Tuesday 18 July 2023

ஜூலை 19 -- வங்கிகள் தேசியமய தினம் -- தோழர் சிஹெச்வி சிறப்புக் கட்டுரை

 

தேசியமயமாக்கப்பட்ட வங்கிள் 

தேசத்தைக் கட்டிமைக்கும் அமைப்புகள்

--வங்கிகளைத் தனியார்மயப்படுத்துவது

   மக்கள் விரோதம்

--சி ஹெச் வெங்கடாசலம்,

பொதுச் செயலாளர், AIBEA

எதிர்வரும் ஜூலை 19, நமது நாட்டில் தனியாருக்குச் சொந்தமான பெரிய வங்கிகள், வெற்றிகரமாகத் தேசியமயமாக்கப்பட்டதன் 55வது ஆண்டு. அந்த நாள் நமக்கு முக்கியமாகக் கொண்டாட வேண்டிய ஒரு நாள்; ஏனெனில் வங்கிகள் தேசியமயத்தைச் சாதிப்பதற்கான போராட்டங்களில் நாம் தியாகம் மிக்க பங்காற்றியிருக்கிறோம்.

    ஏஐபிஇஏ பேரியக்கத்தை நிறுவிய நமது முன்னோர்களின் கண்ணேட்டத்திற்கு நாம் நன்றி தெரிவிப்போம் –தேசியமயக் கோரிக்கை 1946ல் நமது அமைப்பு நிறுவப்பட்ட நாள் முதலாக அதன் கருவிலேயே இருந்தது. அதன் பின்னர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏஐபிஇஏ அதற்காகப் பிரச்சாரம் செய்து, இயக்கங்கள் நடத்தி அதற்குப் பிறகு கடுமையாகப் போராடி மிகுந்த அரசியல் முக்கியத்துவம் உடைய இக்கோரிக்கையைச் சாதித்தது. அதனால்தான் அந்தச் சாதனையை நாம் கொண்டாடுகிறோம்!

    இப்போராட்டத்தில் ஏஐபிஇஏ அமைப்பை ஊக்கப்படுத்தி வழிகாட்டியதில் சிபிஐ மற்றும் ஏஐடியுசி ஆற்றிய பங்கை நினைவுகூர வேண்டியது மிக முக்கியமானது. எஸ்ஏ டாங்கே, பூபேஷ் குப்தா, எஸ்எம் பானர்ஜி, ஏகே கோபாலன், என்கே கிருஷ்ணன், இந்திரஜித் குப்தா போன்ற பல தலைவர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இந்தக் கோரிக்கைக்கு பிரச்சாரம் செய்து ஆதரித்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஏஐபிஇஏ பொதுச் செயலாளருமான, பிரபாத் கர் திரும்பத் திரும்பக் இக்கோரிக்கையை எழுப்புவதிலும், வங்கி ஊழியர்களின் மாபெரும் போராட்டத்தைக் கட்டியமைத்து நடத்தியதிலும் முன்னணிப் பங்கு வகித்தார் என்பது உண்மையே.

     இப்போதும் வளர்ந்துவரும் பொருளாதாரமான நமது நாட்டில், மேம்பாடு மற்றும் வளர்ச்சியை உந்தித் தள்ளுவதில் வங்கித் துறை கேந்திரமான பங்கு வகிக்கிறது. வங்கிகள் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்பு அனைத்து வங்கிகளும் தனியார் பிரிவில் இருந்ததாலும், முக்கிய தனியார் வங்கிகளைச் சொந்தமாகக் கொண்டிருந்த பெருமுதலாளிகள் தங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்ததாலும் நாட்டின் தேவைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

            தேவையுள்ள தொகுதிகள் மற்றும் தேவையுள்ள பிரிவுகளுக்கு வங்கிச் சேவை, குறிப்பாக வங்கிக் கடன், சுலபமாகப் பெறக்கூடியதாக இல்லை. இவ்வாறு தனியார் வங்கிகள் முதலாளிகளுக்கும் தொழில் குழாம்களுக்கும் வெறும் லாபம் ஈட்டும் கருவிகளாக மட்டும் இருந்தன. எனவேதான் வங்கிகளைத் தேசியமயமாக்க வேண்டும், அவற்றைப் பரந்துபட்ட அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்குத் துணையாக நிற்கச் செய்ய வேண்டும் என்ற தேசபக்த கோரிக்கை எழுந்தது.

     இந்தக் கோரிக்கை சாதிக்கப்பட முடியாதது என்று பலராலும் கேலி பேசப்பட்டது, வேறு பலர் நம்பிக்கையற்று இருந்தனர். தொழில் குழாம்கள், முதலாளிகள் மற்றும் வங்கி உரிமையாளர்கள் சீற்றம் அடைந்தனர். அரசோ அக்கோரிக்கைபால் மகிழ்ச்சியாக இல்லை, எரிச்சல் கொண்டது. ஆனால் அக்கோரிக்கைக்காகப் போராடுவதில் ஏஐபிஇஏ பேரியக்கம் உறுதியாக இருந்தது.

    1964ல் நடைபெற்ற திருவனந்தபுரம் மாநாட்டிலிருந்து மாபெரும் போராட்டத்திற்கு ஏஐபிஇஏ அறைகூவல் விடுத்தது. பிரபாத் கர் மற்றும் HL பர்வானா தொடர்ச்சியான போராட்டத்திற்கு

 

வலிமையான அழைப்பு விடுத்தனர். வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வங்கிகள் தேசியமயக் கோரிக்கையை எழுப்பி போராட்ட அலையின் உச்சத்தில் இருந்தனர்.

   கிராமப்புறங்களில் துன்பங்கள் அதிகரிக்க மக்கள் காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இழ்ந்ததால், 1966ல் காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை இழந்தது. எனவே இந்திரா காந்தி இப்பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் முடிவுகளை எடுத்தார். ஆனால் இந்த நடவடிக்கைகளைக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்கள் எதிர்த்தனர்.

    1969 வாக்கில், காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சனைகளும் இந்திரா காந்திக்கும் மொராஜி தேசாய்க்கும் இடையில் பிளவும் அதிகரிக்க, இந்திரா காந்தி பல்வேறு முற்போக்கு முடிவுகளை அறிவித்தார். இது நமது கோரிக்கையை வற்புறுத்த உகந்த அரசியல் சூழலை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியுசி மற்றும் பிற முற்போக்கு சக்திகளும் நமது கோரிக்கையை எதிரொலித்தன. 1957முதல் 1967 வரை பிரபாத் கர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர் இக்கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பி, பல்வேறு அரசியல் கட்சிகள், எம்பி-கள் ஆதரவைத் திரட்டினார்.

    காலம் கனிந்தது, மேடம் இந்திரா காந்தி விரைந்து முடிவெடுத்தார், அவரது அரசு 1969 ஜூலை 19ல் வங்கிகளைத் தேசியமயமாக்கும் அவசரச்

 சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது.

    வங்கித் தொழில் கம்பெனிகள் (கையகப்படுத்தல் மற்றும் அண்டர் டேக்கிங்ஸ் மாற்றம்) மசோதா 1969, வங்கிகள் தேசியமயத்திற்கான நோக்கங்கள் மற்றும் காரணங்களைப் பின்வருமாறு தெரிவித்தது:

  பல லட்சக் கணக்கானவர்களின் வாழ்க்கையை வங்கி முறைமை தொட்டுத் தொடர்பு கொள்கிறது மேலும் அது பெருமளவில் சமூகப் பயன்பாடுகளுக்கு ஊக்கப்படுத்தப்படவும்; விவசாயம், சிறுதொழில்கள் மற்றும் ஏற்றுமதியில் தீவிர வளர்ச்சி போன்ற தேசிய முன்னுரிமைகளுக்கும்; வேலைவாய்ப்பு மட்டத்தை உயர்த்தல், புதிய தொழில் முனைவோர்களை உற்சாகப்படுத்தல் மற்றும் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சி போன்ற நோக்கங்களுக்கும் சேவையாற்றவும் வேண்டும். இந்த நோக்கப் பயனை அடைய, வங்கிச் சேவைகளையும், வங்கி முறைமையின் முக்கியப் பகுதிகளின் செயல்பாடுகளையும் விரிவுபடுத்தவும், பல்வேறாகப் பரவலாக்குவதற்காகவும் நேரடிப் பொறுப்பை அரசு எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.”

    இது, ஏஐபிஇஏ பேரியக்கத்தைப் பொருத்தவரை அதன் நெடுநாள் கண்டோட்டம் நனவானது ஆகும். சுதந்திரா கட்சி (இப்போது அது இல்லை) மற்றும் ஜன சங்கம் (பாஜக வின் முந்தைய பெயர்) தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு முழுமையும் இந்த முற்போக்கு நடவடிக்கையைக் கொண்டாடி வரவேற்றது. இவ்வாறு நமது ஏஐபிஇஏ பேரியக்கம் நமது நாட்டின் அரசியல் நிகழ்வுகளில் பொன்னால் ஆன ஓர் அத்தியாயத்தைச் செதுக்கியது!

    வங்கி தேசியமயம் வங்கித் தொழில் பிரிவைப் பெரிய அளவில் மாற்றம் செய்தது. கடைகோடி கிராமப்புறங்களிலும் வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன. இதுவரை புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன்கள் வழங்கப்பட்டன. சாதாரண மக்கள் வங்கிச் சேவையை எளிதில் பெற முடிந்தது. (லேவாதேவி அதிக வட்டிக் கொடுமை கட்டுப்படுத்தப்பட்டது.) வங்கிகளில் செலுத்தப்பட்ட பொதுமக்களின் பணத்திற்கு பத்திரமாக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. 55 ஆண்டுகளில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தேசத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கி இயக்கும் முக்கிய என்ஜின் ஆயின.

    வளர்ச்சி, தாவிப் பாய்ச்சல் மற்றும் அவற்றில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்களிப்பு அபாரமானவை. ஆனால் கார்ப்பரேட்டுகள் அழுத்தத்தின் காரணமாக வங்கிகளை அரசு தனியார் மயமாக்கி முதலாளிகளிடம் கையளிக்க விரும்புகிறது, அப்போதுதானே அவர்களால் வங்கிகளின் இருக்கும் பெருமதிப்பு வாய்ந்த சேமிப்புத் தொகைகளைக் கொள்ளை அடித்து வாரிச் சுருட்ட முடியும்? இதுதான் நாமும் நமது தேசமும் எதிர் நோக்கும் ஆபத்து.

வங்கிகளைத் தேசியமயமாக்கப் போராடியது போலவே, இன்று பொதுத்துறை நிறுவன வங்கிகளைப் பாதுகாப்பதும், அவற்றைத் தனியார்மயப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முடியடிப்பதுமே நமது தேசபக்த கடமை. இதுதான் நமது பிரதான பணி, நமது முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:

Ø  பொதுத்துறை நிறுவன வங்கிகளை வலிமையாக்கு, விரிவுபடுத்து!

Ø  வங்கிகள் தனியார்மயத்தை நிறுத்து!

Ø  அனைத்துத் தனியார் வங்கிகளையும் தேசியமயமாக்கு!

Ø  கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் வாராக் கடனை வசூல் செய்!

Ø  வேண்டுமென்று கடனைத் திருப்பக் கட்டாது அடம் பிடிப்பவர்களுக்கு எதிராகக் குற்ற நடவடிக்கை எடு!

Ø  ஹேர் கட் முதலான வசீகரப் பெயர்களில் கடன் தள்ளுபடி மற்றும் சலுகைகளை நிறுத்து!



Ø  Ø Øசேமிப்புகள் மீது வட்டியை உயர்த்து!

Ø  வங்கி சேவைக் கட்டணங்களைக் குறை!

Ø  கூட்டுறவு வங்கிகளில் இரண்டடுக்கு முறையை ஏற்படுத்து!

Ø   (அடிப்படை வங்கி மற்றும் நிதிச் சேவைகளை அளிக்கும் கிராமிய வங்கிகள் போன்ற) ‘ரீஜினல் கிராமப்புற வங்கி’களை (RRB) சம்பந்தப்பட்ட ஸ்பான்சர் வங்கிகளுடன் இணை!

Ø  அனைத்து வங்கிகளிலும் போமான ஆளெடுப்பை உடனே நடத்து!

வங்கிகள் தனியார்மயத்தை எதிர்த்து நமது பிரச்சாரம் மற்றும் போராட்டங்களை நாம் தொடர்ந்து நடந்த வேண்டும். வங்கிகள் தேசத்தைக் கட்டியமைக்கும் அமைப்புகள், அவை அவ்வாறே நீடிக்க வேண்டும்.

வங்களைத் தனியார்மயப்படுத்தி அவற்றைப் பேராசை பிடித்த கார்ப்பரேட்டுகளிடம் கையளிப்தை நாம் அனுமதிக்கக் கூடாது. மக்கள் பணம் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும், நாளும் அந்தச் செல்வங்கள் தனியார் கார்ப்பரேட் கொள்ளை கொண்டு போவதற்காக அல்ல. தேசிய சேமிப்பு பரவலான அடிப்படையில் தேசிய வளர்ச்சி மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட வேண்டும், அவை கடன் வாங்கி, திரும்பக் கட்ட மறுத்து ஏமாற்றி ஓடும்  ஓடுகாலி குற்றவாளிகள் கொள்ளை அடித்துத் திருடிச் செல்வதற்காகத் திரட்டப்பட்டவை அல்ல.

“பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாப்போம்!

பொருளாதாரத்தைப் பாதுகாப்போம்!

மக்களைப் பாதுகாப்போம்! தேசத்தைப் பாதுகாப்போம்!”

--இந்த உயரிய நோக்கங்களுடன் இன்று நாம்

வங்கிகள் தேசியமய தினத்தைக் கொண்டாடுவோம்!

--நன்றி : நியூஏஜ் (ஜூலை 16 –22, 2023)

--தமிழில் : நீலகண்டன், NFTE,

தொலைத் தொடர்பு துறை, கடலூர்

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment