Wednesday 26 April 2023

கம்யூனிஸ்ட்கள் மக்களிடமிருந்து கற்கிறார்கள் --பினாய் விஸ்வம், எம்பி

  


கம்யூனிஸ்ட்கள் மக்களிடமிருந்து கற்கிறார்கள்,

அவர்களுடன் இணைந்து போராடுகிறார்கள்

--பினாய் விஸ்வம், எம்பி

            மேல்மட்டத் தலைமை பீடத்திடமிருந்து பச்சைக் கொடி காட்டப்படும் தகுந்த தருணம் வருவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் காத்திருந்தது போலும். 2023 ஏப்ரல் 10ல் இந்தியக் கம்யூனிஸ்ட்

கட்சியின் தேசிய அங்கீகாரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரபூர்வ அறிவிப்பை ஆணையம் வெளியிட்டது. கட்சியைப் பொறுத்தவரை இப்பிரகடனம் எதிர்பாராத ஒன்றல்ல; ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவிக்கைகளை வழங்குவதிலும், விசாரணைகளை நிர்ணயித்தும், முடிவுகளை நிறுத்தி வைத்தும் என மீண்டும் மீண்டும் இதே சூழற்சி நடவடிக்கைகளில் 2019லிருந்தே ஈடுபட்டு வந்துள்ளது.

            தன்னிச்சையாக ஆணையமே நிர்ணயித்த வரையறைகளின்படி சிபிஐ, தேசியக் கட்சி அங்கீகாரத்திற்குத் தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கை இடங்களை இழந்துள்ளது. சுயமாக நிர்ணயித்த வரையறைகளின் ஜனநாயக நம்பகத்தன்மை பற்றி அக்கறைப்படாத தேர்தல் ஆணையத்தின் இயல்பும் அதன் கட்டமைப்பும் அப்படி. எந்திரத்தனமாக வரையறுத்த அளவுகோல்களின்படி செயல்படுவது மட்டுமே அவர்களின் உத்தரவு. தெளிவாகக் கூறினால், இந்த அளவுகோல்கள் எந்தவொரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் திரளும் ஜனரஞ்சக மக்கள் ஆதரவை அளவிடுவதற்குச் சக்தியற்றவை.

          ஓர் அரசியல் கட்சியின் பலம் அல்லது பலவீனத்தை அளவிடுவதற்கு அவர்களிடம் உள்ள ஒன்றேயொரு முறை எளிய பன்முகத் தேர்தல்’ (‘first pass the post’) முறை மட்டுமே. நமது தேர்தல் முறையின் உள்ளார்ந்த மற்றும் கடுமையாகப் பாதிக்கும் பற்றாக்குறைகள், போதாமைகள் எல்லாம் அவர்கள் கவனத்திற்கு ஒருபோதும் வந்ததில்லை. சிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிளும் ஜனநாயகச் சக்திகளும் எழுப்பும் தேர்தல் சீர்திருத்தக் கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திற்கு வழிகாட்ட முயற்சி செய்யும் அரசும், இந்தியத் தேர்தல் ஆணையமும் அலட்சியப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளன.

         தேர்தல் சீர்திருத்தத்திற்காக அமைக்கப்பட்ட இந்திரஜித் குப்தா கமிட்டி சிபார்சுகளைச் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உறுதிப்படுத்தும் ஒரு மைல்கல் முயற்சி என அனைத்து ஜனநாயகவாதிகளும் வரவேற்றனர்.

ஆனால் ஆணையமோ அச்சிபார்சுகளை அக்கறையுடன் பரிசீலிக்கவில்லை. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், தேர்தல்களுக்கு அரசு நிதி அளித்தல், பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை (அதாவது தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர் பின்னர் மக்கள் அளித்த ஆணையை நிறைவேற்றத் தவறும் நிலையில், தேர்ந்தெடுத்த மக்கள் அவரை உறுப்பினர் பொறுப்பிலிருந்து திரும்ப அழைக்கும் உரிமை) எனப் பொருத்தமான ஆலோசனைகளை முன்வைத்த இந்திரஜித் குப்தா கமிட்டி 1998லேயே நாட்டிற்கு அதனைச் சமர்ப்பித்தது.

       அச்சிபார்சுகள் பற்றி அரசியல் கட்சிகள் அல்லது பொதுமக்கள் கருத்தறிய  தேர்தல் ஆணையம் அதனை சுற்றுக்கு ஒருபோதும் விடவில்லை. அதற்கு மாறாக, தேர்தல் பத்திரங்களை (எலெக்டரல் பாண்டு) அமலாக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்தது மட்டுமின்றி, தேர்தல் நிதி அளித்தல் பொறுப்புக் குறித்து வானளாவ உரிமையும் கோரினர். இந்தியக் குடிமக்கள் இப்போது தேர்தல் பத்திரங்களுக்குப் பின்னால் உள்ள சூழ்ச்சியை நன்றாகப் புரிந்து கொண்டனர். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு அளித்த அறிக்கையின்படி அது (தேர்தல் பத்திரங்களின் ஆதாயம்) ஒரே ஒரு அரசியல் கட்சியால் வாரிச் சுருட்டப்பட்டது எனத் தெரிகிறது. யாரும் வியப்படையவில்லை, அந்தக் கட்சி பாரதிய ஜனதா கட்சி.

வலதுசாரியினர் கொண்டாட்டம்

       தேசிய அங்கீகார ரத்து அறிவிப்பு வெளிவந்த உடன், வலதுசாரி அரசியல் வட்டத்தில் உளள பலரும் அதனைக் கொண்டாடத் தொடங்கினர். வலதுசாரி அணி ஊடகங்களும் அரசியல்வாதிகளும் ஏதோ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்துவமும் போராட்டக் குணமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் எந்திரத்தனமான அங்கீகார அடிப்படையில் கட்டப்பட்டதென எண்ணிவிட்டனர். உண்மை, சில அரசியல் கட்சிகள் ஜீவித்திருப்பதற்கே ஆணையம் வழங்கும் தேசிய அங்கீகாரச் “சான்றிதழ்” ஆக முக்கியத்துவம் உள்ள உணர்ச்சிபூர்வமான விஷயம் –அந்தக் கட்சிகளுக்கு.

         இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அத்தகைய கொள்கையில் நம்பிக்கை உடையதல்ல. கட்சி பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது என்பது உண்மையே, எனவே தேர்தல்களும் வாக்குகளும் கட்சிக்கு முக்கியமான விஷயங்கள்தாம். ஆனால் ஒரு புரட்சிகரக் கட்சி அவற்றை மட்டுமே ஒரே அம்சமாகப் பற்றி கொண்டு இயங்க முடியாது.

            மக்களும் அவர்களின் போராட்டங்களுமே ஆக மிக முக்கியம் எனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தமும் அரசியல் நிலைபாடும் கற்றுத் தந்துள்ளன. அந்தப் போராட்டங்களில் தேர்தல் களப் போராட்டங்களும் ஒரு பகுதி. அதன் காரணமாகத்தான் அங்கீகாரம் என்பது மக்களின் மனங்களில் உள்ளது என்பதில் கட்சி உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.

சிபிஐ வரலாற்றுத் தடங்கள்

            சிபிஐ உதித்த முதல் நாளிலிருந்தே இந்திய வரலாற்றில் தனது தடங்களைப் பதித்துள்ளது. அதிகாரபூர்வமாகக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுவதற்கு முன்பே, இந்திய விடுதலைப் போராட்ட ஆண்டுகளின் சரித்திரக் குறிப்புகளில் பூரண சுதந்திரம் என்ற நிகழ்ச்சிநிரலைப் பொறித்தது கம்யூனிஸ்ட்களே. அவர்கள்தான் விவசாயிகளை அணி திரட்டவும் (அனைத்திந்திய கிசான் சபா AIKS), மாணவர்களைத் திரட்டவும் (அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்), எழுத்தாளர்கள் (முற்போக்கு எழுத்தாளர்கள் அமைப்பு PWA) மற்றும் கலைஞர்களைத் திரட்டவும் (இந்திய

மக்கள் நாடக மன்றம், இப்டா) அமைப்புகளை ஏற்படுத்த முன்னணியில் செயல்பட்டனர். தொழிலாளர் வர்க்கத்தின் வலிமை பொருந்திய அமைப்புக்கு (ஏஐடியுசி) வடிவம் கொடுத்ததில் கம்யூனிஸ்ட்களின் பங்கு மறக்க முடியாதது. நமது மாபெரும் தேசத்தின் விதியை வகுத்ததில் கம்யூனிஸ்ட்கள் வகித்த தலைமைப் பாத்திரம் எந்த மூலையிலிருந்து எவரிடமிருந்தும், ஏதோவொரு அங்கீகாரத்தைப் பெறலாம் என்ற காரணத்திற்காக அல்ல.

போராட்ட வரலாறு  

            கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வரலாறு –இந்தியச் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் – எண்ணிறைந்த போராட்டங்கள் மற்றும் தியாகங்களால் நிரம்பியது. முதலாளித்துவ வழி வளர்ச்சி என்பதற்கு எதிராகத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராடியதில் தீரமுடன் நின்றது, இந்தக் கட்சிதான். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகப் போராடி உயிர்த் தியாகம் செய்த ஆயிரமாயிரம் தியாகிகளின் ஞாபகம் இந்தக் கட்சிக்கு உண்டு. தேசத்தின் சுதந்திரம், சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்காக –புன்னபுரா வயலார், தெலுங்கானா மற்றும் தேபகா போன்ற --போர்க் களங்களில் இந்தக் கட்சி  போராடியபோது, எந்தவிதமான தேசிய அங்கீகாரத்திற்காகவும் ஒருபோதும் எண்ணி ஏங்கியது இல்லை. பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை எதிர்த்தும், பிற இடங்களில் வகுப்புவாத பாசிஸ்ட்களை எதிர்த்தும் போராடியதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை முனையிலே முன் நிற்கச் செய்தது. தேசிய அங்கீகாரம் ஒருபோதும் அவர்களைப் பின்னே இழுத்ததும் இல்லை, முன்னே தள்ளியதும் இல்லை. கட்சியின் ஒரே அக்கறையும் கவலையும் தேசம், அதனது மக்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் மட்டுமே ஆகும்.

     போராட்டங்களுக்கு மத்தியில் கட்சி போட்டியிட்டு தேர்தல்களில் வென்றதும் உண்டு. தேசத்தின் முதன் முதலான காங்கிரஸ் அல்லாத அரசை 1957லேயே கேரள மாநிலத்தில் அமைத்தது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. தேர்தல் களத்தில் வெற்றியும் தோல்வியும் இயல்பே, அவ்வாறே கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றிகளையும் தோல்விகளையும் அனுபவித்துள்ளது. வெற்றி பெற்றபோது தலைகால் புரியாமல் தாண்டிக் குதித்ததும் இல்லை, தோல்வி அடைந்த போது நம்பிக்கைகளை ஒருபோதும் இழந்ததும் இல்லை. அத்தகைய ஒரு கட்சிக்கு ஆட்சி நிர்வாகத்தின் எந்தப் பிரகடனமும் நிர்ணயிப்புக் காரணியாக இருக்க முடியாது.

சிபிஐ குறிவைக்கப்படுவது ஏன்? -- அவர்கள் நன்கு அறிவார்கள்…,

பாசிசத் தாக்குதலின் ஆதரவாளர்களால், இந்த வரலாற்றுத் தருணத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறி வைக்கப்படுவது ஒன்றும் எதேச்சையான விபத்ததல்ல. ஹிட்லரிசப் பாசிசத்தின் இந்தியப் பதிப்பான மிகப் பெரிய எதிரியை எதிர்த்துப் போரிட அனைத்து மதசார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளின் பரந்த ஒத்துழைப்புக்கான தெளிவான அறைகூவலை முதன்முதலாக விடுத்தது இந்தக் கட்சிதான் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

            சுரண்டும் கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிராகப் பாடுபடும் மக்கள் கூட்டத்தைத் திரட்டுவதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை பற்றுறுதியுடன் ஆற்றும் வீரம் செறிந்த பங்கினையும் அவர்கள் நன்கு அறிவார்கள். 

            அரசியலமைப்புச் சட்ட அடிப்படை ஆதாரக் கோட்பாடுகளைப் பாதுகாக்க கம்யூனிஸ்ட் கட்சியால் உயர்த்திப் பிடிக்கப்படும் தேசபக்தப் பங்கினையும் அவர்கள் நன்கு அறிவார்கள். தேசிய அங்கீகாரத்தை ரத்து செய்தால், கட்சியைச் சிறிதாகச் சிதைத்துவிடலாம் எனவும், கட்சியைப் 

போராட்டக் களங்களிலிருந்து அகற்றி விடலாம் எனவும் அவர்கள் மனப்பால் குடிக்கிறார்கள். அவர்கள் முற்றாகத் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை முன்னோக்கிய கம்யூனிஸ்ட் போராட்டப் பாதையைத் தாமதித்துத் தடுத்து நிறுத்தி விடாது. கட்சி நன்கு அறியும் மக்களே எஜமானர்கள், கட்சி அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் அவர்களுடன் இணைந்து போராடும்! அதுதான் கம்யூனிஸ்ட் கட்சிக்கான முன்னோக்கிச் செல்லும் பாதை!

--நன்றி : நியூஏஜ் (ஏப்.23 –29)

--தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர் 

No comments:

Post a Comment