Thursday 18 March 2021

‘சர்வதேசப் பெண்கள் தினம்’ கட்டுரை 2

 

   சர்வதேச உழைக்கும் பெண்கள் ஆண்டு: 

இன்று பெண்கள் சந்திக்கும் 

புதிய சவால்கள் 


--அமர்ஜித் கவுர்

பொதுச் செயலாளர், ஏஐடியுசி

            “பணிநிலைமை, கூலி, வேலைநேரம் மற்றும் பணியிடத்தில் பாதுகாப்பு போன்றவை மேம்பட, போராட்ட இயக்கங்களில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு மற்றும் தியாகத்தை நினைவூட்ட ஒரு நாளை அனுசரிக்க வேண்டும்!” – இக்கருத்தைக் கோபன்ஹேகனில் 1910ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது அகிலத்தின் சோஷலிசப் பெண்கள் கூட்டமொன்றில் -- தன் உழைப்பின் தகுதியில் ஒரு தொழிற்சங்கவாதியான -- கிளாரா ஜெட்கின்சன் வெளியிட்டார். மேலும் அவர் பேசும்போது, “மனிதர்களாக நடத்தப்படல், வரையறுக்கப்பட்ட பணிநேரம், முறையான ஊதியம், உழைப்பிற்கு மரியாதை முதலிய உரிமைகளைப் பெற, போராட்டங்களை முன்னின்று நடத்திய தொழிலாளர்களின் தியாகங்களை நினைவூட்டும் வகையில் ‘மே தினம்’ என்பது முழுமையான உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தது; அதுபோலவே, பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்!”

பின்னணியில் ஒரு போராட்டம்

            மிகுந்த முக்கியத்துவம் உடைய அவரது உரையின் பின்னணி பின்வருமாறு இருந்தது: 19ம் நூற்றாண்டின் தொழில்மயம் காரணமாக ஆலைகளில் பெண் தொழிலாளர்களும் அதிக அளவில் உழைத்தது மட்டுமல்ல, மோசமான பணிநிலைமைகளில் பணியாற்றவும் நிர்பந்தம். கடுமையான வறுமையின் காரணமாக 4, 5 வயதுடைய குழந்தைகளும்கூட தினமும் 12லிருந்து 14 மணி நேரம் வேலைவாங்கப்பட்டனர். இவ்வளவு கடுமையான உழைப்புக்கும் அற்ப ஊதியம், பணித்தன்மைசார் பாதுகாப்பு, சுகாதார வசதி ஏதுமற்ற, அபாயகரமான பணிச்சூழல் கொடுமை. இனியும் பொறுக்க முடியாது என 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொழிலாளர்கள் எதிர்க்கத் தொடங்கினர்.

            கோட்டுக்கு வெளியே அணியும் கையில்லாத குட்டையான சட்டை தயாரிக்கும் நியூயார்க் மன்காட்டனில் இருந்த நிறுவனத்தின் 30ஆயிரம் பெண் தொழிலாளர்கள் --10மணி வேலை நாள், சங்கம் அமைக்க அனுமதி கோரி -- டிசம்பர் மாதக் குளிரையும் பொருட்படுத்தாது வீதிகளில் இறங்கிப் போராடினர். போராடியவர்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. தடியடி தாக்குதல், துப்பாக்கிச் சூடு இவற்றில் எண்ணற்றோர் காயமடைய, பலர் கொல்லப்பட்டனர். சில நாட்களுக்குப் பிறகு அப்பகுதியில் இருந்த இரண்டு ஆலைகளில் தீவிபத்து ஏற்பட, தப்பிக்க அல்லது வெளியேற வழியில்லாத நிலையில் 125பேர் தீயில் எரிந்து மாண்டனர். அதே போழ்து, உலகம் முழுவதும் பெண்களுக்கு வாக்குரிமை கோரி பல இயக்கங்கள் நடைபெற்றன.

            ‘சர்வதேசப் பெண்கள் தினம்’ என்ற யோசனையைக் கிளாரா முன் வைத்து பேசியபோது இந்த டெக்ஸ்டைல் ஆலைப் பெண் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டங்களைத்தான் குறிப்பிட்டார். மார்ச் 8ம் தேதியைச் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமாக அனுசரிப்பது என முடிவாயிற்று. உலகின் பல பகுதிகளில் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களுமே இந்நாளைத் தொடக்கத்தில் கொண்டாடின. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ‘பெண்கள் சர்வதேசிய ஜனநாயக சம்மேளனம்’ (WIDF) அமைக்கப்பட்டு, அவ்வமைப்பிற்குப் ‘பொருளாதார – சமூகக் கவுன்சில்’ என்ற உயரிய கலந்தாலோசனை அங்கீகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை வழங்கி ‘பெண்கள் தினம்’ கொண்டாடும் இயக்கத்தை முன்னெடுத்தது; அதன் பிறகுதான் ஐநா-வின் அங்கீகாரத்துடன் பரவலாக உலகெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பெண்களும் தொழிற்சங்க இயக்கங்களும் கொண்டாட, ஐநாவின் 1975 அமர்வில் 1975ம் ஆண்டைச் ‘சர்வதேசியப் பெண்கள் ஆண்டு’ எனப் பிரகடனத் தீர்மானம் ஏற்கப்பட்ட பிறகே அரசாங்க மட்டத்திலும் பெண்கள் தினக் கொண்டாட்டங்கள் துவங்கின. [அரசு சாரா தன்னார்வ அமைப்புகளுக்கு அதன் சமூகப் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக ஐ நா மாமன்றம் வழங்குகின்ற மிக உயர்ந்த மதிப்புமிக்க அந்தஸ்தே ஒரு என்ஜிஓ அமைப்பிற்கு வழங்கப்படும் (ECOSOC) எனப்படும் ஆலோசனைக்குழு அந்தஸ்தாகும்.] 

இந்தியாவில் பெண் உரிமை தோற்றம்

            இந்தியாவிலும் பெண்களின் நிலை, வாழ்க்கை, பெண்கள் வாழ்வாதாரம் குறித்து ஆய்வு நடத்த முதன்முறையாக அரசு பூர்வமான கமிட்டி அமைக்கப்பட்டது. பின்வந்த ஆண்டுகளில் பெண்கள் இயக்கங்கள், ‘குழுவின் சிபார்சுகளை அரசே அமல்படுத்து’ என்ற கோரிக்கை முழக்கமாக அக்குழுவின் சிபார்சுகளே அடிப்படையாக அமைந்தன.  பெண்கள் அமைப்புகளும் தாங்களாக முன்வந்து சமூகத்தில் பெண்கள் அந்தஸ்து உயர்வதற்குப் பல ஸ்தாபனங்கள், ஆய்வு மையங்களை ஏற்படுத்தின. பெண்களின் மேம்பாட்டிற்கு அவர்களுக்கான கல்வி, உடல்நலம், சுகாதாரம், தண்ணீர், அடிப்படை குடிமை வசதிகள், பணியாற்றப் பயிற்சி மற்றும் வேலைபெறும் வாய்ப்பு போன்ற உரிமைகளை நமது இந்திய அரசியல் சட்டத்தில் இடம்பெறச் செய்து பொறிக்கப்பட்டுள்ளன; ஆனால் அவற்றை வென்று சாதிக்க, அமல்படுத்த மிகக் கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.

            மேலும், சமூக பொருளாதார கலாச்சார வெளியில் ஆண் பெண் சமத்துவ நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து தீவிரமான போராட்டங்களும் நடத்திட வேண்டியிருந்தது. தானாக எதுவும் மாறிவிடவில்லை. எப்போதெல்லாம் பெண்கள் பாலின நீதியுடன் கூடிய கௌரவமான வாழ்வுரிமை கோரிக்கை எழுப்பிப் போராடுகிறார்களோ அப்போதெல்லாம் அறிவுப் பரவலைத் விரும்பாத குழப்பவாதிகள், பிற்போக்கு, மதவாத சாதிய சக்திகள் அந்தப் போராட்டங்களுக்கு எதிராகத் தடைகளை ஏற்படுத்த முயன்றார்கள்.

பாஜக ஆட்சியில் புதிய தாக்குதல்கள்

            சமீப காலங்களில், மத்தியில் தற்போதைய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்ததிலிருந்து இச்சக்திகள், அதிகார அமைப்புகளின் ஆதரவோடு பெண்களுக்கு எதிரான தங்கள் பிற்போக்குத் திட்டங்களைத் திணிக்க தைரியம் பெற்றுவிட்டார்கள். இதனால் அனைத்து வகை பாகுபாடுகளுக்கும் எதிராகப் பாலின நீதியை நிலைநாட்ட நடத்தப்படும் போராட்டங்கள் மேலும் கடினமாக்கப்படுவதுடன் பெரும் விடா முயற்சியும் தேவைப்படுகிறது; இதனினும் பெருங்கொடுமை, பாஜக ஆளும் சில மாநிலங்களில் சட்டத்தின் மூலம் பிற்போக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் சமீபத்திய வடிவம்தான் “லவ் ஜிகாத்” என்ற பெயரில் பெண்களின் திருமணத் தேர்வை மறுக்கும் போக்கு. அதைவிட மோசமாக, தேர்தல் வெற்றி நோக்கத்திற்காக வெறுப்பு மற்றும் நச்சுக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதன் மூலம் சமூகத்தைப் பிளவு படுத்துவதானது, நமது நாட்டின் சமூகக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் அபாயகரமான பின்விளைவுகளுக்கு வழி கோலும். இவை அனைத்திலும் பாதிக்கப்படுவது, அதன் விளைவுகளைச் சுமப்பது பெண்களே.

பெண்கள் இன்று சந்திக்கும் பிரச்சனைகள்

            இவ்வாண்டு மார்ச் 8ல் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தைக் கொண்டாடும்போது பெண்கள் முன் எழுந்துள்ள சவால்கள் பல மடங்காக அதிகரித்துள்ளது. பல அருவருப்பான உண்மைகள் கோவிட் 19 நெருக்கடி காலத்தில் தலைதூக்கியுள்ளன. பெண்கள் தங்கள் குழந்தைகளோடும் ஆண் தொழிலாளிகளோடும் நெடுஞ்சாலைகளில் பல மைல்கள் தொலைவு கடுமையான இன்னல்களுக்கு இடையே நடந்து சென்ற துயரம் மிகுந்த படங்களை ஊடகங்களில் பார்த்த உலகம் அதிர்ச்சியில் உறைந்து போனது. ஆனால் நேரடியாகப் பார்த்த அரசு இவற்றைப் புறக்கணித்து வாளாயிருந்தது; துயர் துடைக்க, ஆறுதல் அளிக்க எந்தச் சிறு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள் மீதான தாக்குதல் அபாயம் –அவர்கள் வீட்டில் இருந்தாலும், பணியிடங்களில், ஏன் பல மைல் தொலைவு சோர்வாக நடந்துபோகும்போதும் – அதிகரித்தன. பெண்களுக்கு எதிரான இல்ல-வன்முறை (டொமஸ்டிக் வயலன்ஸ்) 40%க்கும் கூடுதலாக அதிகரித்த கசப்பான உண்மையைப் பல ஆய்வு அறிக்கைகள் வெளிப்படுத்தின.

            பெண் தொழிலாளர்களில் 97 சதவீதத்திற்கும் அதிகமாக அமைப்புசாரா பொருளாதாரப் பிரிவில் உழைப்பவர்களே; அமைப்புரீதியான பிரிவுகளில் பணியாற்றும் பெரும்பாலானோர் ஒப்பந்த முறையிலோ, தற்காலிக தினக்கூலியாக அல்லது வெளியிலிருந்து பணிஒப்பந்தம் செய்யப்பட்டவர்களாக (அவுட் சோர்ஸ்டு) இருப்பவர்களே. 97% பெண் உழைப்பாளிகளுக்குப்  பேறுகால விடுமுறை பலன்கள் ஒரு நிறைவேறாத கனவு. 1975 சர்வதேசப் பெண்கள் ஆண்டில் ‘சமவேலைக்கு சம ஊதியம் சட்டம்’ பிரகடனப்படுத்தப்பட்டு, 1976ல் அறிப்பாணை வெளியிடப்பட்டும், அமலாக்கத்தில் தொடர்ந்து தோல்வியே நிலவுகிறது.

பாலினப் பாகுபாடும் சமூக அணுகுமுறையும்

                பணியிடத்தில் பாலினச் சீண்டல்கள், தொல்லைகள் –விசாகா வழிகாட்டுதல்களுக்குப் பிறகும் – தணியாமல் தொடரவே செய்கிறது. பின்னர் நிர்பயா வழக்குக்குப் பிறகு பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டும் பயனின்றி அப்படியே உள்ளது. பாகுபாடு கூடாது என்ற அடிப்படையில் பெண்களுக்கான நீதி கிடைத்திட சமூகத்தின் உளப்பாங்கு போக்கு மாற வேண்டிய தேவை உள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் ஏன் பங்குபெற வேண்டும், அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்பன போன்ற அறிக்கைகள்; அல்லது, பெண்ணை மானபங்கம் செய்த படுபாவியையே அவனால் பாதிக்கப்பட்ட பெண்ணை மணக்க இயலுமாவென நீதித்துறையின் உயர்பீடத்திலிருந்து வினவுவது போன்றவை சமூகத்தில் ஆழமாக வேரோடிப்போன பாலின நீதி உணர்வற்ற அணுகுமுறையை அம்பலப்படுத்துவன. இதற்கு மாறாகச் சமீபத்தில்,  (முன்னாள் அமைச்சரும் பத்திரிக்கையாளருமான) எம்ஜெ அக்பர் எதிர் பிரியா ரமணி வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஓர் ஆறுதலாகும்; எதிர்பார்க்கும் மாறுதல்களுக்கான நம்பிக்கையை அளிப்பது. (அதுபோன்ற வழக்குகளில் பொதுவாக இதுவரை நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி கேட்கப்படும் கேள்விகள்: ஏன் உடனே சொல்லவில்லை? வழக்குப் பதியாமல் சமூக ஊடகத்தில் எழுதுவது ஏன்? என்ன ஆதாரம்? ஆடவரின் மதிப்பு மரியாதை என்னாவது? இதுபோன்ற அபத்தமான, பரவலான வினாக்களுக்கு இத்தீர்ப்பு தகுந்த விடையளித்து ஆறுதல் அளிக்கிறது)

பொருளாதாரப் பின்னடைவும் பெண்கள் துயரும்  

            வீழ்ச்சி மற்றும் மூழ்கும் பொருளாதாரத்தின் பாதிப்புகளை நம் நாடு சந்திக்கப்போகிறது. நல்ல ஊதியம் மற்றும் பணிபாதுகாப்புள்ள பணிகள் குறைக்கப்படுகின்றன; பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தும், அரசுத் துறைகளைச் சீரழித்து பலவீனப்படுத்தும் அரசின் முறைதவறிய நோக்கத்துடனான கொள்கைகளே அதற்குக் காரணம். மேலும் புதிய ஆளெடுப்பும் நடைபெறுவதில்லை.  

            சமூகப் பிரிவில் அரசு செலவழிப்பது தொடர்ச்சியாகக் குறைக்கப்படுவதால், அமைப்பு சாரா பொருளாதாரத்தில் கிடைத்துவந்த வேலைவாய்ப்புகள் சுருங்குகின்றன. உதாரணத்திற்கு ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்ட’த்தின் கீழ் கிராம ஊரகப் பகுதிகளில் பணி வழங்கும் (MGNREGA) திட்டத்திற்கான மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீடு தொடர்ச்சியாகக் குறைக்கபடுகிறது; பணியிடங்களை ஏற்படுத்துவதற்கான சட்டம் மதிக்கப்படுவதில்லை. கரோனா தொற்று ஊரடங்குக்கு பிந்தைய காலத்தில் ஆண்களைக் காட்டிலும் விகிதாசாரத்தில் பெண்களின் வேலையிழப்பு மிக அதிகம். பணித் திறன் உடைய பெண் தொழிலாளர்கள் வாழ்க்கையைச் சமாளிக்க வேண்டி –ஊதியம் குறைவான—பணித்திறன் தேவையில்லாத (அன்ஸ்கில்டு) பணியிடங்களில் பணியாற்ற முன்வருகின்றனர். அங்கேயும் அவர்களுக்கான வாய்ப்பு சுருங்கியே வருகிறது.

தொழிலாளர் சட்டங்கள் திருத்தமும் பெண்களுக்குப் பாதிப்பும்  

            தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி நான்கு குறுங்குறிகளாக (code) மாற்றியுள்ளது. இந்நடவடிக்கை தொழிற்சங்கங்களை ஒதுக்கித் தள்ளி, கூட்டு பேரச்சக்தியைப் பலவீனமாக்கும்; மேலும் சமூகப் பாதுகாப்பு, பணியின்போது பாதுகாப்பு மற்றும் ஊதியப் பிரச்சனைகளில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர் பட்டாளத்தை விலக்கி வைக்கும்.

            போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள், பணியிடத்திற்குச் செல்ல போக்குவரத்து வசதி, மற்றும் பணியிடத்தில் குறைந்தபட்ச வசதிகளைச் செய்து தராமல், சுரங்கப் பணிகள் மற்றும் ஆலைகளில்  இரவு ஷிப்ட் திரும்ப கொண்டு வந்துள்ளது பெண்களை மீண்டும் இரண்டு மடங்கு துன்பத்திற்கு உள்ளாக்கும்.

            தடைசெய்யப்பட்ட பகுதிகளை உடல்நலத்திற்கு தீங்கு பயக்கும் பகுதி என வரையறை செய்து அப்பகுதிகளில் பெண்கள் பணியாற்றுவது தொழிற்சாலை சட்டத்தில் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்தது; ஆனால் அச்சட்டத்தில் தற்போது திருத்தம் செய்து ‘பெண்கள்’ என்ற வார்த்தையைக் ‘கருவுற்ற தாய்மார்கள்’ என மாற்றியுள்ளது மிகவும் பிற்போக்கான நடவடிக்கை. அது மற்ற பெண்களை அப்பகுதியில் பணியாற்ற நிர்பந்திக்கும். இவ்வாறு தொழிலாளர் நலச் சட்டங்களை குறுங்குறியாக்கியதில் பல பகுதிகளில் செய்யப்பட்ட --கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்-- மாறுதல்கள் குறித்து ஆழமான விவாதங்கள் தேவைப்படுகின்றன.

            எனவே, தற்போதைய ஆட்சியாளர்களால் “வாழ்க்கையில் நிலையற்றவை என்பன நிலையானதாக மாற்றப்படுகின்றன” என்ற விமர்சனம் மிகவும் பொருத்தமானது.

காரிருளில் மின்னல் கீற்றென நம்பிக்கை

            இவ்வளவு கடுமையான காலச் சூழ்நிலையில், பெரும் எண்ணிக்கையிலான மகளிரும், அனைத்து வயதுடைய பெண்களும் போராட்டங்களில் பங்கேற்பது, காரிருளில் மின்னல் கீற்று போல ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயம். அவர்கள் தங்கள் சொந்த பாதுகாப்புப் பிரச்சனைகளுக்காக மட்டுமின்றி, தங்கள் அடையாளத்தை நிலைநாட்ட, சமூகத்தின் பலபிரிவு மக்களின் அக்கறையுள்ள விஷயங்கள் குறித்தும் போராட முன்வருகிறார்கள். கல்வி உரிமைக்கான போராட்டங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை வணிகமயமாக்கும் போக்குகளைக் கண்டித்து, தனியார்மயத்தை எதிர்த்து, மாணவர் சங்கங்களுக்கு ஜனநாயக உரிமைகள் கோரி நடைபெறும் போராட்டங்களில் இப்பெண்கள் களத்தில் முன்னே நிற்கிறார்கள்.  இது நம்பிக்கை அளிக்கும் போக்கு.

           


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இயக்கத்தைப் பெண்களில் இளையோர் மற்றும் மூத்தோர் இணைந்து தலைமையேற்று நடத்தினர். அதேபோல அனைத்து வயதுடைய பெண்களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டு தற்போது வேளாண் பெருமக்கள் நடத்தும் நெடிய போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

            கல்வித் தகுதியுடைய இளம் பெண்கள், இளைஞர்களுக்குச் சற்றும் பின்தங்காது, போராடும் விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவு உதவியை வழங்குகின்றனர். தற்போதைய ஆளும் தரப்பு 2014ல் ஆட்சிபீடம் ஏறிய நாள் முதலாக பல இளம் பெண்களுக்கு எதிராகச் ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ ஊபா (UAPA), தேசத் துரோகச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழெல்லாம் வழக்குப் பதிந்து கைது செய்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் சற்றும் அஞ்சுவதில்லை, சுற்றி நில்லாதே போ பகையே எனக் களமாடுகின்றனர். ஆட்சியாளர்களுக்கு அஞ்சாத அந்தப் பெண்களுக்கு ஆதரவாக அவர்கள் குடும்பத்தினரும் உறுதியாக நிற்கின்றனர்.

            இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஜீவனான மதிப்புறு விழுமியங்களை அழித்தொழிக்கத் தலைப்படும் சக்திகளுக்கு எதிராக வெளிப்படையாகச் சவால்விடும் வீரம் செறிந்த இளம் பெண்களின் நெஞ்சுரத்திற்கு இந்தியச் சமூகத்தின் அனைத்து ஜனநாயக, மதசார்பற்ற மற்றும் முற்போக்கு சக்திகள் மிகுந்த நன்றிக் கடப்பாடு உடையவர்கள்.

சமூக வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு

            பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்து நாடு விடுதலை வெற்றியை அடைந்ததில் பெண்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது; விடுதலை பெற்ற பாரத தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், பெற்ற விடுதலையைப் பேணிக் காப்பதிலும் அதே உற்சாகமாக பங்கேற்பு; ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம், கண்ணீரால் காத்து’ வாராது வந்த விடுதலையை, நாட்டின் இறையாண்மையை, மாற்றுக் கருத்துரைக்கும் உரிமையை, பேச்சுரிமையை, அதற்கும்மேல் அரசியலமைப்புச் சட்டத்தையும்  தற்போது பாதுகாப்பதில் முன்நிற்பதும் பெண்களே. 

            இந்த ஆண்டின் சர்வதேச உழைக்கும் பெண்கள் நாளில் இப்போராட்டங்களைத் தொடர்ந்து வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்ல சூளுரைப்போம்!  

                        “விலகி வீட்டில்ஓர் பொந்தில் வளர்வதை

                         வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பராம்

                         ஆணும் பெண்ணும் நிகர்எனக் கொள்வதால்

                         அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்!”

                                         -- நன்றி : நியூஏஜ் (மார்ச் 14 –20)

-- தமிழில் : வெ நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment