Friday, 20 December 2024

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –119 ஹனுமன் சி்ங் – குஜராத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியவர்


 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –119

ஹனுமன் சி்ங் – குஜராத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியவர்

--அனில் ரஜீம்வாலே

மத்தியப் பிரதேசம், இந்தூரில் 1916 டிசம்பர் 12ல் ஹனுமன் சி்ங் பிறந்தார். அவரது முன்னோர்கள் உபி பிரதாப்கர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை பஜ்ரங் தள், இந்தூர் சிறையில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றினார். அவரது தாயின் சகோதரியும் அதே சிறையில் பாதுகாப்பு அதிகாரி. பணியின் காரணமாக, குடும்பம் இந்தூருக்கு மாறியது. அவர் பிறந்த உடன் அவரது தாயார் இறந்து விட்டார். எனவே தாயாரின் சகோதரியின் கவனிப்பில் வளர்ந்தார். இன்டர்மீடியட் தேர்வில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்கள் பெற்றார். 

    பிரதாப்கர்கின் பத்டி கிராமத்தைச் சேர்ந்த பூல்மதி என்பரை மணந்தார். நிதி நிலை காரணமாகப் படிப்பை விட்டுவிட்டு வேலை தேட வேண்டியதாயிற்று. இந்தூர் சமாச்சார் இந்தி செய்தி பத்திரிக்கையில் பணியாற்றினார். பெயர் இல்லாமல் தலையங்கமும்கூட அவர் எழுத வேண்டியிருந்தது. அந்நாட்களில் இந்தூர் ஹோல்கர்களால் ஆளப்படும் சமஸ்தான அரசு. ஆள்வோருக்கு எதிராக எதுவும் பிரசுரிக்க முடியாத நிலை. சூழ்நிலை முழுவதும் ஹனுமன் சிங்குக்கு மூச்சுத் திணறுவதாக இருந்தது,  பத்திரிக்கை பணியிலிருந்து விலகினார்.  

தொழிற்சங்க இயக்கத்தில்

          டெக்ஸ்டைல் தொழிலின் முக்கிய மையமான இந்தூரில் இருந்த 4 ஆலைகளில் ஒவ்வொன்றிலும் 4ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றினர். ஒரு மஸ்தூர் மண்டல் (தொழிலாளர் அமைப்பு) ஜீஜீபாய் என்பவரால் நடத்தப்பட்டது. இந்தூரில் அந்த நாட்களில் சங்கங்கள் நடத்துவது அவ்வளவுச் சுலபமல்ல. இச்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது ஒருமைப்பாட்டு ஆதரவு கண்டன ஆர்ப்பாட்டங்களும், தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் நடத்தப்பட்டன. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார்.

1942 இயக்கம்

       ஆகஸ்ட் 1942ல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் விரைவில் நாட்டில் கொழுந்துவிட்டு எரிந்தது. பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள், பேரணிகள் தினசரி நிகழ்வானது. இது தவிர, ஒரு பிரிவு மக்கள் ரயில் தண்டவாளங்கள், தந்தி கம்பங்களைப் பெயர்த்துத் தொலைபேசி கம்பிகளைத் துண்டிக்கவும் தொடங்கினர். இந்தூரிலும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமானது. ஆட்சித் தலைவர் அலுவலகக் கட்டடத்தில் குண்டு வைக்க அவர்கள் முடிவு செய்தனர், ஆனால் குண்டு கலெக்டர் கார் அருகே அவரது காலருகே வெடித்தது. உடனடியாகப் போலீசார் உஷார் ஆனார்கள். விடுதலைப் போராட்ட வீரர்கள், புரட்சியாளர்கள் பலரைக் கைது செய்ய அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே தேடப்படுவோர் பட்டியலில் இருந்த. ஹனுமன் சிங், போலீஸ் வலையிலிருந்து தப்பி இந்தூரை விட்டு நாக்பூர் சென்றார்.

   நாக்பூரில் பகதூர் சிங் என்ற பெயரை வைத்துக் கொண்டார், ஓர் ஆலையின் நெசவு இலாக்காவில் சிறு பணியை அவர் மேற்கொண்டார். வேலையில் மனம் செல்லவில்லை. தொழிலாளர்களுடன் ஒன்று கலந்து பழகி, அவர்களை அமைப்பாக ஒன்று திரட்டி தலைமை ஏற்று, கோரிக்கை மனுவையும் தயாரித்து விட்டார். சமரசத் தீர்வு தோற்க, ஒரு வேலை நிறுத்தத்திற்குத் தலைமையேற்றார். இந்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு உடைய ஒருவர் நாக்பூர் வந்திருப்பதாகச் சந்தேகித்த போலீசார், தேடத் தொடங்கினர். நாக்பூரில் டெக்ஸ்டைல் தொழிலாளர் வேலைநிறுத்தம் நடக்கவே, ஹனுமன் சிங் மீதான சந்தேகம் வலுத்தது. ஆனால் போலீஸ் பிடிப்பதற்கு முன் அவர் தப்பிவிட்டார். பாம்பேயில் தென்பட்டவர் பிறகு குஜராத் கட்ச் பகுதிக்கு மாறினார்.

   எனினும் கட்ச், தொழிலாளர் இயக்கத்திற்குப் பொருத்தமான இடம் அல்ல. எனவே அவர் 1944 –45ல் அகமதாபாத் மாறிச் சென்றார். அங்கு அகமதாபாத் சமன்புரா பகுதியில் உபி, மபி மற்றும் இராஜஸ்தானிலிருந்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் இருந்தனர். இந்தூரைச் சேர்ந்த அத்தார் சிங் அவரை அடையாள கண்டு பிடித்தார். அவர்தான் நாக்பூரில் ஹனுமன் சிங்க்கு நெசவைக் கற்றுத் தந்தவர். ஹனுமனன் சிங்கைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார், சாரங்பூர் ஆலையில் ஒரு வேலை கிடைத்தது. 8 மணிநேர வேலைக்குப் பிறகு தொழிலாளர் மத்தியில் பழகி, அவர்களை ஒன்று திரட்டி அவர்கள் மத்தியில் அரசியல் உணர்வூட்டினார். சமன்புராவில் வசித்து, பத்து கிமீ தள்ளி ஒரு மில்லில் பணியாற்றினார். தொழிற்சங்க இயக்கத்தில் கடுமையாக வேலைசெய்து புகழ்பெற்ற தலைவரானார். பின்னர் அவரது குடும்பமும் அகமதாபாத் வந்தது, மனைவி அவருடன் தங்கினார்.

பிடிஆர் காலத்தின்போது

    1948 –50 காலகட்டத்தின்போது, பிடி ரணதிவே தலைமையின் கீழ் கட்சி சுய தோல்வி தேடும் சாகசப் பாதையை மேற்கொண்டது; ‘பிடிஆர் லைன்’ என அறியப்படும் அப்பாதை கம்யூனிஸ்ட் இயக்கத்தை, இந்திய அரசியலின் முக்கிய நீரோட்டத்திலிருந்து முற்றாகத் தனிமைபடுத்தி, மிகக் கடுமையாகப் பாதித்தது. இப்பாதை 1948ல் நடந்த சிபிஐ இரண்டாவது கட்சிக் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டது. இப்பாதையை அமல்படுத்தும் வகையில் பிடிஆர், –புரட்சி நிகழும் என எதிர்பார்த்து-- இரயில்வே மற்றும் பிற தொழிலாளர்களைக் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய 1949 மார்ச்சில் அறைகூவல் விடுத்தார். குஜராத்தில் வேலைநிறுத்தத்திற்கு கட்சியும் தயாரானது; மாறாக, சாகசத் துணிச்சல் காரணமாக வேலைநிறுத்தம் மோசமான தோல்வியில் முடிந்தது. முன்னிலை வரிசை தலைவரான ஹனுமன் சிங் உட்பட பல தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

  ஏராளமான கம்யூனிஸ்ட்கள் அடைக்கப்பட்டிருந்த சபர்மதி மத்திய சிறைக்கு அவர்கள் அனுப்பப்பட்டார்கள். சிறையில் அவர்கள் வகுப்புகள், விவாதங்கள் நடத்துவது வழக்கம். பெரும் எண்ணிக்கையில் ஒன்றாக வைக்கப்பட்டு இருப்பதை அவர்கள் சாதகமாக எடுத்துக் கொள்கின்றனர் என்று எண்ணிய சிறை அதிகாரிகள் வெவ்வேறு சிறைகளில் அடைக்க முடிவு செய்தனர். அந்நேரத்தில், சிறையில் உள்ள தோழர்களுக்குப் பல்வேறு விஷயங்களில், உயிர்த் தியாகம் செய்ய நேரிட்டாலும், அதிகாரிகளுடன் மோதல் போக்கைக் கடைபிடிக்க கட்சி உத்தரவிட்டது. அது, சிறையில் கிடைக்கக் கூடிய எந்தப் பொருளானாலும், உணவுத் தட்டோ, தண்ணீர் ஜெக்கோ எது கையில் கிடைக்கிறதோ அதைக் கொண்டு போலீஸ் மற்றும் வார்டன்களுக்கு எதிரான ‘வர்க்கப் போராட்டத்தை’ நடத்தும் ஒரு வடிவம்!

  அந்த வகையில் சிறை மாற்றல் நடவடிக்கையை எதிர்க்க தோழர்கள் முடிவு செய்தனர். சிறையில் கட்சி கமிட்டி செயலாளர் ஜெயந்தி பரேக், கட்சியின் சாகசப் பாதையை எதிர்த்தார். எனினும் கட்சி செயலாளர் என்ற வகையில் அதை அமலாக்க முடிவு செய்தார். கட்சிக் கூட்டத்தில், கட்சி லைனை எதிர்க்கும் தோழர்கள் பிற முகாம்களுக்குச் செல்லும்படி அவர் கேட்டுக் கொண்டார். பலர் அப்படி விலகிச் சென்றனர்.

  1949 ஆகஸ்ட் 13 நள்ளிரவு முகாமிற்குள் நுழைந்த போலீசார் பிற சிறைகளுக்கு மாற்ற கட்டாயப்படுத்தினர். எதிர்ப்புக் கிளம்பியது அவர்கள் சிறைவாசிகளை அடிக்கத் தொடங்கினர். தோழர்கள் மிளகுப் பொடி மற்றும் எரியும் விறகுடன் தயாராக இருந்தனர். கையில் கிடைத்ததைக் கொண்டு அவர்கள் போலீசைத் தாக்கினர். ஜெயந்தி பரேக் மற்றும் ஜம்னா தாஸ் மோடி அதே இடத்தில் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். கடும் தாக்குதலுக்கு ஆளான ஹனுமன் சிங் இரு கைளும் முறிந்தன. ஒரு தோட்டா அவரது முதுகெலும்பை உராய்நது சென்றது. அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டன. வழக்கறிஞர் டிஎம் சந்த் மற்றும் வழக்கறிஞர் தாகோர் கொடிவாலா அவர்கள் வழக்கை எடுத்து நடத்தினர். மற்றவர்களுடன் ஹனுமன் சிங்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். முதலில்  சபர்மதியிலும், பின்பு பரோடா சிறையிலும் அவர் அடைக்கப்பட்டார். சிறையில் அவரும் மேனாள் எம்பி ஏஷன் ஜாஃப்ரி (Ehsan Jaffri)யும் இருந்தார். ஜாஃப்ரி தனது நினைவு குறிப்பு நூலில் சிறையில் ஹனுமன் சிங் பிரசித்தியானவராக இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். 

சிறையிலிருந்து விடுதலை 

  சிறை வாழ்வு ஹனுமன் சிங்கின் உடல்நிலையைக் கடுமையாகப் பாதித்தது. நோயால் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி அவரால் நேராக உட்காரக்கூட முடியவில்லை. சில காலத்திற்குப் பிறகு மில்களில் ஒரு வேலை தேடினார்; ஆனால் அவர் நன்கு அறியப்பட்ட கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்கத் தலைவராக இருந்ததால், யாரும் அவருக்கு வேலை தர தயாராக இல்லை. பின்பு மாதம் ரூ60 ஊதியத்தில் கட்சியின் முழுநேர ஊழியரானார்.

மாநிலக் கட்சி ப்ளீனம்

 1950ன் நடுப்பகுதியில் சிபிஐ தனது சாகசப் பாதையைக் கைவிட்டு, எதார்த்தமான நிலைபாடுகளை மேற்கொண்டது. இது தொடர்பாக நாடு முழுவதும் மாநில அல்லது மண்டல மட்டத்திலான கட்சிப் ப்ளீனம் கூட்டங்களைக் கூட்டியது. குஜராத் ப்ளீனம் 1951, ஜனவரி 13,14,15 தேதிகளில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட மாகாண அமைப்புக் குழு (POC) தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் ஹனுமன் சிங் இரண்டாவது இடம் பெற்றார். POCன் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரகாந்த் ஆஸாத் பரோடாவில் வசித்து வந்தார். எனவே, நடைமுறையில் ஹனுமன் சிங் மாகாணக் குழுவின் பணிகளைக் கவனித்து வந்தார்.

1952 தேர்தல்கள்

  குஜராத் கட்சி அன்றைய பம்பாய் சட்டமன்றத்திற்கு நடந்த 1952 தேர்தல்களில் 4  இடங்களுக்கு, ஹனுமன் சிங் சமன்புரா, திங்கர் மேத்தா ஷஹக்பூர் மற்றும் மகான் பட்டேல் மணிநகர் தொகுதியிலிருந்தும் போட்டியிட முடிவு செய்தது. ஓர் இடத்திலும் வெற்றி பெறாத போதும், பெருந்திரள் மக்கள் பிரச்சாரம் மூலம் தனக்கென ஒரு தவிர்க்க முடியாத தோற்றத்தை உருவாக்கியது. ஹனுமன் சிங்கின் முக்கிய பணி தொழிற்சங்க அரங்கம், பணி மையம் அகமதாபாத். கட்சி மற்றும் தொழிற்சங்கத்தின் நிலை அந்நேரத்தில் மோசமாக இருந்ததால் அவர் கடுமையாக உழைக்கவும் கட்சிப் பணிகளுக்குப் பொறுப்பேற்கவும் வேண்டியிருந்தது. அவர் உடல் நலன் மீண்டும் பாதிப்படைந்தது.

மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பு

    சுதந்திரத்திற்கு முன்பேகூட காங்கிரஸ் மொழிவாரி மாநிலங்களாக நாட்டை மறுசீரமைக்கக் கொள்கைரீதியாக ஒப்புக் கொண்டது. சிபிஐ போன்ற கட்சிகளும்கூட இக்கொள்கையை ஆதரித்தன, அதைச் சாதிக்கப் போராட்டங்கள் நடத்தின. 1946 தேர்தல் பிரச்சாரத்திலும் இது ஒரு பிரச்சனையாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு அக்கோரிக்கை வேகமெடுத்தது. மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்புக் கமிட்டி குஜராத் மாநிலம் அமைக்க சிபார்சு செய்தது; ஆனால் அரசு மக்களிடம் ஆலோசிக்காமல் குஜராத்தை இருமொழி பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதியாக்கியது.

  மாணவர்கள் குழு  குஜராத் மையத்தில் அமைந்த காங்கிரஸ் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்களை 1956 ஆகஸ்டில் சந்தித்தது. மாணவர்கள் இருமொழி மாநிலம் அமைப்பதை எதிர்த்தனர். காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்க மறுக்க, நிலைமை பதற்றமானது. இறுதியில் அது மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் முடிந்து, பல மாணவர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டையும் மாணவர்கள் கொல்லப்பட்டதையும் கடுமையாகக் கண்டித்தது சிபிஐ. மாணவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது சிபிஐ உறுப்பினர்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஹனுமன் சிங் தலைமையில் பேரணி

மற்றும் கூட்டம் நடத்தியது. போலீஸ் ஹனுமன் சிங்கைக் கைது செய்தது. துப்பாக்கி மற்றும் தோட்டக்களைப் போலீஸ் ‘மிக முறையாகவும் சட்டப்படியும்’ பயன்படுத்தியதாகக் கூறிய முதலமைச்சர் மொரார்ஜி தேசாய் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தினார். போலீஸ் ‘தற்காத்துக் கொள்வதற்கே’ அப்படி நடந்து கொண்டதாக அவர் சட்டமன்றத்தில் கூறினார்! மகாகுஜராத் வித்யார்த்தி சமிதி என்ற முக்கியமான மாணவர் அமைப்பு இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்டது. 
மகாகுஜராத் ஜனதா பரிஷத்

தனியான குஜராத் மாநிலம் அமைப்பதற்காகப் போராடிய மகாகுஜராத் ஜனதா பரிஷத் என்ற பெருந்திரள் மக்கள் அமைப்பு 1948ல் அமைக்கப்பட்டது. இந்துலால் யாக்னிக் என்ற சந்தேகத்திற்கு இடமில்லாத பெருந்தலைவர், அந்த அமைப்பின் தலைவர். அவர் கம்யூனிஸ்ட்களுக்கு நெருக்கமாக இருந்தார். இப்போராட்ட இயக்கத்தில் ஹனுமன் சிங் முக்கிய பங்காற்றினார். போராட்டம் வெற்றி அடைந்து குஜராத் மாநிலம் 1960 மே 1ம் நாள் உதயமானது. மாநிலம் அமைக்கப்பட்ட பிறகு பெரும்பாலான பிற தலைவர்கள் பரிஷத் அமைப்பைக் கலைக்க முடிவு செய்தனர். அது கலைக்கப்படுவதற்கு எதிராக இருந்தார் ஹனுமன் சிங்.

1962 சீன ஆக்கிரமிப்பு

  1962ல் இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தியது. கட்சியின் கொள்கையை விளக்குவதில் ஹனுமன் சிங் தீவிரமாக ஈடுபட்டார். சீனாவின் ஆக்கிரமிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்தது. இருந்த போதிலும் ஹனுமன் சிங் கைது செய்யப்பட்டார். தொழிலாளர்கள் இயக்கச் செயல்பாடு உச்சத்தில் இருந்த நேரமது, ஹனுமன் சிங் அதன் தலைவராக இருந்தார்.

1964, கட்சி பிளவு

  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1964ல் இரண்டாகப் பிளவுபட்டது. இது சிபிஐ அமைப்புக்குள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி அதன் பணிகளைச் சீர்குலைத்தது. கட்சியை மீண்டும் புனரமைக்கவும், புதிய செயற்குழுவை அமைக்கவும் வேண்டியதாயிற்று. உயர் மட்ட தலைமை பொறுப்பில் இருக்க அவர் விரும்பாவிட்டாலும் ஹனுமன் சிங் கட்சியின் புதிய செயலகத்தில் இணைய வேண்டியதாயிற்று.

அகமதாபாத்தில் தொழிலாளர்கள் போராட்டம்

    கமதாபாத் சுதேசி மில் அருகே சௌமுண்டா சௌக் பகுதியில் 1964 ஆகஸ்ட் 4ல் அனைத்து மில்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. அவர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது செய்தி எடுத்து வந்தவர் அவரை அணுகி அவரது இளைய மகன் திடீரென்று இறந்துவிட்டதாக மெல்ல அவரிடம் கூறினார். ஹனுமன் சிங் அமைதியாக, ‘அவனது இறந்த உடலைச் சௌமுண்டா சுடுகாட்டிற்கு எடுத்துவரச்’ சொன்னார். பிறகு அவர் தொடர்ந்து உரையாற்றினார். உரையாற்றி முடித்த பிறகு அவர் அமைதியாக எரியூட்டும் இடத்திற்குச் சென்று இறுதிச் சடங்குகள் அனைத்தையும் முடித்துத் திரும்பினார்.

  மக்கள் அவர் எங்கே என்று காத்திருந்தனர். விவரங்களை அறிந்த இந்துலால் யாக்னிக் அதிர்ச்சி அடைந்தார். ஹனுமன் சிங்iகக் கண்டித்து, “நீங்கள் எங்களிடம் சொல்லி இருக்க வேண்டும், நாங்கள் அனைவரும் உங்களுடன் வந்திருப்போம்” என்றார். ஹனுமன் சிங். “என் மகன் திரும்பி வரப் போவதில்லை, அதற்காகப் பல மகன்கள் ஏன் துன்பப்பட வேண்டும்?” என்று பதில் கூறினார். அந்தப் பதிலைக் கேட்டு ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

     ஆலைத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள் பல நடந்து கொண்டிருந்தன, ஹனுமன் சிங் அவர்கள் மத்தியில் முன்னணித் தலைவராக இருந்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் அவர். பெரிதும் மதிக்கப்பட்ட அவரை ஒவ்வொருவரும் ‘சச்சா’ (மாமா ) என்று அழைத்தனர். அப்போது கிராக்கிப் படியை (டிஏ) உயர்த்தக் கோரி மாநிலம் முழுதும் நடந்த போராட்டம், நீண்ட காலம் நீடித்தது.

  1964 --65ல் அவரது கைது அவரின் உடல்நலம் மோசமாகக் காரணமானது. அவர் அடையாளம் காண முடியாதபடி உடல் உருக்குலைந்தார். ஆனால் ஓய்வெடுக்க மறுத்து விட்டார். 1964ல் அகமதாபாத் கார்ப்பரேஷனுக்குத் தேர்தல் நடந்தது. 1956 –57 மற்றும்1962 தேர்தல்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பாகச் செயல்பட்டிருந்தது. இம்முறை ஹனுமன் சிங்கை வேட்பாளராக நிறுத்த கட்சி முடிவு செய்தது. அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாகுஜராத் ஜனதா பரிஷத் பெரும்பான்மை பெற்றது. ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

      மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வயிற்றுப் புண் (அல்சர்) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் பெரிய முன்னேற்றம் இல்லை. கார்ப்பரேஷன் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கூட்டத்தில் பங்கேற்காது போனால் உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். எனவே, ஸ்டிரச்சர் மீது படுத்தபடி வந்து கூட்டங்களில் கலந்து கொள்வது வழக்கம்! சிகிச்சைக்காக அவரை மாஸ்கோ அனுப்பி வைக்க கட்சி முடிவு செய்தது. எழுச்சிமிக்க முழக்கங்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் அகமதாபாத் இரயில் நிலையத்தில் அவரை வழிஅனுப்பி வைத்தனர். இது 1965ல் நடந்தது. 

மாஸ்கோ நகரில்

    ஹனுமன் சிங்குக்கு மாஸ்கோவில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் நோயிலிருந்து மீண்டு வரவில்லை. 1966 செப்டம்பர் 24ம் நாள் அவர் காலமானார். அவர் இறந்த செய்தி அகமதாபாத்தை அடைந்ததும் தன்னெழுச்சியாகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். மாஸ்கோவிலிருந்து அவரது அஸ்தி கொண்டுவரப்பட்டபோது மீண்டும் தொழிலாளர்கள் பேரணியாகத் திரண்டுவர, அவரது அஸ்தி சபர்மதி ஆற்றில் கரைக்கப்பட்டது. அகமதாபாத் கார்ப்பரேஷன், சமன்புரா முதல் ஓம் நகர் வரையுள்ள சாலைக்கு அனுமன் சிங் மார்க் எனப் பெயரிட்டது.

    குஜராத் கம்யூனிஸட் கட்சி இயக்க வரலாற்றில் ஹனுமன் சிங் தனித்துவமான இடத்தைப் பெற்று விளங்குகிறார்.

      (கட்டுரையில் இடம் பெற்ற தகவல்களைத் தந்து உதவியதற்காகக் குஜராத் சிபிஐ கட்சியின் ராம்சாகர் சிங் பரிக்கர் அவர்களுக்கு இக்கட்டுரை ஆசிரியர் பெரிதும் கடப்பாடுடையதாக நன்றி பாராட்டுகிறார்)

--நன்றி: நியூஏஜ் (2024, நவ.24 –30)

 --தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்


No comments:

Post a Comment