Tuesday, 22 April 2025

நியூ ஏஜ் தலையங்கம் (ஏப்ரல் 20 – 26) --லெனினியத்தின் பொருத்தப்பாடு

 

நியூ ஏஜ் தலையங்கம் (ஏப்ரல் 20 – 26)

லெனினியத்தின் பொருத்தப்பாடு

புதிய சோசலிசச் சமுதாயம் மலர்வதைக் கட்டியம் கூறும் முன்னுதாரண முதலாவது பாதை அமைத்த நிகழ்வின் சிற்பி விளாடிமிர் இலீயிச் லெனின் 1870 ஏப்ரல் 22 ல் பிறந்தார். வரலாற்று பொருள்முதல்வாத விதிகள்படி, அல்லது வரலாற்றின் பொருள்முதல்வாத கருத்தியலைப் பின்பற்றி கூறினால், முதலாளித்துவத்திற்கு அடுத்து வருவது சோசலிசம். முந்தைய கட்டத்தை மாற்றியமைக்கும் எந்த ஒரு சமூகப் பொருளாதார அமைப்பானாலும், அது எப்போதும் உயர்வானதாகவே இருக்கும். சோசலிசமும் முதலாளித்துவத்தைவிட உயர்வானது, மேலும் அதற்கு மேம்பட்டதும் ஆகும். அது எப்போதும் உற்பத்தி சக்திகளின் பரிணாம வளர்ச்சியின் விளைவு. மாற்றத்தின்போது அது புதிய பாதையை எடுக்கிறது.

அடிப்படை சாதாரண ஆலை நடைமுறைகளில் இருந்து, (மேலும் சிக்கலான ஒருங்கிணைந்த திறன்மிக்க முறைகளிலான) தொழிற்சாலை அமைப்பாக மாறும் இந்த மாற்றம், எப்போதும் முழுமையான வரலாற்று பொருள்முதல்வாத நிலைப்பாட்டின்படியே இருக்கும். ஆனால் எலக்ட்ரானிக்ஸ் (மின்னணுவியல்) மூலமாகப் பரிணாம மாற்றம் (மெல்ல மெல்ல அல்லாமல்) பெரும் வெடிப்புபோல வரும் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். (அத்தகைய பெரும் பாய்ச்சல் மாற்றத்தின்போது) வழக்கொழிந்த உற்பத்தி சக்திகளை அது புறந்தள்ளும்; புதிய உற்பத்தி முறையைத் தொடங்கும் புதிய கட்டத்தில் நுழையும், அதன்படியான சமூகக் கட்டமைப்பு ஒரு புதிய கட்டமாக, அங்கே சமூகக் கட்டமைப்புகள் புதிதாக இருக்கும். உண்மையில், சோசலிசத்தை நோக்கிய புதிய பாதையின் அணுகுமுறையே மாற்றங்களுக்கு உள்ளாக்கிச் செல்லும். மின்னணுவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய முறையில் மலரும். பெரிய எந்திரங்கள் அல்லது பிரம்மண்ட தொழிலக வளாகங்கள் இப்போது தேவைப்படாது. உற்பத்தி சாதனங்களும்கூட பெரும் மாற்றத்தின் கட்டத்தில் இருக்கும்.

இனியும், இன்றும் லெனின் கூடுதலாகப் பொருத்தமுடையவராக இருக்கிறார்.

அராஜவாதிகள், நரோத்னிக்ஸ் (இயக்கவாதிகள்), தீவிர இடதுசாரிகள், சீர்திருத்த- வாதிகள்,  பொருளாதாரவாதிகள் மற்றும் பலரோடும் நடத்திய போராட்டத்தின் மூலமே

மார்க்சிசம் உருவானது. இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல, எப்போதும் அங்கே நமக்கு வழிகாட்ட லெனின் இருந்தார். கட்சி அணிகள், கட்சியின் கொள்கைகளை வெறுமே ஆதரிப்பதை அவர் விரும்பவில்லை; மாறாக, கட்சியைக் கட்டியமைப்பதில் உதவிட வேண்டுமென்றார். இந்தச் சந்தர்ப்பத்தில்தான், ‘என்ன செய்ய வேண்டும்(what is to be done) என்ற புகழ்பெற்ற புத்தகத்தை லெனின் எழுதினார்.

மார்க்ஸ் அவர்களால்கூட கற்பனை செய்ய முடியாத அளவில் தற்போது மூலதனம் மற்றும் உழைப்புச் சக்திகளுக்கு இடையில் சமூக பொருளாதார பிளவு ஏற்பட்டுள்ளது. சோவியத் அரசின் சொத்தைக் கொள்ளையடித்தவர்களைக் குறிப்பிட 1990களில் பயன்படுத்தப்பட்ட தன்னலக்குழு (Oligarch) என்ற வார்த்தை, நீண்ட காலமாக உலகளாவிய நிகழ்முறையானது. (அதாவது உலகெங்கும் தன்னலக் குழுவினர் மக்கள் பொது சொத்தைக் கொள்ளை அடிப்பது இயல்பானது). உலகின் 5 அதி பணக்காரர்கள் 869 பில்லியன் டாலர் சொத்தை வைத்துள்ளனர். அவர்கள் தங்கள் செல்வத்தை 2020ல் இருந்து இரண்டு மடங்காக அதிகரித்துள்ளனர்; அதே நேரம், உலகின் பெரும்பான்மை மக்கள் மேலும் ஏழைகளாகி உள்ளனர். வளரும்  வர்க்கப் பதற்றங்கள்  அழுத்தத்தின் கீழ், பூர்ஷ்வா  ஜனநாயகம் நொறுங்கிச் சிதறுகிறது. எதேச்சியதிகாரத்துவம் மற்றும் பாசிச வடிவிலான ஆட்சி  பல நாடுகளில் எழுச்சி பெற்று வருகின்றன.

மூன்றாம் உலகப் போர் தொடர்பான நிலைமைகள் ஏற்கனவே கனிந்து வருகிறது. ரஷ்யா இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்படும் வரை ரஷ்யா--உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் –அதன் பொருள் அணு ஆயுதப் போராக இருந்தாலும் சரி  என முன்னணி ஏகாதிபத்திய சக்திகளின் பிரதிநிதிகள் வற்புறுத்தி வருகின்றனர். காசாவில் மனிதத் தன்மையற்று பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவது, ஒரு பிரதேசம் தீ பற்றி பரவுவதாகத் தொடரும்போது, அதை அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் மேலும் விசிறி விட்டுத் தூண்டுகின்றன.

லெனின் படைப்புகளில் இன்று மிகப் பொருத்தம் உடையது அவர் எழுதிய ’ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்டம், விஞ்ஞானரீதியான பரிசீலனையில் அது அமைந்தது. ஏகாதிபத்தியம் சாதாரணமான குறிப்பிட்ட பூர்ஷ்வா கொள்கை மட்டுமல்லஎன்பதை

எடுத்துக்காட்டும் லெனின், மாறாக அது முதலாளித்துவத்தின் உச்சபட்ச கட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் ஆகும் என்றார். அந்தக் கட்டம் முதலாளித்துவத்தின் சிதைவு, ஒட்டுண்ணித்தனம் மற்றும் பிற்போக்குத்தனத்தால் வழி நெடுக குணம்சப்படுத்துகிறது(a stage characterized by decay, parasitism and reaction all along the line;) அதில் ஏகபோகங்கள் சுதந்திரப் போட்டியை மாற்றி அமைத்துவிட்டு, தொழில்துறை முதலீடுகளின் மேல் நிதி மூலதனம் செல்வாக்கு செலுத்தும் (அதாவது உற்பத்தியைப் பெருக்குவதற்கான தொழில் முதலீடுகள் செய்யப்படாது; மாறாக, பங்கு வர்த்தகச் சூதாட்டத்தில் முதலீடுகள் செலுத்தப்படும்); அதில் உலகம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு மத்தியில் அங்கே முழுமையாக – ஒருக்கால் பலவந்தமாகக் கூடமீண்டும் பங்கு பிரிக்கப்படும்.

 இந்தப் பரிசீலனையிலிருந்து லெனின் கண்டடைந்த முடிவு நெடுநோக்குடையதும் துணிச்சலானதும் ஆகும். யுத்தத்தைப் புரட்சிகரமான மக்கள் போராக மாற்றுவதற்கு வாதிட்டவர், நாடுகளைத் தூண்டாடி  ஆக்கிரமித்து  இணைத்துக் கொள்ளாமல், உடனடி சமாதானத்தைக் கோரினார்.

 ஏகாதிபத்தியம் சீர்திருத்தப்பட முடியாதது, மாறாக அது தூக்கி எறியப்பட வேண்டும் என்ற முடிவுக்கு லெனின் வந்தார். மேலும் அமைதியான கொள்கைகளைத் தழுவ வேண்டி, ஏகாதிபத்தியவாதிகள் மீதான நீதிநெறி சார்ந்த வேண்டுகோள்கள் அவர்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது; மாறாக மாயத் தோற்றங்களை மட்டுமே ஏற்படுத்தி, மக்கள் திரளின் புரட்சிகர சக்தியை முடக்கும் என்றார் லெனின்.

 உலகப் போருக்கு இட்டுச் சென்ற அதே எதார்த்த நிகழ்முறைகள், பாட்டாளிகள் புரட்சிக்கான கள சூழ்நிலைமைகளையும் உருவாக்கும் என்பது லெனின் புரிதல். அந்த நேரத்தில், போரும் ஏகாதிபத்திய  முரண்பாடுகளும் மக்கள் திரளைப் புரட்சியில் கொண்டு செலுத்தும் என்ற முடிவின் அடிப்படையில் அமைந்தது அவரது கண்ணோட்டம்.  

 ஆனால் வர்கப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது நோக்கமாக இருக்கும்போது, தன்னெழுச்சி நிகழ்முறை மற்றும் அதன் வெளிப்பாடு, மற்றும் புரட்சியின் வெற்றி அல்லது தோல்வி பற்றிய கேள்வி, அப்போதைய பாட்டாளி வர்க்கத் தலைமை மற்றும்  உணர்வு நிலையைப் பொருத்து அமையும்

 இந்தக் கேள்வியை லெனின்போல கூர்மையாகப் புரிந்து கொண்டவர் எவரும் இல்லை – இந்த இடத்தில்தான் அவரது தனித்துவமான வரலாற்று பங்கு மற்றும் ஒரு மார்க்சியவாதியாக அவரது மேதமை விளங்குகிறது.

 அவரது அரசியல் வாழ்வின் முதல் 30 ஆண்டுகளைப் பாட்டாளிகளைக் கருத்தியல் மற்றும் அரசியல் ரீதியாக ஆயுதம் தரிக்கச் செய்வதில் அவர் அர்ப்பணித்தார். பூர்ஷ்வா மற்றும் குட்டி பூர்ஷ்வாகளின் வரட்டு அரசியல் (polemic) தர்க்கப் போக்குகளுக்கு எதிராகத் தளர்வின்றி அவர் தொழிலாளர் வர்க்கத்தின் கருத்தியல், அரசியல் மற்றும் அமைப்புச் சுதந்திரத்திற்காகப் போராடினார்.

 ஏற்கனவே நரோத்னிக்களுக்கு எதிரான அவரது முதல் எழுத்தாக்கங்களில் அவர், விஞ்ஞான பொருள்முதல்வாதத்திற்கு ஆதரவாகத் தனது மைய அழுத்தத்தை வலியுறுத்தினார். சோசலிச இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக அவர் கறார்தன்மை- யுடனும் தொடர்ச்சியாகவும் போராடினார். சந்தர்ப்பவாதம் சாதாரண தவறான கொள்கை மட்டுமல்ல என்பதைப் புரிந்து கொண்ட லெனின், அது பாட்டாளிகளின் மீது வர்க்க விரோத சக்திகளின் செல்வாக்கு சூழ்ந்ததன் அடையாளம் என்றார்.

இவ்வாறு லெனின் போல்ஷ்விக் கட்சியைத் தோற்றுவித்தார், அது ரஷ்யப் பாட்டாளிகளை 1917ல் ஆட்சி அதிகாரத்திற்கு இட்டுச் சென்றது. ஸ்டாலின் காலத்தின் கீழ் நடந்தது போல் அல்லாமல், போல்ஷ்விஸம் என்பது உறுப்பினர்கள் மீது ஆட்சி அதிகாரக் கட்டமைப்பின் அதிகாரம் என்று பொருள்படாது; மாறாக, (கட்சி) செயல் திட்டங்களின் தெளிவுக்கான தளர்வற்ற போராட்டம் அது என்று பொருள்படும் – அது கட்சிக்கு அதுவரை இல்லாத பலத்தையும் செயல்பாட்டு ஒற்றுமையையும் அளிக்கும்.

 லெனின் ஒவ்வொரு வகையிலும் முழுமையாக ஒரு சர்வதேசியவாதி. சரியாக 1917 ஏப்ரல் தீசிஸ் அறிக்கையுடன் அவர், (மென்ஷ்விக்-களின்) கெரென்சி அரசை முழு சக்தியுடன் வெற்றி கொண்டு தொழிலாளர்களின் சக்தியால் மாற்றி அமைப்பது என்பதை அங்கீகரித்தார்.

 அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு லெனின் – மக்களின் உள்நாட்டு போர் மற்றும் தீவிர பொருளாதாரக் கஷ்டங்கள் இருந்த போதிலும் – உலக சோசலிச இயக்கத்தை மறு சீரமைப்பதிலும், கம்யூனிஸ்ட் அகிலத்தைக் கட்டி அமைப்பதிலும் தனது பெரும் சக்தியைக் குவித்தார். 

 லெனின் காலத்தில் இருந்ததைவிட முதலாளித்துவத்தின் சிதைவு மற்றும் உலக சோசலிசப் புரட்சிக்கான யதார்த்த முன்நிபந்தனைகள் இன்று மிகவும்  மாறி முன்னேறி உள்ளன.  இன்னும் பொருளாதார ரீதியில் பின்தங்கியதாகவும் விவசாயம் சார்ந்ததாகவும் அப்போது இருந்த உலகின் பெரும் பகுதிகளில், இப்போது பல நூறு லட்ச கணக்கில் பாட்டாளி தொழிலாளர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரப்


போராட்டம், ஐக்கியப்பட்டு ஒன்றுபட்ட இயக்கமாக மேம்பட்டு வளர்ந்துள்ளது.
இது, பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வெட்டுவது மற்றும் யுத்தத்திற்கு எதிராகப் பெருந்திரள் ஆர்பாட்ட எதிர்ப்பு இயக்கங்கள் கூர்மையாக வளர்ந்துள்ளதில் வெளிப்படுகிறது. காசாவில் நடத்தப்படும் இனப்படுகொலைக்கு எதிராக உலகெங்கும் பல பல லட்சம் மக்கள் தெருவில் இறங்கிப் போராடுகின்றனர்.

லெனின் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தையும் காலத்திற்கேற்ற பொருத்தப்பாட்டையும் காட்டுகிறது இது.

 வாழ்க தோழர் லெனின் புகழ்!

தமிழில்: நீலகண்டன்,

 என் எஃப் டி இ, கடலூர்.

No comments:

Post a Comment