கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 121
கோட்பாட்டாளர், கம்யூ.இயக்க
நிறுவனர்
--அனில் ரஜீம்வாலே
SAD என அல்லது சுருக்கமாக ‘D’எனவும் அறியப்படும்
எஸ்ஏ டாங்கே, உண்மையில் தொழிலாளர் வர்க்கத்திலிருந்து முகிழ்த்து உருவான இயற்கையான
அறிவுஜீவி, சோஷலிச அறிவியல் அடிப்படையில் வர்க்கப் போராட்ட அமைப்பாளரும் கம்யூனிஸ்ட்
இயக்கம் கட்டியெழுப்பிய நிறுவனரும் ஆவார். அதே நேரத்தில், இந்தியச் சமூகம் மீது மார்க்சிய
–லெனினியக் கருத்தியலைக் கறாராகப் பயன்படுத்திய கோட்பாட்டாளரும் கூட. சமஸ்கிருத மொழியைக்
கற்றறிந்த பேரறிஞரான அவர் உற்பத்தி சக்திகள், உற்பத்திச் சாதனங்கள், உற்பத்தி உறவு
மற்றும் கருவிகள் மீதான இந்தியத் தத்துவ எண்ண ஓட்டங்களின் போக்குகளைத் தேடிக் கண்டடைந்தார்.
தொடக்க வாழ்க்கை
ஸ்ரீபத் அம்ரித் டாங்கே, 1899 அக்டோபர் 10ம் நாள் மகாராஷ்டிரா
நாசிக் மாவட்ட நிபாத் தாலுக்காவின் கரஞ்கௌண் கிராமத்தில் பிறந்தார். தந்தை ஒரு சொலிசிட்டர்
நிறுவனத்தில் எழுத்தர். வெறும் ஒரு வயதானபோதே டாங்கே தாயை இழந்தார். தந்தை, டாங்கேவைக்
கவனித்துக் கொள்ள குழந்தையின் மாமா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மராத்தியப் பெண்மணியை
அனுமதித்தார். அப்பெண்மணி நாசிக் நகருக்கு நெருக்கமான தனது கிராமத்திற்கு டாங்கேவை
அழைத்துச் சென்று, பிறகு அங்கே இடம் மாறினார். டாங்கே நாசிக் உயர்நிலைப் பள்ளியில்
ஆறாம் வகுப்பு வரை படித்தார், பிறகு பம்பாய் சென்று பர்தா உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத்
தொடர்ந்தார். பள்ளி நாட்களிலேயே அவர் புத்தகப் புழுவாக ஏராளமான நூல்களைப் படிப்பவராக
இருந்தார்.
பள்ளிக்கல்வி முடித்த பின்
பம்பாயின் புகழ்பெற்ற வில்சன் கல்லூரியில் சேர்ந்தார், விரைவில் ‘கல்லூரி வாழ்க்கை
இளைஞர்கள்’ (The Young Collegiate) என்ற மாத இதழைத் தொடங்கினார். அருமையான பத்திரிக்கையான
அதன் நகல்கள் இன்னும் வில்சன் கல்லூரி நூலகத்தில் உள்ளன. விரைவில் டாங்கே மாணவர் தலைவரானார்,
கல்லூரியில் கட்டாய பைபிள் போதனை வகுப்பை எதிர்த்து மாணவர்களின் கண்டன இயக்கத்தைத்
தலைமை ஏற்று நடத்தினார். மேலும் அவர் மராத்தி மொழி இலக்கிய அமைப்பு நிறுவக் கோரி, ஓர்
இயக்கத்தைத் தொடங்கி, வெற்றிகரமான வேலைநிறுத்தத்தையும் அமைத்து நடத்தினார்.
லோகமான்யாவின் தாக்கம்
அது இளைஞர்கள் மத்தியில் தேசிய உணர்வு எழுச்சி பெற்று வந்த காலம். அதில் லோகமான்ய திலகர் பிரதான பங்கு வகித்தார். அவர் எழுதிய கீதா இரகசியம் டாங்கே மீது
செல்வாக்கு செலுத்தி அதன் ‘கர்மயோகம்’ (என் கடன் பணி செய்து கிடப்பது) அவரை ஈர்த்தது. கீதாவின் மேலெழுந்தவாரியான பொருளைத் தாண்டி பார்க்க முடிந்த டாங்கே, சமூகத்தின் (பௌதீக) பொருள்வயமான செயல்பாடுகளுக்குள் பார்த்தார். லோகமான்ய பாலகங்காதர திலகர்
அவரை ஊக்கப்படுத்தி, தீடீரென்று 1918ல் பரவிய இன்ப்புளுவன்ஸா தொற்றுக் காய்ச்சலின்போது
தொழிலாளர் குடியிருப்புக் காலனிகளில் நிவாரணப் பணிகளில் அவரை ஈடுபடச் செய்தார்.
அந்த
நிகழ்வின் விளைவு, வாழ்நாள் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்துடன் உறவு கொள்ளச் செய்தது.
திலகரின் புகழ்பெற்ற ‘கேசரி’ (அரிமா, சிங்கம்) தினசரி பத்திரிக்கை நிக்கோலாய் லெனின்
மற்றும் ரஷ்யப் புரட்சியின் வரலாற்றை இரண்டு தொகுதிகளாக 1920ல் பிரசுரித்தது; அது ரஷ்யப்
புரட்சியின் கருத்தியல் மற்றும் மார்க்சியத்துடன் அவரைத் தொடர்பு கொள்ளச் செய்தது.
இப்போது அவரால் தனது சொந்தமான சுதந்திரப் பாதையைக் கண்டறிய முடிந்தது. 1921ல்
ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார்; சில காலம் பின்பு 1921ல் அவர் எழுதிய ‘காந்தி எதிர் லெனின்’ நூலில் அவரால் காந்தியக் கருத்தியலை விமர்சனபூர்வமாக அணுக முடிந்தது. அந்த நூல்தான் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மார்க்சிய அடிப்படையிலான முதலாவது ஆய்வு நூல்.தி சோஷலிஸ்ட்
‘காந்தி எதிர் லெனின்’
நூல், திலகரின் சக கூட்டாளியான ஆர்பி லோட்வாலா கவனத்தை ஈர்த்தது. மார்க்சிய நூல்கள்
உட்பட ஏராளமான புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த அவரது நூலகத்தை டாங்கேவிடம்
வழங்கினார். டாங்கே வித்தல்பாய் பட்டேலின் செயலாளர் ஆனார். மேலும் அவர் ‘இந்து பிரகாஷ்‘
என்ற மராத்தி தினசரியில் சேர்ந்து அதன் மூலம் சோஷலிசப் பிரச்சாரம் செய்தார். அது போதாது
என்று உணர்ந்தவர் 1922ல் தனது சொந்த இதழாக, இந்தியாவின் முதலாவது மார்ச்சியப் பத்திரிக்கையான
‘தி சோஷலிஸ்ட்’ இதழைத் தொடங்க தனது வீட்டு உடமைகளை விற்றார்!
அந்த இதழ் அரசியல், வரலாறு,
தத்துவம் என விரிவான விஷயங்கள் முதல் மார்க்சிய அடிப்படைகள் வரை விளக்கமாகப் பேசியது.
மேலும் டாஙகே, ‘பண்டைய இந்தியாவில் குடும்பமுறையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி’ மீதான
புகழ்பெற்ற வரலாற்றாளர் ராஜ்வடே அவர்களின் படைப்பாக்கத்தையும் வெளிட்டார்.
1922 செப்டம்பர் 22ம் தேதியிட்ட
தி சோஷலிஸ்ட் இதழ், தேசியக் காங்கிரஸ் கட்சிக்குள் ‘இந்தியச் சோஷலிஸ்ட் கட்சி’ நிறுவப்பட்டதாக
அறிவித்தது. தி சோஷலிஸ்ட் இதழ் மாஸ்கோவில் இருந்த எம்என் ராயை அடைந்தது; மேலும் , காமின்டர்ன்
அமைப்பின் காலனியக் குழு, டாங்கேவைச் சந்தித்துக் கம்யூனிஸ்ட் அகிலத்தின் காங்கிரஸில்
(Comintern congress,1922) கலந்து கொள்ள சம்மதிக்கச் செய்ய சார்லஸ் ஆஷ்லெய்க்-கை
(Charles Ashleigh) அனுப்பியது. நேதாஜி சுபாஷ் சந்திர போசும் அழைக்கப்பட்டார். டாங்கேவை ஆஷ்லெய்க்
சந்தித்தார். ஆனால் போலீஸ் தலையீடு காரணமாக அவர்களால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை.
ஒத்துழைமை இயக்கமும் மாணவர் மாநாடும், 1920
ஒத்துழையாமை இயக்கப் பின்னணியில், அனைத்திந்தியக் கல்லூரி
மாணவர்கள் மாநாடு (AICSC) நாக்பூரில் நடைபெற்றது. காந்திஜி தலைமையிலான ஒத்துழையாமை
இயக்கத்திலும் பங்கேற்ற டாங்கே, மாணவர்கள் குழுவுடன் நாக்பூர் சென்றார். மாநாடு மற்றும்
ஒத்துழையாமை இயக்கம் இரண்டிலும் வலதுசாரி இடையூறுகளிலிருந்து காக்க உதவினார். மாணவர்
தலைவராக டாங்கே அறியப்பட்டவர் இல்லை. வில்சன் கல்லூரியில் அவர் ஒத்துழையாமை இயக்க வேலை
நிறுத்தத்தத்தை தலைமை ஏற்று நடத்தியதால் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். பின்பு
அவர் தேசியப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
கான்பூர் சதி வழக்கு, 1924-28
எழுச்சிபெற்று வந்த சோஷலிசத்தை நசுக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கான்பூர் சதி வழக்குத் தொடுத்தனர். 1924 மார்ச் 3 அன்று முஸாஃபர் அகமது, நளினி குப்தா மற்றும் சௌகத் உஸ்மானியுடன் டாங்கே கைது செய்யப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கி எறிய சதி செய்ததாகக் குற்றம் சாட்டி அவர்களுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்ட அந்த முதல் தாக்குதல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தியது.
சிபிஐ அமைப்பு மாநாடு, 1925
சிலகாலமாக கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்கு நடந்து வந்த கலந்துரையாடல்களில் டாங்கே
முன்னிற்க, விவாதிக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் மக்கள் இயக்கங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து துண்டிக்கப்பட்டு வெளிநாட்டு மண்ணில், கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கும் கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து அயல்நாட்டில் இருந்த எம்என் ராய் மற்றும் பிறருடன் அவர் உடன்படவில்லை. கம்யூனிஸ்ட்கட்சி இங்கே, தொழிலாளர் வர்க்கம் மற்றும் தேசிய இயக்கங்களின் அங்கமாக அமைக்கப்பட வேண்டும் என்றார். இந்த உணர்வுகளை 1923ல் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலருக்கு எழுதிய கடிதத்தில் டாங்கே வெளிப்படுத்தினார். கான்பூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கும் நிகழ்வுகளை டாங்கே, காட்டே,
மிராஜ்கர், நிம்கர், ஜோக்லேக்கர் முதலானவர்கள் உள்ளடக்கிய வலுவான கம்யூனிஸ்ட்கள் குழு
பம்பாயில் கவனித்து வந்தது. அவர்கள் கான்பூர் மாநாட்டில் (1925) இணைந்து கொள்ள முடிவு
செய்தனர்; எனினும், கான்பூர் சதி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதால் மாநாட்டில் டாங்கே
கலந்துகொள்ள இயலவில்லை.
‘பம்பாய் குழு’ சிபிஐ அமைப்பு மாநாட்டில் தீவிரப் பங்கு வகித்துச்
செயலாற்றியது. இரண்டு பொதுச்செயலாளர்களில் ஒருவராக காட்டே மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வரலாற்றுப் புகழ்பெற்ற பம்பாய் GKU வேலைநிறுத்தம்
சிறை மருத்துவமனையில் டாங்கே ஆற்றிய உண்மையான சேவைகள் காரணமாக
அவரது சிறை தண்டனை ஓராண்டாகக் குறைக்கப்பட, அவர் 1924 மே 24ல் விடுதலையாகி தொழிலாளர்
வர்க்க மற்றும்அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பம்பாய் மாகாணக் காங்கிரஸ் கமிட்டிக்குள்
ஒரு பலமான இடதுசாரி குழு அமைக்கக் காரணமாக இருந்தார். மேலும் அவர்கள் தொழிலாளர்கள் மற்றும்
விவசாயிகள் கட்சி அமைப்பதிலும் உதவினர்; அது (இந்திய உறுப்பினர்கள் இடம்பெறாத பிரிட்டிஷ்
அரசு நியமித்த சட்ட ஆணையமான) ‘சைமன் குழுவே திரும்பச் செல்’ என்ற மாபெரும் போராட்டத்தைத்
திரட்டி நடத்தியது மட்டுமல்ல, சைமன் குழு பம்பாய் வருவதையே அவர்கள் அனுமதிக்கவில்லை.
பம்பாய் டெக்ஸ்டைல் ஆலைத்
தொழிலாளர்களின் சங்கமான ‘கிர்ணி காம்கர் யூனியன்’ அடிப்படையில் டாங்கே மூளையில் உதித்த
குழந்தை. ஆசியாவின் மிக நீண்ட காலம் நடத்தப்பட்ட பிரம்மாண்டமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
1928 ஏப்ரலில் தொடங்கி ஆறு மாதங்கள் நீடித்தது. டாங்கே என்றாலும், தொழிலாளர் வர்க்கமென்றாலும்
ஒன்றே என பரஸ்பரம் அடையாளப்படுத்தப்பட்டன. அந்த வேலைநிறுத்தம், பொருட்கள் வழங்கலில்
‘ரேஷன்முறை’ அமலாக்கத்திற்கும், ஊதியத்தில் ½ சதவீதம் வெட்டியதற்கும் எதிராக நடத்தப்பட்டது.
ஒவ்வொரு நாளும் கூடியிருந்த தொழிலாளர்களுக்கு மார்க்சிய கோட்பாடுகள் மற்றும் பிற விஷயங்கள்
மீது வகுப்புகள் நடத்தப்பட்டன. கிர்ணி காம்கர் யூனியன் ஆசியாவில் மிகப் பெரிய சங்கமாக
84,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
தொழிலாளர் இயக்கத்தில் பொருளாதாரக்
கோரிக்கைகளை (எக்கானிமிஸம்) ஒருபுறம் ஒதுக்கி வைத்து, வர்க்க அரசியல் மிகுந்து ஆதிக்கம்
செலுத்த, தொழிலாளர்களை அது தேசிய இயக்கத்திலும்கூட ஈடுபடச் செய்தது. டாங்கே மீதிருந்த
மதிப்பு மரியாதை, கிர்ணி காம்கர் யூனியன் முன்னணித் தொழிலாளியான பாபா மியான் (Papa Miyan) என்பவரின்
உணர்ச்சி மிகு நெகிழ்வான வார்த்தைகளில் பிரதிபலித்தது. வேலைநிறுத்தம் செய்ததைத் தொடர்ந்து
புனைந்துரைக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுகள் காரணமாகத் தூக்கிலிடப்பட்ட மியானின் வார்த்தைகள்
இவை: “நமது வணக்கத்தைச் சங்கத்திற்குச் செலுத்துவோம்! தொடர்ந்து போராட்டத்தை நடத்துவோம்!
டாங்கே சாகேப்புக்கு நாங்கள் பெரிதும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்!”
மீரட் சதி வழக்கு, 1929 –33
கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்
வர்க்கத் தலைவராக வர்க்கப் போராட்டத்தை மேலெடுத்துச் சென்று ஆதரிப்பதில் உறுதியாக நிலைபெற்ற
டாங்கே கூறினார்: ”மார்க்சியம், லெனினியம் அல்லது கம்யூனிசத்தை நான் பின்பற்றும்போது,
இந்த நாடு அல்லது அந்த நாட்டின் மாதிரி முறையை நான் பின்பற்றுவதில்லை; மாறாக, சமூகத்தை
மறுகட்டமைப்புச் செய்யும் மாதிரி முறையை (method) பின்பற்றுகிறேன்.” கம்யூனிசத்தை நசுக்கும் பிரிட்டிஷ் முயற்சியின்
ஒரு பகுதியாக 1929 மார்ச் 29ல் மீரட் சதி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். பூர்ஷ்வா
ஜனநாயக மற்றும் விடுதலை இயக்கத்தில் தொழிலாளி வர்க்கத்தின் முக்கிய பங்கை விவரித்ததுடன்
மார்க்சியக் கொள்கைகளைப் பட்டியலிட்ட டாங்கே, குறிப்பாக டெக்ஸ்டைல் பற்றியும் பொதுவாக
ஆலைதொழில் மற்றும் விரிவான தொழிலாளர் வர்க்கம் குறித்த ஓர் ஆழமான ஆவணமாகவும், நீண்ட
பெரும் அறிக்கையை நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதமாகத் தாக்கல் செய்தார். அதன் விளைவு
: 12 ஆண்டுகள் சிறை தண்டனை. இருந்தும், உயர் நீதிமன்ற நீதிபதி தவிர்க்க முடியாதபடி
குறிப்பிட நேர்ந்தது –வழக்கின் முழு ஜோடிப்பும், சாட்சியம் இல்லாத, ‘பவுண்டன் (மை)
பேனா சதி.’ மேலும், கிர்ணி காம்கர் யூனியன் மூலம் தொழிலாளர்கள் மீது டாங்கேவின் செல்வாக்கும்
பிடிப்புமே கைது செய்யப்படுவதன் பின்னணியில் இருந்த முக்கிய காரணம் என்பதையும் அவர்
ஒப்புக்கொண்டார்.
1933ல் விடுதலையான டாங்கே
கட்சி மத்திய அமைப்பின் அங்கமானார். மீண்டும் 1940ல் அவர் கைது செய்யப்பட்டு தியோலி
சித்திரவதை முகாமில் அடைக்கப்பட்டார். தியோலி முகாமில் இருந்து அவர் மற்றவர்களுடன்
சேர்ந்து மக்கள் போர் (பியூபிள்ஸ் வார்) மீது, கட்சி கொள்கைநிலையின் புதிய செல்நெறியை
(நியூ பார்ட்டி லைன்) வடிவமைத்துக் கடிதம் எழுதினார்.
டாங்கே, சிபிஐ மத்தியக் கமிட்டி
உறுப்பினராக 1943ல் நடைபெற்ற முதலாவது கட்சிக் காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
AICCல்
1920களின்
இறுதியில் டாங்கேவும் அவரது ‘பம்பாய் குழு’வும் பம்பாய் மாகாண காங்கிரஸ் கமிட்டி (BPCC) உறுப்பினர்களானார்கள். மீரட்டிலிருந்து விடுதலையான
பிறகு டாங்கே அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி (AICC)
உறுப்பினரானார். (மகாராஷ்டிரா ஜல்கான் மாவட்ட) ஃபைஸ்பூர் காங்கிரஸ் அமர்வில் (1937) அவர் பங்கேற்றார்.
‘சுய மரியாதை’ இயக்கம்
கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க இயக்கங்களை அமைப்பதில் உதவிட டாங்கே நெருக்கமாகவும் கூட்டாகவும் எம் சிங்காரவேலுவுடன் பணியாற்றினார். 1920களின் தொடக்கத்திலிருந்தே அவர்கள் தொடர்பில் இருந்தனர். மெட்ராசில் ‘சுய மரியாதை’ இயக்கத்துடன் டாங்கே இணைந்து பங்குபெற்றார்; அது, ‘சோஷலிசச் சுயமரியாதை இயக்கம்’ என்ற அமைப்பாக மலர்ந்தது. 1937 நவம்பரில் மெட்ராசில் நடத்தப்பட்ட ‘சுயமரியாதை சோஷலிச மாநாட்டில்’ டாங்கே கலந்து கொண்டார்.
தொழிற்சங்கத் தலைமைப் பொறுப்பில்
1943 –44ன் போழ்து டாங்கே முதன் முறையாக ஏஐடியுசி பேரியக்கத்
தலைவராகத் (சேர்மன்) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1944 –45ன் போழ்து லண்டனில் நடைபெற்ற
உலகத் தொழிற்சங்க மாநாட்டிற்கு அவர் பிரதநிதியாகக் கலந்து கொண்டார். 1945 அக்டோபரில்
உலகத் தொழிற்சங்கச் சம்மேளனச் (WFTU) செயற்குழு உறுப்பினராகவும், பின்னர் அதன் ஜெனரல் கவுன்சில்
தலைவராகவும் ஆனார். பிப்ரவரி 1947ல் டாங்கே மீண்டும் அனைத்திந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்
(AITUC) தலைவரானார்; தொடர்ந்து ஏஐடியுசி அமைப்பின் பொதுச் செயலாளராக அல்லது தலைவராக
நீடித்தார்.
BTR
காலம்
டாங்கே ஊசலாட்டமில்லாது உறுதியாகக் குழுவாதப் போக்கு மற்றும்
வறட்டுக் கோட்பாட்டு பிடிவாதப் போக்கை (செக்டேரியனிசம் மற்றும் டாக்மேட்டிசம்) எதிர்த்தார்.
1948 –50ல் குழுவாதப் போக்கு உச்சத்தில் இருந்த பிடிஆர் பாதை காலத்தின்போது, டாங்கே
எதார்த்த நிலை எடுத்து, கட்சி சரியான பாதையைக் கண்டு பிடிக்க உதவினார். அஜாய் கோஷ்
மற்றும் எஸ்வி காட்டேவுடன் இணைந்து அவர் புகழ்பெற்ற “மூன்று Pகளின் கடிதம்”
எழுதினார். (P என்பது, தலைமறைவு வாழ்க்கையின்போது அந்தத் தலைவர்களின் ஆங்கில
எழுத்து Pல் தொடங்கிய புனைப் பெயர்களைக் குறிக்கும்); 1950 செப்டம்பரில் சுற்றுக்கு விடப்பட்டு
பரவலாக விவாதிக்கப்பட்ட அக்கடிதம், பிடிஆர் பாதை மற்றும் ஆந்திரா பாதையைக் கூர்மையாக
விமர்சித்து, எதார்த்தமாகப் பரிசீலிக்கப்பட்ட இந்தியச் சூழ்நிலை குறித்து யோசனை தெரிவித்தது. கட்சியைச்
சரியான ஓடு பாதைக்குக் கொண்டு வந்ததில் அக்கடிதம் பெரும் பங்கு ஆற்றியது.
இதைத் தொடர்ந்து சிபிஐ தூதுக் குழு ஒன்று, சிபிஐ நிலையை விவாதிக்க ஜோஸப் ஸ்டாலினையும் பிற சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட்
கட்சி (CPSU) தலைவர்களையும் சந்தித்தது. (அப்போது CPSU, அனைத்து ஒன்றியக் கம்யூனிஸ்ட் கட்சி, AUCP, ‘ஆல் -யூனியன்
கம்யூனிஸ்ட் பார்ட்டி’ என்று இருந்தது.) டாங்கே தெளிவாகவும் வெகு நுட்பமாக அனைத்து
விவரங்களுடனும் தனது சொந்த மதிப்பீட்டை முன் வைத்தார்.
கட்சி தலைமைப் பொறுப்பில்
அடுத்து டாங்கே பொலிட் பிரோவுக்கும்
பின்னர் சிபிஐ தேசியச் செயலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1958 அமிர்தசரஸ் கட்சி
காங்கிரசில் கட்சி செயல்திட்டத்தை (பார்ட்டி ப்ரோகிராம்) அளித்தார்; மேலும் கட்சி செயல்திட்டம்
குறித்த அவரது சொந்தப் பார்வையும் சுற்றுக்கு விடப்பட்டது. ஆர்வமூட்டும் இந்த ஆவணத்தில்
டாங்கே கட்சி தொடங்கியதிலிருந்து, கட்சி பின்பற்றிய கட்சி செயல்திட்டம் பற்றிய முழுமையான
வரலாற்றின் சுவடுகளைத் தேடித் தொகுத்து வழங்கியிருந்தார்.
1962ல் SAD (எஸ்ஏ டாங்கே)
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1950களின் கோவா விடுதலை இயக்கம்
SAD 1955 –56ல் கோவா
சத்தியாகிரகத்தின் முன்னணி சிற்பியாக, கோவா எல்லைகளுக்குச் சத்தியாகிரகிகளின் பெரும்
அணிகளை நடத்திச் சென்றார். நூலிழையில் துப்பாக்கித் தோட்டாக்களின் தாக்குதலிருந்து
தப்பினார். சத்தியாகிரகப் போராட்டத்தில் பல உயிர்கள் பலியாயின.
அத்தனை உயிரிழப்புககளை அடுத்து
கோவா எல்லைகளில் சத்தியாகிரகத்தை விலக்க வற்புறுத்தியவர் டாங்கேதான். சத்தியாகிரகத்தை
விலக்கதான் வேண்டும், வேறு எங்காவது இடம் மாற்றி விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்ற
வேண்டும் என்றார். 1961 டிசம்பர் 19ல் கோவா (போர்த்துகீசிய ஆட்சியிலிருந்து) விடுதலை
பெற்றது.
சம்யுக்த மகாராஷ்டிரா போராட்டம், 1956-60
மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்புடன்
கூடிய சம்யுக்த (ஒன்றுபட்ட) மகாராஷ்டிரா இயக்கத்துடன் டாங்கே பெயர் பிரிக்க முடியாதபடி
தொடர்புடையது. அந்தக் கோட்பாட்டை உருவாக்கியவர் அவர் மற்றும் பிகே ஆத்ரே, எஸ்எம் ஜோஷி,
பீட்டர் அல்வாரேஸ், வி டி சித்தாலே மற்றும் பிறருடன் டாங்கே முன்னணித் தலைவராக அப்போராட்டத்தில்
விளங்கினார். பிரம்மாண்டமான நீண்ட நெடிய அப்போராட்டம், மராத்தி மொழிபேசும் மக்களின்,
பம்பாய் உள்ளிட்ட, மகாராஷ்டிரா மாநிலமாக மே 1ம் நாள் 1960ல் அமைக்கப்பட்டதுடன் வெற்றிகரமாக
முடிந்தது.
தலைச் சிறந்த பாராளுமன்றவாதி
சட்டமன்றங்களுக்குள் டாங்கேவின்
பங்களிப்பு, போராட்டங்கள் போன்றே சமமாக ஒப்புயர்வற்றது. தொழிலாளர்கள் தொகுதியிலிருந்து
1946ல் பம்பாய் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தொழிலுறவு மசோதா மீது
வரலாறுப் புகழ்பெற்ற 9 மணி நேர நீண்டதொரு உரையாற்றினார். 1957ல் நாடாளுமன்ற மக்களவைக்கு
ஆக மிகப் பெரும் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1967ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மக்களவை விவாதங்களின்போது பலதரப்பட்ட விஷயங்களில் ஆழமான சிந்தனையைக் கிளறும் வகையில்
இடைமறித்துப் பேசும் தலைச்சிறந்த பாராளுமன்றவாதி. அவரது உரைகள் பெரும் அமைதிகாத்து
கேட்கப்பட்டன; அவைக்கு வெளியே முற்றங்களில் இருக்கும் உறுப்பினர்கள்கூட அந்த உரைகளைக்
கேட்க விரைவது வழக்கம். அவரது உரைகளைக் கேட்பதில் பிரதமர் நேரு அக்கறை காட்டுவார்.
சிபிஐ சேர்மனாக
1960களில் சிபிஐ உட்கட்சி நெருக்கடியின்போது, கருத்தியல்
பிரச்சனைகளை விளக்குவதில் தலைச் சிறந்த பங்காற்றிய டாங்கே, விவாதங்களை உயர்ந்த மட்டங்களுக்கு
எடுத்துச் சென்றார். எப்போதும் காலத்திற்கு முந்தியிருந்ததால் அவரது எதிர்பார்ப்புக்
கருத்துகளும்கூட சர்ச்சைகளை ஏற்படுத்தியது. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முதலில்
மாவோயிசத்தை வெளிப்படையாக விமர்சித்தவர் அவர்தான்; மற்றும் சீனாவைப் பெரும் அதிகார
ஆதிக்க மனப்பான்மை குணமுடையதாக வரையறுத்தார். அவருடைய பல கணிப்புகள், (எச்சரிக்கைகள்)
பிற்காலத்தில் உண்மையாயின. அவரே முதலில் சீன ஆக்கிரமிப்பைக் கண்டித்தார்.
நெருக்கடியின் மத்தியில்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்மன் (தலைவர்) பதவி உருவாக்கப்பட்டு டாங்கே அந்தப்
பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இஎம்எஸ் நம்பூதிரிபாத் பொதுச் செயலாளராக்கப்பட்டார்.
1964 கட்சி பிளவின்போது டாங்கே
சிபிஐ கட்சியைக் காப்பாற்ற முக்கியப் பங்காற்றினார், பிரச்சனைகளை மக்கள் திரளுக்கு
விளக்கினார்.
பெருந்திரள்மக்கள் தலைவர்
டாங்கேதான், கேரோ (முற்றுகையிடுதல்),
பந்த் (கதவடைப்பு), ‘டெல்லி பேரணி’ போன்ற பெருந்திரள் மக்கள் இயக்கப் போராட்டங்களின்
பல்வேறு வடிவங்களை வளர்த்தெடுத்தவர். முதன் முதலாக ‘டெல்லியை நோக்கி பேரணி’ அவரது முன்னெடுப்பில்
1963 செப்டம்பர் 13ல் சிபிஐ பதாகையின் கீழ் நடத்தியபோது அந்தப் போராட்டத்தில் சுமார்
இரண்டு இலட்சம் மக்கள் டெல்லியில் திரண்டனர். பேரணிக்கு முன்னதாக நாடு முழுவதும் கையெழுத்தியக்கம்
நடத்தி கோரிகை சாசனத்தில் ஒரு கோடியே 25 இலட்சம் மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
கையெழுத்திட்ட மனுக்களை மாபெரும் கட்டுக்கட்டாக மக்களவை சபாநாயகரிடம் பேரணி அளித்தது.
டாங்கே மக்களின் நாடி நரம்பு
உணர்வுகளை அறிந்தவர், ஓர் இயக்கத்தை எப்போது தொடங்க வேண்டும், எப்போது அதை விலக்கிக்
கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்தவர். பல இலட்சம் மக்கள் கூடியிருக்கும் கூட்டங்கள்
ஆகட்டும், உள்ளரங்கக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள், அறிஞர்கள் கூடியுள்ள சபை அல்லது
சர்வதேச மாநாடுகள் இப்படி எதுவாயினும் சரி, எல்லா இடத்தும் அவர் ஓர் அசாதாரணமான சொற்பொழிவாளர்.
‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப மொழி’யும் சொல்லாற்றல் மிக்கப் பேச்சாளர்.
கேட்போர் பேரமைதி காத்து அவர் கருத்துக்களைக் கவனித்துக் கேட்பார்கள். கற்றறிந்த பேரறிஞர்களுடன்
இயல்பாக உரையாடுவதைப் போலவே, எழுத்தறிவில்லா விவசாயத் தொழிலாளர்களுடனும் கலந்துரையாடுவார். அவரது உரைகள்
அதே நேரத்தில் மார்க்சிய-- லெனினிய அடிப்படைகள் மீதான வகுப்புகளாகவும் விளங்கும்.
பேரறிவாளர் மற்றும் எழுத்தாளர்
நாடாளுமன்றச் செயல்பாடுகள், போராட்டங்கள், சொற்பொழிவுகளில்
முத்திரை பதித்த அதே நேரத்தில் டாங்கே, ஈடுஇணையற்ற அறிவாளியாக, வேறு யாரையும்விட மார்க்சியத்
தத்துவங்களைப் பயின்று தேர்ந்த ஆளுமையாக விளங்கினார். அவரது ஆழமான, சுயமான உள்முகப்
பார்வைகளை அவரது படைப்புக்களில் காணலாம். உதாரணத்திற்கு, (கான்பூர் போல்ஷ்விக் சதி
வழக்கில் சிறையில் இருந்தபோது, பிரிட்டிஷ் சிறைச்சாலைகள் குறித்த கொடுமையான விவரங்களை
அனுபவபூர்வமாக விவரிக்கும்) ஹெல் ஃபவுண்டு (நரகத்தைக் கண்டேன், 1922), Defence of Defiance (‘கீழ்ப்படியாமையின் நியாயம்’, 1932 மீரட் வழக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள்
தரப்பு வாதம்), இலக்கியமும் மக்களும் (1943), இந்தியாவில் தொழிற்சங்கங்களின் தோற்றம்
(1974), கம்யூனிஸ்ட்(கள்) மாறுபடும்போது (1970), இந்தியா –பண்டைகால கம்யூனிசம் முதல்
அடிமைத்தனம் வரை (1949, பல்வேறு முறைகளில் பல பதிப்புகள் கண்ட நூல்), இந்திய வரலாற்றுப்
பிரச்சனைகள் (1954), தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள், காந்தியும் வரலாறும் (1969), 12
சொற்பொழிவுகள் மற்றும் எண்ணற்ற பிற புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் ஆய்வுகள் என டாங்கேவின்
படைப்புகள் எண்ணற்றவை. பெருமைமிகு கல்வி நிறுவனங்கள், தனித்த சிறப்புடைய அமைப்புகள்
மற்றும் பல்கலைக் கழகங்கள் டாங்கேவை அரசியலிருந்து வரலாறு வரை, இந்தியத் தத்துவம்,
மார்க்சியம், மொழியியல், பொருளாதாரம் என இப்படிப் பல்வேறு விரிந்த பொருள்கள் குறித்து
உரையாற்ற அழைத்தன. கற்றறிந்த கல்விப் புலன சான்றோர்களால் அவரது உரைகள் கவனச் சிதறல்
இன்றி உன்னிப்பாகக் கேட்கப்பட்டன.
விருதுகள்
இறுதி ஆண்டுகள்
இறுதி ஆண்டுகளின்போது,
எஸ்ஏ டாங்கே 1981ல் AICPல் சேர்ந்தார்
(‘ஆல் இன்டியா கம்யூ.கட்சி’; பின்னர்
அது, ‘ஐக்கிய இந்தியக் கம்யூ. கட்சி’ UCPI என்றானது). இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்மன் பதவி ஒழிக்கப்பட்டது.
அக்காலகட்டத்தில் பெருமளவு அவர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். உடல்நலமின்றி,
நீண்டகால நோய் பாதிப்பிற்குப் பின் பம்பாயில் 1991 மே 22ம் தேதி இயற்கை எய்தினார்.
டாங்கே
எத்தகையதொரு அறிவார்ந்த கம்யூனிஸ்ட், மார்க்சியச் சிந்தனையாளர், அவரது பங்களிப்புகள்
அவரது படைப்புக்களின் வழி நிலைபெற்று வாழும்.
--நன்றி : நியூஏஜ் (2025, ஜன.19 –25)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்
No comments:
Post a Comment