Sunday 7 May 2023

மார்க்ஸ் எழுதிய “பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள் –1848 முதல் 1850 வரை”

 

மே 5, காரல் மார்க்ஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

மார்க்ஸ் எழுதிய “பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள் –1848 முதல் 1850 வரை”:

அதன் வரலாற்று முக்கியத்துவம்

                              -அனில் ரஜீம்வாலே

          ஏங்கெல்ஸ் விளக்கியதுபோல, இந்தப் படைப்பு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் சமகால வரலாற்றைப் பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தின் மூலம் (வரலாற்றுப் பொருள் முதல்வாதம்) தூலமாகப் பயன்படுத்தி விளக்கும் முதல் முயற்சி. கம்யூனிஸ்ட் அறிக்கையில் (1848) தொடங்கிய இந்நிகழ்முறை, பொதுவான வடிவத்தில் முழுமையான நவீன வரலாற்றுக்குப் பயன்படுத்தப்பட்டது; தற்போது இது மேலும் குறிப்பாகத் தீர்மானகரமானது.

            இப்படைப்பு மார்க்ஸ் தொடங்கிய ‘நியூ ரேனிஷ் நியூஸ்பேப்பர் : ஜனநாயகத்திற்கான இதழ்’ பத்திரிக்கையில் மார்க்ஸால் எழுதப்பட்டத் தொடர் கட்டுரைகளைக் கொண்டது. அதன் மறுபதிப்புப் பணி தயாரிப்புகளை 1895ல் ஏங்கெல்ஸ் மேற்கொண்டபோது, அவரும்கூட பங்களிப்புச் செய்து நான்காவது அத்தியாயத்தை இணைத்தார்.

     அது முதன் முறையாகப் பிரான்சின் முழுமையான காலகட்டத்தின் வரலாற்றைப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் விளக்கியது. அதுவரை இல்லாது முதன் முறையாகப் அது பாட்டாளிகளின் தூலமான தந்திரோபாயங்கள் வகுக்கப்பட்ட நிகழ்வு. பாட்டாளி வர்க்கம், அப்போதும் உலக வரலாற்றில் உருவாகி வந்தபோதும், அது இனியும் வடிவமற்று தெளிவில்லாது இருக்கவில்லை; தனக்கான உத்திகள், தந்திரோபாயங்களை வளர்த்து, இவ்வாறு வரலாற்று உணர்வுள்ள வர்க்கமாக மாறியது.

பொருளாதாரக் காரணங்கள்

          இந்நூலுக்கான 1895ம் ஆண்டு அறிமுகத்தில் ஏங்கெல்ஸ் இப்படைப்பு, நிகழ்வுகள் மற்றும் ஆழமான விரிந்த பொருளாதார நிகழ்முறைகளுடன் உறவுள்ள மேலெழுந்தவாரியான நிகழ்வுகளுக்கு இடையேயான, உள்ளார்ந்த அடிப்படை தொடர்பு காரணங்களைத் தேடிக் கண்டறிந்ததைச் சுட்டிக் காட்டுகிறார்.

      பொருள்முதல்வாத இயங்கியல் (விஞ்ஞான) முறை அரசியல் முரண்பாடுகளைப் பின்னோக்கி தேடிச் சென்று, பொருளாதார நலன்களால் ஏற்படுத்தப்பட்ட அன்று நிலவிய சமூக வகுப்புகளுக்கு இடையே நலன்களின் மோதல்களைக் காணக் கோருகிறது. அவ்வாறு இயங்கியல், அரசியல் விஞ்ஞான வரலாறு அல்லது ‘அரசியலில்’ முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது.

பொருளாதாரமும் அரசியலும்

     1847ன் வர்த்தக நெருக்கடியே 1848 பிப்ரவரி, மார்ச் புரட்சிகளின் உண்மையான தாய் என்று மார்க்ஸ் கண்டறிந்தார்.

           1848 பிரெஞ்ச் மற்றும் ஐரோப்பிய புரட்சிகளின் அனுபவம் மார்க்சை முதலாளித்துவ முறை உற்பத்தி குறித்த ஆய்வை மேற்கொள்ள உற்சாகப்படுத்த, அது இறுதியாக அவரது மாபெரும் படைப்பான ‘டாஸ் கேப்பிடல்’ (மூலதனம்) ஆக்கத்தைப் பல தொகுதிகளாக எழுதுவதில் செலுத்தியது. மார்க்சும் ஏங்கெல்சும் சில கற்பிதங்களின் கீழ் -- அதை அவர்களே சுட்டியும் காட்டியுள்ளனர்-- ஐரோப்பாவில் பாட்டாளிகளின் புரட்சி நிகழ இருப்பதாகக் கூறினர். (தவறான அந்த) எதிர்பார்ப்பிற்கு முதலாளித்துவ முறை உற்பத்தி குறித்தப் பொருளாதார ஆய்வின் போதாமையே காரணம்.

1789 பிரெஞ்ச் புரட்சி மந்திர வீச்சின் கீழ்

     1789 பிரெஞ்ச் புரட்சியின் வரலாற்று அனுபவம் அந்தக் கால ஐரோப்பாவின் அரசியல் சிந்தனைப் போக்கில் செல்வாக்குச் செலுத்தியது. “எனவே அது, 1848 பிப்ரவரியில் பாரீசில் பிரகடனம் செய்யப்பட்ட ‘சமூக’ப் புரட்சியின் போக்கு மற்றும் தன்மை குறித்த எங்கள்  கருத்துருகளில், ‘பாட்டாளிகளின் புரட்சி, 1789 மற்றும் 1830 (எழுச்சிகளின்) மாதிரி வார்ப்பின் நினைவுகளால் மிக வலிமையான சாயலுடன்’ இருக்க வேண்டும் என எதிர்பார்த்தது இயல்பானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் ஆனது” என்று கூறுகிறார் ஏங்கெல்ஸ்.

            புரட்சிகர எழுச்சியால் ஐரோப்பா முழுமையும், ரஷ்யாவின் எல்லை வரை, ஒளியூட்டப் பட்டது. அது, பாட்டாளிகள் மற்றும் பூர்ஷ்வாகளுக்கு இடையிலான அதிகாரத்திற்கான முதல் பெரும் போர் என்பது நிரூபணமானது. அதனாலும் கூட இந்தப் படைப்பு முக்கியமாகிறது.  

            ‘சர்வாதிகாரிகள்’ மீது ‘மக்கள்’ வெற்றி பெறும் வரை நீண்ட போராட்டம் நடத்தப்பட வேண்டும் என சில எதார்த்தமற்ற உதிரிகள் பிரகடனம் செய்கிறார்கள். ஆனால் ’புரட்சியின் முதல் அத்தியாயம் ஏற்கனவே முடிந்து விட்டது’ என்று கூறி, மார்க்சும் ஏங்கெல்சும் அக்கருத்தினுடன் 1850 இலையுதிர் காலத்திலேயே உடன்படவில்லை. இதைக் கூறியதற்காக மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இருவரும் ‘புரட்சிக்குத் துரோகிகள்’ என முத்திரை குத்தப்பட்டு சமூக விலக்கம் செய்யப்பட்டனர்!!

     19ம் நூற்றாண்டின் முடிவில், புரட்சியை ஏற்படுத்தும் முறைகளும் நிலைமைகளும் முழுமையாக மாறி விட்டன. 1848 போராட்ட முறை தற்போது வழக்கொழிந்ததாகி விட்டது. புதிய வழிமுறைகளும் வடிவங்களும் எழுந்து விட்டன.  ஜெர்மனியைப்போல வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை, தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வெற்றி பெறுவது என்பனவற்றை ஏங்கெல்ஸ் வளர்ந்து வரும் முக்கியத்துவம் உடையதாக விவரித்து, மேலும் இப்போது அது கூடுதலாகவே சாத்தியம் என்கிறார்.

சில தீர்மானகரமான முக்கிய முடிவுகள்

   பிப்ரவரி பேரிகேட்ஸ் எனப்படும் தடுப்பு (நிகழ்வு)களிலிருந்து உருவான தற்காலிக (புரவிஷனல்) அரசின் சேர்க்கையமைப்பு, எதிர்பார்த்தபடியே அதன் வெற்றியைப் பங்கு போட்ட வேறுபட்ட கட்சிகளைப் பிரதிபலித்தது. அக்கட்சிகளே இணைந்து ஜூலை அரசாட்சியைத் தூக்கி எறிந்தது என்றாலும், அது வேறுபட்ட வர்க்கங்களுக்கு இடையே செய்து கொண்ட சமரசமன்றி வேறெதுவாகவும் இருக்க முடியாது; அதன் வர்க்க நலன்களும் எதிர் எதிராக முரண்பட்ட நலன்களைக் கொண்டதே.” அந்த அரசில் தொழிலாளர் வர்க்கம் லூயிஸ் ப்ளான்க் மற்றும் ஆல்பெர்ட் என்ற இரண்டு தொழிலாளர் பிரதிநிதிகளைப் பெற்றது (காண்க: ‘பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள், 1848 –50’ நூல், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தேர்ந்தெடுத்த படைப்புகள், தொகுதி 1, பக் 210)

         150 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட, புரட்சியின் முழு இயங்கியலைக் கொண்ட இந்த அசாதாரணமான அறிக்கை, எதிரெதிர் மற்றும் பிற வர்க்கங்களின் ஒன்றுபடுதல் மற்றும் போராடுதலின் இயங்கியலை வெளிப்படுத்துகிறது. இது விஞ்ஞான முறையைத் தூலமாகப் பயன்படுத்திய இயங்கியல்.

        இரண்டு இணையான குடியரசுகள் உருவானதை மார்க்ஸ் சுட்டிக் காட்டுவார் (பக். 211). தொழிலாளர் பிரதிநிதிகள் ஒரு குடியரசைப் பிரகடனப்படுத்த அரசைக் கட்டாயப்படுத்தினர். இல்லை எனில், அவர்கள் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் அணி வகுத்துச் சென்று நேஷனல் கார்டைக் கட்டாயப்படுத்தியிருப்பார்கள்.

       அதன் விளைவாய், ஒரு வகையில் வழக்கிழந்த 1789 பிரெஞ்ச் புரட்சியின் முழக்கங்கள் மீண்டும் தெருக்களில் எதிரொலித்தன.

     “தற்காலிக அரசுக்குக் குடியரசை (பிரகடனப்படுத்த) உத்தரவிட்டதன் மூலம் … பாட்டாளிகள் அதிலிருந்து முன்களத்திற்கு ஒரு சுதந்திரமான கட்சியாக நடைபோட்டது.” அது விடுதலைக்கான போராட்டத்திற்குக் களத்தை வென்றது (தன்னையே விடுவித்துக் கொள்ள அல்ல!)

            பாட்டாளிகள் குடியரசை ‘உத்தரவிட்டது’ (டிக்டேட்டிங்), அதுவும் 1848 –50ல் என்பது, மிகவும் குறிப்பிடத்தக்கது: அது ஒரு சுதந்திரமான வர்க்கமாகச் செயல்பட்டதைக் காட்டுகிறது. அவர்கள் பூர்ஷ்வாகளுடன் அருகருகில் தங்கள் சொந்த அமைச்சகங்களை அமைத்தனர்.

       “பூர்ஷ்வா (நடுத்தர வர்க்க முதலாளி)களுடன் பொதுவாக இருந்து தொழிலாளர்கள் பிப்ரவரி புரட்சியைச் செய்தனர், மற்றும் பூர்ஷ்வாகளுக்கு பக்கத்திலேயே அவர்கள் தங்கள் நலன்களில் முன்னேற்றம் கண்டனர்; அது மட்டுமின்றி, அவர்கள் ஒரு தொழிலாளியைத் தற்காலிக அரசில், பூர்ஷ்வா பெரும்பான்மையினருடன் அவர்களோடேயே அமைச்சராகவும் இடம்பெறச் செய்தனர்” (பக்.213)

      இது மற்றுமொரு அற்புதமான பத்தி : 1848லேயே ஒரு பூர்ஷ்வா அரசில் தொழிலாளர் வர்க்கப் பிரதிநிதியின் நுழைவை மார்க்ஸ் சுட்டிக் காட்டினார்! இது ஓர் வரலாற்றுச் சாதனை.

       அதே நேரத்தில், 1848 புரட்சி, நவீன சமூகத்தின் இரண்டு பெரும் வர்க்கங்களுக்கு இடையே நடைபெற்ற முதலாவது பெரும் போராகும். 

      ‘பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள்’ நூல் மிகவும் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய மார்க்ஸின் மிகப்பெரும் படைப்புகளில் ஒன்று. புரட்சிகரப் பெருந்திரள் போராட்டங்களின்

நேரடி அனுபவங்களை அவர், புரட்சி குறித்த தனது சொந்த தியரியை மேம்படுத்தப் பயன்படுத்தினார். இந்தப் படைப்பில்தான் அவர் பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்ற தனது புகழ்பெற்ற தியரியை வளர்த்தெடுத்து அரசின் வர்க்கத் தன்மையை விளக்கினார். அதற்கு முன் ஒருபோதும் தொழிலாளர் வர்க்கம் ஆளும் வர்க்கமாகப் பார்க்கப்பட்டதில்லை. இன்று அந்தக் கட்டமைப்பு உருவாக்கம், புதிய சூழ்நிலைகளில் பொருத்தமற்றது என கைவிடப்பட்டு ‘தொழிலாளர் வர்க்கத்தின் ஆட்சி’ (சர்வாதிகாரம் அன்று) என்ற கருத்துரு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் காரல் மார்க்ஸ் இந்த ஆக்கத்தில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இடையே கூட்டு என்ற (வர்க்கக் கூட்டணி) கருத்துருவை உருவாக்கினார்.

மார்க்சும் ஏங்கெல்சும் வயது வந்தோர் வாக்குரிமை மற்றும் தேர்தல் முறையைப் பிரச்சாரத்திற்காக மட்டுமல்லாது, ஜனநாயக மற்றும் சோஷலிசப் புரட்சிகளுக்காகவும் பயன்படுத்துவதை வலிமையாக ஆதரித்தனர்.

இப்படைப்பிற்கு ஏங்கெல்சின் அறிமுகம் (1895)

    1895ல் ஃபெடரிக் ஏங்கெல்ஸ் இப்படைப்பிற்கு மிக முக்கியமான அறிமுகத்தை எழுதினார்.

அதில் ஜனநாயகம் மற்றும் வயது வந்தோர் வாக்குரிமை குறித்த மார்க்சிய அணுகுமுறை மற்றும் பிற கேள்விகளுக்கும் கோடிட்டுக் காட்டினார். மாறிவரும் சூழ்நிலையில் மார்க்ஸியத்தை எவ்வாறு வளர்ப்பது என்பதை ஏங்கெல்ஸ் காட்டினார். ‘வர்க்கப் போராட்டங்கள்’ நூல் எழுதப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த இடைக்காலத்தின்போது நிகழ்ந்த மாற்றங்களை ஏங்கெல்ஸ் விளக்கினார். மற்றவற்றுடன் பின்வருவதை அவர் குறிப்பிட்டுக் காட்டினார்:

 1.  1830கள் –40களிலிருந்து பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில் சாலைகள் அகலமாயின. எனவே ஆயுதம் தாங்கிய போராட்டம் ஒன்று சாத்தியமில்லை, அல்லது போராட்டங்களின் இறுதியில் மட்டுமே வர முடியும். குறுகிய சாலைகளிலும் சந்துகளிலும் தடுப்புகளை (பேரிகேட்ஸ்) அமைத்துப் போரிட்ட முறை தற்போது சாத்தியமில்லை. ‘முட்டாள்தனமான முயற்சி அது’ என்றார் அவர். ஏங்கெல்சின் இந்த வார்த்தைகளுக்கு நவீன கால ‘அதிதீவிர புரட்சியாளர்கள்’ செவி சாய்க்க வேண்டும்.

            2. 1848–50 காலகட்டத்திலிருந்து இராணுவங்கள் நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன, அவை அகலமான சாலைகளில் சுலபமாக பவனி வருகின்றன. இச்சூழ்நிலையில் ‘எங்கே அத்தகைய இராணுவங்கள் நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த இடத்தில்போய் அகப்பட்டுக் கொள்ளும் அளவு நாம் பைத்தியக்காரர்கள் அல்லர்’ என கூறினார் ஏங்கெல்ஸ்.

 3. இதற்கு மத்தியில் நாடாளுமன்ற ஜனநாயக முறைமைகள் மேம்படுத்தப்பட்டன. (நமது கொள்கைகளைப்) பிரபலப்படுத்துவதற்கு அவை பயன்படுத்தப்படுவது மட்டுமல்லாது, ஆனால் பெரும்பான்மை வெற்றி பெறுவதற்கும், அரசுகளை அமைப்பதற்குக்கும்கூட அவை பயன்படுத்தப்பட வேண்டும். அவை சோஷலிசப் புரட்சி மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் வடிவங்களுக்குக்கூட மாறிடலாம், உதாரணத்திற்கு ஜெர்மனியைச் சொல்லலாம். ‘நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வெற்றி பெறுங்கள், ஒவ்வொரு அடியாகச் சோஷலிசம் நோக்கி நகருங்கள்’ என்று அவர் ஜெர்மனி  சோஷலிச ஜனநாயக கட்சிக்குக் கூறினார். இன்று இது மேலும் கூடுதலாகப் பொருத்தமுடையதாகும்.

‘பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள்’ நூலில் இயக்கவியல்

     இப்படைப்பு முழுவதும், இயக்கவியல் பொருள்முதல்வாத முறையைத் தெளிவாகப் பார்க்கலாம். மார்க்சும் ஏங்கெல்சும் உச்சிமேல் வைத்துக் கொண்டாடக் கூடிய மிக உயர்ந்த இயக்கவியலாளர்கள். இயக்கவியலைப் பயன்படுத்தி ஐரோப்பிய, பிரெஞ்ச் புரட்சிகளை ஆய்வு செய்வது என்பது சுலபமான பணி அல்ல.

1. இந்தப் படைப்பில் பிரான்ஸில் வர்க்க குணாம்சங்களை அடையாளப்படுத்த போதுமான பொருளாதாரத் தரவுகளும் ஆய்வுகளும் பயன்படுத்தப்பட்டன. விவசாய உற்பத்தி, வரிகள் முதலின மற்றும் நிதி குறித்த புள்ளிவிவரங்களை வழங்கி, “விவசாயிகள் மீதான சுரண்டல், ஆலைத் தொழிலாளர்கள் சுரண்டலில் இருந்து வடிவத்தில் மட்டுமே வேறுபடுகிறது” என மார்க்ஸ் கூறுகிறார். “சுரண்டுபவர் ஒருவரே: மூலதனம். தனிநபர் முதலாளிகள் தனிநபர் விவசாயிகளை அடமானம் மற்றும் லேவாதேவி மூலம் சுரண்டுகிறார்; முதலாளித்துவ வர்க்கம் வேளாண்குடி விவசாய வர்க்கத்தை அரசு வரிகள் மூலம் சுரண்டுகிறது”. இன்றும்கூட, விவசாயம் மற்றும் முதலாளித்துவம் (ஆலை) இடையேயான சிக்கலான உறவைப் புரிந்து கொள்ள இந்தப் பகுப்பாய்வு போதுமான அளவு பொருத்தமானதாக உள்ளது.

2. பிரெஞ்ச் விவசாயி (நிலத்தின் மீதான) தன் உரிமையை முதலாளிகளிடம் --நில அடமானத்தின் மீதான வட்டி வடிவத்திலும், லேவாதேவிக்காரர் அடமானம் இன்றி அளிக்கும் முன்பணத்தின் மீதான வட்டி வடிவத்திலும் – விட்டுக் கொடுத்தார்; நிலத்தின் வாடகை மட்டுமல்ல, உழைப்பின் லாபத்தை மட்டுமல்ல, ஒரு வார்த்தையில் கூறுவதானால், முழுமையான நிகர லாபம் மட்டுமல்ல, கூலியின் ஒரு பகுதியையும்கூட இழந்தார்; எனவே அவர் *ஐரிஷ் (அயர்லாந்து) குத்தகை விவசாயி மட்டத்திற்கு மூழ்கினார். இவை அனைத்தும் தனியார் சொத்துரிமை என்ற போர்வையின் கீழ் நடத்தப்பட்டன. (பக்.276)

     (*ஐரிஷ் விவசாயிகளின் வாழ்க்கை, துன்ப துயரங்கள் மற்றும் நில மீட்சிப் போராட்டங்கள் அனைத்துமே தனியான ஒரு போராட்ட வரலாறு. ஐரிஷ் குத்தகை விவசாயி, நிலப் பிரபுக்களுக்கு குத்தகை வாடகை செலுத்த வேண்டும், ஐரிஷ் சர்ச் தேவாலயத்திற்கும் அரசுக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் --இணையத்திலிருந்து )

3. மெல்ல மெல்ல, விவசாயிகள், குட்டி முதலாளிகள், பொதுவாக நடுத்தர வர்க்கம் முதலானோர் குடியரசுக் கோரிக்கைகளுக்காகப் பாட்டாளிகளுடன் வந்து சேர்ந்தனர்.

4. அடுத்து, மார்க்ஸ் பல்வேறு வகை சோஷலிசத்தை அடையாளப்படுத்துகிறார்: பெட்டி பூர்ஷ்வா (குட்டி முதலாளிகள்), அராஜகவாதம், பூர்ஷ்வா சோஷலிசம், உடோப்பிய கோட்பாட்டு சோஷலிசம் (கற்பனாவாத சோஷலிசம்) மற்றும் புரட்சிகர சோஷலிசம். மேலே கூறியவைகளை மார்க்ஸ் கூர்மையாக விமர்சனம் செய்தார், விஞ்ஞான சோஷலிசத்தை மேம்படுத்தினார்.

5. கரன்சி நோட்டுகளின் தொடர்ச்சியான புழக்கம் மற்றும் செயல்பாட்டில் வங்கிகளின் பங்கு அதிகரித்ததால் நிதிசார்ந்த எதேச்சிகாரம் வலிமையாக்கப்பட்டது.

6. செழிப்பும்  நெருக்கடியும் என வேறுபட்ட கால வட்டத்தில் ஐரோப்பா சென்றது. ஒரிஜினல் நிகழ்முறை இங்கிலாந்தில் ஏற்பட்டது. அந்தக் கண்டமே முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை என வேறுபட்ட கட்டங்களைக் கடந்து சென்றது.

7. எனவே நெருக்கடிகள் முதலில் இக்கண்டத்தில் புரட்சிகளை ஏற்படுத்தியபோது, அதற்கான அடித்தளங்கள் இங்கிலாந்தில் இடப்பட்டன. “வன்முறை வெடிப்புகள் இயல்பாக பூர்ஷ்வா அமைப்பின் மையத்தைவிட,

அதிலிருந்து விலகி இருக்கும் அதன் ஒரங்களிலேயே நிகழும், ஏனெனில் மையத்தில் சமரசம் செய்து கொள்ளும் வாய்ப்புகள் அங்கேவிட இங்கே அதிகம்.” இது மார்க்ஸின் ஓர் அரிதான மேற்கோள். இது, ஏகாதிபத்திய சகாப்தத்தில், ரஷ்யப் புரட்சி நிலைமைகளுடன் லெனினால் ஒப்பிடப்பட்டது. இது ஒரு மேதையின் அசாதாரணமான புத்திகூர்மையின் வீச்சு, அவர் காரல் மார்க்ஸ் –அவரே புரட்சியின் தன்மை மற்றும் நிபந்தனை நிலைமைகளை எதிர்பார்த்தார்.

8. ஐரோப்பா பொதுவான செழிப்புமிக்க காலத்தில் நுழைந்தது, உற்பத்தி சக்திகள் அபரிமிதமாக உற்பத்தி செய்து வளம் பெருக்கியபோது, குழப்பங்கள் மற்றும் நெருக்கடிக்காகப் புரட்சி காத்திருக்க வேண்டியிருந்தது

நாம் மார்க்சின் ‘பிரான்சின் வர்க்கப் போராட்டங்கள்’ படைப்பாக்கத்தைப் படிக்கவும் விவாதிக்கவும் வேண்டும். அதுவும் 21ம் நூற்றாண்டின் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி தருணத்தில் இது மிகவும் முக்கியம். 

மார்க்ஸின் படைப்புகள் மீதான விவாதங்கள் தொடர்பாக

       இரண்டாம் உலகப் போரின் பின்பு உலக கம்யூனிஸ்ட் இயக்கம் (WCM) ஏராளமான விவாதங்கள் மற்றும் அரசியல் உரையாடல்களைக் கண்டது – அதில் மாறிய புதிய சூழ்நிலைகளில் மார்க்ஸின் படைப்புகளை வியாக்ஞானம் செய்த விளக்கங்களும் அடக்கம். 1960களில் நடைபெற்ற பரவலான ஆய்வுகளில் மார்க்ஸ் மற்றும் லெனின் அடிப்படை படைப்புகள் ஆய்வு நடந்தது. அவை நேர்மறையான முயற்சிகளின் பக்கம். அதற்கு வெளியேயும்கூட ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் மார்க்ஸின் படைப்புகளைப் படித்து ஆய்வு செய்தனர்.

இந்தப் படைப்புகளில், பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள், பிரான்ஸில் சிவில் வார் (உள்நாட்டுப் போர்), 18வது புருமையர் (குறுகிய காலம் அமலில் இருந்த பிரெஞ்ச் புரட்சிகர நாட்காட்டி, நெப்போலியன் போனபார்ட் அதிகாரத்திற்கு வந்த ஆண்டைக் குறிப்பது), டூரிங்குக்கு மறுப்பு, தத்துவத்தின் வறுமை, சோஷலிசம்: உட்டோபிய கற்பனாவாதமும் விஞ்ஞானமும், இயற்கையின் இயக்கவியல், ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சபட்டச மட்டம் முதலான நூல்கள் அடங்கும்.

அவை மார்க்ஸிய கோட்பாடு, சித்தாந்தம், தத்துவம் மற்றும் அதன் ஆய்வுமுறையின் வளமான ஆதாரமாகவும் அமையும். மார்க்ஸியத்தைப் புரிந்து கொள்ளவும் அதைக் கற்றுத் துறைபோகவும் மார்க்ஸின் அந்தப் படைப்புகளையும் மீண்டும் படிப்பதும் ஆய்வு செய்வதும் கட்டாயமான தேவை ஆகும்.

மார்க்ஸியம், லெனினியம் வெல்க! நீடு வாழ்க!

--நன்றி : நியூஏஜ் (ஏப்.30 –மே 6)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

              

.

    

 

No comments:

Post a Comment