Wednesday 21 June 2023

அழிப்பதற்கல்ல வரலாறு, அது சொந்தம் கொண்டாடுவதற்கு --நீதிபதி ஆர் எஸ் சௌகான்


                                                               
           
--ஆர் எஸ் சௌகான், 
நீதிபதி (பணி நிறைவு)

“மார்க்ஸிய வரலாற்றாளர்கள் வரலாற்றை மேலிருந்து கீழாகப் பார்ப்பதில்லை, ஆனால் கீழிருந்து மேலாகப் பார்க்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை, தனிநபர்கள் வரலாற்றின் போக்கை மாற்றுவதில்லை; இயக்கங்கள் மாற்றுகின்றன. அவர்கள் சாதாரண மனிதனின் பார்வையிலிருந்து வரலாற்றைப் பார்க்கிறார்கள், குரலற்றவர்களின் குரலை, முகமற்றோர் முகத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். அத்தகைய சரித்திரங்களில் எகிப்தின் மாபெரும் பிரமிடுகளும், பரோவா பட்டத்துடன் அழைக்கப்படும் பழங்கால எகிப்தின் ஆட்சியாளர்களும் முக்கியமல்ல. எது முக்கியமென்றால், அந்தப் பிரமிட்டுகளைக் கட்டிய மக்கள் முக்கியம் …” 

ஒவ்வொரு தலைமுறைக்கும் வரலாற்றை விளக்குவதற்கு உரிமை உண்டு. ஜெர்மன் தத்துவவாதி, எழுத்தாளர், சமூகக் கருத்தியலாளரும் பொருளாதாரவியல் அறிஞருமான காரல் மார்க்ஸ், “வரலாறு மீண்டும் நிகழ்கிறது, முதல் முறை சோகமாக, இரண்டாவது முறை கேலிக் கூத்தாக” என்று நமக்கு நினைவூட்டுகிறார். எனவே வரலாறு கடந்தகாலத்தின் தவறுகளை / ஆபத்துக்ளைத் தவிர்க்க நமக்கு வழிகாட்டுகிறது.

வரலாற்றை எழுதுவது பல மாற்றங்களைக் கண்டுள்ளது. மேற்குலக வரலாற்றாளர்கள் வரலாற்றை நீளும் ஒற்றைக் கோடு முறையில் பார்க்கிறார்கள் –அதில் மனிதன், குகையில் வாழ்ந்த கற்கால மனிதனிலிருந்து பின்னவீனத்துவ மனிதனாகச் செல்கிறான். இவ்வாறு, மேற்கத்திய வரலாற்றாளர்கள் கூற்றின்படி வரலாறு என்பது ஒரு கட்டத்திலிருந்த மற்றொரு கட்டத்திற்குத் தொடர்ச்சியாக வளர்ந்து செல்லும் பயணமாகும்.

மற்றவர்கள் இந்த விவரிப்புக் குறித்துச் சந்தேகப்படுகிறார்கள்: அவர்கள், வலிமை பொருந்திய எகிப்திய மற்றும் ரோமானியப் பேரரசுகள் (பழங்கால மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கப் பகுதி) மாயன் இனக்குழு மற்றும் (அமெரிக்கக் கண்ட மெக்ஸிகோ பகுதி) ஆஸ்டெக் பழங்குடியினம் போன்ற இனக்குழுக்களின் வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டுகின்றனர். வேறு சிலர், வலிமையான ரோமன் சாம்ராஜ்யத்திலிருந்து இருண்ட காலங்கள் வரையான வரலாற்றின் ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடுகின்றனர். பலரும் வரலாற்றை அரசர்கள், அரசிகள், பேரரசர்களின் வம்சத்தின் தொடர்ச்சியாகப் பார்க்கின்றனர். இதுதான் – வரலாற்றை முழுமையாகத் தனிநபர்கள், ஆண்டுகள், தேதிகள், நிகழ்வுகளெனக் -- கற்பிக்கும் பிரபலமான முறை.

மார்க்ஸியப் பார்வை

மார்க்ஸிய வரலாற்றாளர்கள் வரலாற்றை மேலிருந்து கீழாகப் பார்ப்பதில்லை, மாறாக கீழிருந்து மேலாகப் பார்க்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை, தனிநபர்கள் வரலாற்றின் போக்கை மாற்றுவதில்லை; இயக்கங்கள் மாற்றுகின்றன. அவர்கள் சாதாரண மனிதனின் பார்வையிலிருந்து வரலாற்றைப் பார்க்கிறார்கள், குரலற்றவர்களின் குரலை, முகமற்றோர் முகத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். அத்தகைய சரித்திரங்களில் எகிப்தின் மாபெரும் பிரமிடுகளும், பரோவா பட்டத்துடன் அழைக்கப்படும் பழங்கால எகிப்தின் ஆட்சியாளர்களும் முக்கியமல்ல. எது முக்கியமென்றால், அந்தப் பிரமிட்டுகளைக் கட்டிய மக்கள் முக்கியம்; தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதவியலின் துல்லியம் என்பதைப் பயன்படுத்தி பண்டைய உலகத்தின் அற்புதம் கட்டப்படுகிறது.

எவ்வாறாயினும், வரலாற்றை விளக்குவது, வியாக்ஞானம் செய்வது என்பது ஒன்று; மற்றது, பாடப் புத்தகங்களிலிருந்து வரலாற்றை அழிப்பது.

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) நிறுவனம் சமீபத்தில் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களின் புதிய தொகுப்பை வெளியிட்டது. புதிய ‘பதிப்பு’ பாடநூல்களில் முகலாய வரலாறு குறித்த அத்தியாயங்கள் நீக்கப்பட்டன, இது புயலை எழுப்பியுள்ளது.

பிரச்சனை, பாடத் திட்டத்தின் உள்ளடக்கத்தை மாற்றி அமைக்கும் தேசியக் குழுவின் செயல்திறன் தகுதி பற்றியது அல்ல. பிரச்சனை, நம் வரலாற்றில் இத்தகைய நீக்கம் எத்தகைய பின்விளைவுளை ஏற்படுத்தும் என்பது பற்றியே. வரலாறு என்பது பெருமைக்குரியது மட்டுமல்ல, அது தொடர்ச்சியானதும்கூட.

என்சிஇஆர்டி --க்கு சில கேள்விகள்

நமது வரலாற்றின் சில பகுதிகளை மறைப்பதற்கு முன், என்சிஇஆர்டி முக்கியமான சில

கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்: நாம் ஏன் வரலாறு படிக்கிறோம்? சில வரலாற்றுப் பகுதிகளை அழிப்பதன் விளைவுகள் என்ன? வரலாற்றுத் தொடர்ச்சியில் வேண்டுமென்று ஏற்படுத்தப்படும் இடைவெளிகள் குடிமக்களுக்கு அறிவு விழிப்புணர்வை ஏற்படுத்துமா? வரலாற்றின் சில கால கட்டங்களின் வரலாற்றை நீக்குவது நமது தேசத்தை வலிமையாக்குமா அல்லது பலவீனமடையச் செய்யுமா? அரசின் நோக்கம் தேசத்தை வலிமை பெறச் செய்வது எனில், “அனைவரின் ஆதரவுடன் அனைவரின் முன்னேற்றத்திற்காக” (சப்கா சாத், சப்கா விகாஸ்) உறுதிப்படுத்த வேண்டுமெனில், பின் நமது வரலாற்றில் இத்தகைய நீக்கம் சுயமாகத் தோல்வியைத் தேடும் முன்மொழிவு ஆலோசனை தவிர வேறில்லை.

வரலாறு கற்பிப்பது மாணவர்களுக்கு ஒரு சுமையாக அல்ல, மாறாக அவர்களுக்கு அறிவூட்டுவதற்காகவே. முதலில், நாம் எங்கிருந்து வந்தோம் 

என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மனிதகுலம் முன்னோக்கிப் பார்ப்பது மட்டுமல்ல, கடந்து வந்த பாதையைப் பினோக்கிப் பார்க்கவும்கூட. ஜமைக்கா நாட்டின் அரசியல் செயற்பாட்டாளர் மார்க்கஸ் கார்வே, “தங்களின் கடந்த கால வரலாறு, பூர்வீகத் தொடக்கம் மற்றும் பண்பாடு குறித்து அறிவில்லாத ஒரு மக்கள், வேர்கள் இல்லாத மரத்தைப் போல” என்று கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் நமது சோதனை முயற்சிகள், சந்தித்த பிரச்சனைகள் மற்றும் சாதித்த வெற்றிகளைக் குழந்தைகள் அறிவது தவிர்க்க முடியாத கட்டாயமாகும். (குகைகளில் தானே நாம் இருந்தோம், பின்) நாம் எப்படி

மனிதர்களாகவும் ஒரு சமூகமாகவும் ஒரு தேசமாகவும் வளர்ச்சி அடைந்தோம்? நாம் எங்கே போகிறோம்? அனுபவம் வாய்ந்த பிரிட்டிஷ் அரசியல் மேதை, இராணுவ வீரர் மற்றும் எழுத்தாளரான சர் வின்ஸ்டன் சர்ச்சில், “எவ்வளவு தூரம் பின்னோக்கி நீங்கள் பார்க்கிறீர்களோ, அதைத் தாண்டி முன்னோக்கி நீங்கள் பார்ப்பது கூடும்” என்று கூறியதில் தவறேதுமில்லை. இவ்வாறு வரலாற்று அறிவு நம்மை ஒரு காலச் சிமிழில் இருத்தி வைத்துள்ளது.

பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது

இரண்டாவதாக, அது நமது சொந்த தேசம் மற்றும் அதன் பண்பாட்டை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. எங்கிருந்து சாதிய முறை வந்தது? சனாதன தர்மம் எப்படி வளர்ந்தது? பக்தி இயக்கம் எப்போது தொடங்கியது? ஏன் வடஇந்தியாவும் தென்னிந்தியாவும் மிகவும் வேறுபட்டிருக்கின்றன? இந்தியாவில் உள்ள வேறுபட்ட மொழிகளின் பூர்வீகங்கள் என்னென்ன? முஸ்லீகள், பார்சிகள், கிருஸ்துவர்கள் போன்ற வேறுபட்டச் சமூகங்கள் எங்கிருந்து வந்தன? ஜைனமும் சீக்கியமும் எப்போது எப்படி உருவாயின? இந்தப் பழக்க வழக்கங்கள் உருவாகத் தூண்டியது எது? இப்படியாக வரலாறு சமூகவியல். மானுடவியல், தத்துவம், கலைகள், இலக்கியம் மற்றும் மொழியியல் என விரிந்து செல்கிறது. நாம் யார், நாம் ஏன் இவ்வாறு இருக்கிறோம் என்பதை அது நமக்குச் சொல்கிறது.

மூன்றாவதாக வரலாறு கடந்த காலத் தவறுகளையும், பேரழிவு

விபத்துகளையும் நமக்கு எடுத்துக் கூறி கற்றுக் கொடுக்கிறது. இனஅழிப்புப் படுகொலைகள், அணுகுண்டின் பேரழிவுகளின் கொடூரங்கள் குறித்து நாம் கற்றுக் கொள்கிறோம். (ஸ்பெயின்) ஸ்பானிஷ்—அமெரிக்கத் தத்துவவாதி, கட்டுரையாளர், கவிஞர் மற்றும் நாவலாசிரியரான ஜார்ஜ் சந்தாயனா, “கடந்த காலத்தை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாதவர்கள், மீண்டும் பழைய தவறையே திரும்பச் செய்ய சபிக்கப்பட்டவர்கள்” என்கிறார்.

உலக நாகரீகங்களை அறிமுகம் செய்கிறது

நான்காவதாக, வரலாறு உலகில் நம்மைச் சுற்றி இருக்கும் பன்மைத்துவத்தை வெளிப்படுத்துகிறது. பல்வேறுபட்ட பண்பாடுகள், நாகரீகங்கள், வேறுபட்ட கவலைகள், அக்கறைகள் மற்றும் தீர்வுகளைக் குறித்தும் நமக்குச் சொல்லுகிறது; மக்கள் குறிப்பிட்ட வகைகளில் ஏன் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான காரணங்களை வெளிப்படுத்துகிறது. கிரேக்க, ரோமானிய நாகரீகங்கள் மற்றும் அவர்களின் தற்பெருமை, விஞ்ஞானக் கண்ணோட்ட உணர்வு, துன்பியல் நாடகங்கள், ஜனநாயக நகர –அரசுகள் (city-States, இறையாண்மையுள்ள நகரம் அதைச் சுற்றியுள்ள பகுதி ஓர் அரசாக அமையப் பெற்ற முறை) போன்றவை மீது அவர்கள் தந்த அழுத்தம் முதலியன பற்றியெல்லாம் நாம் கற்கிறோம். வேறுபட்ட மக்கள் குழுக்கள் தங்கள் சமூகத்தின் கைம்பெண்கள் பிரச்சனையைத் தீர்க்க எவ்வாறு முயன்றனர் எனப் பார்க்கிறோம். கிருஸ்துவ உலகம் தங்கள் கைம்பெண்களைச் சேவை செய்ய கன்னியாஸ்திரி இல்லங்களுக்கு அனுப்பி வைத்தபோது, இஸ்லாமிய உலகம் அவர்களை மறுமணம் செய்ய அனுமதித்தது; நாம் நம் கைம்பெண்களைச் சதிச் சிதையில் தள்ளி எரியவிட்டோம், அல்லது கோயில் நகரங்களுக்கு அனுப்பிவிட்டோம். பல்வேறு காலங்களிலும் இடங்களிலும் மனிதகுலப் பிரச்சனைகள் ஒரு குழுவுக்கென்ற பொது குணாம்சத்தைக் கட்டியமைக்கிறது. பண்டைகால மனிதர்கள் போல மீண்டும் நாம் சக்ரத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, மற்றவர்களின் தீர்வுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்.

உலகக் கணோட்டத்தைத் தருகிறது

ஐந்தாவதாக, வரலாறு நமது உலகக் கண்ணோட்டப் பார்வையைத் திறக்கிறது; நாமும் மெல்ல மெல்ல மேலும், பிற பண்பாடு கலாச்சாரங்கள், அவற்றின் விழுமியங்கள் முறைமை மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறோம். கடுமையான அரேபிய பாலைவனத்தில் இஸ்லாம் பிறந்தது என்பதை நாம் நினைவு கொண்டால் நாம் சில இஸ்லாமிய மரபுகளைப் புரிந்துகொண்டு பாராட்டுவோம்: ஒன்றாக ஒரே தட்டில் உண்பது--தண்ணீர் பற்றாக்குறை ஒவ்வொருவருக்கும் தனி பாத்திரங்களைப் பயன்படுத்த அவர்களை அனுமதிக்கவில்லை; பச்சை வண்ணத்தின் மீது அவர்களின் அன்பும் ஈர்ப்பும் – பாலைவனத்தில் பசுமை வண்ணம் உயிரின் அடையாளம்; தங்களின் தோட்டங்களில் நீர் ஊற்று, நீர்த் தடாகங்கள் மீது அன்பு – அவர்களுக்கு நீர் என்பது உயிர், நீர் என்பது சொர்க்கம்.

யார் பார்வையில் படிக்கிறோம்

ஆறாவதாக, வரலாற்றைக் கற்பது, பல்வேறு கோணங்களிலிருந்து ஓர் உண்மையைப் பார்க்கின்ற பழக்கத்தை ஆதரித்து வளர்க்கும். அதே உண்மைக்கு வேறுபட்ட விளக்கங்கள் இருக்க முடியும்: 1857ல் வடஇந்தியாவில் நடந்த நிகழ்வுகளை ஆங்கிலேயர்கள் “கலகம்” என அழைத்தார்கள். இருப்பினும் நமக்கு அது “முதலாவது சுதந்திரப் போர்”. சிப்பாய் எழுச்சியின் கலகக்காரர்கள் திடீரென்று சுதந்திரப் போராட்ட வீரர்களாக மாறினர். அதேபோல, 2-ம் உலகப் போரின் ஜப்பான்–அமெரிக்க இடையேயான மோதலுக்கு வேறுபட்ட, எதிரிடையான இரண்டு விளக்கங்கள் உண்டு – அது நாம், ஜப்பானியர் எழுதிய வரலாற்றைப் படிக்கிறோமா அல்லது, அமெரிக்கர் எழுதியதா என்பதைப் பொருத்தது. வரலாறு இவ்வாறு ஆராய்ந்து பரிசீலிக்கும் திறன் மற்றும் விளக்கும் திறனை மாணவர்களிடம் கட்டி வளர்க்கிறது.

எத்தனை எத்தனை உதாரணங்கள்

ஏழாவதாக, வரலாறு மனிதர்களின் குணத்தை வெளிப்படுத்துகிறது. அது நல்லது, கெட்டது, அருவருப்பானதை திறப்புச் செய்கிறது; வீரர்கள், கோழைகள்; பிடிவாதமான, அசட்டையான; இப்படி எல்லா வகை குணங்களும் வெளிப்படுகிறது. வரலாற்றில் நாம், அலைந்து கொண்டிருந்த துறவியும் சமய ஆசிரியரும் பௌத்த மதத்தை நிறுவியவருமான கௌதம புத்தரை, ஜைன மதத்தின் 24வது தீர்த்தங்கரான மகாவீரரை, சுவாமி விவேகானந்தரைப் பார்க்கிறோம். ஆஸ்ட்டிரியரான ஜெர்மன் சர்வாதிகாரி அடாஃப் ஹிட்லரை; சோவியத் அரசியல்வாதி, அரசியல் கோட்பாட்டாளர் மற்றும் புரட்சியாளரான விளாதிமிர் இலியானிச் லெனின் அவர்களைப் பற்றியும்கூட படிக்கிறோம். ஒட்டோமான் பேரரசின் சூல்தான் தி மெக்னீஃபிசன்ட் (மகத்துவம் பெற்றவர்) அவர்களின் அறிவு, கமீகஸ் விமானவோட்டிகளின் வீரம் (இரண்டாம் உலகப்போரில் நேசநாடுகள் கப்பல்களுக்கு எதிராக தற்கொலைத் தாக்குதல்

மேற்கொண்ட ஜப்பானிய இராணுவவீரர்கள்) நாம் வியப்படைந்து போற்றுகிறோம்; மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை முதலாவதாக அண்டிப் பிழைத்த இராணுவத் தலைமைத் தளபதி, வங்கத்தின் நவாப்பான மீர் ஜாஃபரின் கோழைத்தனத்தைப் பார்க்கிறோம். ஏதெனிய வரலாற்றாளர் மற்றும் ஜெனரல் துசிடிடஸ், (Thucydides) “வரலாறு என்பது உதாரணங்கள் மூலம் போதிக்கும் தத்துவம்” என்றார். வரலாற்றில்தான் எத்தனை எத்தனை உதாரணங்கள்.

வாழ்க்கைத் தத்துவமும் நம்பிக்கையும்

எட்டாவதாக, உண்மையில் வரலாறு, வாழ்க்கைத் தத்துவத்துடன் வழங்குகிறது. போர்கள், சமூகக் குழப்பங்கள் இருந்தாலும், பஞ்சமும் தொற்றுக்களையும் மீறி, இயற்கைப் பேரிடர்கள், கடுமைகளைத் தாண்டியும் மனிதகுலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறது. அது நம்பிக்கை, அனுபவம், ஞானம், கண்ணோட்டப் பார்வையைத் தருகிறது. வரலாற்றில் சந்திக்கும் எண்ணிறந்த பாத்திரங்களிலிருந்து நாம் வாழ்க்கை குறித்துப் பாடம்


படிக்கிறோம். ஒருமுறை காந்திஜி, “நான் நம்பிக்கை இழந்து சோர்வுறும்போது, வரலாறு நெடுக உண்மையின் பாதையும் அன்புமே எப்போதும் வென்றிருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்வேன். அங்கே சர்வாதிகாரிகளும் கொலைகாரர்களும் இருந்தது மட்டுமல்ல, நீண்ட காலம் அவர்கள் வெல்லப்பட முடியாதவர்களாகக்கூட தோற்றமளித்திருக்கிறது, ஆனால் இறுதியில் அவர்கள் எப்போதும் வீழ்ச்சி அடைந்தார்கள் –அதை நினைத்துக் கொள்வேன் –எப்போதும்” என்று கூறினார்.

ஒன்பதாவதாக, வரலாறு தனிநபர் மற்றும் சமூகத்தில் நம்பிக்கையை விதைக்கிறது. நமது கடந்த காலச் சாதனைகளும் வெற்றிகளும் நம் சுய அடையாள உணர்வை வலிமையாக்குகிறது. ஜப்பானில், தாங்கள் சூரியக் கடவுளின் வழிவந்தவர்கள் என்றும் சாமுராய் பண்பாட்டை ஸ்வீகரித்தவர்கள் என்றும் குழந்தைகளுக்குப் போதிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் தோல்வி அடைந்தபோது, ஒரு ஜப்பானியரைச் செய்தியாளர், ‘அமெரிக்கர்களால் தோற்கடிக்கப்பட்டதை எப்படி உணர்கிறீர்கள்?’ என்று கேட்டபோது, அந்த ஜப்பானியர், “எங்களுக்கு 20 வருடங்கள் தாருங்கள், நாங்கள் அமெரிக்கர்களைத் தோற்கடிப்போம்” என்று பதில் கூறினார். இருபது ஆண்டுகளுக்குள் ஜப்பானியப் பொருளாதாரம் அமெரிக்கர்களைத் தாண்டி இருந்தது. துரதிருஷ்டவசமாக நாம், நமது தேசம் புதிதாக விடுதலை அடைந்த இளம் தேசமாக இருக்கலாம், ஆனால் நாம்தான் இப்பூமியில் பழம்பெரும் மூத்த நாகரீகம் என்பதை நமது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை.

இறுதியாக, நம்பிக்கை உள்ள மனிதர்களே நல்ல குடிமக்கள் ஆகிறார்கள். அவர்கள் தங்கள் தேசம், அதன் நிறுவன அமைப்புகள், பண்பாடு, மரபு குறித்துப் பெருமிதம் கொள்கிறார்கள். நம்மிடம் தேசியப் பெருமித உணர்வு பற்றாக்குறையால், தேசத்தின் மக்களாக நாம் நமது கடந்தகாலச் சாதனைகள் பற்றிப் புகார் தெரிவிக்கிறோம்.  கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் பெரும் பாய்ச்சல்களை நாம் பாராட்டுவதில்லை. இவ்வாறு, அழுகைவாதிகளும் அவநம்பிக்கையாளர்களும் நிரம்பிய நாடாக நாம் மாறியுள்ளோம். ஒரு தனி நபரைப் போலவே, ஒரு தேசமும் நம்பிக்கையையும் எதிர்காலக் கண்ணோட்டத்தையும் இழக்குமானால் அது ஒருபோதும் சராசரியிலிருந்து மேலே எழ முடியாது.

வரலாறு நீக்கத்தின் விளைவு

துரதிருஷ்டவசமாக, பாடங்களிலிருந்து வரலாற்றை, அதன் பகுதிகளாக இருந்தாலும், நீக்குவது அந்தப் பாடத்தைப் படிப்பதால் கிடைக்கும் பயன்களைக் குழந்தைகளிடமிருந்து திருடிவிடுகிறது. மேலதிகமாக, ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் வரலாற்றை மட்டும் நீக்குவது, அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த வகுப்பு வழிகாட்டும் சுக்கான் இல்லாததாக, (“நாமிருக்கும் நாடு நமதென்ப தறிவோம், அது நமக்கே உரிமையாம் என்பதறிவோம்” என்ற) சொந்தம் கொண்டாடும் உணர்வில்லாததாக, ஊன்றி நிற்கும் நங்கூரப் பிடிமானம் இல்லாததாக ஆகிவிடும். அது, தாங்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டோம் என்று குன்றிவிடச் செய்யும்.

மேலும், குறிப்பிட்ட வகுப்பின் வரலாற்றை நீக்கி அழிப்பது, அதன் அடையாளத்தைத்  துடைத்தெறியும். குறிப்பிட்ட சமூகம் பொருட்படுத்தத் தேவை இல்லாதது, அற்பமானது என பெரும்பான்மை வகுப்புச் சுலபமாக நம்ப வைக்கப்படும். அது பெரும்பான்மையினரின் சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்வது மட்டுமல்ல, அதே அளவு சமமாக சிறுபான்மையினரை ஒரு சேரியில் / தனிக் குடியிருப்பு முகாம்களில் அடைத்து வைப்பதில் (ghettoisation) போய் முடியும். அனைவருடன் கலந்து வாழ்ந்தவர்களைத் தனியே ஒதுக்கி வைப்பது என்ற நிலையில் சிறுபான்மைச் சமூகத்தினர் பாதுகாப்பின்மையையும் அச்சுறுத்தப்படுவதையும் உணர்வர். அத்தகையப் பிளவு இரண்டு சமூகங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும். நமது தேசத்தை வலிமைப்படுத்துவதற்குப் பதிலாக, அத்தகைய அமைதிக் குலைவு மற்றும் இடையூறுகள், நம்மைப் பலவீனப்படுத்திவிடும்.

மேலும் நமது வரலாற்றின் தவறுகளையே நாம் மீண்டும் திருப்பச் செய்வதில் போய் நிற்போம்.

ஆங்கிலேயர்கள் ‘பிரித்தாளும் கொள்கை’யைப் பின்பற்றினர் என்பது தவறான சொல்லாக்கம். உண்மையில் வரலாறு முழுவதும், கிரேக்கப் படையெடுப்பிலிருந்து 1962 சீனாவுடன் போர் வரை, நாம் எப்போதும் பிரிந்து இருந்ததாலேயே நாம் வெல்லப்பட்டோம். ரோமன் படைகளுக்கு எதிராக ஜெர்மானிய பழங்குடிகள் ஒன்றாய்த் திரண்டு ஓரமைப்பாய்ப் போரிட்டதுபோல அல்லாமல், இந்தியாவில் ஒற்றை ஜாதி மட்டும் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போரிட்டது. பெரும்பான்மையான மக்கள் வெறும் பார்வையாளர்களாக ஒதுங்கி நின்றபோது, ஆக்கிரப்பாளர்களை விரட்டி அடிப்பதில் போரிடும் மறவர் ஜாதி முடிவின்றி வெற்றிபெற முடியவில்லை. நாம் பிரிந்து இருந்தோம், வீழ்ச்சி அடைந்தோம். எனவே இன்றும்கூட குழுப் போக்குப் பாதையில் (செக்டேரியன்) பிளவுபடுவது நம்மை மேலும் பலவீனமாக்கிவிடும்.

அசோகரும் அக்பரும்

கடந்த காலத்தின் பெரும் ஆசிரியர்களிடமிருந்து நாம் கற்க மறுக்கிறோம். வியப்பூட்டும் ஒரு செய்தி, ஐயாயிரம் ஆண்டுகள் வரலாற்றில் இரண்டு சக்கரவர்த்திகளுக்கு மட்டும் ‘தி கிரேட்’ என்ற பட்டம் தரப்பட்டுள்ளது: அசோகரும் அக்பரும். ஆனால் நம் வரலாறில் மாமன்னர்களுக்கும் அரசிகளுக்கும் பஞ்சமே இல்லை. என்ன, நாம் சாளுக்கிய, பல்லவ, சோழ மன்னர்கள் என்று பெருமிதப்படலாம். ஆனால் ‘மாபெரும்’ அடைமொழி அந்த இருவருக்கு மட்டுமே உரியது.

ஆனால் அசோகரையும் அக்பரையும் மட்டும் நாம் ஏன் தி கிரேட் என்று அழைக்க வேண்டும்? ஏனெனில், அவர்கள் இருவரும், நம் காலத்தைப் போலவே, அவரவர் காலத்தில் நிலவிய குழுவாதப் போக்கால் பிளவுபட்ட அதே பிரசசனைகளைச் சந்தித்தனர். அசோகரின் காலத்தில் சமூகம் இந்துகள், பௌத்தர்கள் எனப் பிரிந்து கிடந்து இரு வகுப்புகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அக்பர் ஆட்சி காலத்தில் சிறுபான்மை வகுப்பு விரிந்து பரந்திருந்த பெரும்பான்மை வகுப்பினர் மீது ஆட்சி செலுத்த முயன்றது. பிரச்சனை இரண்டு பேரரசர்கள் முன்பும் ஒன்றே:எவ்வாறு எனது மக்களை நான் ஒன்றுபடுத்துவேன்?’ 

இருவரும் இணைவு, ஐக்கியப்படுதல் பற்றிப் பேசினார்கள். முதலாமவர் “தம்மம்” என்று –ஒருவருக்கொருவர் பின்பற்ற வேண்டிய மக்களின் அறநெறி நியதி சார்ந்த கடமையைப் – பேசினார். பின்னவர், கங்கா ஜமுனி தஹ்ஜீப்” (கங்கையும் ஜமுனாவும் கலந்த கலாச்சாரம்) என இந்து முஸ்லீம் நாகரீகங்களின் இணைவு, ஐக்கியப்படுதலை ஆதரித்தார். (“பொங்குபல (சமயமெனும்) நதிகள் எல்லாம் கலந்திட…பொங்கி ஓங்கும் கங்குகரை காணத கடல்” என வள்ளலார் பாடுவதுபோல) ஒன்று கலந்து ஐக்கியப்படுதலே நமது நாகரீகத்தின் முத்திரை அடையாளம்.  

மேற்குலக நாகரீகம் போல நாம் ஒருபோதும் அடியோடு அழிப்பதில் (extermination) நம்பிக்கை உடையவர்கள் இல்லை. நாகரீகங்கள் மோதிக்கொள்வதில் அல்ல, நாகரீகங்கள் சங்கமத்தில் என்ற நம்பிக்கை உடையவர்கள் நாம். இவ்வாறு வேறுபட்ட பண்பாடுகள், வகுப்புகள், தத்துவங்களை நாம் நம்முடைய சொந்தம் போல உடனே ஏற்றுக்கொள்பவர்கள். இதுதான் இந்தப் பூமியில் நிலைத்திருக்கும் நாகரீகமாக நமது உயிர் வாழ்தலுக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையான கோட்பாடு.

இதற்கு மாறாக எண்ணுபவர்கள் ஒன்றை நினைவில் நிறுத்த வேண்டும், “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு.” திகட்டத் திகட்டத் திரும்பச் சொல்லப்படும் இந்தப் பொன்மொழியையே ஒரு தேசமாக நமது வரலாறு மெய்ப்பிக்கிறது, ‘நன்றிது தேர்ந்திடல் வேண்டும்’. இருப்பினும் துயரகரமானது யாதெனில், இந்தச் சாதாரண வரலாற்று உண்மையைப் புரிந்து கொள்ள நாம் தவறிவிடுகிறோம்.

வரலாறு அங்கே நீங்கள் விரும்ப வேண்டும் அல்லது வெறுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. 
அதிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்என்பதற்காகஇருக்கிறது. அது  உங்களைத் தொல்லைப்படுத்திக் குத்திக் காட்டிக் காயப்படுத்துமானால் இன்னும் நல்லது.
 ஏனெனில் மீண்டும் நீங்கள் அவற்றைச் செய்ய மாட்டீர்கள். வரலாறு இங்கே அழிப்பதற்காக அல்ல. அது நம் அனைவருக்கும் சொந்தமானது. கொண்டாடுவோம்!

(“சரித்திரத் தேர்ச்சி கொள்! சிதையா நெஞ்சுகொள்! 

தேசத்தைக் காத்தல் செய்!” –பாரதி)

--நன்றி : நியூஏஜ் (ஜூன் 18 –24)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்   

                    

 

 

.

 

No comments:

Post a Comment