலக்காகி வருகிறது; பல மூலைகளிலிருந்து வெறுப்பையும் நம்பிக்கை இன்மையையும் ஆதரித்துப் பரப்ப எடுக்கப்படும் அத்தனை முயற்சிகளையும் மீறி, கேரள மாநிலம் சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்கள் மத்தியிலும் ஒருமைப்பாட்டையும் வகுப்பு நல்லிணக்கத்தையும்  உயர்த்திப் பிடிப்து மட்டுமே அத்தாக்குதல்களுக்குக் காரணம். மதராஸா செயல்படுவது தொடர்பான பிரச்சனையும் அதற்கு விதி விலக்கல்ல. ஆனால், உண்மைதான் என்ன?

         எடுத்துக்காட்டான தொடக்கக் கல்வி முறையுடன் விளங்கும் ஒரு மாநிலம் என்ற வகையில் கேரளாவுக்கு, அரசிடமிருந்து நிதி உதவி பெற்று மதராஸாகளை நடத்த வேண்டிய தேவை எதுவும் இல்லை. மதராஸாகளுக்குக் கேரளா ஏராளமாகச் செலவு செய்கிறது என்று கசியவிடப்படும் பொய் செய்தியில் உண்மை கிஞ்சிற்றும் இல்லை. எனினும், (ஆசிரியர்களின்) ஓய்வூதியம் மற்றும் பிற பலன்களுக்கான நிதி ஆதாரமான ‘மதராஸா ஆசிரியர்கள் நல நிதியம்’, மற்ற வகை ஊழியர்களுக்கான அமைப்புப் போலவே, சட்டரீதியாக நிறுவப்பட்ட அமைப்பாகும். அது சமூக நீதி கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒன்றே தவிர, அது எந்த வகையிலும் மத ரீதியாகத் தாஜா செய்வதல்ல (நாட் ரிலீஜியஸ் அப்பீஸ்மெண்ட்) 

       மதச் சுதந்திரம் அரசியல் அமைப்புச் சட்ட உரிமை. அதன் ஷரத்து 25, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தாங்கள் தேர்வு செய்த மதத்தின் நம்பிக்கையைக் கூறவும், பின்பற்றவும் மற்றும்

பரப்புவதற்கும் உரிமை வழங்குகிறது. ஏதேனும் சட்ட விரோதமாக இருந்தாலோ, தேசியப் பாதுகாப்புக்குக் கேடு விளைவிப்பதாக இருந்தாலோ அதனைத் தடுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு. மத ரீதியான அல்லது மதசார்பற்ற பள்ளிகளாக இருந்தாலும் அனைத்துப் பள்ளிகளும் சட்ட விதிகளின் கீழ் மட்டுமே செயல்படமுடியும்.

    ஆனால் குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் (NCPCR) நடவடிக்கை, மதச் சிறுபான்மையினர்களை ஒதுக்கி வைத்து அன்னியப்படுத்துவதைத் தீவிரப்படுத்துகிறது; மேலும் குழந்தை உரிமைகள் சட்டத்திற்கும் நியாயம் செய்யவில்லை, தேசத்திற்கும் அது நியாயம் செய்யவில்லை.

மூர்க்கமான பெரும்பான்மைவாத மேட்டிமை

நம்மைப் போன்ற ஒரு தேசத்தில், வளரும் தலைமுறையினர்களுக்கு மதசார்பற்ற மதிப்புறு விழுமியங்களைப் புகட்டுவது மிக முக்கியமானது. இந்தியா நின்று நிலைப்பதும், வளர்வதும் அதன் வேற்றுமையில் ஒற்றுமையைச் சார்ந்துள்ளது. மாபெரும் தேசத்தின் பன்மைத்துவ உள்ளடக்கத்தை மதத் தலைவர்களும் பல்வேறு நம்பிக்கைகளை உடைய மக்களும் புரிந்து கொள்வார்கள். பல்வேறு கொள்கைகளைச் சேர்ந்த பெரும் தலைவர்கள் அனைவரின் போதனைகளை –அவர்கள் சார்ந்த மத வேறுபாடு கருதாமல்-- பின்பற்றுவதன் மூலமே அதனை வளரும் தலைமுறையினர் மனங்களில் விதைக்க முடியும்.

இச்சூழ்நிலையில்,ஸ்ரீநாராயணகுரு வார்த்தைகளை நினைவூட்டுவது  நினைவூட்டுவது பொருத்தமானது “சர்வமத சர்வம் ஏகம்” (அனைத்து மதங்களின்
சாராம்சமும் ஒன்றேதான்).

ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதச் சிறுபான்மையினர்கள் நாளும் பாதுகாப்பற்ற நாட்களைக் கடந்து வருகிறார்கள் என்ற உண்மையைத் துரதிருஷ்டவசமாக NCPCR காண மறுத்துக் கண்களை இறுக மூடியுள்ளது. தீவிர பெரும்பான்மையிசத்தின் கெட்ட நோக்கமுடைய தீய சக்திகள் வெறுப்பு உமிழும் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் அந்த மக்களை அச்சுறுத்துகிறார்கள். ஆணையத்தின் நடவடிக்கையை இந்தச் சமூக அரசியல் சூழலில் வைத்தே அணுக முடியும். அந்நடவடிக்கை அம்மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது. இந்தியா முழுவதும் அச்சிறுபான்மையின மக்களைப் பாரதிய ஜனதா கட்சி ‘பிறர்’ (அதர்ஸ்) என்றே நடத்துகிறது. சட்டபூர்வமான ஓர் ஆணையம், சமூகத்தில் பிரிவினை விதைகளை விதைப்பதையோ, மற்றும் சிறுபான்மை மக்கள் உணர்வு நிலையை அன்னியப்படுத்துவதையோ நாடு எதிர்பார்க்கவில்லை. 

அதனால்தான் இந்திய மக்கள் அரசியலமைப்பு விழுமியங்களை உயர்த்திப் பிடித்து, குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR) தனது தற்போதைய நடவடிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறார்கள்.

-- நன்றி : நியூஏஜ் (நவ.10  16)

--தமிழில் : நீலகண்டன்,

          என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment