Tuesday 17 October 2023

அதிதீவிர வலதுசாரியுடன் ஒருமைப்பாடு, பேரழிவு விளைவதன் தீயசமிக்ஞை --நித்யா சக்ரவர்த்தி

                             

அதிதீவிர வலதுசாரியுடன் ஒருமைப்பாடு, பேரழிவு விளைவதன் தீயசமிக்ஞை

--நித்யா சக்ரவர்த்தி

            இப்போது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையே முழுமையான போர். கடந்த 4 நாட்களில் சுமார் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸுடன் நட்பான பிற போராளிகள் ஒருபக்கமும், அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் பெரும் உதவிகளுடன் அதிதீவிர வலதுசாரி நெதன்யாகு ஆட்சி மறுபக்கமுமாகப் போரில் ஈடுபட்டு, பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்பதையே அனைத்து அறிகுறிகளும் சுட்டிக் காட்டுகின்றன. இதுவரை ஐ நா உட்பட எந்த உலக அமைப்பும் தாக்குதல் கைமீறிப் போவதைக் குறித்துப் பேசவில்லை. ஹமாஸும் இஸ்ரேலும் இறுதி வரை போரிடுவது எனத் தீர்மானமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

            2022 பிப்ரவரி 24ல்  உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுதான் இரண்டாவது பெரிய போர். கடந்த 20 மாதங்களில் உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, போரை முடிவுக்குக் கொண்டுவர எண்ணிறந்த கூட்டங்கள் நடத்தப்பட்டன, முக்கியமாக உலகத் தென்பகுதி (க்ளோபல் சவுத்) நாடுகளிலிருந்து வேண்டுகோள்களும் விடப்பட்டன. ஐநா மற்றும் ஜி20 உட்பட பிற சர்வதேசிய அமைப்புகளும் அதுகுறித்து விவாதித்தன; ஆனால் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. ரஷ்யா --உக்ரைன் போர் தொடர்கிறது; அதில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் உயிர்பலியும், உக்ரைன் மற்றும் உக்ரைன் எல்லையை ஒட்டிய ரஷ்ய நகரங்களில் சொத்துகளின் பேரழிவும் விலையாகத் தரப்பட்டுள்ளது.

            இன்னும் ஜி-20 அமைப்பின் தலைவராக உள்ளவரும், டெல்லி ஜி20 உச்சி மாநாடு பெரும் வெற்றி என கடந்த மாதம்  உரிமை பாராட்டியவருமான பிரதமர் நரேந்திரமோடி,

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் செய்தி அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்ததாக அக்டோபர் 7ம் தேதி டிவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளார். இந்தக் கடினமான நேரத்தில் இந்தியா இஸ்ரேலுடன் ஒருமைப்பாட்டில் நின்று, எண்ணங்களும் பிராத்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்கள் குடும்பங்களுடன் இருப்பதாகவும் கூறினார். ஹமாஸின் திடீர் தாக்குதல் மற்றும் அப்பாவி குடிமக்கள் மரணமடைந்ததற்காகப் பிரதமர் தம் அதிர்ச்சியையை நிச்சயமாக வெளியிடலாம்; ஆனால் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய தேவை குறித்து எதுவும் கூறாமலும், பாலஸ்தீனப் பிரச்சனை பற்றியெல்லாம் எதுவும் குறிப்பிடாமல் இந்தியா, இஸ்ரேலுடன் ஒருமைப்பாட்டில் நிற்கும் என்று பேசுவது, தொடரும் இந்த இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சனையில் இந்தியாவின் நிலைபாட்டில் ஆழமான மாபெரும் மாற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

      இதுவரை, வெளியுறவு அமைச்சரகம் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடவில்லை, வெளியுறவு துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், பிரதமரின் டிவிட்டர் செய்தியை மட்டும் சுற்றுக்கு விடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டிவிட்டர் செய்தியில் பிரதமரின் நிலைபாடு வெளியுறவுத் துறை அமைச்சரகத்தைக் கொதிக்கும் கஞ்சியில் விழுந்த ஈ போல, கடுமையான

நெருக்கடியில் தள்ளியுள்ளது என்பது தெளிவு; பெரும்பான்மையான உலகத் தென்பகுதி நாடுகளின் நிலைபாட்டிற்கு மாறான இந்திய நிலைபாடு குறித்து வெளியுறவு அமைச்சரகம் விளக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது. அரபு நாடுகள் தவிரவும், ஜி20 செப்டம்பர் மாநாட்டில் இந்தியப் பிரதமர் புதிய உறுப்பினர் அந்தஸ்து வழங்கிய ஆப்ரிக்க யூனியனின் உறுப்பு நாடுகளும் பிரதமரின் முழுக்க முழுக்க இஸ்ரேலிய ஆதரவு நிலைபாட்டுடன் இணக்கமாக இருக்க மாட்டார்கள்.

       உலகத் தென்பகுதி நாடுகள் மத்தியில் நிச்சயமாக எழுந்துவிட்ட சில தவறான புரிதல்களைத் திருத்தவும், இந்தச் சூழலிலிருந்து இன்னும்கூட மீண்டுவரவும் பிரதமர் அல்லது வெளியுறவு அமைச்சரகம் தற்போதைய மேற்காசிய போர் குறித்த விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும். ஜி20 அமைப்பின் தலைவராகத் தமது பொறுப்பின் இறுதி கடமையை ஆற்றும் வகையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜி20 அமைப்பின் மெய்நிகர் கூட்டத்தில் பிரதமர் பேச உள்ளார். தற்போதைய போர் நீடிக்குமானால், இந்த மெய்நிகர் சந்திப்பில் உலகத் தென்பகுதி உறுப்பினர்களிடமிருந்து பல சங்கடப்படுத்தும் கேள்விகளைப் பிரதமர் சந்திக்க நேரும். உக்ரைன் போர் பிரச்சனையில் தமது ராஜ தந்திர வெற்றி மூலம் ஈட்டிய நம்பகத்தன்மையை இந்தியப் பிரதமர், ஹமாஸ் – இஸ்ரேல் போர் குறித்த அவரின் நிலைபாட்டால் சிதறி நொறுங்கிவிடப் போகிறது.

      இந்தியாவின் நிலைபாடு, அமெரிக்கா தலைமையேற்ற ஜி-7 நாடுகளின் நிலைபாட்டுடன் ஒத்து இருக்கிறதே தவிர, உலகத் தென்பகுதி நாடுகளுடனும், ரஷ்யா மற்றும் சீனாவுடனும் ஒத்ததாக இல்லை.

       இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையில் ஹமாஸ் தாக்குதல் மற்றும் அப்பாவி இஸ்ரேலிய குடிமக்களின் மரணம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த அதே நேரத்தில், பாலஸ்தீனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வின் தேவையை அடிக்கோடிட்டு வலியுறுத்தியது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலகம் தனது அறிக்கையில், (மேற்காசியப் பிரச்சனையில்) நிரந்தர அமைதியை ஏற்படுத்த, 1967க்கு முந்தைய எல்லைகளுடனும், கிழக்கு ஜெருசலேமைப் பாலஸ்தீனத்தின் தலைநகராகக் கொண்டும், இரண்டு நாடுகளை அமைப்பதன் மூலம் தீர்வுகாண  சர்வதேச சமூகம், ஐநா மன்றம் மற்றும் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளது.

            மேற்கத்திய நாடுகளும் சர்வதேச ஊடகங்களும் ஹமாஸ் இயக்கத்தைப் பயங்கரவாதிகள் மற்றும் பிசாசுகள் எனச் சித்தரிக்கின்றன; ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, அதிலும் குறிப்பாக

கடந்த தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் இஸ்ரேலியப் பிரதமர் ஆனதிலிருந்து, காஸா பகுதியில் அதிகரித்து வரும் கண்ணில்படும் மக்களை மறைந்திருந்து துல்லியமாகக் சுடுகின்ற இஸ்ரேலிய ஸ்நிப்பர் (sniper) தாக்குதலை எதிர்த்துப் போராடுவது பாலஸ்தீனப் போராளிகள் பிரிவான ஹமாஸ் இயக்கமாகும். 

            இஸ்ரேல் வரலாற்றில் நெதன்யாகு தலைமை வகிக்கும் அரசு, மிகத் தீவிரமான வலதுசாரி அரசாகும். அந்த அரசைக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இஸ்ரேல் நாட்டிலேயே உள்ள

 சில எதிர்க் கட்சிகளும் பாஸிச அரசு என்று முத்திரை குத்துகின்றன. அதன் சொந்த  அமைச்சர்கள் சிலரே அதனை ஒப்புக் கொள்கின்றனர்: இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) தன்னையே ஒரு “தன்பாலின அச்சம் மற்றும் வெறுப்பு” உடையவர் (fascist homophobe) என வர்ணித்துக் கொள்கிறார். இஸ்ரேலிய பிரதமரின் 2018 நேஷன் ஸ்டேட் லா எதிர்மறை புகழ்பெற்றது; அது தனது குடிமக்களில், ‘இஸ்ரேலிய அரேபியர்’களான ஐந்தில் ஒரு பங்கினரைச் சட்டப்படி கீழ்நிலை அந்தஸ்து உடையவர்கள் என்பதாக அறிவித்தது. பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதையும் பாலஸ்தீனர்களை இறையாண்மை உடைய மக்களாக அங்கீகரிப்பதையும் மறுத்து இஸ்ரேல் இந்தப் பதத்தை (இஸ்ரேலிய அரேபியர்) பயன்படுத்துகிறது.

             இதுவும், இதனுடன் திட்டமிட்ட முறையில் பாலஸ்தீனர்களை ஒடுக்கி அவர்களுக்குச் சொந்தமான (அ) முற்றுகையிடப்பட்டுள்ள நிலங்களில் குடியேறிய இஸ்ரேலின் செய்கை,

தனிமனிதச் சுதந்திரத்தில் மிக தாராளச் சிந்தனையுடைய (லிபரல்) உலகின் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்புக்களான சர்வதேச மன்னிப்புச் சபை (அம்னெஸ்டி இன்டர்நேஷனல்) மற்றும் மனித உரிமை கண்காணிப்பு (Human Rights Watch) போன்ற அமைப்புக்களை, ‘இஸ்ரேல் ஒரு நிறவெறி அரசு’ (அபார்ட்தியேட் ஸ்டேட்) என ஒப்புக்கொள்ளத் தூண்டியுள்ளது.

 திரும்பத் திரும்ப வழக்கமான முறையில், “பாலஸ்தீன மண் மற்றும் உடைமைகளை பெருமளவில் அபகரித்தல், சட்டவிரோதக் கொலைகள், கட்டாய இட மாறுதல்கள், நடமாட கடும் கட்டுப்பாடுகள் மற்றும் பாலஸ்தீன மக்களுக்குத் தேசிய இனம், குடியுரிமையை மறுப்பது” ஆகிய செயல்கள், அனைத்தையும் ஒரேயடியாக ஒடுக்கும் அடக்குமுறை தவிர வேறில்லை என்று சர்வதேச மன்னிப்புச் சபை மதிப்பிட்டுள்ளது; இதைத்தான் சர்வதேசச் சட்டம் நிறவெறி ஒதுக்கல் (அபார்தெய்டு) என வரையறுத்துள்ளது.

   இருப்பினும், இஸ்ரேல் பல ஆண்டுகளாக அத்தகைய முறையைத்தான் இயக்கி வருவது மட்டுமல்ல, அது மேலும் மோசமடைகிறது. சனிக்கிழமை ஹமாஸ் திடீர் தாக்குதலைத் தொடுப்பதற்கு முன்பு 2023ல் இதுவரை பல நூறு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்; ஐக்கிய நாடுகள் சபை 2006ல் இருந்து இதுவரை இந்த ஆண்டுதான் மரணங்களுக்கு வழிவகுத்த மிகக் கொடூரமான ஆண்டு என்று ஏற்கனவே மதிப்பிட்டுள்ளது. 

            இஸ்ரேலின் நீதி துறையை மாற்றி அமைக்கும் நெதன்யாகுவின் முயற்சி ஆகக் கூடுதலான மிகத் தீவிர வலதுசாரி ஓர் அவை நாடாளுமன்றத்திற்கு (கெனெசெட், Knesset) இஸ்ரேலிய உச்சநீதிமன்றத்தின் முடிவுகளை மேலதிகாரம் செய்யும் (ஓவர் ரூல்) ஆற்றலை வழங்கியுள்ளது; இது பாலஸ்தீன நிலத்தைத் திருடி அபகரிப்பதையும் பாலஸ்தீனத்தைக் காலனிமயமாக்குவதை மட்டுமே விரைவுபடுத்தும். [கெனெசெட் அவை அனைத்துச் சட்டங்களையும் நிறைவேற்றும் ஏக அதிகாரம் உடையது, முன்பு பிரதமரால் அலங்காரமாக நியமிக்கப்பட்டு வந்த குடியரசுத் தலைவரையும், அரசு கம்ட்ரோலரையும் தேர்ந்தெடுக்கும், அமைச்சரவைக்கு ஒப்புதல் வழங்கும், அரசின் பணிகளை மேற்பார்வையிடும் மற்றும் கெனெசெட் குழுகள் மூலம் நாட்டின் பிரச்சனைகளைக் கையாளும் அதிகாரம் என சர்வ அதிகாரமுள்ள அமைப்பாகும்]  

            நெதன்யாகுவின் நிறவெறி பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் ஜிவிர், பாலஸ்தீன வகுப்பினர்களை மிரட்டும் அதிகாரம் செலுத்த ஒரு புதிய “தேசியக் காவலர்” (நேஷனல் கார்டு) நியமிக்க உறுதியளித்துள்ளார்: சமீபத்தில் இஸ்ரேல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் துணைப் பிரதமராக இருந்தவருமான பென்னி காண்ட்ஸ் அது ஒரு தனியார் படை மற்றும் சட்டத்தை அதன் கையில் எடுத்துக் கொண்டு விடும் என எச்சரித்துள்ளார்.

       இஸ்ரேல் –ஹமாஸ் யுத்தம் 4வது நாளில் நுழைந்த நிலையில், நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல், காஸா கரை பகுதியில் (காஸா ஸ்டிரிப்) கடும் தாக்குதல் தொடுத்ததுடன், தப்பிச் செல்லும் பாதைகளின் நிலம் மற்றும் கடல் பகுதியை முற்றுகை இட்டு, வழியெல்லாம் குண்டு மழையைப் பொழிகிறது. எண்ணிறைந்த விலைமதிக்க முடியாத உயிர்களைக் காவு வாங்கியதுடன், மருத்துவமனைகள், பள்ளிகள், வான் உயர் கட்டடங்கள், பாரம்பரிய மசூதிகள் மற்றும் உலகின் மூன்றாவது பண்டைய தேவாலத்தையும் இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளது. கண்மூடித்தனமான இஸ்ரேலின் பழிவாங்கலில் காஸா குழந்தைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இனஅழிப்புத் தாக்குதலில் பல குடும்பங்கள் முழுதும் துடைத்தெறியப்பட்டனர்; இந்நிகழ்முறையில் ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்திருந்த இஸ்ரேலிய பிணைக் கைதிகளும், போர்க் கைதிகளும்கூட கொல்லப்பட்டனர். எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்ட 20லட்சம் பாலஸ்தீனர்களுடன் காஸா பகுதி உலகின் ஆகப் பெரிய திறந்தவெளி சிறைக் கூடமாக மாறியுள்ளது.

            இந்த உண்மைகளின் பின்னணியில், பிரதமர் மோடியின் டிவிட்டர் பதிவு ஆத்திரமூட்டும் வகையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்பது, தீர்மானிப்பதில் மாபெரும் தவறாக வரலாற்றில் ஆழமாகப் பொறிக்கப்படப் போகிறது. அதுவும், இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சனையில் நீடிக்கும் இந்த மோதல் குறித்து உலகத் தென்பகுதி நாடுகள் என்ன நினைக்கிறதோ அதற்கு மாறாக, மிகத் துயரகரமான முறையில் இந்திய நிலைபாடு மாறுபட்டு நிற்கும்போது, இந்திய தேசம், ‘தெற்கு உலகின் குரல்’ எனத் தன்னை எப்படி முன்னிறுத்திக் கொள்ள முடியும்?

            போரில்லாத, அமைதியும் சாந்தமும் திகழும் உலகை நிறுவ விரும்பும் இந்தியா, தனது மரபார்ந்த பாரம்பரிய பெருமையை மீட்குமா?

--நன்றி : நியூஏஜ் (அக்.15 –21)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

No comments:

Post a Comment