Thursday 14 December 2023

விடுதலை இயக்கத்திலும் தேசிய மேம்பாட்டிலும் தொழிலாளி வர்க்கத்தின் பங்களிப்பு


 விடுதலை இயக்கத்திலும் தேசிய மேம்பாட்டிலும்

     தொழிலாளி வர்க்கத்தின் பங்களிப்பு

--டாக்டர் பி கே காங்கோ

            மனிதகுல மேம்பாட்டு நிகழ்முறையில் தொழிலாளி வர்க்கம் மிக முக்கிய பங்காற்றியது. மனித வளர்ச்சியில் இந்திய விடுதலை இயக்கம் முக்கியமான அம்சமாகும். தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஆகப் பெரும் பங்களிப்பு, வளர்ச்சி மேம்பாட்டில் மக்களுக்கு அதிகாரமளித்தல் கோட்பாட்டை மையத்திற்குக் கொண்டு வந்ததாகும். 21ம் நூற்றாண்டின் இந்த நாளில் வளர்ச்சி குறித்து இரண்டு மாதிரிகள் உள்ளன. ஒன்று, உற்பத்தித் திறன் மற்றும் லாபத்தை அதிகரிப்பதன் அடிப்படையிலான ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) எனும் சுத்தமான வளர்ச்சி மாடல் (இதில் பொருளாதார அம்சமே முதன்மை பெறும்).

            இரண்டாவது, மேம்பாடு அல்லது முன்னேற்ற அடிப்படையாக மனித மேம்பாட்டுக் குறியீடு அமைய வேண்டும் என்று கூறும் மாடல். 20ம் நூற்றாண்டிலிருந்து மனித வளம் மையமாக அமைந்த இந்த மாடலைத் தனது போராட்டங்களின் மூலம் நடுநாயகமாகக் கொண்டு வந்தது தொழிலாளி வர்க்கத்தின் ஆகப் பெரும் பங்களிப்பு. இப்பின்னணியில்தான் ஒருவர் விடுதலைக்கு முன் மற்றும் விடுதலைபெற்ற இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தின் பங்களிப்பைப் பரிசீலிக்க வேண்டும். தொழிலாளி வர்க்கத்திற்கு விடுதலை இயக்கமானது எப்போதும் காலனியம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாகும். ஏனெனில், தொழிலாளி வர்க்கம் தேசத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது.

            தொழிலாளி வர்க்கத்திற்கு விடுதலையின் பொருள், வெள்ளைக்காரர்களிடமிருந்து இந்தியர்களுக்கு அதிகாரத்தை மாற்றுவது மட்டும் அல்ல; மாறாக, அனைத்து முனைகளிலும் இந்திய மக்களுக்கு அதிகாரமளித்தல் என்பதாகும். எனவே, தொழிலாளி வர்க்கம் விடுதலைக்கு முன் முக்கிய பங்கை வகித்தது, இந்தியா விடுதலை பெற்ற பிறகும் தொடர்ந்து முக்கிய பங்கை ஆற்றி வருகிறது.

            ஏகாதிபத்தியத்தை முறியடிக்கவும், மனித உரிமைகள் மற்றும் சமத்துவக் கொள்கைகள் அடிப்படையிலான ஜனநாயகத்தின் மூலம் மக்களுக்கு அதிகாரத்தைக் கொண்டு வருவதற்கும் இந்தியாவின் விடுதலை தேவை. இதற்கு மதசார்பற்ற தேசம் தேவை. புதிதாகச் சுதந்திரம் பெற்ற இந்திய அரசு ஜனநாயக, மதசார்பற்ற மற்றும் சோஷலிச சார்புடைய அரசானது. அரசியலமைப்புச் சட்டமே தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் மாபெரும் சானையாகும். தங்களின் பொருளாதாரக் கோரிக்கைகளில் மட்டுமே தொழிலாளர் வர்க்கம் சிக்கி மாட்டிக் கொண்டுள்ளது என்றும், பொருளாதார லாபங்களை மட்டுமே தொழிலாளி வர்க்கப் போராட்டம் ஏற்கிறது என்றும் குற்றம் சாட்டுபவர்கள், விரிந்து பரந்த (தொழிலாளி வர்க்கப் போராட்ட) சித்திரத்தைக் காணத் தவறுகிறார்கள்.

