Friday 19 May 2023

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 79 -- சரளா சர்மா

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 79

                                            


 சரளா சர்மா : தலைச் சிறந்த கம்யூனிஸ்ட் மற்றும் பெண்கள் இயக்கத் தலைவர்

                                                     --அனில் ரஜீம்வாலே

            சரளா குப்தா (திருமணத்திற்குப் பின் சரளா சர்மா) செழிப்பு மிக்க குடும்பத்தில் 1921 ஏப்ரல் 17ல் பழைய டெல்லி, சாந்தினி சௌக்கில் வரலாற்றுப் புகழ்பெற்ற ஹவேலி ஹைதர் (கான்) குலியில் பிறந்து 100 வயது வரை வாழ்ந்த பெருமாட்டி. அவரது தந்தை ஜகதீஷ் பண்டிட் குப்தா ஒரு சார்ட்டர் அக்கௌண்டன்ட், தாயார் சகுந்தலா. அவரைச் சுற்றியிருந்த சுற்றுச் சூழல் அவரது ஆளுமையை மேம்படுத்துவதற்கு மிக மிக ஏற்றதாக இருந்தது. பழைய டெல்லி பகுதி முகலாய மற்றும் பிற அரண்மனைகளின் செல்வாக்கில் மத்திய காலச் சூழ்நிலையுடன் (பரந்து விரிந்த பண்ணை வீடுகள் போன்ற) கோதீஸ் (உருது), பங்களாகள், கோட்டைகள், மசூதிகள், ஆயலயங்கள், குருத்வாராக்களும் அனைத்து வகையான கடைகளும் கற்பனைக்கெட்டாதபடி வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய தெருக்கள் மற்றும் சந்துகளிலும் நிறைந்திருக்கும் சூழல் அமைந்தது. [ஹவேலி என்பது ஹவாலி என்ற அரபுச் சொல்லில் இருந்து வந்தது, தனியார் இடம் எனப் பொருள்படும். பின்னர் முகலாயக் கட்டடக்கலை சார்ந்த தொகுப்பு வீடுகளின் மாளிகையைக் குறிப்பதாயிற்று.] அது மட்டுமல்ல, அப்பகுதியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், கூலிகள் இரவும் பகலும் வேலை செய்து கொண்டிருப்பார்கள். மத்திய காலத்திலிருந்தே அப்பகுதி கல்வி கேள்வி கற்பதற்கான இடமாகத் திகழ்ந்தது.

    சரளா, வரலாற்றுப் புகழ்பெற்ற ஜும்மா மசூதி (ஜமா மஸ்ஜித்) அருகே அமைந்த, இந்திரப்பிரஸ்தா பள்ளியில் தொடக்கக் கல்வி பெற்றார். அப்பள்ளி டெல்லியில் பெண்களுக்கான முதலாவது பள்ளி என்ற பெருமை பெற்றது. சரளாவின் தாத்தா ஜுகல் கிஷோர் அந்தப் பள்ளி நிறுவுவதற்கான தொடக்க முயற்சிகளை எடுத்தார். அன்னி பெசன்ட் அம்மையாரின்  (படம்) செல்வாக்கிற்கு ஆட்பட்ட லாலா ஜுகல் கிஷோர் பெண்கள்

கல்விக்காக முன்கைஎடுக்க இந்திரப்பிரஸ்தா பள்ளி 1904 மே 19ல் தொடங்கப்பட்டது. அம்முயற்சியில் எண்ணற்ற பிற சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் உதவியை அவர் பெற்றார். அப்பள்ளி ஜும்மா மசூதி அருகே இருந்த லாலா பால் கிஷண் தாஸின் கட்டடத்தில் அமைந்தது. அந்நாட்களில் பெண்களின் கல்வி என்பது நினைத்துப் பார்க்க முடியாத விலக்கப்பட்ட செயலாக  இருந்தது, பெண்கள் வெளியே வரக்கூடாது, பர்தாவுக்குள் வாழ வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

        அந்தப் பள்ளி மெல்ல மெல்ல பல தலைவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தேசிய இயக்க மையமாயிற்று. ஜவகர்லால் நேருவின் மனைவி கமலா நேரு இப்பள்ளியில்தான் படித்தார். பள்ளி முதல்வரும் ஆஸ்திரேலிய நிறுவனருமான மிஸ் எல் ஜி‘மெய்நர் (ஹோம் ரூல் இயக்கத்தின்) அன்னி பெசன்ட் அவர்களைத் தீவிரமாகப் பின்பற்றுபவர். ஹோம் ரூல் லீக் அலுவலகம் இங்கிருந்து செயல்பட்டது, விரைவில் அது காங்கிரஸ் செயல்பாடுகளின் மையமாயிற்று. இதன் எதிரொலியாகப் பிரிட்டிஷ் அரசு பள்ளிக்கான நிதி உதவிகளைத் திரும்பப் பெற்றது. ஆனால் பாபு ஜுகல் கிஷோர் மனம் தளராது அச்சவாலை எதிர்கொண்டு, மக்களிடமிருந்து நிதி திரட்டினார்.

    பெண் கைடு ஆக இருந்தாலும் சரளா பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடி ஏற்றுவதையும் ‘மன்னர் நீண்ட காலம் வாழிய வாழிய’ (லாங் லிவ் தி கிங்) பாடப்படுவதையும் எதிர்த்தார். அவர் குறிப்பாக அந்தப் பாடலின் ‘அமெரிக்க நாட்டை ஆள்வதற்கு நீண்ட காலம் வாழ்கவே’ (லிவ் லாங் டு ரூல் ஓவர் யுஎஸ்) என்ற வரியை எதிர்த்தார்.

        இவ்வாறாக, சரளா பெருகி வரும் தேசியச் சூழலின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார். ‘டெல்லி நவ ஜவான் சபா’ இயக்கம் இங்கே தீவிரமாகச் செயல்பட்டது. டெல்லியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய பஹல் சிங், நவ ஜவான் சபாவுடன் சந்த் சிங் மற்றும் பிறருடன் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டார்.

        1930 ஏப்ரல் உப்புச் சத்யாகிரக வளாகமாகவும் டெல்லி திகழ்ந்தது. அந்த இயக்கம் ஏப்ரல் 6ல் யமுனா ஆற்றின் சேறும் உப்பும் படிந்த தாழ்நிலங்களில் தொடங்கியது. சத்யாகிரக முகாம்கள் தார்யாகனி மற்றும் பிற இடங்களில் திறக்கப்பட்டன. பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர். இந்திரப்பிரஸ்தா பெண்கள் பள்ளி மற்றும் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியின் மாணவர்கள் அவற்றில் உற்சாகமாகவும் தீவிரமாகவும் பங்குபெற்றனர்.

        பள்ளிப் படிப்பை முடித்த சரளா இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் சேர்ந்து 1935 முதல் 1940 வரை படித்தார். 1942ல் இந்து கல்லூரியில் சேர்ந்து பொருளாதாரத்தில் முதுகலை எம் ஏ பட்டத்தை நிறைவு செய்தார். 

அரசியலுடன் தொடர்பு

     அரசியலுடன் சரளாவின் முதல் தொடர்பு காங்கிரஸ் கட்சி மூலம் ஏற்பட்டது. அவர் மாணவராக இருந்தபோது டெல்லியில் 5000 பெண்கள் பங்கேற்ற பேரணியில் கலந்து கொண்டார். மற்றவர்களுடன் சேர்ந்து சரளா “இந்தக் கொடுங்கோல் அரசை நாங்கள் சகியோம்” என்ற பாடலைப் பாடினார்.

        அப்போது தடைசெய்யப்பட்டிருந்த பண்டிட் சுந்தர்லாலின் ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ராஜ்’ என்ற புத்தகத்தைச் சரளா படித்தார். சிட்டகாங் ஆயுதக் கிடங்கு சூறையாடல்  நிகழ்வுகள் மூலம் கம்யூனிஸ்ட் சிந்தாந்தம் குறித்து அவருக்குத் தெரிய வந்தது. பிரீதிலதா வதேதார் மற்றும் கல்பனா ஜோஷி வீர தீரச் செயல்கள் மற்றும் 1937 –38 பாம்பே தொழிலாளர்களின் டெக்ஸ்டைல் வேலைநிறுத்தமும் அவரை ஆழமாக ஈர்த்துச் செல்வாக்கு செலுத்தின. அவர் ராகுல சாங்கிர்த்தியாயன், பிரேம் சந்த் மற்றும் பிற எழுத்தாளர்களுடன் சர்வதேச மார்க்ஸிய இலக்கியங்களையும் ஏராளமாகப் படித்து அவற்றால் ஈர்க்கப்பட்டார்.

