Monday 10 July 2023

அழகான கவிதை வரிகள் -- ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்

 

                                   
  

விரும்பும் மிக மிக அழகான வரிகள், எப்போதும் படிக்க…,


சில நேரங்களில் இருள் கவிந்த இரவில்

எனது மனசாட்சியைச் சென்று பார்ப்பேன்,

இன்னும் அதற்கு மூச்சு இருக்கிறதா எனக் காண,

ஏனெனில் அது மெல்ல செத்துக் கொண்டிருந்தது, 

ஒவ்வொரு நாளும்!!!

அழகானதொரு இடத்தில் ஒரு வேளை உணவுக்கு

நான் பணம் செலுத்தும்போது

அந்தத் தொகை ஒருக்கால், அதோ எனக்காகக் கதவைத்

திறந்து பிடித்திருக்கும் காவலாளியின் மாத ஊதியமாகலாம்…

விருட்டென்று அந்த எண்ணத்திலிருந்து விடுபட்டேன்

அது கொஞ்சம் இறந்தது!

தள்ளுவண்டிக்காரரிடமிருந்து காய்கறி வாங்கும்போது

அவரது மகன் “சோட்டு” புன்னகைத்தபடி

உருளைக்கிழங்கு எடை போடுகிறான்

சோட்டு சிறு பையன்

பள்ளியில் படித்துக் கொண்டல்லவா இருக்க வேண்டும்

நான் விலகி மறுபுறம் பார்க்கத் தொடங்கினேன்

அது கொஞ்சம் இறந்தது!

பெரும் டிசைனர் உடையை அணிந்து

என்னை அலங்கரித்துக் கொள்ளும்போது

அதன் விலை வெடிகுண்டு விலையாகலாம்…

கந்தல் உடையில் ஒரு பெண் தன்னை மூடி

கண்ணியத்தைக் காக்கும் வெற்றிபெறாத முயற்சியில்

கடந்து சென்றதைப் பார்த்தேன்…

காட்சி தெரிந்த சாளரத்தை உடனடியாக நான் மூடினேன்

அது கொஞ்சம் இறந்தது!

தீபாவளியின்போது மகனுக்கு விலைஉயர்ந்த பரிசுகள் வாங்கினேன்

திரும்பும் வழியில், பசித்த வயிறு பஞ்சடைந்த கண்களுடன்

அரைகுறை ஆடையில் சிறுவர்கள் சிகப்பு விளக்கில்

வெடிகளை விற்றுக் கொண்டிருந்தனர்

அவர்களிடமிருந்தும் சிலதை வாங்கி மனசாட்சியைக் காப்பாற்றலாமா…

இருந்தும், அது கொஞ்சம் இறந்தது!

என்வீட்டில் வேலைசெய்யும் உடல்நலம் பாதித்த பெண்மணி

அன்று வேலைக்குத் தன் மகளை அனுப்பி இருந்தார்,

பள்ளிக்குக் கட் அடிக்கச் சொல்லியிருப்பார்

அவளைத் திரும்பப் போகச் சொல்லி இருக்க வேண்டும்

ஆனால் சமையலறை சிங்’கில் வழியும் பாத்திரங்கள்

மற்றும் மலைபோல் குவித்த அழுக்குத் துணிகள்

எனக்குள் சொல்லிக் கொண்டேன்,

ஓரிரண்டு நாட்களுக்குத்தானே…

அது கொஞ்சம் இறந்தது!

ஒரு குழந்தை மீது பாலியல் வன்கொடுமை அல்லது

கொலை குறித்து நான் கேட்டபோது வருத்தம் உணர்ந்தேன்

இருந்தும், சிறிது நன்றி, நல்லவேளை அது என் குழந்தை இல்லை

என்னை நான் கண்ணாடியில் பார்க்க முடியவில்லை…

அது கொஞ்சம் இறந்தது!

சாதி, மதம், இனம் என மக்கள் சண்டையிடும்போது

என் மனம் காயம்பட்டது, கையறுநிலை உணர்ந்தேன்

எனக்குள் சொல்லிக் கொண்டேன், என் தேசம் நாசமாகப் போகட்டும்

ஊழல் அரசியல்வாதிகளைப் பழித்தேன்,

எனக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லை,

என்னை விடுவித்துக் கொண்டேன்

அது கொஞ்சம் இறந்தது!

எனது நகரம் விழி பிதுங்கித் திணறியது,

புகை சூழ்ந்த நகரங்களில் சுவாசித்தல் ஆபத்தானபோது

தினமும் வேலைக்குக் காரில் சென்றேன்,

மெட்ரோவில் பயணிக்கவில்லை, தனித்தனி வாகனத்திற்கு பதில்

நண்பர்களாகச் சேர்ந்து மகிழுந்தைப் பகிரும் முயற்சி இல்லை

ஒரு கார் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது, நான் நினைத்தேன்

அது கொஞ்சம் இறந்தது!

எனவே,

இருள் கவிந்த இரவில் மனசாட்சியைச் சென்று பார்த்தபோது

நாசி அருகே கைவைத்துக் கண்டு கொண்டேன்

மூச்சு இன்னும் ஓடிக்கொண்டிருந்தது, 😭😭😭

அதிசயம், தினமும் துளி துளியாக நான் அதைப் புதைத்தேன்….

                                          --டாக்டர் மல்லிகா பத்மநாபன்

ஆங்கிலக் கவிதை தமிழாக்கம் – நீலகண்டன், கடலூர்
 

No comments:

Post a Comment