Monday, 4 November 2024

ஓங்குபுகழ் அக்டோபர் புரட்சி வாழ்க!

 நியூஏஜ் தலையங்கம் (நவ.3 --9)

ஓங்குபுகழ் அக்டோபர் புரட்சி வாழ்க!

   கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்கனவே மாற்றத்தின் நிகழ்முறை தொடங்கி விட்டது. அத்தருணத்தின் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்கான சூழல் கனிந்து வந்தது. அது மனித குல வரலாற்றில் உலகின் ஆகப் பெரிய நிகழ்வுகளில் ஒன்று, அப்போது விளாதிமிர் இலியீச் லெனின் தலைமையில் ரஷ்யாவின் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்டவர்களும், நிலப்பிரபுத்துவ முதலாளிய ஆட்சியைத் தூக்கி எறிய கிளர்ந்தெழத் தொடங்கினார்கள்.  ‘ரஷ்யாவில் நடந்த புரட்சி, ஏகாதிபத்திய முதலாளித்துவ முறை சங்கிலியின் பலவீனமான கண்ணியில் நடந்தது’ என்பது லெனின் கூறிய புகழ்வாய்ந்த மொழி. ஐரோப்பாவின் மற்ற முதலாளித்துவ நாடுகளைப்போல ரஷ்யா அந்தளவு முன்னேறிய நாடு அல்ல. எனவேதான்  தாமதமாக 1870ல் ஜார்ஜ் பிளக்கனாவ், புரட்சிகரப் போராட்டத்தை நோக்கி தொழிலாளர் வர்க்கம் அணி திரள, ‘தொழிலாளர் விடுதலை (எமென்ஸிபேஷன் ஆப் தி லேபர் லீக்) அமைப்பை’ ஏற்படுத்தினார். (1870 என்பது இரண்டாவது தொழிற்புரட்சியைச் சுட்டிக் காட்டுவது.)

 ரஷ்ய தத்துவயியலாளர் பிளக்கனாவ் விஞ்ஞான கருத்தியல் ரீதியில் தொடங்கிய ஆய்வு, அடிப்படையில் மார்க்ஸியமாகும். தொழில்மயமாவது முதன்மை இடத்தை பெறத் தொடங்க, மின்ஸ்க் என்ற இடத்தில் 1898ல் ரஷ்ய

சமூக ஜனநாயக லேபர் பார்ட்டி (RSDLP) அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளர் வர்க்கமும் அங்கு எழுச்சி பெற்றது. அந்தக் கட்சி அமைத்ததும் லெனினேதான். அப்போது அங்கே ஜனநாயக மத்தியத்துவம் மீது ஏராளமான விவாதம் நடந்தது. அவ்விவாதம் புரட்சியின் குணாம்சம் குறித்தும் விவாதத்தை ஏற்படுத்தியது. கட்சியின் உறுப்பினர்கள், அவர்கள் அங்கம் வகிக்கும் கிளைகளிலும்கூட தீவிரமாகச் செயல்பட எதிர்பார்க்கப்பட்டனர். இந்தக் கட்டத்தில்தான் லெனின், “என்ன செய்ய வேண்டும்” என்ற பிரசுரத்தை எழுதினார்.

அக்கட்டத்தில் தியரி குறித்த தீவிர சங்கடமும் குழப்பமும் நிலவியது. லெனின் அழைப்பில் விவாதத்திற்கு வந்தவர்களில் நரோத்னிக்ஸ் (விவசாயிகள் மத்தியில் பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என நம்பிய ரஷ்ய சோஷலிசக் குழு), அராஜவாதிகள், அதிதீவிர இடதுசாரிகள் மற்றும் பலர் இருந்தனர். விவசாயிகள் மற்றும் வேளாண் முறை அடிப்படையிலான அவர்களது கற்பனாவாதச் சோஷலிசக் கோட்பாட்டை லெனின் எதிர்த்தார். விஞ்ஞான மற்றும் புரட்சிகர செயல்உத்தி திட்டங்களின் தேவையை லெனின் வற்புறுத்தினார். இதன் மீது தத்துவார்த்தக் கோட்பாட்டுத் தெளிவிற்காக அவர், “மக்களின் நண்பர்கள் எப்படி இருப்பார்கள்” (மற்றும் எவ்வாறு சமூக ஜனநாயகவாதிகளுடன் அவர்கள் போராடுவார்கள்) என்ற பிரசுரத்தை, விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், எழுதினார். இந்தத் தருணத்தில் அவர், முதலாளித்துவத் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்திற்காகப் புரட்சியின் விஞ்ஞான அடிப்படை செயல்உத்தி திட்டத்தை வகுத்து விட்டார். 19ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லெனின் சிறையில் அடைக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டார்.

அத்தகைய நிலைமைகளில், அனுசரிக்க வேண்டிய உத்திகள் மீது ரஷ்ய சமூக ஜனநாயக லேபர் கட்சியினுள் கூர்மையான வேறுபாடுகளும் உருவாகின. கட்சியின் இரு பெரிய முக்கிய அணிகளான போல்ஷ்விக் (பெரும்பான்மையினர்) மற்றும் மென்ஷ்விக் (சிறுபான்மையினர்) தரப்பினர்களால் கூறப்பட்ட இரண்டு உத்திகள், புரட்சியின் தன்மை மீதான வேறுபாட்டை, முன்வைத்தன. இரண்டு குழுக்களாக இருந்தவை, பின்னர் இரண்டு கட்சிகளாக உடைந்தன.

ஜனநாயகப் புரட்சியின் இரண்டு தந்திரோபாய உத்திகளை விளக்கி லெனின், “சமூக ஜனநாயகத்தின் இரண்டு உத்திகள்” என்ற நூலை எழுதினார். அது, புரட்சி குறித்த மார்க்ஸியத் தத்துவக் கோட்பாட்டில் ஒரு புதிய பரிணாமத்தைச் சேர்ப்பதை நோக்கிய ஓரடி. இதுவரை இருந்த குழப்பம் (டைலமா), முதலாளித்துவத்தை முழுமையாக ஒழிப்பதை நோக்கி புரட்சி முன்னேற வேண்டுமா? அல்லது, நிலப்பிரபுத்துவத்தையும் ஜார் மன்னனின் எதேச்சிகார ஆட்சியையும் வெற்றி கொண்டு, பூர்ஷ்வா முதலாளித்துவ (நடுத்தர வர்க்க முதலாளிகளின்) ஜனநாயகக் கட்டத்தை நோக்கி புரட்சி முன்னேற வேண்டுமா? என்பதே.

சிறிய தொழில்முனைவோர்கள், விளிம்புநிலை விவசாயிகள் மற்றும் ஏகாதிபத்தியத்-திற்கு எதிரான சக்திகளுடன் கரம் கோர்த்துத் தொழிலாளர் வர்க்கம் போராட்டத்தைத் தலைமைதாங்கி நடத்துவதை லெனின் ஆதரித்தார். லெனினுடைய கூற்று யாதெனின், ஏகாதிபத்தியக் கட்டத்தில் புரட்சி ஒரு புதிய கட்டத்தின் வழியாக மேல் செல்ல முடியும்; மாறாக, நேரடியாகச் சோஷலிசக் கட்டத்திற்கு அல்ல. அந்த புதிய கட்டத்தை அவர், பூர்ஷ்வா ஜனநாயகம் என்றழைத்தார். இவ்வாறு, முதலாளித்துவக் கட்டத்தின் புரட்சியில் தந்திரோபமான உத்தி என்ற வகையில் அது, லெனின் அவர்களின் மாபெரும் பங்களிப்பாகும். தனித்த முறையில் பாட்டாளிகளின் தலைமையில் வழிநடத்தப்பட்டு சோஷலிசப் புரட்சியின் இறுதிக் கட்டத்திற்குச் செல்லாமல், ஒருவர் இரண்டு கட்டங்களாக நகர்வது என்று அவர் யோசனை கூறினார்.

மாபெரும் அக்டோபர் புரட்சிக்கான தயாரிப்புகளில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு தந்திரோபாய உத்திகளில் முன்னெடுக்கப்பட்ட ஐக்கிய முன்னணி என்பது லெனினின் புகழ்பெற்ற பங்களிப்புகளில் ஒன்று. ஆனால் அதுவும் மென்ஷ்விக்குகளுடன் கூர்மையான வேறுபாடுகளை ஏற்படுத்தியது. லெனின் முன் வைத்த தந்திர உத்திகள் உருவாக்கத்தைத் தொழிலாளர் வர்க்கத்தின் பெரும் பிரிவு சரியாகப் புரிந்துகொண்டு உள்வாங்கவில்லை. தீவிர இடதுசாரிகள் பிரதிநிதித்துவப்படுத்திய சோஷலிசப் புரட்சிகர கட்சியும் மென்ஷ்விக்குகளும் (நேரடியாகச் சோஷலிசக் கட்டத்திற்குச் செல்லாமல் பூர்ஷ்வா ஜனநாயகம் என்பதில் இடைநின்றது என்பதை) லெனின் சமரசம் செய்துவிட்டார் என்று பார்த்தனர். முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் லெனின் ஆதரிப்பதாக அவர்கள் கருதினர்.

ஆனால், தொழிலாளர் வர்க்கம் அதுதானும் எண்ணிக்கையில் வளர்ந்தது மட்டுமல்ல, விழிப்புணர்விலும் கூட வளர்ந்தது என்பது உணரப்படவில்லை. உற்பத்தி முறையிலும் முக்கிய மாற்றங்ஙகள் ஏற்பட்டுவந்த உண்மையும்கூட எதிர்த்தரப்பினர்களால் கருத்தில் கொள்ளப்படவில்லை. இரு தரப்பு நிலைபாடுகளையும் பிராவ்தா, இஸ்கரா, இஸ்வெஸ்தியா, ரபோசாயா மிசில் போன்ற பத்திரிக்கைகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து புரட்சிகர நிகழ்முறையையே முழுமையாகச் செழுமைப்படுத்தின. 1917ன் அக்டோபர் புரட்சிக்கு ஓர் முன்னுரையாக, ஒரு முன்னோட்டமாகத் தயாரித்தது 1905ன் புரட்சி. எவ்வாறெனினும், 1905 புரட்சி வெற்றி பெறவில்லை, இருந்தால் என்ன, அதுதான் 1917 இறுதி நடவடிக்கைக்கு நடத்தப்பட்ட “ஒப்பனைகளுடன் கூடிய முழு ஒத்திகை” என்றழைக்கப்படுகிறது.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வளர்ந்துவந்த ஏகபோக முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும், கண்ணுக்குத் தெரியத் தொடங்கின. முதல் உலகப் போருக்கான தயாரிப்புகளின் சூழல் நிலவியபோது, உலகம் முழுவதும் நிதிமூலதனத்தின் ஆட்சி மற்றும் பிளவுபடுதலையும் மீண்டும் திரும்ப பிரிக்கப்படுதலுக்கு உள்ளாவதையும் உலகம் சந்தித்தது. ரஷ்ய அரசர் ஜார் நிக்கோலஸ் தலைமையில் ரஷ்ய ராணுவம் போர்முனைகளில் போராடிவர, ரஷ்யாவில் முரண்பாடுகள் குவிந்தன. போரில், பெரும் இழப்புகள்.  1,300,000 பேர் கொல்லப்பட்டனர், எதிரிப் படைகளால் 4,200,000 பேர் சிறைபிடிக்கப்பட்டனர், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவர்களாக விடப்பட்டனர். 1917 மார்ச் 8ல் பல்லாயிரக்கணக்கில் மக்கள் தெருக்களில் திரண்டு “ரொட்டி” கோரிப் போராட, அதற்கு ஆதரவாக 90,000கும் அதிகமானோர் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். அது சர்வதேசப் பெண்கள் தினம் மற்றும் பெண்கள் தலைமையில் ரொட்டி விலைஉயர்வைக் கண்டித்து எழுச்சிப் போராட்டங்கள் தொடங்கின.

இங்கே கட்டாயம் சுட்டிக்காட்ட வேண்டிய செய்தி, ரஷ்யப் புரட்சியானது கட்சி நடத்திய புரட்சி அல்ல; அது, சோவியத்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் சபைகள்) மூலம் தொழிலாளர் வர்க்கமும் மக்கள் திரளும் திரண்டு வந்தும், சோவியத்கள் கட்சிகளால் வழிநடத்தப்பட்டும் நடத்தியது. நாடு கடத்தப்பட்டிருந்த லெனின் ஏப்ரலில்தான் வர முடிந்தது. அக்காலகட்டம், இரட்டை அதிகாரம் பற்றி லெனின் ஏப்ரல் தீசிஸ் எழுதினார். அந்தக் கோட்பாடின் ஏற்பாட்டின்படி, அங்கே இடைக்காலப் புரொவிஷனல் அரசும், அதனுடன்கூட மற்றொரு அரசு தொழிலாளர்களாலும் சோவியத்துகளாலும் வழிநடத்தப்பட்டு அதிகாரம் கொண்டிருந்தன. அது ஒரு நாடு மற்றும் இரண்டு அரசுகள்.

அமைதியான வழியில் மாற்றம் சாத்தியமில்லாதபோக, போல்ஷ்விக் கட்சியின் மத்தியக் குழு அக்டோபரில் நடத்திய கூட்டத்தில், ஆயுதமேந்திய கிளர்ச்சியில் இறங்க ஆதரவாக முடிவு எடுக்கப்பட்டது; அதற்கான தந்திரோபமான திட்டங்களையும் உத்தி சார்ந்த நடவடிக்கைகளுக்கான துல்லியமான வரைபடம் லெனினால் தயாரிக்கப்பட்டது. எந்தத் தாமதமுமின்றி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள அக்டோபரிலிருந்து லெனின் வலியுறுத்தி வந்தார். “நிகழ்வுகள் நமது பொறுப்பை நமக்காக மிகத் தெளிவாகப் பரிந்துரைக்கின்றன, இதில் எந்தத் தாமதமும், நேர்மறையான குற்றமாகிவிடும்” என்று அவர்
கூறினார். இவை அனைத்திற்கும் மத்தியில், தாக்குதல் நடத்த வேண்டிய நேரம் மற்றும் தன்மை குறித்த ஆக மிகத் தெளிவான பார்வையை லெனின் கொண்டிருந்தார். லெனின்
அக்டோபர் 25ஐ, நடவடிக்கை தொடங்கும் நாளாக வற்புறுத்தினார். (ரஷ்யாவின் முந்தைய ஜூலியன் நாட்காட்டியின்படி அக்டோபர் 25, பின்னாட்களில் பயன்பாட்டிற்கு வந்த கிரிகோரியன் பொது நாட்காட்டியின்படி 1917 நவம்பர் 7ம் நாளாகும். அதனால் அன்று ரஷ்யாவில் நிகழ்ந்த யுகப்புரட்சியை அக்டோபர் புரட்சி என்றும், நவம்பர் புரட்சி என்றும் கொண்டாடப்படுகிறது)

அந்தநேரத்தின்போது லெனின், கிளர்ச்சித் தாக்குதலின் கலை மற்றும் அறிவியலின் அற்புதமான கூறுகளுடன் வந்தார்.  தாக்குதலை எவ்வாறு நிகழ்த்துவது மற்றும் அதற்காக உத்தரவிடுவதென தெளிவான வரைபடத்

திட்டம் கொண்டிருந்தார். அவர் வாகனங்களைத் திரட்டவும், தொலைபேசி நிலையங்கள், தந்தி அலுவலகங்கள், இரயில்வே நிலையங்கள், பாலங்களைக் கைப்பற்றவும் மற்றும் தொழிலாளர்களையும் இராணுவ அணிகளைத் திரட்டி அமைக்கவும் கேட்டுக் கொண்டார். (போஸ்ஷ்விக் தலைமையகமான, செயின்ட் பீட்டர்ஸ் பர்க் என்ற) ஸ்மோல்னிக்கு அக்டோபர் 25ல், அதுதான் நவம்பர் 7ம்நாள், லெனின் வந்தார்; வந்து முழுமையான கட்டுப்பாட்டை மேற்கொண்டார்.

புரட்சியின் முழுமையான நிகழ்முறையிலும் மற்றும் அதற்குப் பிறகும் கூட, தலைமை, மாபெரும் தத்துவவாதியும், விஞ்ஞானரீதியில் சிந்தனையாளருமான மாமேதை லெனின் வசம் இருந்தது. 

வாழிய நவம்பர் புரட்சி!

--தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment