கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 122
சர்ஜூ பாண்டே
: பழம்பெரும் உ.பி. கம்யூனிஸ்ட் தலைவர்,
1942 இயக்கத்தின்
கதாநாயகன்
--அனில் ரஜீம்வாலே
சர்ஜூ பாண்டே, உ.பி. மற்றும் இந்தி பிராந்தியத்தின்
இதிகாசமாகத் திகழ்ந்தவர், கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி வளர்த்தவர், 1942ம் ஆண்டு
இயக்கத்தின் கதாநாயகன் மற்றும் தலைச் சிறந்த மக்கட் தலைவர், அவரது புகழ் ஒவ்வொரு வீட்டையும்
சென்றடைந்தது எனில் மிகையன்று.
இளமைப் பருவம்
சர்ஜூ பாண்டே உபி மாநிலக் காசிமாபாத் தானா,
ராஜ்பூர் கட்டியான் அஞ்சல் பகுதியின் உர்கான் என்ற கிராமத்தில் 1919 நவம்பர் 19-ல்
பிறந்தார். தந்தை ஸ்ரீ மஹாவீர் பாண்டே மற்றும் தாயார் ஸ்ரீமதி சுர்ஜி தேவி. மூன்று
குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர் சர்ஜூ. அவரது தந்தை அவரைக் கீழ்படியாத முரட்டுக்
கலகக்காரன் என்று வித்தியாசமாக, அசாதாரணமான முத்திரை குத்தி அடையாளப்படுத்தினார்.
சர்ஜூ தொடக்கக் கல்வியைக் கிராமத்திலே கற்று, 1935இல் உருது வழியில் காசிமாபாத் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1936-ல் இந்தி வழியில் படித்து, 1937ல் உருது மொழி ’ஆலா’ தேர்வுகளை எழுதினார்.
இராமாயணம், மகாபாரதம் மற்றும் கீதையில் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார். அவரது தோளில் யக்யோபவிதம் எனும் பருமனான பூணூலை அணிந்திருந்தார். கீதை மற்றும் இராமாயணத்திலிருந்து சமஸ்கிருத ஸ்லோகங்களை மிக எளிதாகப் பாடுவதில் வல்லவர். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் பிரிட்டிஷ் போலீஸ்களை ஏமாற்றுவதற்கு அவருக்குப் பெரிதும் உதவியது: எந்தக் கோயிலுக்குள்ளும் நுழைந்து சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்களை இசைப்பார், மக்களும் ஏதோ ஒரு ‘ஞானி பாபா’ வந்துள்ளதாக நினைப்பர் -- அவரோ மறுநாள் அல்லது அதற்கு அடுத்து மறைந்து விடுவார்!
விடுதலை இயக்கத்தில்
காங்கிரஸ் கட்சி 1936-37ல்
காசிமாபாத்தில் கௌமி சேவா தள் (தேசியத் தன்னார்வத் தொண்டர் குழு) ஒன்றை அமைத்தது. சர்ஜூ
அதில் சேர்ந்து பயிற்சி பெற்றார். பின்னர் அவர் 1940ல் கங்கௌலி சத்தியாகிரகத்தில் கலந்து
கொண்டு ஆறுமாதச் சிறை தண்டனை காலத்தைக் காசிப்பூர் சிறையில் கழித்தார்.
1942 இயக்கத்தில்
1942 ஆகஸ்டில் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம், தேசம் முழுமையும் கவ்வி பிடித்த மாபெரும் வரலாற்று நிகழ்வு. (முன்பு ஐக்கிய மாநிலங்கள் என்றழைக்கப்பட்ட)
சர்ஜூ உடனடியாகத் திருப்பி அடித்தார், ‘உங்களுக்குத்
தெரியாதா? சுயராஜ்யம் ஏற்கனவே உண்மையில் வந்துவிட்டதென்று?’ போலீஸ் அதிகாரி பயந்துபோய்ச்
சரணடைந்து, ஆயுத அறை சாவிகளை ஒப்படைத்தார். அனைத்துப் போலீஸ்காரர்களின் டர்ப்பன் தலைப்பாகைகளைக்
கழற்றச் செய்தார். பின்னர் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஆயுதங்களை எல்லாம் கைப்பற்றி
எடுத்துச் சென்று மறைந்து போயினர். காசிமாபாத் போலீஸ் நிலையத்தில் ஒரு வாரம் முழுவதும்
மூவர்ணக் கொடி பறந்து கொண்டிருந்தது.
பாண்டேவைப் பார்த்ததும் சுடுவதற்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு எல்லா இடங்களிலும் புகழ்பெற்று பரவியது. நீண்ட காலத்திற்குச்
சர்ஜூ மற்றும் தோழர்கள் கிராமம் விட்டு கிராமம் சென்று தலைமறைவாக இருந்தனர். அவர்கள்
மறைந்து இருக்கும் இரகசியத்தைக் கிராமத்தினர் ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை. எனவே
போலீஸ் அவர்களின் குடும்பத்தினருக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினர்.
போலீஸ், அவரது தாத்தா ஸ்ரீ மஹாவீர் பாண்டே
இல்லத்திற்கு வந்து அவரையும் அடிப்போம் என மிரட்டியது. சர்ஜூ போலீசை எச்சரித்தார்.
ஆனால் தாத்தாவோ ‘போலீஸ் என்ன செய்தாலும் அவர் கைதாகக் கூடாது’ என அவருக்குத் தகவல்
அனுப்பினார்.
சில மாதங்களுக்குப் பின்னர் அவரது சகா ஸ்ரீ
ராமா சிங் உடன் கைது செய்யப்பட்ட சர்ஜூ காசிப்பூர், காசி மற்றும் பிற சிறைகளுக்கு அனுப்பப்பட்டார்.
சிறைகளில் அவர் மிக மோசமாகவும் மனிதத்ததன்மையற்றும்
நடத்தப்பட்டார்; பல தருணங்களில் சித்திரவதைகளுக்கு ஆளானார். கை கால்களில் விலங்கிட்டு
அவரைத் தனிமைச் சிறையில் அடைத்தனர் மாவு அரைவைக்கல் இயந்திரங்களில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டு
மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார். தாக்கப்பட்ட போதெல்லாம், ‘பாரத் மாதா கி ஜெய்’ என்றும், ‘வந்தே மாதரம்’ என்றும் உரத்து முழக்கமிட்டார்; அவர் மயங்கி விழும் வரை காவலர்கள் பிரம்பால்
அடித்தார்கள்.
அவருக்கு
42 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டது! 80 பிரம்படிகளும் பெரிய தொகை அபராதமாகமும்
விதிக்கப்பட்டது. தனது வழக்கில் தானே வாதாடி, அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
வின்ஸ்டன் சர்ச்சில் உடனும் கூட தான் விவாதிக்கத் தயார் என்று அவர் கூறுவது வழக்கம்! ஒருபோதும் அவர் பயந்தது இல்லை : ‘அதிகபட்சமாகத்
தூக்கில் ஏற்றுவார்கள், அவ்வளவு தானே’ என்பார்.
திருமணமும் குடும்ப கஷ்டங்களும்
1940ல் சர்ஜூ பாண்டேவுக்குத் திருமணமானது.
உண்மையில் அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை தனது வாழ்வு முழுமையும் தேச சேவைக்கு
அர்ப்பணிக்க விரும்பினார். ஆனால் அவரது தந்தை மிகப் பிடிவாதமாக இருக்கவே, சர்ஜூ அவரது
விருப்பத்திற்குப் பணிய வேண்டியதாயிற்று. அவர் ராம்ராஜி தேவியை மணந்தார், அவர் சிக்கன்தர்
சௌக் (பகுதியைச்) சேர்ந்த ஸ்ரீ பூஷண் உபாத்தியாயா மகள். திருமணத்திற்குப் பிறகு சர்ஜூவின்
தாயார், அவர் கைதாவாரோ அல்லது பிற பிரச்சனைகளை எண்ணி தொடர்ந்து கவலைப்பட்டார்.
1941ல் காந்திஜி கங்கௌளி சத்தியாகிரகத்தைத்
தொடங்கினார். சர்ஜூ அதில் கலந்து கொள்வதாக முடிவு செய்து மறுநாள் காலை புறப்படத் தயாரானார்.
பெரிதாக அழத் தொடங்கிய அவரது தாயார் செல்ல வேண்டாம் என்று கெஞ்சினார்.
சர்ஜூ அதற்கு மசியவில்லை, மறுத்துவிட்டார்.
எனவே தாயார் தன் உடல் முழுதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துத் தன்னை மாய்த்துக்கொள்ள
முயன்றார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஸ்ரீ ராம்லால்ஜி உடனே அவர் மீது தண்ணீர் ஊற்றி
அவரைக் காப்பாற்றினார். இருப்பினும் மிக மோசமாக அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டது.
தனது தந்தை மற்றும் மாமாவிடம் பதில் அளிக்கும் வகையில், ‘ஒத்துழையாமை இயக்கத்துடன்
தான் பிரிக்க முடியாதவன், எனவே நிச்சயம் செல்லப் போவதாக’வும் சர்ஜூ கூறினார். மேலும்
தாய் குணமடைந்த பிறகு மீண்டும் அப்படி ஒரு பைத்தியக்காரத்தனத்தை திரும்பவும் செய்ய
வேண்டாம் என்று அவரிடம் சொல்லுமாறு கூறினார்!
சர்ஜு பாண்டே கைது செய்யப்பட்டு ஆறு மாதம்
சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மாதிரி வாழ்க்கைக்கு அவரது தாயார் பழக்கப்படுத்திக்
கொண்டு, நீண்ட நேரம் மத வழிபாடுகளில் செலவிட்டார். மகனின் நலனுக்காகத் தொடர்ந்து கடவுளிடம்
பிரார்த்தனை செய்தார்.
கம்யூனிசத்தை நோக்கி
சிறையிலேயே சர்ஜூ பாண்டே கம்யூனிஸ்டுகளுடன்
தொடர்பு கொண்டார். புகழ்பெற்ற கம்யூனிஸ்டுகளான ரஸ்டம் சாட்டின் மற்றும் பிகே ஆசாத்
கான்பூர் மத்திய சிறையில் இருந்தனர். அவர்களுடன் அவருக்குப் பழக்கமும் நெருக்கமும்
ஏற்பட்டது. சிறையில் புகழ்பெற்ற காங்கிரஸ் தலைவர் ஜான்பூர் ஹர்கோவிந்த் சிங் மற்றும்
ராஃப் ஜாப்ரி இருவரும் (டாஸ் கேப்பிட்டல்) மூலதனம் குறித்து வகுப்பெடுப்பது வழக்கம்.
இவை அனைத்தும் ஆழமான தாக்கத்தை அவரிடம் ஏற்படுத்தியது. அவரும் பகத்சிங் வாழ்க்கை வரலாறு
மற்றும் பிற நூல்களைப் படித்தார். ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகத்
தன்னை அர்ப்பணிக்க அவர் முடிவு செய்தார்.
1946ல் விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் சோஷலிஸ்ட்
கட்சி (CSP)யில் தல்ஸ்ரீங்கர் துபே (Dalshringar Dube)யுடன் இணைந்தார்
கம்யூனிஸ்ட் கட்சியில்
இப்பொழுது சர்ஜூ பாண்டே கம்யூனிஸ்ட் தத்துவத்தால்
பெரிதும் ஈர்க்கப்பட்டார். ஒரு நாள் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்ற அவர்
தன்னைக் கட்சியில் இணைத்துக் கொள்ளும்படி வேண்டினார். அந்த நேரத்தில் சிபிஐ பொதுச்
செயலாளர் பி சி ஜோஷி அங்கே இருந்தார். சர்ஜூ பற்றி அவர் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார்.
ஜோஷியிடம் சர்ஜூ தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவர், 'இது போலீஸ் ஸ்டேஷன் அல்ல,
நீங்கள் புகார்கள் தருவதற்கு' என்றார்! சர்ஜூவோ ‘என்னைக் கட்சியில் அனுமதிக்கவில்லை
என்றால், நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்' என்றார்! உடனே மனதார சிரித்து விட்ட ஜோஷியும் மற்றவர்களும் அவரது முடிவை வரவேற்றனர்.
கட்சியில் இணைய அவர் அனுமதிக்கப்பட்டார். அவர்
காசிப்பூர் சென்று ஹர் பிரசாத் ‘கேப்டன்’
என்பவரைச் சந்திக்க, சிபிஐ உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. அவர்கள்
கட்சி அலுவலகத்தைக் காசிப்பூரில் தொடங்கினர். சர்ஜூ தனது தோழர்கள் ஹர் பிரசாத், சூரியநாத்
மற்றும் ராம் நகீனா ராய் உடன் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி அமைப்பை
ஏற்படுத்தினார். சூரியநாத் ராய் சிறந்த பாடகர்; அவரும் ராம் நகீனாவும் மக்கள் திரள்
கூட்டங்களில் பாடுவது வழக்கம் அப்போது ஹர் பிரசாத்தும் சர்ஜூவும் சொற்பொழிவாற்றுவர்.
விரைவில் மாவட்டத்தில் சிபிஐ முக்கிய கட்சி ஆயிற்று. மேலும் அவர்கள் ஏழை விவசாய மக்களின்
பல போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தினர்.
பி டி ஆர் காலம்
நன்கு அறிந்தது போல, கட்சி வரலாற்றில் பி டி ஆர் காலம் என்பது
மிக மோசமான சுய அழிப்புக் காலம். அந்தச் சுய அழிப்புக் குழுவாதப் போக்கு காலத்தில்,
உ பி கட்சி மிகப் பெருமளவில் பாதிக்கப்பட்டது. உபி கம்யூனிஸ்ட் கட்சிக்கு மண்டல/ மாநிலம்
முழுவதும் வலுவான தளங்கள் இருந்தன. அவை உருவாக்கிய ஆகப்பெரும் சிபிஐ தலைவர்களில் சர்ஜூ
பாண்டேவும் ஒருவர்.
இக்காலகட்டத்தில் அவர் விவசாயிகள் மத்தியில் பணியாற்றிக்
கொண்டிருந்தார். அவர் தலைமறைவாக வேண்டி வந்தது. காவலர்களால் அவரது இல்லம் பலமுறை தாக்குதலுக்கு
உள்ளானது, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நில பிரபுத்துவ மற்றும் நிர்வாக ரீதியான
ஒடுக்கு முறைகள் மிகக் கூர்மையாக இருந்தன.
1949 சிச்சோரே நிகழ்வு
சிச்சோரே, ரத்தன்பூருக்கு வடக்கே உள்ள ஒரு சிறு கிராமம்.
அங்கே ஒரு காலத்தில் நிலப் பிரபு ஆவாத் சிங் என்ற ஒரு கொடூரமான ஒடுக்குமுறை ஜமீன்தார்
கோலோச்சிக் கொண்டிருந்தார். அவருக்கு எதிராகக் கம்யூனிஸ்ட் கட்சி மிகப் பெரும் போராட்டத்தை
நடத்தியது. ஒருமுறை ஒரு கம்யூனிஸ்ட் குடும்பத்தின் வீட்டுக்குள் புகுந்த போலீஸ்காரர்கள்
பச்சிளம் குழந்தையோடு இருந்த கம்யூனிஸ்ட் பெண்ணிடம் தவறாக நடந்தனர். சர்ஜூ பாண்டே மற்றும்
ஜெய் பகதூர் சிங் மறைவிடத்தை அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பினர். அப்பெண்ணுக்கு அது
தெரியாது மற்றும் அவர்கள் கேட்பது என்ன என்றும் புரியவில்லை. அந்தப் பச்சிளம் குழந்தையை
மிருகத்தனமாக நடத்திய அவர்கள், தங்கள் காலடியில் போட்டு மயக்கமாக்கும் வரை நசுக்கினர்.
அந்தப் பெண்ணையும் உதைத்துத் தள்ளினர். அப்பெண்ணின் தந்தை திரும்பும்போது அவரையும்
மோசமாக அடித்து மரத்தில் கட்டி வைத்து, அவரது தங்கையைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு
ஆட்படுத்தினர்
சர்ஜூ பாண்டே மற்றும் ஜெய்பகதூர் சிங் இருவரும்
ஆவாஸ் சிங்குக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தனர். அவர்கள் ஒரு ரகசிய கூட்டம் நடத்தி
தங்கள் செயல் திட்டத்தை வகுத்தனர். ராம் நாராயண் குப்தா தலைமையில் கம்யூனிஸ்ட் செயல்வீரர்கள்,
கிராம மக்கள் கூட்டத்தினருடன் ஆவாஸ் சிங் இல்லத்தைச் சூழ்ந்து கொண்டனர். அவனது குடும்ப
உறுப்பினர்கள் சிலரைக் கொன்றனர், அந்த வீட்டையும் தீயிட்டுக் கொளுத்தினர்.
இது தவிர நிலப் பிரபுக்களுக்கு எதிரான பல்வேறு பிற போராட்டங்களும் அங்கு நடத்தப்பட்டன. அவற்றில்
பாலியைச் சேர்ந்த நிலப் பிரபுக்கள் சுரூஜ் சிங் மற்றும் ராஜா ராய் இருவர் மீது மக்கள்
நடத்திய தாக்குதல்களும் குறிப்பிடத் தகுந்தன.
சுபாஷ் முகர்ஜியின் தியாகம்
1950 ஜனவரி 26ல் குத்துவா மாணிக்பூரில் மண்டல
மட்டத்திலான கெந்த் மஸ்தூர் சபாவின் (விவசாயத் தொழிலாளர் சங்கம்) பேரணி நடத்தப்பட்டது.
அதில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். அப்பகுதி கிசான் இயக்கத்தின்
முன்னணி ஒளி விளக்குகளாகச் சர்ஜூ பாண்டே, ஜெய் பகதூர் சிங் மற்றும் பாய்ஜ்நாத் ஷர்மா
இருந்தனர். கட்சி மையத்திலிருந்து எஸ் ஜி சர்தேசாய் அவர்களும்கூட வந்திருந்தார்.
முக்கியமாக பெண்கள் அடங்கிய பெரும்படையணி ஒரு
புறத்திலிருந்து, மாணவர் தலைவர் சுபாஷ் முகர்ஜி தலைமையில் அணுகியது. போலீஸ்காரர்கள்
சூழ்ந்து கொண்டு மக்களைத் தடுக்க நினைத்தனர், ஆனால் அவர்கள் கேட்கவில்லை. துப்பாக்கி
சூடு நடத்துவதாக எச்சரித்தும், பலன் இல்லை. போலீசார் கண்டபடி கண் மூடித்தனமாகத் துப்பாக்கிச்
சூடு நடத்த, பலர் காயம் அடைந்தனர். சுபாஷ் மார்பில் சுடப்பட்டு, துப்பாக்கி குண்டு
அவர் உடலைக் கிழித்துக்கொண்டு மறுபுறமாக வெளியே வந்தது. அவர் அந்த இடத்திலேயே மரணம்
அடைந்தார். சுவான்ஷாவும் துப்பாக்கிச் சூட்டில் அந்த இடத்திலேயே மடிந்தார். மராட்ச்சி
மோசமாகப் படுகாயம் அடைந்தார்.
போலீஸ் அந்த இடத்தை விட்டு ஓடினர். ஜெய் பகதூர்,
சர்ஜூ பாண்டே மற்றும் ஜார்கண்டே ராய் மற்றும் பலர் சிறையில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு
எதிராக விசாரணை நடத்தப்பட்டது.
விவசாயத் தலைவராக
சர்ஜூ பாண்டே, காசிப்பூர் மற்றும் உபி-யின், குறிப்பாகக்
கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் மரியாதைக்குரிய மற்றும் திறன் மிகுந்த விவசாயிகள் (கிசான்)
தலைவராக விளங்கினார் என டாக்டர் இஸட் ஏ அகமது தனது நினைவலைகளில் எழுதினார். இஸட் ஏ
அகமது, ஜெய் பகதூர் சிங் மற்றும் சர்ஜூ பாண்டே கிசான் இயக்கத்தின் ‘மூவர் அணி’ (‘triad’)யாகத் திகழ்ந்தனர். இக்குழு உ பி விவசாய இயக்கத்தின் அடித்தளத்தை
அமைத்தது. உபி மக்களுக்குச் சர்ஜூ பாண்டே கடவுள் போல இருந்ததாக டாக்டர் இஸட் ஏ அகமத்
எழுதினார். கூட்டத்திற்கு மக்களை ஈர்க்க அவரது பெயர் பயன்படுத்தப்பட்டது. அவர் கூட்டத்திற்கு
வரவில்லை எனில் அவர்கள் மிகவும் ஏமாற்றமடைவது வழக்கம்.
சட்டமன்றக் களத்தில் நுழைவு
1956 இறுதியில் சர்ஜூ
பாண்டே பரோலில் விடுதலையானார். தேர்தல்களில் போட்டியிட கட்சி அவரைத் தேர்ந்தெடுத்தது.
அவர் மாநிலச் சட்டமன்றத்திற்கு மட்டும் போட்டியிட விரும்பினார். பப்பார் ராம் மற்றும்
ராஜ்நாத் சிங் அவரை மக்களவை ரஸ்ரா தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் கட்டாயப்படுத்தினர்
– அந்தத் தொகுதி புரட்சிகர சோசலிசக் கட்சி (RSP) செல்வாக்கின் கீழ் இருந்தது. இறுதியில் அவர் இரண்டிற்கும்
போட்டியிட வேண்டி வந்தது
ரூபாய் 800க்கு ஒரு செவர்லே கார் வாங்கப்பட்டது! யாசின் என்ற
ஓர் அரசு ஊழியர் தனது வேலையை விட்டு விலகி, சர்ஜூ பாண்டேவின் கார் ஓட்டுனராக ஆனார்.
இதனால் அவர்களால் எல்லா இடத்திற்கும் செல்ல முடிந்தது.
காங்கிரஸின் சௌகத் அன்சாரி, சர்ஜூ பாண்டேவிடம் மோசமாகத் தோல்வி
அடைந்தார், அவர் தனது டெபாசிட்டையும் இழந்தார். பாண்டே ஜிக்கு முஸ்லிம்கள் பெருமளவில்
உற்சாகமாக வாக்களித்தனர்.பாண்டே ஜி விதான் சபா (சட்டமன்றம்) வுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் லோக் சபாவுக்குத் தேர்வானதும், சட்டமன்றத்திலிருந்து ராஜினாமா செய்தார். இந்த எதிர்பாராத தேர்தல் முடிவால் மிகவும் ஈர்க்கப்பட்ட
பண்டித நேரு, பாண்டே ஜியை லோக்சபாவில் அன்பாக வரவேற்றார்
சர்ஜூ பாண்டேவைக் காங்கிரஸில் சேருமாறு பண்டித நேரு அழைத்தார்,
ஆனால் பாண்டே அதை மிக மென்மையாக மறுத்த பாண்டே அப்போது, ‘நிச்சயமாக நமது நாடு பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து
விடுதலை பெற்று விட்டது, ஆனால் ஒவ்வொருவருக்கும் உண்மையான விடுதலை கிடைக்கவில்லை; எனவே
நான், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற ஏழைகளுக்குப் பணியாற்றவும் கம்யூனிஸ்ட்
கட்சிக்காகப் பணியாற்றவும் போகிறேன்’ என்று கூறினார். நேரு சிரித்தபடி அவரைத் தட்டிக்
கொடுத்தார்!
லோக் சபாவுக்கு நடந்த 1957, 1962, 1967 மற்றும் 1971 தேர்தல்களில்
சர்ஜூ பாண்டே வெற்றி பெற்றார். 1977ல் அவர் தோல்வி அடைந்தார். அவரது உரைகள் அனைத்து
அமைச்சர்கள் உள்ளிட்ட எல்லோராலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டன.
அவர் உபி சட்டமன்ற
மேல் சபைக்கு 1982ல் எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாட்டின் புகழ் வாய்ந்த மனிதர்
சர்ஜூ பாண்டேவின்
பெயர் நாட்டில் புகழ்வாய்ந்த ஒன்றாக இருந்தது, ஒவ்வொரு தனி நபரும் அவரை அறிந்திருந்தனர்,
அவருக்குப் பெரும் மதிப்பளித்தனர். அவரால் எந்த நேரத்திலும் எந்த இடத்திற்கும் செல்லவும்,
எவரையும் சந்திக்கவும் முடிந்தது. மக்கள் அவரை மொய்த்துச் சூழ்ந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளைப்
பகிர்ந்து கொண்டனர்.
அவர் மிக மிகப் புகழ்வாய்ந்தவராகவும் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்படுபவராகவும் இருந்தார். திருமதி இந்திரா காந்தி, அடல் பிகாரி வாஜ்பாய், சந்திரசேகர் மற்றும்பலர்
வாஜ்பாய் அவரைப் பெரிதும் மதித்தார். பாண்டே (காஷ்மீருக்கு
சிறப்பு அந்தஸ்து வழங்கிய) அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 370 ரத்து செய்யப்பட்டதன் ஆதரவாளராக
இருந்தார் –- பாண்டேஜி மட்டும்தான் அவ்வளவு துணிச்சலாகப் பேச முடியும் என்றார் வாஜ்பாய்!
ஆதா காவ் (அரை கிராமம்) என்ற தலைப்பில் ரஹீமாசோம் ரசா (Rahimassom Raza) எழுதிய நாவலில் சர்ஜூ பாண்டே ஒரு புரட்சிகரப் பாத்திரமாகப் படைக்கப்பட்டிருந்தார்.
கட்சி மாநிலச் செயலாளராக
சர்ஜூ பாண்டே உபி மாநிலக் கட்சியின் செயலாளராக 1978ல் தேர்ந்தெடுக்கப்-
பட்டவர், 1985 வரை அப்பொறுப்பில் இருந்தார். அவரது மகன் பானு பிரகாஷ் (தற்போது மும்பையில்
பணியாற்றிக் கொண்டிருக்கும் டாக்டர் பானு பிரகாஷ்) லக்னோவில் அவரைக் கவனித்துக் கொண்டார்.
பாண்டே ஜி ஒரு வெற்றிகரமான செயலாளராக இருந்தார்.
அவரது திறன்மிகு தலைமையின் கீழ் பல முக்கிய மாவட்டங்களில்
கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டன. காசிப்பூரில் கட்டப்பட்ட ‘பரத்வாஜ் பவன்’ ஓர் அற்புதமான
கட்டடம். 1940களில் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்த ஆர் டி பரத்வாஜ் உடன் அவர் மிக
நெருக்கமாக இருந்தவர். மார்த்தா மற்றும் காசிமாபாதிலும் கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டன.
1978ல் சிபிஐ மத்தியச் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
அவர் இறுதிவரை அதில் நீடித்தார்.
மாரடைப்பும் மரணமும்
1988ல் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவருக்கு உண்மையில் அது
இரண்டாவது ஹார்ட் அட்டாக். அந்த நேரத்தில் லக்னோவில் இருந்த அவர் பின்னர் காசிப்பூருக்கு
மாற்றப்பட்டார். வாஜ்பாய் அவரது உடல் நலன் குறித்து விசாரித்தார், இருவரும் வாழ்த்துக்களைப்
பரிமாறிக் கொண்டனர். சிகிச்சைக்காக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட அவர் 1989 ஆகஸ்ட் 25ல்
மரணமடைந்தார்.
புதுடெல்லி அஜாய் பவனுக்குக் கொண்டுவரப்பட்ட அவரது உடல் பின்னர் காசிப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பரவலாகவும் எண்ணிறைந்த பொது மக்களாலும் அவரது
மறைவுக்குத் துக்கம் அனுசரிக்கப்பட்டது. அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. சர்ஜூ பாண்டே மீது பெரிதும் அன்புடைய அன்றைய உ பி முதல்வர் திரு முலாயம் சிங் யாதவ் 1991ல் காசிப்பூரில் அவரது சிலையை நிறுவினார். அன்றைய முதல்வர் என்டி திவாரி அஞ்சலி தெரிவித்தார். இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டது மட்டுமின்றி, அவர் சவப்பெட்டியைத் தோளில் சுமந்து சென்றார்.சர்ஜூ பாண்டேவின் இறுதி ஊர்வலமும் அஞ்சலி கூட்டங்களும் அதுவரை
காணாத இணையற்ற பெரும் நிகழ்வாக, பல லட்சம் மக்களும் பரவலாக பல அமைப்புகளும் கலந்து
கொண்டதாக அமைந்தது.
சர்ஜு பாண்டேவின் நினைவுகள் நீடு வாழ்க!
(இக்கட்டுரை ஆசிரியர் அனில் ரஜீம்வாலே, சர்ஜூ பாண்டே குறித்த
வரலாற்றுத் தகவல்களை வழங்கியதற்காக பாண்டே ஜி மகன் டாக்டர் பானு பிரகாஷ் மற்றும் சிலருக்கு
நன்றி தெரிவிக்கிறார். வேறு சில ஆவணங்களும்
சேகரிக்கப்பட்டன என்றார்.)
--நன்றி : நியூஏஜ் (பிப்.9
--15)
தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்
No comments:
Post a Comment