Sunday 28 March 2021

சர்வதேச பெண்கள் தினம் கட்டுரை 3 நம்முடைய பெண்களை உண்மையில் நாம் கொண்டாடுகிறோமா?

 

நம்முடைய பெண்களை உண்மையில் நாம் கொண்டாடுகிறோமா?


--நந்திதா கிருஷ்ணா

வரலாற்றாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர்

            சோவியத் யூனியனில் பெண்கள் வாக்குரிமை கோரி போராடி அதனை 1917லேயே அடைந்த நிலையில் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். சிலநாடுகள் மார்ச் மாதத்தைப் பெண்கள் மாதம் என்றும் வேறுசில நாடுகள் பெண்களுக்கான வரலாற்று மாதம் என்றும் கொண்டாடுகின்றன. பெண்கள் தினம் என்பது பெண்மையை, பெண்ணின மதிப்புகளை உயர்த்திப் பிடிப்பதும் அவர்களின் சாதனைகளையும் பங்களிப்புகளையும் அங்கீகரிப்பது என்றும் பொருள். இந்தியாவிலும் அந்நாளில் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் படித்த நடுத்தர வர்க்கப் பெண்கள் சம்பந்தப்பட்டது. பெண்ணினத்தின் எஞ்சிய பகுதியினர் கவனிக்கப்படாது விடப்படுகின்றனர். இந்தியாவில் பாலினச் சமத்துவத்தை அடைவதிலிருந்து வெகு தொலைவு தள்ளி இருக்கிறோம்; ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்கள் மட்டுமேயெனும் ஏற்றத் தாழ்வான பாலின விகிதம் அதிர்ச்சியளிப்பதாகும்.

            இந்தியாவில் பெண்கள் ஆற்றும் பாதிக்கும் மேற்பட்ட பணிகள் ஊதியமளிக்கப்படாதவை மற்றும் அமைப்பு சாராத பணிகளே. இந்திய விவசாயிகளில் 40% பெண்கள் என்றபோதிலும், அவர்கள் வசம் 9% நிலங்கள் மட்டுமே உடைமையாக உள்ளது. பாதி இந்தியப் பெண்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை உச்சநீதிமன்றம் இந்து குடும்பச் சொத்தில் மகள்களுக்கும் சமமான உரிமை உண்டென்று கூறியபோதிலும் 60% பெண்களுக்குச் சொத்து இல்லை. மொத்த உற்பத்திக் குறியீட்டில்  (ஜிடிபி) பெண்களின் பங்களிப்பு உலக சராசரி 37 சதவீதமாக இருக்க, இந்தியாவில் வெறும் 17%. உழைப்புச் சக்தியில் பெண்களுக்குச் சமமான வாய்ப்பு அளிக்கப்படுமானால் இந்தியாவின் ஜிடிபி 27 சதவீதமாக உயருமெனச் சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்ஃஎப்) மதிப்பிட்டுள்ளது.

            பாதிக்கும் மேற்பட்டப் பெண்களிடம் செல்பேசி இல்லை, 80% பெண்கள் இணையத் தொடர்பு இல்லை. அரசின் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் விவசாயமல்லாத, கார்ப்பரேட் அல்லாத கடன்கள் சிறு குறு தொழில் முனைவோருக்கு வழங்கப்படுகிறது: அதில் பெண் தொழில் முனைவோர்கள் 78%மாகவும், வங்கிமூலம் நேரடி நலஉதவி பெறும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலமும் அரசு பெண்களுக்கு அதிகாரமளிக்க முயல்கிறது. இருப்பினும் இந்தியப் பெண்கள் இன்னும் பொருளாதார ரீதியாக அதிகாரமளிக்கப்பட்டவர்களாக இல்லை – சமவேலைக்கு (பெண்களுக்குச்) சம சம்பளமில்லை.

            இந்தியாவில் பெண்களின் மிகப்பெரிய பிரச்சனை உடல்ரீதியாகப் பாதுகாப்பில்லாதது. பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் இந்தியாவில் 53.9%. டெல்லியில் பெண்கள் பொது இடங்களில் பாலியல் அல்லது உடல்சார்ந்த வன்முறைத் தாக்குதல்களை அனுபவிப்பது 92%. அது நமது தேசியத் தலைநகரம். பெண்களுக்கு எதிரான வன்முறை வெளியே தெரிவதைவிட எங்கும், எப்போதும், நீக்கமற இன்னும் அதிகமாகவே நடைபெறுகின்றன; இதில் பலவகை வடிவிலான வன்முறைகள் குற்றங்களாகக் கருதப்படுவதில்லை, அன்றி வெளிஉலகிற்குத் தெரிவிக்கப்படுவதில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்காக இந்தியாவை உலகின் மிகமிக அபாயகரமான நாடாகக் கருதுகின்றனர். வன்புணர்வு இந்தியாவில் மிகச் சாதாரணமான நிகழ்வாகிப் போனது; இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு பெண் வன்புணர்வுக்கு ஆளாகிறாறென தேசிய குற்ற ஆவணப் பதிவுகள் அமைப்பு (NCRB) கூறுகிறது.

            2019ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 88 வன்புணர்வு வழக்கு பதியப்பட்டதாக அவ்வமைப்பு சமீபத்தில் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்குப் பல நேரம் நியாயம் கிடைப்பதில்லை; காரணம், அவர்களது தரப்பைக் காவல்துறை நியாயமாகக் காதுகொடுத்துக் கேட்பதில்லை, முதல் தகவல் அறிக்கை பதிவதில்லை, பலதருணங்களில் மருத்துவ சாட்சியம் பதியப்படுவதில்லை. இவையெல்லாம் குற்றம் புரிந்தவர்கள் சுலபமாகத் தப்பிவிடச் சாதகமாகின்றன.

            என்னால் ஆணின் மன அமைப்பைப் புரிந்து கொள்ள முடியவில்லை, எப்படி பலாத்காரமாக ஒரு பெண்ணை அல்லது குழந்தையைத் தவறாக நடத்துவது அல்லது வன்புணர்வுக்கு ஆட்படுத்துவது என்ன மனநிலையோ? இந்தியப் பெற்றோர்கள் தங்கள் மகன்களுக்கு வாழ்வின் நல்ல மதிப்பீடுகளைச் சொல்லித் தருவதில்லையோ? பெரும்பான்மை வன்புணர்வுக் குற்றங்களும் கழிவறை வசதி இல்லாத காரணத்தால் வயல்வெளிக்குச் செல்லும்போது நடக்கின்றன. ஆனால் நகரில் பேருந்துக்காகக் காத்திருக்கும் பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை என்பதைத்தான் நிர்பயா வழக்கு அம்பலப்படுத்தியது. இந்நிலையில் இரவில் காலங்கடந்து பெண்கள் வெளியே தங்கியிருப்பதும், அல்லது ஈர்க்குமாறு மேற்கத்திய உடைகளை அணிவதையும் காரணம் காட்டிப் பெண்களை அரசியல்வாதிகள் குறை கூறுவது எந்தவகையிலும் பயன்தராது. அது அவர்களுடைய வேலை இல்லை. மாறாக, அவர்களுடைய பணி பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதுதான்.

            கல்விக்கான வாய்ப்பு குறைவு, ஏழ்மை காரணமாகப் பெண்களைத் தகுந்த வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொடுப்பது கரோனா தீநுண்மி பெருந்தொற்றால் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கோவிட் தொடர்பாகப் பள்ளிகள் மூடப்பட்டதால் 160 கோடி குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளது. இப்படித்தான் 2013ல் எபோலா தொற்று பரவியதும் பெண் குழந்தைகள் படிப்பைக் கைவிட்டு பள்ளியைவிட்டு நீங்க, தொடர்ந்து அவர்கள் குழந்தைத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டதும் நடந்தது – இதனை ஒருவகையில் அப்பெண்ணின் குடும்பம் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கருதினர்.

            தொற்றின் காரணமாக வேலையிழப்பு, குடும்ப வருமான இழப்பினால் பெண்களைப் பொருளாதாரச் சுமையாகக் கருதி இளம் வயதில் திருமணம் முடிப்பது இந்தியக் குடும்பங்களில் நிர்பந்திக்கப்படுகிறது. கரோனா தீநுண்மித் தொற்றின் காரணமாக வயதுக்கு வராத இலட்சக் கணக்கான பெண்கள் திருமண வாழ்வில் திணிக்கப்படும் ஆபத்து உலகம் முழுவதும் நடைபெறுவதாக யுனிசெப் அறிக்கை கூறுகிறது. ஐ.நா.வின் புள்ளி விபரப்படி இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 15 இலட்சம் குழந்தை மணப்பெண்கள் திருமணம் நடைபெறுவதாக மதிப்பிட்டுள்ளது. தொற்று ஆரம்பித்த நாள் முதலாக நான் பல இளம் பெண்களின் சோகக் கதைகளைப் படித்து வருகிறேன். வேலையிழந்த பெற்றோர் அவர்களை வயதானவர்களுக்கு மணம் முடிக்கிறார்கள், அதன் பிறகு ஒரு வாய் வயிறுக்குச் சோறிடும் சுமை குறையுமே என்று.

            இந்திய அரசு அனைவருக்கும் கல்வி என்பதில் உறுதி பூண்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்க  கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. 15 முதல் 16 வயதுள்ள பெண் குழந்தைகள் பள்ளியை விட்டு இடை நிற்பது 2008ல் 20 சதவீதமாக இருந்தது, 2018ல் 13.5%ஆகக் குறைந்துள்ளதென ஆண்டு கல்விநிலை அறிக்கை கூறுகிறது. பல நேரங்களில் தங்கள் தம்பி தங்கைகளைப் பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகளில் உதவி செய்யவும் வேண்டி பெண்கள் பள்ளியைவிட்டு இடைநிற்பது துரதிருஷ்டமே. மேலும் கழிவறை வசதி மற்றும் பாதுகாப்பின்மை வேறு சில பிரச்சனைகளாகும்.

            தற்போதைய வில்லன் கோவிட்-19. பெண்களுக்கான பயன்படு நிலையில் பள்ளிகளில் தனிக் கழிவறைகள் எண்ணிக்கை 2010லிருந்து உயர்ந்து 2018ல் 66.4%மாக அதிகரித்துள்ளது; அதேபோலப் பள்ளிகளில் சுற்றுச் சுவர் 13.4%லிருந்து 64.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 64.8%, அதில் ஆண்கள் 75.3%மாக இருக்க, பெண்கள் 53.7% மட்டுமே; இதில் ஆண் பெண் இடைவெளி21.6%. இந்த இடைவெளி கிராமப்புறத்தில் இன்னும் கூடுதலாக இருக்கும். பெண்கள் அந்தஸ்து நிலைமையில் நிலவும் இத்தொற்று பாதிப்புக்கு முடிவு எதுவும் கண்ணில் தெரியவில்லை.

            பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான தீர்வு கல்வி மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் அடைவதில் மட்டுமே உள்ளது. தீநுண்மி கல்விச் சாலைகளை மூட நிர்பந்தித்துள்ளது. மேலும் ஓராண்டு இந்தியப் பெண்கள் பாடு துன்பமயமே. எதிர்வரும் ஜூன் மாதம் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் -- தொற்று கால முன்னேற்பாடுகளான முகக் காப்பு, கையுறை, விலகி நிற்றல் முதலியவற்றை கடைபிடித்து, குறைந்த எண்ணிகையில் வகுப்புகள் ஷிப்ட் முறையில் -- திறக்கப்பட வேண்டும். இந்தியர்கள் புதியன கண்டுபிடிப்பவர்கள், புதிய வழிகளைக் காணுவார்கள். அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் பள்ளிகள் மாற்று வழிமுறைகளைக் கண்டு பிடிப்பார்கள். அவ்வாறின்றி, கல்விச் சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றால், குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணங்கள் மற்றும் பொதுவாகப் பெண்கள் அவமரியாதைக்குள்ளாவது அதிகரிப்பதையே நாம் எதிர்பார்க்க முடியும்.

--நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 27-03-2021

Are We Truly Celebrating Our Women?

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

No comments:

Post a Comment