            அதிகாரம் என்பது அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, ஆனால் செல்வம், சாதி மற்றும் மதப் படிநிலைகள் மற்றும் பிற சலுகைகளின் மூலமும் அதிகாரம் வரும். பொருளாதார, அரசியல் என அனைத்துப் போராட்டங்கள் மூலம் தொழிலாளி வர்க்கம் சமத்துவத்திற்காகப் போராடுகிறது; மற்றும் ஆளும் வர்க்கத்தின் சலுகைகளைத் தாக்கி நீதிக்காகப் போராடுகிறது. இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தின் பங்கைப் பரிசீலிப்பதற்கு இதுவே அடிப்படையாகக் கட்டாயம் இருக்க வேண்டும்.

            தொடக்கக் கட்டத்தில், வேலை நேரத்தைக் குறைக்க, வாராந்திர ஓய்வு கோரி, குழந்தை உழைப்பைக் கட்டுப்படுத்த வேண்டி தொழிற்சாலை சட்டத்தில் மாற்றங்களுக்காகத் தொழிலாளி வர்க்கம் போராடியது. இதற்காக, மதம், சாதி, மொழி மற்றும் வண்ணங்கள் வேறுபாடுகளுக்கு அப்பால், (‘வண்ணங்கள் வேற்றுமைபட்டால், அதில் மானுடர் வேற்றுமை இல்லை’ என) தொழிலாளர்களைத் திரட்டியது.

            மார்க்சியம் மற்றும் மகாராஷ்டிராவின் மகாத்மா ஜோதிராவ் புலே போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளின் தாக்கத்தில், என்எம் லோகாண்டே மற்றும் ஷபூர்ஜி போன்றவர்கள்

1880களில் டெக்ஸ்டைல் தொழிலாளர்களைத் திரட்டி தொழிற்சாலை சட்டத்தில் மாற்றங்கள் கோரி அரசிடம் கோரிக்கை சாசனம் சமர்ப்பித்தனர். 1907ல் லோகமான்ய பாலகங்காதர திலகருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து ஆறு நாள் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடப்பட்டதில், மும்பையில் தொழிலாளர் வர்க்க உணர்வுநிலை அதிகரித்தது பிரதிபலித்தது. (அதில் தொழிலாளர்களின் பொருளாதாரக் கோரிக்கை இல்லை, மாறாக, தேசத் தலைவருக்கு ஆதரவான அரசியல் கோரிக்கைக்காகத் தொழிலாளர்கள் போராடினர் என்பதைக் காண்க). இந்த வளர்ச்சிப் போக்கை மாமேதை லெனின் கவனத்தில் எடுத்துக் கொண்டு, ‘இந்திய உழைக்கும் வர்க்க உணர்வுநிலை எழுச்சி, இந்தியாவை நீண்டகாலம் பிரிட்டிஷ் ஆள்வதை இயலாததாக்கி விடும்’ என எழுதினார்.

            லெனின் தலைமையில் மாபெரும் அக்டோபர் புரட்சி நடந்த 1917க்குப் பிறகு, உலகம் முழுவதுமிருந்த அனைத்துத் தொழிலாளர்களின் உணர்வுநிலை உயர்ந்தது. இந்தியத் தொழிலாளர் வர்க்கமும் இதற்கு விதிவிலக்கல்ல. அது ஒன்று திரண்டு ஒரு சங்கம் அமைக்க முடிவு செய்தது. இவ்வாறு, தொழிலாளர் வர்க்கத்தின் முதலாவது தேசிய சங்கமான நமது ‘அனைத்திந்திய தொழிற்சங்கக் வாங்கிரஸ்’ (ஏஐடியுசி) மும்பையில் 1920 அக்டோபர் 31ம் நாள் அமைக்கப்பட்டது. அமைப்பு நாள் தொடங்கி ஏஐடியுசி தொடர்ந்து சோஷலிசம் மற்றும் தேசிய விடுதலைக்காகப் போராடி வந்தது.

            1921ல் ஜாரியாவில் நடந்த மாநாட்டில், ஏஐடியுசி பிரிட்டிஷாரிடமிருந்து பூரண சுதந்திரம் கோரி தீர்மானம் நிறைவேற்றியது. அது வரை மக்கள் இயக்கமாக இருந்த காங்கிரஸ் கட்சி ஹோம் ரூல் என்னும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தைக் கோரியதே அல்லாமல் பூரண விடுதலை கோரவில்லை. எனவே, 1921 முதல் 1929வரை ஒவ்வொரு காங்கிரஸ் அமர்வின் முன்னும், காங்கிரஸ் கட்சி பூரண சுதந்திரம் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி ஏஐடியுசி ஆர்பாட்டங்களை நடத்தியது. அந்தக் கோரிக்கை, 1929 லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் அமர்வின் போதுதான் கை கூடியது. பூரண சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றிய லாகூர் அமர்வில் ஜவகர்லால் நேரு காங்கிரஸின் தலைவரானார்.

            அதனைத் தொடர்ந்து, உழைக்கும் வர்க்கம் கூடுதல் உற்சாகத்துடன் எல்லா முக்கியப் போராட்டங்களிலும், காங்கிரஸ் விடுத்த அறைகூவல்களிலும் பங்குபெற்றது.

            இந்திய விடுதலைக்காகத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் தியாகங்கள்

பல. சுதேசி இயக்கத்தில் பாபு ஜினு (Babu Genu) என்ற மில் தொழிலாளி மும்பையில் தனது உயிரைப் பலி கொடுத்தார். அதுபோலவே, 1946ல் ராயல் இந்திய கடற்படை பேரெழுச்சி வெடித்தபோது, எல்லாப் பகுதிகளிலும் தொழிலாளர் வர்க்கம் வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்து, வேலைநிறுத்தம் செய்து போராடிய கடற்படை வீரர்களை ஆதரித்தது.

     மும்பை நர்சிங் சம்மேளனத்தின் தலைவர்கள், கமல் தோன்டே மற்றும் விமல் ரணதிவே கடற்படை எழுச்சிக்கு ஆதரவாக நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டபோது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் கமல் தோண்டே மாண்டார். கடற்படை வீரர்கள் மற்றும் தொழிலாளர்களின் இந்த வீரம் செறிந்த போராட்டம், விடுதலையை விரைவுபடுத்தி, இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியைப் புறப்படச் செய்தது. சுதந்திரத்திற்குப் பின் உலகம் இரண்டு முக்கிய முகாம்களாகப் பிளவுபட்டது.

            ஒரு முகாம் அமெரிக்க ஏகாதிபத்தியத் தலைமையில் அமைந்தபோது, மற்றொன்று சோவியத் யூனியனின் சோஷலிசத் தலைமையில் அமைந்தது. விடுதலைப் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கம் பங்கெடுத்தது மற்றும் சோஷலிச சிந்தனை நிகழ்முறையின் கீழ் அதன் அரசியல் செல்வாக்கின் வளர்ச்சி காரணமாகவும் சோஷலிச நாடுகளின் உதவியுடன், புதிதாக விடுதலை பெற்ற இந்திய தேசம், வெளி உறவு விஷயங்களில் நடுநிலை கொள்கையையும் தேசிய மேம்பாட்டிற்காகக் கலப்புப் பொருளாதாரக் கொள்கையையும் தழுவியது.

            பொதுத்துறை நிறுவனப் பிரிவு பொருளாதாரத்தின் மிக மிக முக்கிய பிரிவானது. இவை அனைத்தும் இந்தியத் தொழிலாளி வர்க்கப் பங்களிப்பின் காரணமாக விளைந்தவை. ஒரு சமுதாயத்தின் எந்த மேம்பாட்டு நிகழ்முறையும் இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்கும். ஒன்று, உற்பத்தி உயர்தல்; மற்றொன்று, இந்த அதிகரித்த உற்பத்தியின் பலன்களைப் பகிர்ந்து கொள்வது. இவ்விரண்டு பகுதிகளிலும் தொழிலாளி வர்க்கம் முக்கிய பங்காற்றியது.

            எனவே, 1930லிருந்து 1980வரை உற்பத்தித் திறன் உயர்வுடன், அதன் பலனில் தொழிலாளி வர்க்கத்திற்கான பங்கும் உயர்ந்தது. ஆனால் 1990லிருந்து 2023வரை அதுபோல அவ்வாறு நடைபெறவில்லை.

            எனினும், முதலாளித்துவ (உற்பத்தி) முறை ‘டிரிக்கிள் டவுன் தியரி’ என்பதை நம்பியது.  (‘நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழிஓடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ என

மூதுரையில் ஔவையார் கூறியபடியும்; 1890களில் "குதிரை மற்றும் குருவி கோட்பாடு" என்ற பெயரில் அறியப்பட்ட ‘டிரிக்கிள் டவுன் கோட்பாடு’, குதிரைக்கு அதிக அளவு ஓட்ஸ் உணவளிப்பதன் மூலம் சில தீவனங்கள் கடந்து செல்லும் அதிர்ஷ்ட சிட்டுக்குருவிகள் சாப்பிடலாம் என்று கூறியபடியும்), உற்பத்தியும் லாபமும் அதிகரித்தால் அது மெல்ல ஆனால் நிச்சயமாக ஊடுருவி கீழே கசிந்து பரவும், மற்றும் ஒவ்வொருவரும் பயனடைவார்கள் என முதலாளித்துவம் வலியுறுத்தியது. எனினும், இந்த வாதத்தை எதார்த்த உண்மைகள் மெய்ப்பிக்கவில்லை. தற்போது தனியார்மயத்துடன் பின்பற்றப்படும் உலகமயக் கொள்கையும், தொழிலாளி வர்க்க அமைப்புகளுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (எல்பிஜி) அடிப்படையிலான கோட்பாடு என்பது முதலாளித்துவப் புத்தாக்கக் கொள்கை தவிர வேறில்லை.

            எனவே, தொழிலாளி வர்க்கம் அதனை எதிர்க்கிறது. அதனுடைய அந்த எதிர்ப்பு இயக்கங்களில் சமத்துவம், ஜனநாயகம், மனித உரிமைகள், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி கோட்பாடுகள் வலியுறுத்தப்படுகின்றன. எனவே, இவ்வாறு மனிதனை மையப்படுத்திய வளர்ச்சி மாதிரி விரும்பத்தக்க விளைவாயிற்று.

            நம்முடைய அனுபவத்தில், தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை மட்டுமல்ல, மாறாக பாடுபட்டு உழைக்கும் அனைத்து மக்கள் கூட்ட ஒற்றுமையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. தற்போது தன்னைப் பாசிச ஆட்சியாக வெளிப்படுத்திக் கொள்ளும் முதலாளித்துவ மறு எழுச்சியின் தாக்குதலை முறியடிக்க, 20ம் நூற்றாண்டின் மத்தியிலும் 20களின் மத்தியிலும் அரசு அதிகாரத்தின் மீது தொழிலாளி வர்க்கத்திற்கு இருந்த செல்வாக்கைப் போன்ற ஒற்றுமையும் செல்வாக்கும் இத்தருணத்தின் தேவையாகும். பாசிசத்தை, முதலாளித்துவ மறுஎழுச்சி தாக்குதலை முறியடிக்க ஒன்றுபடுவோம்!

--நன்றி: நியூஏஜ் (டிச. 10 –16)

            --தமிழில் : நீலகண்டன்,

          என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment