Monday 24 July 2023

நியூஏஜ் தலையங்கம் -- பாஸ்டில் சிறை தகர்ப்பு எழுச்சியின் முக்கியத்துவம்

 


நியூஏஜ் தலையங்கம் (ஜூலை 23 – 29)

பாஸ்டில் சிறை தகர்ப்பு எழுச்சியின் முக்கியத்துவம்

    பிரான்ஸ் தேசத்தில் முடியாட்சி முடிவுக்கு வந்ததைக் கொண்டாடும் தேசிய தின விழாவில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் பாரீஸ் சென்றிருந்தார்.

    நீராவி சக்தி கண்டுபிடிக்கப்பட்ட 34 ஆண்டுகளுக்குப் பின் அந்நாள் 1789 ஜூலை 14. அது நிலப்பிரபுத்துவம் நொறுங்கி முதலாளித்துவம் மெல்ல தொடங்கிய காலகட்டம். மேலாண்மைச் செல்வாக்கு அப்போதும் ராஜ பிரபுத்துவ வம்சத்தினரின் கைகளிலே இருந்ததால், முதலாளிகள் அதிகாரத்தில் பங்கு கிடைக்காத அதிருப்தியில் இருந்தனர். தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தில் 90சதவீதத்தை விழுங்கிய ரொட்டியின் (உணவு) அதீத விலை உயர்வு அதிருப்தியில் வாடினர். அதனால் உடை, இருப்பிடம், சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசியங்களுக்கு அவர்களால் செலவிட முடியவில்லை. விவசாயிகளோ நிலப்பிரபுக்கள் விருப்பப்படி ஆட வேண்டிய அடிமை நுகத்தடியில் கட்டுண்டு கிடந்தனர்.

நீராவிச் சக்தி, கட்டமைப்பு முதல் மேலாதிக்கம் வரை அனைத்தையும் மாற்றியது. அது வயல்வெளி முதல் தொழிற்சாலைகள் வரை மாற்றத்தின் காலம். மாற்றம் என்பது அதற்கான

விலையையும் கோரியது. அதுதான், பாரீஸில் நடைபெற்ற சிறை தகர்ப்பு எழுச்சி, ஒரு புதிய தொடக்கத்தின், புரட்சிக்கான சமிக்ஞையைத் தந்தது; அதன் பிறகே, “சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம்” என்ற உயரிய லட்சியங்கள் அடிப்படையில் குடியரசு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த நாட்கள் வித்தியாசமானவை. முழுமையான மேல் கட்டுமானம், வேளாண் முறை, கண்மூடித்தனமான நிலப்பிரபுத்துவ ஆட்சியும் கலகலத்து நொறுங்கத் தொடங்கியது. அரசரும் அரசியும் இனியும் வணங்கத்தக்க தெய்வாம்சங்கள் அல்ல. மக்களுக்கு அரசர் 16வது லூயி (Louis XVI), அரசி மேரி அன்டோனெட் மீது ஒரு சிறிதும் நம்பிக்கை இல்லை.

கண்ணை உறுத்தும் ஓர் உண்மை, கண்ணுக்கெட்டிய தூரம் முடிவில்லாத மிகக் கொடுமையான துன்பம், எங்கும் பரவி இருந்த பசி பட்டினியில் தெரிந்தது. பசியில் இருந்த மக்கள் அதனால் கடும் சீற்றத்தில் இருந்தனர். மற்றொரு அடிப்படையான உண்மை, அதனளவில் எழுச்சிப் புயலைக் கொண்டுவரப் போதுமானதாக இருந்த, பிரான்ஸ் நாட்டைச் சூழ்ந்திருந்த பொருளாதார திவால் நிலைமை. 1789 அந்த மே மாதத்தில் அரசியல் நிச்சயமற்றத் தன்மை, பொருளாதார இன்னல்கள் இரண்டும் தீவிரம் அடைந்தன. நிலைமை கொதி நிலைக்கு வந்தது. புதிய சிந்தனையுடன் ஒரு புதிய சமுதாயம் அரும்பும் அறிகுறிகள் மெல்ல உருவாயின. அங்கே தனிமனித உரிமைகள் மற்றும் சமத்துவ அடிப்படையிலான பிரதிநிதித்துவமுள்ள அரசிற்கான தேவை வளர்ந்தது. ஜனநாயகம் குறித்த கருத்தியல்கள் வடிவம் பெறுவதில் பிரான்ஸ் மட்டும் தனித்து இல்லை, வளர்ச்சி அடைந்த உலகம் முழுமையும் புதிய விடியலுக்காகக் காத்திருந்தது. அந்த மூலதனத்தின் ஆட்சி, பிரான்ஸ் தேசத்தால் மட்டும் அடையாளம் காணப்படவில்லை, ஆனால் (1765 --1783 ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற அரசியல் எழுச்சியான) அமெரிக்கப் புரட்சியாலும் ஊக்கப்படுத்தப்பட்டது.

அப்போது, ஜூலை 14 காலை பாரீஸைச் சுற்றி வளைக்க படைகளுக்கு அரசர் உத்தரவிட்டதாக ஒரு வதந்தி பரவத் தொடங்கியது. அதற்கான எதிர்வினை பயமாகவோ அன்றி துரோகம் இழைப்பதாகவோ இல்லை; மாறாக, அது வலிமை பொருந்தியதாகவும் உரத்தும் இருந்தது. அது ஒரு வரலாற்றுத் தருணம், அதைத் தொடர்ந்து அது உலகத்தை மாற்றிப் போட்டது. சர்வாதிகார முடியாட்சிக்கு எதிராக அச்சமற்ற மாபெரும் மக்கள் கூட்டம், நிலப்பிரபுத்துவத்தின் வாழும் அடையாளமாக விளங்கிய பாஸ்டில் மீது தாக்குதல் தொடுத்தது. அரண்மனை கோட்டை அரணின் ஆளுநர் பேச்சு வார்த்தை நடத்த முயன்றார், ஆனால் தோல்வி அடைய முதல் பலி ஆனார். துண்டிக்கப்பட்ட அவரது தலையை ஓர் ஈட்டியில் சொருகி மக்கள் வீதிகளில் வலம் வந்தனர். தங்களை நசுக்கிவந்த அவர்கள் மீது அதிகாரம் செலுத்தும்  போதைக்கு மக்கள் ஆட்படவில்லை; ஆனால் அவர்களுடன் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று வந்த புனிதச் சீற்றம் அது. புரட்சி தொடங்கியது. செப்டம்பர் 1792ல் பிரான்சு குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. 1793 ஜனவரி 21ல் 16வது லூயி புரட்சியாளர்களால் விசாரிக்கப்பட்டார். முடியாட்சி முடிவுக்கு வந்தது. அது பிரான்சு குடியரசின் முதல் ஆண்டாகக் கருதப்பட்டு அவ்வாறே பிரகடனப்படுத்தப்பட்டது. 16வது லூயி கடைசி லூயி (Louis the Last)என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

அரசர் 16வது லூயி, (தலை வெட்டும் கருவி) கிளெட்டின் கீழ் கிடத்தப்பட்டார். அவரது மரணத்துடன் நிலப்பிரபுத்துவ முறை முடிவுக்கு வரத் தொடங்கியது. அதன் பின் வெர்சாய்ஸ் அரண்மனையில் (பாரீசுக்கு மேற்கே 12 மைல் தொலைவில் 14வது லூயியால் வெர்சாய்ஸில் கட்டப்பட்ட  அரச இல்லத்தில்) எந்த அரசரும் வாழவில்லை.

புரட்சியின் இறுதி விளைவுகள் அற்புதம், ஆனால் எதிர்பார்க்கப்படாதது அல்ல. மாற்றம் நிரந்தரமானது, கருவிகளின் பரிணாமத்தால் வழிநடத்தப்படுவது. பிரெஞ்ச் புரட்சியைப் பொருத்தவரை அது நீராவின் சக்தியால் நடத்தப்பட்டது. மெல்ல தொழிற்புரட்சியின் காலம், புதிய கருவிகளுடனும், ஆட்சி நடத்த ஒரு ஜனநாயக அமைப்பு முறையுடன், அரும்பி வளர்ந்தது; இந்த மட்டத்தில் புரட்சி அதனுடன், “மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பிரகடனம்” என்ற ஒரு புதிய பாகமான அம்சத்தைக் கொண்டு வந்தது. வரலாற்றில் முதன் முறையாக மனித உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டன. அது உண்மை விடுதலைக்கான போராட்டத்தை ஒரு புதிய மட்டத்திற்குக் கொண்டு வந்தது. அது சமூக நீதிக்கான போராட்டம்.

           போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன, புதிய முழக்கங்களுடனும்,

வியாக்யானங்களுடனும். நடைமுறையில் உள்ள முறைமை (சிஸ்டம்) பிரச்சனைகளை உயிர்ப்புடன் வைத்துள்ளது. பிரச்சனைகள் அடிப்படை மாற்றங்களுக்குக் கட்டியம் கூறுகின்றன. ஓர் உதாரணம், தற்போது நடைபெறும் பென்ஷன் போராட்டங்கள். மற்றும் இளைஞர் ஒருவரைப் போலீஸ் கொன்றதன் காரணமாக எழுந்த கலவரங்கள்.

இது, ஒரு முறை புதிய விடியலுக்குக் கட்டியம் கூறி பெரும்புயலுக்குச் சமீக்ஞை தந்த அதே பாஸ்டில் தகர்ப்பு நிகழ்வின் அதே தருணம். இந்தியா அவர்களின் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது. புதிய காலத்தின் தொடக்கமான தலைவாயிலில் நின்றுகொண்டு ஆட்சி செய்வது முடியாட்சி அல்ல, மாறாக வலதுசாரி சக்திகளுக்கு ஆதரவு தந்து வளர்க்கும் நிதி மூலதனம். அதேபோழ்து ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சியின் ஆண்டுவிழாவும் நடைபெறுகிறது, அத்தருணத்தில் பாஜக, “சேவா, ஜுஷான், கரீப் கல்யாண்” (சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகள் நலம்) என்ற முழக்கத்தைப் பயன்படுத்துகிறது.

2014 மற்றும் 2019ல் நடைபெற்ற இரண்டு பொதுத் தேர்தல்களிலும் மோடி அரசு சாதாரணமாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டின் மீது ஆர்எஸ்எஸ் சிந்தனை மற்றும் கருத்துகளைத் திணித்தது. ஆட்சியில் இருந்த சக்திகளுக்கு அரசியலமைப்புச் சட்டக் கோட்பாடுகள், லட்சிய விழுமியங்கள் அன்னியமானவை, அதற்கு நெருக்கமானது நிதி மூலதனத்திற்கு ஆதரவாக இருப்பதே. பாஸ்டில் தகர்ப்பு தொழிற்புரட்சி காலத்துடன் முதலாளித்துவ நிகழ்முறையின் தொடக்கமாக இருந்தது, அதுவே கார்ப்பரேட் மயமாக்குவதற்கு ஆதரவாகவும் இருந்தது.

அம்முறைமை (சிஸ்டம்) ஏனைய மக்களின் விழைவுகளைப் பொருட்படுத்தாமல் அவர்கள் குரல்களை நெறித்துத் தானடித்த மூப்பாக, ஓய்வின்றி அரசியலமைப்பு கோட்பாடுகளைப் பிய்த்தெறிவதில் ஈடுபட்டது. உழைக்கும் மக்களையும், மத, மொழி சிறுபான்மையினரையும் நசுக்கும் பெரும்பான்மை ஆட்சிமுறைமையைக் கொண்டு வருவதே  அவர்களின் பெருவிருப்பம்; மேலும் அதன் மூலம் இறுதியாக ஜனநாய அமைப்பு முறைமைகளைச் சீரழித்துச் சட்டத்தின் ஆட்சியையும் மீறி தங்களின் இலக்கை அடைவது அவர்களின் நோக்கம்.

கார்ப்பரேட் பிரிவுக்காக, எல்லா அதிகாரங்களையும் ஒன்றியத்தின் கைகளில் குவிக்கச் செய்து, எல்லாவித மத்தியகால பிற்போக்கு கருத்துகளை நடைமுறைக்குக்

கொண்டு வருவதன் மூலம், ‘கீழ்மட்ட’ சாதிகள் என அழைக்கப்படுபவர், பெண்கள் மற்றும் பொதுவாகச் செல்வத்தை உற்பத்தி செய்வதில் உழன்று ஆனால் அச்செல்வத்தை உரிமையாக வைத்திராத மக்கட்பிரிவுகளுக்கு எல்லாம் இரண்டாம் தர அந்தஸ்தை வழங்குவது அவர்களின் திட்டம். இதனைச் சாதிக்க, அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து விதிகளையும் சாகடித்து ஓர்மை வார்ப்பு ஆட்சியாளர்களால் விதிகளை மாற்றி அமைப்பது அதற்குத் தேவையாக உள்ளது.

இத்தகைய ஆட்சியின் கீழ், பாஸ்டில் தகர்ப்பு நிகழ்வுக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட சரித்திரப் புகழ் வாய்ந்த, “மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பிரகடனம்” அதனது மேன்மையான அர்த்தத்தை இழக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் மனித உரிமைகள் சீர்குலைக்கப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. [அதன் கொடூர உச்சம் மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி வீதிகளில் இழுத்துச் சென்ற காட்சிகளில் உலகத்திற்கு வெளிப்படுகிறது.

இந்தியா விடியலுக்குக் காத்திருக்கிறது, “இந்தியா” விடைகாண களம் காண்கிறது! மாற்றம் ஒன்றே மாறாதது, மாற்றம் மானுடத் தத்துவம்!]

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 

 

 

No comments:

Post a Comment