Saturday 20 May 2023

தாகூரின் 162வது பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை --கார்க்கி சக்ரவர்த்தி

 தாகூரின் 162வது பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை


        ‘குறுகிய பார்வை தேசிய’த்திற்கு எதிராகக்

குரல் எழுப்பும் இரவீந்திரநாத் தாகூர்

                                                    --கார்க்கி சக்ரவர்த்தி

            குறுகிய தேசியவாத உணர்வுகள் தூண்டிவிடப்படும்போது, தாகூரின் நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொண்டாடுவது என்பது வெறும் சடங்காகி விட்டதாகத் தோன்றுகிறது.

            வங்காளிகளின் நாட்காட்டியின்படி போயி ஷாக் மாதம் 25ம் நாள் (மே 8 அல்லது 9ல்) இரவீந்திரநாத்தின் பிறந்தநாள் விழா, வங்கத்தில் பொது விடுமுறை நாளாகவும், நாட்டில் வங்கச் சமூக மக்கள் வாழும் இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. அவரது கவிதைகளைப் படிப்பது, பாடல்களை பாடுவது, நாடகங்களை அரங்கேற்றுவது என்றெல்லாம் நடத்தி அவரை ஞாபகப்படுத்துவது ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் சடங்காக மாறிவருகிறது. இருப்பினும், உலகளாவிய பொது சமயம், சர்வதேசியம், கலாச்சாரம் மற்றும் நாகரீகம் என்பன குறித்த தாகூரின் செய்தியை மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்ல நாம் தவறினோம். அவரது சமயம், குறுகி, தனித்துப் பிரிந்துபோய், சடங்கு வழிபாட்டுச் சடங்குகளில் அடைந்து கிடப்பதல்ல. மாறாக, அமைதி மற்றும் புனிதம் இரண்டுடனும் கலந்து எல்லாம்வல்ல பரம்பொருள் இறையுடன் நேராகத் தொடர்பு கொண்டது; அவரது ஆழ்ந்த பக்தி, பிரேமை (பேரன்பு) மற்றும் பிரகிருதி (இயற்கை) இவை பரந்த ஆன்மிகப் பெருவெளியில் ஒன்று கலந்து பொங்கிப் பிரவாகிக்கும் உணர்ச்சிப் பாடல்களால் ஆனது.

            இன்று தீவிர மதப் பிடிவாதப் பற்று மூலம் பெரும்பான்யினரைத் தாஜா செய்யும் சூழல் நிலவுகிறது. மத அடையாளங்களைப் பற்றிநின்று தீவிர முழக்கங்களை எழுப்பி அனைத்தையும் அரசியல்படுத்துவதன் மூலம், குறுகிய மதவாத தேசியப் பிடிவாத உணர்வுவிசிறிவிடப்படுகிறது.

இந்நிலையில், குருதேவர் தாகூரைக், குறிப்பாக ஒரு சடங்கு நிகழ்வாக, அவரது பிறந்த நாளில் மட்டும் நினைவூட்டுவது மதிப்புடையதாகுமா? அறிவைப் பரிமாறிக் கொள்ளும் அவரது கருத்தோட்டத்தை, முதலாவது சர்வதேசப் பல்கலைக்கழகமான விஸ்வ பாரதியை நிறுவிய அவரது பார்வையை, ஒரு கல்வியாளராக அவரது பங்களிப்புகளை மற்றும் கிராமப்புற மறுகட்டுமானம் (ஸ்ரீநிகேதன்) குறித்த அவரது கண்ணோட்டத்தையும் புரிந்து கொள்ள முயற்சிக்காமலேயே, அவ்வாறு விழா கொண்டாடுவது, அவருக்கு நாம் துரோகம் இழைப்பதாகாதா? 

            இங்கே ஒரு மனிதன், விவாதித்திற்குரிய முக்கிய பிரச்சனைகளில் காந்தியுடன் உடன்பட மறுப்பதை ஒப்புக்கொள்ளும்போதே, அவரை “மகாத்மா” என்று அழைத்ததைப் பார்க்கிறோம்.


அவர் மானுட சமூகத்தின் ஒற்றுமையில் -- அவர்களின் இனம், தோலின் நிறம் மற்றும் நம்பிக்கை வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் – நம்பிக்கை கொண்டிருந்தார். தேசியம் குறித்து அவருக்கென்று சொந்தப் பார்வையும் கருத்தும் இருந்தது. ஒருமுறை அவர், ”பெரும் சமூகத்திலிருந்து விலகி தங்கள் நம்பிக்கையே மேம்பட்டது எனச் சாதிக்கும் சுயநலக் குழுவாத வழிபாடு மற்றும் குறுகிய தேசியவாதம் என்பதிலிருந்து உலகம் முழுவதும் துன்பப்பட்டு வருகிறது” என்று காந்தியிடம் சொன்னார்.

            இங்கே ஒரு மனிதன், 1905ன் சுதேசி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்று எண்ணற்ற தேசபக்தி பாடல்களை எழுதினாலும், அந்த இயக்கம் வகுப்புவாத வன்முறையில் மோதிக் கொள்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அந்த இயக்கத்திலிருந்து விலகி விட்டார். ஒரே நாளில் அத்தனைக் கமிட்டிகளிலிருந்தும் ராஜினாமா செய்தார். இங்கே ஒரு மனிதன், அவர் எழுதிய எண்ணற்ற கட்டுரைகள் மற்றும் கடிதங்கள் எதுவும் மக்கள் மத்தியில் பெரிதாய்ப் பரப்பப்படாமல் பிறந்த நாளில் மட்டும் நினைக்கப்படுகிறான்.

            இன்று பெரிய அளவில் தேசம் மதவாதத்தில் பிளவுபட்டு இருக்கும்போது தாகூரின் எழுத்துகள் நிச்சயம் ஒரு புதிய நம்பிக்கை பார்வையை நமக்கு அளிக்கின்றன. 1911ல் அவர் எழுதினார்: “முஸ்லீம்கள் சமமானவர்களாக மாற அவர்கள் போராட வேண்டும். இந்தச் சமத்துவமின்மை நிலையிலிருந்து மீண்டு வர முஸ்லீம்கள் இந்துகளைவிட அதிகமாகக் கோர வேண்டும். அவர்களின் கோரிக்கையுடன் நாம் உண்மையாகவே உடன்பட வேண்டும். அந்தஸ்தில், கௌரவத்தில், கல்வியில் முஸ்லீம்கள் இந்துகளுக்குச் சமமாக வந்தால், அது இந்துகளுக்குப் பலன் அளிப்பதாகும்.”

[ “எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம்

   எல்லாரும் இந்திய மக்கள்

   எல்லாரும் ஓர்நிறை, எல்லோரும் ஓர் விலை

   எல்லாரும் இந்நாட்டு மன்னர்”

என்றானால், பின்னர் நம் நாடு…

   ஒப்பில்லாத சமுதாயம்

    உலகத்துக்கு ஒரு புதுமை”

என்று மகாகவி பாரதியும் இதைத்தான் பாடினாரோ!]   

            இரவீந்திரநாத் தனது காலத்தைத் தாண்டி வெகுவாக முந்தி இருந்தவர். ஐரோப்பா மீது பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அவருடைய எச்சரிக்கை, “நாகரீகத்தில் நெருக்கடி” என்று

தலைப்பிட்ட அவரது புகழ்பெற்ற சிற்றேட்டு, (பிரான்ஸ் நாவலாசிரியர்களான) ரோமைன் ரோலந்து மற்றும் ஹென்றி பார்புஸ்ஸே 1936 செப்டம்பரில் புருசெல்ஸ் நாட்டில் நடத்திய உலக அமைதி பேராயத்திற்கு அவர் அனுப்பிய செய்தி மற்றும் 1937ல் நாஜிகளுக்கு எதிரான ஸ்பெயினின் மக்கள் முன்னணிக்கு உதவிட அவர் விடுத்த வேண்டுகோள் என இவை அனைத்தும் குருதேவர் இரவீந்திரநாத் தாகூரின் நவீன இந்தியா குறித்த மாபெரும் எதிர்காலக் கண்ணோட்டத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. நமது நாட்டிலும் உலகம் முழுவதும் உள்ள பிற்பட்ட சக்திகள் மற்றும் பிற்பட்ட கருத்துகளுக்கு எதிராக எழுந்து நின்று, கண்டனம் செய்து தனது குரலை எழுப்பக் கூடியவராக அவர் இருந்தார்.

            இன்று நிலவும் பகைமை, வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு மேலிட்ட சூழ்நிலையில் நம் மனங்கள், பெரும்பான்மை மேட்டிமை அரசியல் மற்றும் மதவாத ஆளுகை எண்ணத்திற்கு

மாறான வேறு கருத்துகளைக் கூறி எதையும் வெளிப்படுத்த அச்சப்படும் உணர்வுகளால் நிறைந்துள்ளன. இச்சூழலில் (‘அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பது இல்லையே’ என்று முழங்கிய பாரதி போல) மகாகவி தாகூரின்எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, எங்கே அறிவு சுதந்திரமாய் இருக்கிறதோ, எங்கே உலகம் குறுகிய தேசிய எல்லைகளால் துண்டாடப்படாமல் இருக்கிறதோ….   … அங்கே அந்தச் சொர்க்க பூமியில் எந்தையே என்நாடு விழித்தெழட்டும்!” கவிதை வரிகளை மட்டும் திரும்பத் திரும்ப எதிரொலிக்கப் பாடுவது பொருத்தமானதா? சிந்திப்போம்.

--நன்றி : நியூஏஜ் (மே 21 –27)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

   

 

 

 

No comments:

Post a Comment