Friday 26 March 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 28 சுதா ராய் – கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க முன்னணியின் பெண் தலைவர்

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -28


சுதா ராய் – கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க முன்னணியின் பெண் தலைவர்

--அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (ஜன.3-.9 இதழ்)

            சுதா ராய் 1914ல் தற்போதைய பங்களாதேசத்தில் உள்ள ஃபரிதாபூர் என்ற இடத்தில் ஒரு நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை அகால மரணமடைந்ததால் தனது தாயையும் மற்ற குழந்தைகளையும் கவனிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. டாக்காவில் உள்ள ஈடன் கல்லூரியிலும் கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் வங்கமொழியில் ஹானர்ஸ் சிறப்பு பட்டப் படிப்பை முடித்தார்.

            சுதா ராயை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் மனோரஞ்சன் குஹா தாக்கூர்டா. அவரது ஒன்றுவிட்ட சகோதரர் (கசின்) சிசிர் ராய் அவரைத் தொழிற்சங்க இயக்கத்தோடு தொடர்பு கொள்ளச் செய்தார். அவர் பின்னாட்களில் போல்ஷ்விக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். பெங்கால் லேபர் பார்ட்டி (பிஎல்பி) என்றழைக்கப்பட்ட ஓர் அமைப்பு 1933ல் நிறுவப்பட்டது; மீரட் சதி வழக்குப் பின்னணியில் அக்கட்சி ஓர் இரகசிய அமைப்பாக, போல்ஷ்விக் கட்சி என்ற பெயரில் செயல்பட்டது. அந்தக் கட்சியை நிஹரேந்து தத் குப்தா மற்றும் டாக்டர் நரேஷ் சென்குப்தா அமைத்தனர். அவர்கள் பிரிட்டனில் மாணவர்களாக இருந்தபோது கம்யூனிஸ்ட்களாக ஆனவர்கள்.

            பெங்கால் லேபர் கட்சியின் பிரபலமான தலைவர்களில் சிசிர் ராய், சுதா ராய், ஜோதிர்மாய் நந்தி, கமல் சர்க்கார், பிஸ்வநாத் தூபே முதலானவர்கள் அடங்குவர். அந்தக் கட்சி முக்கியமாகக் கல்கத்தாவின் கிட்டர்பூர் மெடியாபர்ஸ் பகுதியின் துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் செயல்பட்டது. அந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலோனோர் உருது மற்றும் இந்தி பேசுபவர்கள்.

தொழிற்சங்க இயக்கத்தில்

            பெங்கால் லேபர் பார்ட்டி (பிஎல்பி) மிக நெருக்கமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒத்துழைத்தது. துறைமுக மற்றும் கப்பல், சணல், இரும்பு மற்றும் எஃகு, உலோகம் மற்றும் என்ஜினியரிங், பேர்டு அண்டு கோ கம்பெனி, சுகாதாரத் தூய்மைப் பணியாளர்கள், ரயில்வே துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் எனத்  தொழிற்சங்க அமைப்புகள் பலவற்றைப் பிஎல்பி நிறுவியது. இந்த அமைப்புகளின் அனைத்து நடவடிக்கைகளிலும் மெல்ல மெல்ல சுதா ராய் ஈடுபட்டார். சமூக விரோத சக்திகளின் அடாவடியால் அந்நாட்களில், துறைமுகப் பகுதிகளில் பெண்கள் நடமாடுவது பாதுகாப்பானதாக இல்லை; ஆனால் சுதா ராய் அச்சவாலை எதிர்கொண்டு அமைப்பு சார்ந்த பணிகளில் உற்சாகமாகவும் உறுதியோடும் செயல்பட்டார். தொழிலாளர்கள் மத்தியில் அவர் ‘பெகன்ஜி’ (இந்தியில் ‘மரியாதைக்குரிய சகோதரி’ என்று பொருள்) என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பெரும் புகழோடு விளங்கினார். 

            அஸாம் ரயில்வேமென் சம்மேளத்திலும் பணியாற்றினார், அதற்காக 1939 –40களில் அவர் அஸாம் சென்றார்.

1932ல் சுதா ஆசிரியர் பணியைக் கமலா பெண்கள் பள்ளியில் மேற்கொண்டார்; 1958வரை அதே பணியில், இடையே சிலகாலம் துண்டிக்கப்பட்டாலும், நீடித்தார். அப்போது தெற்குக் கல்கத்தாவின் ஹஜ்ரா சந்தில் (ஹஜ்ரா லேன்) வசித்தார். பள்ளியில் வகுப்புகள் முடிந்ததும், அவர் பிற்பகலில் வழக்கமாகத் துறைமுகப் பகுதிக்குச் சென்று தொழிலாளர்களிடையே பணியாற்றினார். அவர்களோடு நேரத்தைச் செலவிட்டு, அவர்கள் பிரச்சனைகள் குறித்துப் பேசி, வர்க்க உணர்வு மற்றும் சோஷலிசம் பற்றி அவர்களுக்கு அறிமுகம் செய்தார். லெனின் மற்றும் ரஷ்யப் புரட்சி பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார். உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் பற்றித் தெரிந்துகொள்ளச் செய்தார். மிக நுட்பமாக அரசியல் மற்றும் தத்துவத்தைத் தொழிலாளர்களுக்கு முறையாக அறிமுகம் செய்த ஒருசில தொழிலாளர் வர்க்கத் தலைவர்களில் சுதாவும் ஒருவர்.

கல்கத்தா போர்ட் அண்டு டாக் ஒர்க்கர்ஸ் யூனியன் மார்ச் 1934 ல் அமைக்கப்பட்டது. சுதா ராய் அச்சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். 1934ல் மிக வெளிப்படையாக மே தினத்தை அனுசரித்தபோது அந்தக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் திரண்டனர். (இந்தியாவில் முதல் மே தினம் சென்னையில் 1923ல்  சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நடத்தினார்)

விரைவில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுப்பினர்; வேலை நேரத்தை 11 மணியிலிருந்து 8மணி நேரமாகக் குறைப்பது, தினக் கூலியை உயர்த்துவது, பணிச் சுமையைக் குறைப்பது, பணிப் பாதுகாப்பு முதலியன சில. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தமுள்ள 20 ஆயிரம் துறைமுகத் தொழிலாளர்களில் 15ஆயிரம் பேரும், ஐயாயிரம் கப்பல் கட்டும் தொழிலாளர்களில் 2000 தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். கல்கத்தா துறைமுகத்தில் மட்டும் 50 கப்பல்கள் செயல்படாமல் முடங்கிக் கிடந்தன.

இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாகத் திரட்டி அமைப்பதில் சுதா ராய் தீவிரமாகப் பங்கேற்றார். பலநாட்களில் சிசிர், ஜோதிர்மாய் நந்தி மற்றும் சுதா ராய் வீட்டிற்குச் செல்லாமல் கப்பல் நிற்கும் துறையின் பகுதியில் உள்ள சிறிய அறையிலேயே தங்கி இருந்தனர். செயல்படுவதே சிரமமான மிக மோசமான சூழ்நிலைகளில் அவருடைய செயல்பாடு தீரத்தின் வெளிப்பாடு.

வேலைநிறுத்தம் செய்தவர்கள் பழிவாங்கப்பட மாட்டார்கள் என்ற உறுதிமொழியில் 1934 டிசம்பர் 16ம் நாள் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அலுவல்சாராத விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவில் சர் பிசி ராய், டாக்டர் நரேஷ் சென்குப்தா மற்றும் மௌல்வி ஏகே ஃபஸ்லுல் ஹஹ் போன்ற பிரபலமானவர்கள் இடம் பெற்றனர். மேலும் அந்த வேலைநிறுத்தம், ரஹீம், யூசுப், ஷேர் கான், நாராயண் ராவ், அப்தர் ரஹ்மான் கான் முதலான முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவர்களை உருவாக்கித் தந்தது.

போல்ஷ்விக் கட்சி சிபிஐ கட்சியுடன் இணைந்தது

             1936ம் ஆண்டின் தொடக்கத்தில் போல்ஷ்விக் கட்சி சிபிஐ கட்சியுடன் இணைந்ததும் சுதா ராயும் சிபிஐயில் சேர்ந்தார். சுதா ராய் வங்காளத்தின் சட்டவிரோதமான சிபிஐ கட்சியில் சேர்ந்த இரண்டாவது பெண்ணாக இருக்கக் கூடும். முதலாவது பெண் லத்திகா சென். 1949 ஏப்ரல் 27ல் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகி, லத்திகா சென்.

            போல்ஷ்விக் கட்சி மீண்டும் ஒருமுறை திருத்தி அமைக்கப்பட்டு திரும்பவும் ஒரு கட்சியாக உருவானது. 1939ல் நடைபெற்ற திரிபூரி காங்கிரஸில் சுபாஷ் போஸ் தொடர்பான பிரச்சனை எழுந்தபோது, அது நிகழ்ந்தது. நிகரேந்து தத், பிஸ்வநாத் தூபே, சிசிர் ராய் போன்ற போல்ஷ்விக் தலைவர்கள், சிபிஐ கட்சி சுபாஷ் போஸையும் அவர் பார்வர்டு பிளாக் கட்சி அமைத்ததையும் ஆதரித்து இருக்க வேண்டும் என்று கருதினர். தேசிய ஐக்கிய முன்னணி என்ற பெயரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கக் குலாவுதல் (ஒத்துழைப்பு) கொள்கையைக் கடைபிடித்துவிட்டதாக அத்தலைவர்கள் எண்ணினர். சுதா ராயும் திரிபூரி காங்கிரஸ் மாநாட்டில் சிபிஐ பிரதிநிதியாக முக்கிய சிபிஐ கூட்டங்களில் பங்கேற்றார். அவரும் சிபிஐ கட்சியிலிருந்து விலகி மற்ற தலைவர்களோடு போல்ஷ்விக் கட்சியில் இணைந்தார். 1941ல் அவர் வேலையை விட்டுவிட்டு சில காலம்  போல்ஷ்விக் கட்சிப் பணியாற்றினார்.

இரண்டாவது உலகப் போரின்போது

            இரண்டாவது உலகப் போரின்போது ஏஐடியுசி தலைமையில் பாரக்பூர் –திட்டஹார்க் பகுதியின் (சணல் மில் தொழிலாளர்களின்) ஸாட்கல் மஸ்தூர் சங்கத்தில் சுதா ராய் தளர்வின்றி ஒரு தொழிற்சங்கத் தலைவராகத் தீவிரமாகச் செயல்பட்டார். ஓர் அர்ப்பணிப்புள்ள செயற்பாட்டாளர் மற்றும் தலைவரது செயல்பாடு என அவரை நந்த்லால் போஸ் வர்ணித்துள்ளார். “இந்த இளம் பெண்,” கல்கத்தா பல்கலைக்கழகப் பட்டதாரி, பெங்கால் லேபர் கட்சியின் மற்றும் சிபிஐ கட்சியின் முக்கியமான தலைவர் எனப் (போலீஸ்) புலனாய்வுத் தகவல் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர். தொழிலாளர்களின் அரசியல் பிரக்ஞை உணர்வுகளை எழுப்ப அவர் கடுமையாகப் பாடுபட்டார்.

குழுப் போக்குக்கு எதிராக

            குழுவாதப் போக்குடைய அரசியல் கட்சியிலும் சூழலிலும் இருந்தாலும், சுதா ராயின் அணுகுமுறை குறிப்பிடத்தக்க பரந்த சிந்தனைப் போக்குடையதாக இருந்தது.  1938ல் ஜெஸ்ஸோர் கௌல்னா அரசியல் தொழிலாளர்கள் மாநாட்டில் நரேஷ் சென் என்ற செயல்பாட்டாளர் எதிர் முகாம் ஆட்களால் 1938 மே 28ல் கொல்லப்பட்டார், காரணம் அவர் கம்யூனிஸத்தின் பால் சென்றார் என்பதே. பாலிகுங்கேயில் 1938 ஜூன் 10ல் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள், தொழிலாளர்கள் –குறிப்பாக ஹுகும்சந்த் இரும்பு ஆலையின் தொழிலாளர்கள் – கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் சுதா ராய், முஸாஃபர் அகமது உட்பட போல்ஷ்விக் பார்ட்டி மற்றும் சிபிஐ தலைவர்கள் உரையாற்றினர்.  

            சுதா ராய் பேசும்போது, குழுப் போக்கு அணுகுமுறை மற்றும் விரோத மனப்பான்மையால் அரசியல் களங்கப்படுத்தப்பட்டு வருவதாக இடித்துரைத்தார். “சுதந்திரத்திற்கான போராட்ட வீரர்கள் முக்கியமான ஒரு கொள்கையைக் கண்ணின் மணியாய் கொண்டனர்: ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிடுவது. பகுத்தறிவையும் வாதிடுவதையும் பயன்படுத்த வேண்டுமே தவிர, வன்முறையை அல்ல. “பயங்கரவாதிகள் லெனினைக் கொல்ல முயன்றனர், ஆனால் இன்றளவும் லெனினியம் செம்மாந்து முன்னோக்கி நடைபோடுகிறது.”

            பாட்னாவிலிருந்து சுதா ராய் முஸாஃபூரில் இருந்த உமா கோஷ் அவர்களுக்கு 1942 அக்டோபர் 7ல் எழுதிய கடிதத்தில், பாசிசத்திற்கு எதிரானவர்களின் ஒற்றுமை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட மிகவும் முக்கியமானது. “பிசி ஜோஷியும்கூட ஒன்றிணைந்த பெருந்திரள் செயல்பாட்டிற்கு ஒப்புக்கொண்டுள்ளார்…” ரேணு சக்ரவர்த்தியும்கூட குழுவாதப் போக்கற்ற சுதா ராயின் அணுகுமுறையைச் சுட்டிக் குறித்துள்ளார்.   

            கப்பல்துறை தொழிலாளர் போர்டில் முதல் பெண் உறுப்பினராக சுதா ராய் இருந்துள்ளார். 1945ல் ‘லோக் சிக்க்ஷா பரிக்க்ஷத்’ என்ற வயது வந்தோர் கல்வியறிவு அமைப்பை அமைத்தார்.

பெண்கள் இயக்கத்தில்

            1943ல் சுதா பெண்கள் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அனைத்திந்திய பெண்கள் மாநாடு (AIWC) மற்றும் அதன் ‘குழந்தைகள் முகாமை (செல்) பாதுகாப்போம்’ (Save Children Cell’) பிரிவில் பணியாற்றினார். பாரிசாலில் நடைபெற்ற ‘மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதி’ அமைப்பின் இரண்டாவது வட்டார மாநாட்டில் கலந்து கொண்டார். 1940களில் மத்தியில் மதக் கலவரங்களில் பாதிக்கப்பட்டு துன்பப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றோர் முகாம்களில் தீவிரமாகச் செய்ல்பட்டு பல்வேறு பணிகளை ஆற்றினார்.

            1954ல் ‘இந்தியப் பெண்கள் தேசிய சம்மேளனம்’ (NFIW) அமைப்பு மாநாட்டில் சுதா ராய் பங்கேற்றார். அம்மாநாட்டு வரவேற்புக் குழுவின் ஒரு உறுப்பினரான அவர் மாநாட்டில் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் பொறுப்பை 1981 வரை வகித்தார்.

பொதுத் தேர்தல்களில்

            முதலாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போல்ஷ்விக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட ஒரே வேட்பாளர் சுதா ராய் மட்டுமே. பாரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு அவர் 25,792 வாக்குகள் பெற்றார். 1957 சட்டமன்றத் தேர்தல்களில் கோட்டை (போர்ட்) தொகுதியிலிருந்து போட்டியிட்டு நான்காவதாக வந்தார்.

யுடியுசி அமைப்பில்

            சுதா ராய் பணியாற்றிய துறைமுக கப்பல் தொழிலாளர்கள் சங்கம் 1958ல் பிளவுபட்டது. சுதா, சிசிர் மற்றும் பூத்நாத் தே முதலானோர் பிஸ்வநாத் தூபேயை எதிர்த்து நின்றனர். 1960ல் சிசிர் ராய் மரணமடைய, சுதா ராய் யுடியுசி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார்.

மீண்டும் சிபிஐ கட்சியில் இணைதல்

            1965ல் நடைபெற்ற போல்ஷ்விக் கட்சி மாநாட்டில் சுதா ராய், கட்சியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைக்க வேண்டும் என வற்புறுத்தினார். அவருடைய யோசனையை மாநாடு நிராகரித்தது. அதன் பிறகு அவர் தமது ஆதரவாளர்களுடன் போல்ஷ்விக் கட்சியை விட்டு விலகி, சிபிஐ கட்சியில் இணைந்தார். ஏஐடியுசியின் ஸாட்கல் மஸ்தூர் யூனியன் (சணல் தொழிலாளர்கள் சங்கம்) மற்றும் சில தொழிற்சங்கங்களில் சுதா ராய் பணியாற்றத் தொடங்கினார்.

            1970களில் நடைபெற்ற பங்களாதேஷ் விடுதலைப் போருக்கு உறுதியான தீவிர ஆதரவை வழங்கினார்.

            ஓர் ஆற்றல் மிக்க தொழிற்சங்கத் தலைவரான சுதா ராய், சிலகாலம் நோய்வாய்ப்பட்டு இன்னலுற்ற பிறகு 1987 ஜூன் 7ம் நாள் மறைந்தார்.

            தொழிலாளர்களிடையே அவர் ஆற்றிய பணி என்றும் நீங்காது நினைவிலிருக்கும்.

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

  

No comments:

Post a Comment