மாணவர்கள் அமைப்பில்

    பெண் மாணவர்கள் அடங்கிய தன்னார்வக் குழுவைச் சரளா குப்தா ஒருங்கிணைத்து அமைத்தார். விரைவில் அனைத்திந்திய மாணவர்கள் சம்மேளனத்தில் 1938ல் இணைந்தவர், அதன் இணைச் செயலாளராகவும் டெல்லி மாகாண மாணவர்கள் சம்மேளனப் பொருளாளராகவும் ஆனார். ஒரு சிறிய டைப் ரைட்டருடன் அவர் டிராம் வண்டியில் பயணம் செய்து சாந்தினி சௌக் பாகீரத் அரண்மனையில் இருந்த மாணவர்கள் சம்மேளன அலுவலகத்திற்குச் செல்வது வழக்கம். அதன் புதிய அலுவலகம் கத்ரா ஷாஹின்ஷாகியில் இருந்தது. சரளா குதிரையால் இழுக்கப்படும் வண்டியான ‘புக்கி’யிலும் பயணிப்பது உண்டு.  

மாணவர்கள் சம்மேளத்திலிருந்து சிபிஐ கட்சிக்கு

     1938 நவம்பர் 13 –14ல் நடைபெற்ற டெல்லி மாணவர்கள் சம்மேளன மூன்றாவது மாநாட்டில் கவிக்குயில் சரோஜினி நாயுடு தொடக்க உரையாற்ற, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிறப்புரை ஆற்றினார். சரளா குப்தா அதன் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

        பஹல் சிங் ஒரு பெரும் தலைவர், டெல்லி பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர். ஏற்கனவே கம்யூனிஸ்ட்டான அவர் மாணவர் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். குறிப்பாக அவர் வொய்டி சர்மா, சரளா குப்தா, ஃபரூக்கி, ஷங்கி மற்றும் ஷகில் மீது கவனம் குவித்தார். அதன் விளைவாய்ப் பின்னர் 1939ல் அவர்கள் முதல் கம்யூனிஸ்ட் மாணவர்கள் ஆனார்கள். 1938ல் காங்கிரசின் ஹரிபுரா அமர்வு மாநாட்டிற்கு வொய்டி சர்மாவை (யக்ஞ தத் சர்மா) பஹல் சிங் அழைத்துச் சென்றார்.  

     டெல்லியில் அந்நாட்களில் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். சிபிஐ பொலிட் பீரோ உறுப்பினர் ஆர் டி பரத்வாஜ் முன்முயற்சியில் டெல்லியில் ஓர் அமைப்புக் குழு நிறுவப்பட்டது. பஹல் சிங் டெல்லி கட்சி செயலாளர் ஆக்கப்பட்டார். அவர் கைதான பிறகு வொய் டி சர்மா செயலாளர் ஆனார். சிபிஐ மீதான தடை நீக்கப்பட்டு சட்டப்படி செயல்பட அனுமதிக்கப்பட்டதும் மாகாணக் கட்சி அலுவலகம் ஜும்மா மசூதி பகுதியில் 1943 ஜனவரி 3ல் திறக்கப்பட்டது. முதலாவது மாகாண மாநாடு 1944 ஜனவரி 23 முதல் 25வரை நடைபெற்றது. 

  அது வண்ணமயமான மாநாடு, அதையொட்டி அலங்கரிப்புகளும் கண்காட்சிகளும் நடத்தப்பட்டன.

        அப்போது சமீபத்தில்தான் சரளா கட்சியில் சேர்ந்திருந்தார், மிக சுறுசுறுப்பாகத் தீவிரமாகச் செயல்பட்டார். நிரஞ்ஜன் சென்னுடன் இணைந்து கட்சிக்காக அவர் ஒரு கலாச்சாரக் குழுவை ஏற்படுத்தினார். மாநாட்டின் தலைமைக்குழு தோழர்களுடன் அவரும் இருந்தார். பெண்கள் அணியின் உணவுக் குழுவினர் ஆற்றிய பணிகள் குறித்த அறிக்கையை அவர் அளித்தார்.

      கலாச்சார நிகழ்ச்சிகளின்போது அவர் ஒரு பாடலை இயற்றி பாடவும் செய்தார். “செங்கொடி அறைகூவி அழைக்கிறது, உழைக்கும் சகோதரர்களே!” (லால் ஜண்டா ஹஹ்தா ஹை: துஜ்ஸே புகார், பையா மஸ்துரோன்!). கலாச்சார மற்றும் பெண்கள் முன்னணிகளின் புகழ்பெற்ற அமைப்பாளர் ஆனார்.

     சிபிஐ டெல்லி மாகாணக் குழுவுக்குப் பஹல் சிங், வொய் டி சர்மா, எம் ஃபரூக்கி மற்றும் முகமத் யாமின் போன்ற தலைச் சிறந்த தலைவர்களுடன் அவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் டெல்லி கட்சியின் பொருளாளர் ஆனார் சரளா.

      தொடர்ச்சியான பின்வந்த ஆண்டுகளிலும் சரளா சர்மா மீண்டும் மீண்டும் டெல்லி தலைமை பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெண்கள் இயக்கத்தில்

    1940ல் அனைத்திந்தியப் பெண்கள் மாநாட்டின் ஒரு பிரிவான டெல்லி பெண்கள் லீக் அமைப்பில் சரளா இணைந்தார்.  அது பல்வேறு பெண்கள் குழுகள் சேர்ந்த ஒரு குடையின் கீழான கூட்டமைப்பு. அந்த லீக்கின் இணைச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1942 இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்று பிரம்மாண்டமான சாந்தினி சௌக் பேரணியில் கலந்து கொண்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ போன்ற முழக்கங்களைக் கண்ணீர் புகை குண்டுகளை எதிர்கொண்டு அவர் எழுப்பினார். டெல்லி செவிலியர்களுக்கு மத்தியில் சரளா தீவிரமாகப் பணியாற்றினார்; ஒரு செவிலியர் வயிற்றுப் போக்கால் (டயேரியா) மரணமடைய அதைக் கண்டித்து விக்டோரியா பெண்கள் மருத்துவமனையில் வேலைநிறுத்தத்தை அவர் அமைத்து நடத்தினார். மருத்துவமனையில் செவிலியர்களின் மோசமான நிலைக்கு எதிராகக் கண்டனப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார், அவர்களின் கூலி/ ஊதியங்களை உயர்த்தக் குரல் கொடுத்தார்.

    1943 பம்பாயில் நடைபெற்ற இந்திய மக்கள் நாடக மேடை (இப்டா) மாநாட்டில் சரளா பங்கேற்று அதன் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்டாவின் கிளையை டெல்லியில் அமைக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மில்கள், ஆலைத் தொழிலாளர்களுக்கு மத்தியில் பணியாற்றிய சரளா, இரயில்வே, டெக்ஸ்டைல், ரிக்க்ஷா இழுப்பவர்கள், டிராம் தொழிலாளர்கள் முதலான பிற தொழில்களின் தொழிலாளர்களுடனும் பணியாற்றினார். பம்பாயின் கபிலா கந்த்வாலாவுடன் இணைந்து சரளா டெல்லி உழைக்கும் பெண்கள் குறித்த அறிக்கையைத் தயாரித்தார். அந்த அறிக்கை 1946 மகராஷ்டிராவின் அகோலாவில் நடைபெற்ற அனைத்திந்திய பெண்கள் மாநாடு (AIWC) மாநாட்டின் முன் சமர்ப்பிக்கப்பட்டது.

    1943ல் நேரிட்ட மாபெரும் வங்காளப் பஞ்சத்தின் (தி கிரேட் பெங்கால் ஃபெமைன்) நிவாரணப் பணிகளின்போது டெல்லி மகிளா சங் (பெண்கள் சங்கம்) அமைக்கப்பட்டது. 1942ல் AIWC உடன் ஏற்பட்ட சில வேறுபாடுகளை அடுத்து அந்தப் பெண்கள் சங்கம் பேகம் ஹஷ்மியைத் தலைவராகவும் சரளா சர்மாவை அதன் பொதுச் செயலாளராகவும் கொண்டு அமைக்கப்பட்டது. அந்தச் சங்கத்தில் 5000 உறுப்பினர்கள் இருந்தனர். வங்கப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட சங்கம் தொடர்ச்சியான பிரச்சாரங்களை நடத்தியது.

அது இப்டாவுடன் இணைந்து யமுனா காட் பகுதியில் தொடர்ந்து 11 நாட்கள் காலை 5 முதல் 10 வரை பாடல்களைப் பாடிக் கொண்டு நிதி திரட்டும் இயக்கத்தை நடத்தியது. யமுனா காட் படித்துறையில் எவ்வாறு சுமார் ஒரு டஜன் பெண்களும் பையன்களும் நின்று கொண்டு அங்கே குளிக்கவும் பிராத்தனை செய்யவும் வரும் பெண்களிடம் பிரச்சாரம் செய்தனர் என்பதைச் சரளா ஞாபகப்படுத்துகிறார். சரளாவும் மற்ற தோழர்களும் “கேளுங்கள் எங்கள் இந்து(ஸ்தான்) நண்பர்களே, வங்கம் பசியில் துடிக்கிறது” போன்ற பாடல்களைப் பாடினர். அந்தப் பெண்களிடம் துணிப் பைகளில் (ஜோலி) ஒரு காசைப் போடுங்கள் என வேண்டினர். வீடு வீடாகச் சென்று சரளாவின் குழு உறுப்பினர்கள் வங்காளப் பஞ்ச நிவாரணத்திற்காக நிதி திரட்டினர். காந்தி மைதானத்தில் சரளா நாடகங்கள் மற்றும் பாடல் இசை நிகழ்ச்சிகளை அமைத்து நடத்தினர்.

டெல்லி மகிளா சங்கம் நாடகங்கள், நாட்டியங்கள் முதலான கலை நிகழ்ச்சிகளைப் பெண்கள் சுலபமாகக் கலந்து கொள்ளும் வகையில் பொது இடங்களிலும் வீடுகளின் முற்றங்களிலும் நடத்தியது. அவர்கள் கறுப்புச் சந்தை, ரேஷன் பொருட்களைப் பதுக்குவதற்கு எதிராகக் கோரிக்கைகளை எழுப்பினர். சில நேரங்களில் பெண்களைத் திரட்டிக் கொண்டு உணவு தானியங்கள் பதுக்கப்பட்ட இடங்களுக்கே சென்று பதுக்கி வைத்திருந்தவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தும் வந்தனர்.

கல்கத்தா ஜப்பானியர்களால் குண்டு வீசித் தாக்கப்பட்டபோது ஒரே நாள் இரவில் சரளா ஒரு நாடகத்தை எழுதினார். அதனை ஒரு நிழல் நாடகமாக ‘தானியா’ (தேவதைகளின் அரசி) என்ற பெயரில் 1943 பிப்ரவரி 10ல் காந்தி மைதானத்தில் அரங்கேற்றினார். அதைச் சுமார் 25ஆயிரத்துக்கும் மேல் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

தார்யாகஞ்சின் சரஸ்வதி பவனில் டெல்லி மகிளா சங்கம் சர்வதேசப் பெண்கள் தினத்தைக் கொண்டாடியது. காந்தி மைதானத்தில் சரளா வங்கப் பஞ்சம் குறித்து ஓர் ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்து காட்சிப்படுத்தினார். அதில், தான் வரைந்த ஓவியங்கள் மட்டுமின்றி தனது சகோதரன் வரைந்தது மற்றும் சிட்டப் பிரசாத் பட்டாச்சார்யா வரைந்த ஓவியங்களையும் இடம்பெறச்செய்தார்; சுனில் ஜானா புகைப்படங்களும்கூட அதில் பார்வைக்கு வைக்கப்பட்டன.

[சிட்டப் பிரசாத் பட்டாச்சார்யா (Chittaprosad Battacharyaமுன்னோடியான இந்திய அரசியல் ஓவியக் கலைஞர். ஏராளமாக மக்களின் வாழ்வைத்

 தத்ரூபமாக வரைந்தவர், குறிப்பாக வங்கப் பஞ்சத்தின்போது சுற்றுப்பயணம் செய்து அன்றைய மக்களின் அல்லல்களைக் கறுப்பு வெள்ளை ஓவியங்களாகத் தீட்டி அச்சிலும் லினோகட் உத்தியில் அச்சிட்டவர். நூல்களும் எழுதியுள்ளார். 1915 ஜூன் 21ல் மேற்கு வங்க 24 பர்க்கானாவின் நைகாட்டியில் பிறந்தார், 1978 நவம்பர் 13ல் கல்கத்தாவில் மறைந்தார்.    

 புகைப்படப் பத்திரிக்கையாளரும் இந்தியா குறித்த பல டாக்குமெண்டரிகளை எடுத்த சுனில் ஜானா (Sunil Janah) அசாமில் 1918 ஏப்ரல் 17ல் பிறந்தார், 2012 ஜூன் 21ல் கலிபோர்னியா பெர்க்லேவில் மறைந்தார். இந்திய விடுதலை இயக்கம், விவசாய தொழிலாளர் இயக்கங்கள், பஞ்சங்கள், கலவரங்கள், கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் வாழ்க்கை, தொழில்மயம் மற்றும் நகரமயமாதல் காலம் என அத்தனையும் அவரது கேமிரா பதிவு செய்து ஆவணப்படுத்தியது  –கூடுதல் இணைப்பு] 

தேசப்பிரிவினையின்போது ஏற்பட்ட மதவாதக் கலவரங்களில் சாந்தினி சௌக் மற்றும் பிற இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் சரளா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். பால் மற்றும் தேவையான பிற பொருட்களைக் குழந்தைகளுக்கு விநியோகித்தார், குறுகிய தெருக்கள் மற்றும் சந்துகளில் வசிக்கும் மக்களை தேடிச் சென்று உதவினார். அவர்கள் நீண்ட காலம் அவரை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர். 

டெல்லியின் சாதாரண பொதுமக்களிடையே அவர்களது குடிமை மற்றும் குடியுரிமை பிரச்சனைகள், கல்வி, சுகாதாரம், சமூக கலாச்சாரச் சுரண்டல் போன்றவைகளுக்காகச் சரளா தீவிரமாகப் பணியாற்றினார். பேகம் ஹஷ்மி, சத்யாவதி, சந்தோ பீபி, மீமோ பாய் மற்றும் அருணா ஆஸஃப் அலி முதலானோர் அவருடன் பழைய டெல்லியில் பணியாற்றிய புகழ்பெற்றவர்களில் சிலராவர்

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம்

        இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிடிஆர் காலத்தின்போது (1948 –50) முற்றிலும் முழுமையான குழுப்போக்குப் பாதையைக் கடைபிடிக்க டெல்லி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் அது கட்சியைச் சீர்குலைத்தது, தலைவர்கள் தலைமறைவாயினர்; அவ்வாறே சரளாவும் தலைமறைவானார், அப்படியே இரண்டு முழு ஆண்டுகளும் காணாது போனார். அதற்கு முன் கைது செய்யப்பட்டவர் 1948 அக்டோபர் 8முதல் நவம்பர் 17வரை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.

    1950களின் தொடக்கத்தில் டெல்லியில் கட்சியை மீட்டுருவாக்கம் செய்வதில் சரளா தீவிரமாக உதவினார். பெண்கள் அமைப்பையும் மீண்டும் கட்டி

எழுப்புவதில் உதவிட தற்போது அது ஜன்வாதி மகிளா சமாஜ் என்று பெயரிடப்பட்டு 22 கிளைகளுடன் உள்ளது. 1953ல் சரளா அதன் செயலாளர் ஆனார். 1954ல் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அதன் டெல்லி மாநாட்டில் அமைக்கப்பட்டபோது, சரளா அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகி 1962 முதல் 1970 வரை அதன் செயலாளர்களில் ஒருவராகச் செயல்பட்டார். லெனின் நூற்றாண்டு விழாவின்போது 1970ல் அவருக்கு லெனின் விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

தேர்தல்கள்

     1954ல் ஒரு கம்யூனிஸ்ட் வேட்பாளராகச் சரளா சர்மா முனிசிபல் கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பள்ளிகள், குடிநீர் வசதி, முஸ்லீம் பெண்கள் பிரச்சனைகள் போன்றவற்றில் ஏராளமான மேம்பாட்டு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டார். முனிசிபல் கார்ப்பரேஷனாக டெல்லி தரம் உயர்த்தப்பட்டபோது அந்த அமைப்பிற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லி மாநகராட்சியின் கல்விக் குழுவின் துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

இயக்கங்கள்

    1973 செப்டம்பர் 11ல் பெண்கள் குழுவிற்குத் தலைமையேற்று, சரளா சர்மா பழைய செயலகத்திற்குள்  வலுக்கட்டாயமாக நுழைந்து, குடிமைப் பொருள் வழங்கல் எக்ஸிக்யூடிவ் கவுன்சிலரைக் கேரோ செய்தார்; அவரிடம் வேண்டுகோள் மனுவுடன் 21 பாக்கெட்டுகளில் காய்ந்த சேறு மற்றும் சிறு குழாங்கற்களுடன் ரேஷனில் வழங்கப்பட்ட தரமற்ற உணவு தானியங்களின் மாதிரிகளை வழங்கினர். மற்றுமொரு குழு1974 மார்ச் 19ல் சந்தித்தனர். 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களின்போது சரளா மற்றவர்களுடன் இணைந்து அமைதி ஊர்வலங்களை நடத்தினார்.

மாநாடுகள்

     அவர் பல்வேறு சர்வதேச மாநாடுகளிலும் எண்ணிறைந்த தேசிய மாநாடுகளிலும் கலந்து கொண்டார். உதாரணத்திற்கு, 1975ல் பெர்லினில் அக்டோபரில் நடைபெற்ற பெண்களின் சர்வதேச ஜனநாயகச் சம்மேளனத்தின் (WIDF) 7வது உலகப் பேராயத்தில் அவர் பங்குபெற்றார், இதில் சிறப்பு, அந்த ஆண்டுதான் சர்வதேசப் பெண்கள் ஆண்டாகவும் கொண்டாடப்பட்டது.

            சரளா சர்மா முதலில் டெல்லி மகிளா சங்கப் பொதுச் செயலாளராகவும் பின்னர் 1986ல் அதன் தலைவராகவும் ஆனார். சரளா குப்தாவாக இருந்தவர் 1953ல் வொய் டி சர்மா அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் மாணவர் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கச் செயல்பாடுகளின்போது சந்தித்தனர். [யக்ஞ தத் சர்மா, டெல்லி கட்சிக் கிளையை நிறுவியவர்களில் ஒருவர், தொழிற்சங்கத் தலைவர். 1918 மார்ச் 1ல் பிறந்தார், 2004 ஜனவரி 11ல் காலமானார்]

           சரளா சர்மா பல்வேறு கட்டுரைகள் மற்றும் டெல்லி சிபிஐ நிறுவனர் பஹல் சிங் குறித்து இந்தியில் (1975) எழுதிய சிற்றேடு உள்ளிட்ட பல சிறு நூல்களையும் எழுதியுள்ளார்.

          நீண்ட காலம் உடல் நலம் குன்றி இருந்த பின் அவர் மரணமடைந்தார். தனது 102வது பிறந்த நாளுக்கு நான்கு நாட்கள் முன்பு 2022 ஏப்ரல் 11ல் அவர் காலமானார். ஒப்பற்ற கம்யூனிஸ்ட் பெண் செயற்பாட்டாளரான அவரது நினைவுகள் நீங்காது நிலைக்கும். வாழ்க அவர் புகழ்!     

--நன்றி:நியூஏஜ் (2023, ஜன.29 –பிப்.4)                                                                                         

                                                                             --தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment