Friday, 28 November 2025

ஏங்கெல்ஸ் – மார்க்சியத் தத்துவத்தை இணைந்து உருவாக்கியவர்

ங்கெல்ஸ் –

மார்க்சியத் தத்துவத்தை

இணைந்து உருவாக்கியவர்

–கிருஷ்ண ஜா

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் இல்லாமல் மார்க்சியம் முழுமை அடைந்திருக்க முடியாது. புருஷிய அரசாட்சி ரைன் மாகாணத்தின் பர்மன் என்ற ஊரில் 1820 நவம்பர் 28ல் பிறந்த ஏங்கெல்ஸ், மார்க்சிடமிருந்து பிரிக்க முடியாதவர். அவரது தந்தை ஜவுளி நூற்பாலை உரிமையாளர். தந்தையின் விருப்பப்படி அவர் தனது கல்வியை விட்டுவிட்டு பர்மனில் வணிகத்தில் ஈடுபடும் கட்டாயத்திற்கு ஆளானபோதும், அவர் நவீன பாட்டாளிகளின் மிகச் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் அறிவாளிகளில் ஒருவரானார். ஏங்கெல்ஸ் குறித்த சிறிய வரலாற்றுக் குறிப்பில் லெனின், “இந்த இரண்டு நண்பர்கள் ஒன்றான காலத்தில் இருந்து, அவர்கள் பொதுவான சமூக நல நோக்கத்திற்கு உழைக்க தங்கள் வாழ்வின் பணியை அர்ப்பணித்தார்கள். பாட்டாளிகளுக்கு ஏங்கெல்ஸ் என்ன செய்தார் என்பதைப் புரிந்து கொள்ள ஒருவர், தங்கள் சமகால தொழிலாளர் வர்க்க இயக்க மேம்பாட்டிற்கு மார்க்சின் போதனைகள் மற்றும் ஆக்கங்கள் குறித்த தெளிவான கருத்தைப் பெற்றிருக்க வேண்டும்” என்று எழுதினார்.

உண்மையில் மார்க்ஸும்  ஏங்கெல்ஸும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் முன்னோடிகள் –அவர்கள்தான் அந்த வர்க்க இயக்கத்தை, நவீனச் சமூகத்தில் சுரண்டலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தீமைகளிலிருந்து பாட்டாளிகளை விடுவிக்கும் வர்க்கப் போராட்டம் என விளக்கினர். வர்க்கப் போராட்டம், சமூகத்தை மேலும் முன்னெடுத்து நடத்திச் செல்லும் வாழ்வின் ஜீவிதம். ‘ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் ரீதியிலானது’ என்று கூறிய ஏங்கெல்ஸ், எனவே அது நன்கு உணர்வுடையதும் ஒருங்கமைத்துத் திரட்டப்பட்ட ஒன்றுமாகும்; ஏனெனில் அது சுரண்டல் முறைமையையே எதிர்த்து நடத்தப்படுவதாகும். ஒரு வர்க்கம் மற்றதன் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையை முடிவு கட்டுவதுடன் ஒரு மாற்றத்தை இது கொண்டு வருகிறது. மேலும் அது தனி சொத்துரிமைக்கும் அராஜகமான (சட்ட ஒழுங்கற்ற) சமூக உற்பத்திக்கும் முடிவு கட்டுகிறது.

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் இந்தக் கருத்துக்கள் மக்கள் தொகையில் பெரும் பகுதியினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவர்கள் சோசலிச நூல்களைப் படைப்பதிலும் ஈடுபட்டனர். சமூக இயக்கங்கள் பரவலாகப் பெருக்கினாலும், அவை அனைத்துமே அறிவியல் ரீதியில் அமைக்கப்பட்டன அல்ல. அவற்றில் பல இயக்கங்களும் சமூகத்தை மாற்றுவதில் முனைந்தன; ஆனால் பாட்டாளி வர்க்கம் மற்றும் பூர்ஷ்வா (நடுத்தர வர்க்க முதலாளியியம்) இடையில் நோக்க நலன்களில் முரண்பாடு நிலவும் கள யதார்த்தத்தை ஏற்பதில் அவை தோல்வியடைந்தன.

மேலும், தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ளும் நெருக்கடியை ஆளும் வர்க்கங்கள் அறியாது உள்ளனர் என்பது அவர்களின் புரிதலாக இருந்ததால், அவர்கள் வன்முறையில் ஈடுபட விரும்பவில்லை. முதலாளிகளின் வளர்ச்சியுடன் தொழிலாளர் வர்க்க வளர்ச்சியைக் கண்டு அவர்கள் திகிலடைந்தனர். இது, தொழில்துறை மேலும் வளர்வதை நிறுத்த வேண்டும் மற்றும் அதன் மூலம் வரலாற்றின் சக்கரங்களும் சுழல்வதில் இருந்து நிறுத்தப்படும் என அவர்களை நம்ப தூண்டியது. இவற்றை விளக்கும்போது லெனின், ஏங்கெல்ஸ் குறித்து எழுதுகையில், ‘மார்க்ஸுடன் சேர்ந்து ஏங்கெல்ஸ், தொழிலாளி வர்க்கம் தன்னைத் தானே உணர்ந்து கொள்ளவும், அதன் வலிமை குறித்த விழிப்புணர்வு பெறச் செய்யவும் பாடுபட்டார்’ என்று எழுதினார். ஏங்கல்ஸும் மார்க்ஸும் பாட்டாளிகளின் கனவுகளை அறிவியலுடன் நிரூபித்தனர்.

தத்துவ இயலாளர் ஹெகல், தத்துவ உலகில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்த காலமது. நீண்ட காலம் இல்லை என்றாலும், ஏங்கல்சும் கூட அவரைப் பின்பற்றுபவரானார். ஹெகல் அப்போது நிலவிய ஏதேச்சிகார ஆட்சியைப் (autocracy) போற்றுபவராக இருந்தாலும் அவரது போதனைகள் புரட்சிகரமானவை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது என்பது அவரது கருத்துக்களின் அடிப்படைகளாக இருந்தன. அப்போது சிலர், தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பது என்ற இந்தக் கருத்துக்களை, ஒன்று முடிவுக்கு வந்து மற்றொன்று வருவது என்றும் கூட விளக்கலாம் –அதாவது முடிவில்லாத மாற்றத்தின் முறைமை இது– என்பதாக மறைமுகமாக விளக்கினர். ஹெகல் ஒரு கருத்து முதல்வாதி மற்றும் கருத்தே –மனித மற்றும் சமூக உறவுகள் உட்பட– முழுமையான எதார்த்தத்தின் ஆதார ஊற்று என்று கருதியவர். இந்தக் கருத்து அமைவுகளுக்கும் (ஃபார்முலேஷன்) மற்றும் தனித்த, நிபந்தனையற்ற அறுதி முழு முதல் (அப்சல்யூட்) கருத்தியல் என்பதற்கும் எதிராக மார்க்சுடன் ஏங்கெல்ஸ் எழுந்து நின்றார். அவர்கள் இருவரும் இவ்வுலகின் பௌதீக சக்திகளே இயற்கை உருவாவதற்கு உதவுவதாக நம்பினர்.

இந்த நேரத்தில்தான் ஏங்கெல்ஸ், 1845ல் “இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை” என்ற நூலை எழுதினார். பாட்டாளிகள் தீவிரமான பற்றாக்குறை மற்றும் ஏழ்மையில்

மட்டும் துன்பப்படவில்லை, மாறாக அதற்கும் மேலும் இருக்கிறது என்று முதன் முதலில் அறிவித்தவர் ஏங்கெல்ஸ்தான். ‘அவர்களின் துன்ப துயரங்கள் இந்தப் பாதகமான நிலைமைகளுக்கு எதிராக எழ நிர்பந்திப்பதுடன், முழுமையான விடுதலைக்குப் போராட வருமாறும் அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது. முழுமையான விடுதலைக்காக ஆள்வோர்களுக்கு எதிரான கிளர்ச்சி, தொழிலாளர் வர்க்க அரசியல் இயக்கத்தைக் கிளர்ந்தெழச் செய்து, இறுதியாகச் சோஷலிசம் மட்டுமே தீர்வாக முடியும் என அவர்களை உணர்ந்திடச் செய்கிறது’. ஏங்கெல்ஸ் எழுதிய இந்த நூல் குறித்து லெனின், அது, “முதலாளித்துவம் மற்றும் பூர்ஷ்வாக்கள் மீதான கடுமையான கண்டனமும் விமர்சனமும் ஆகும்; மற்றும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய நூல்” என்று கூறினார். “1845க்கு முன்பும் சரி அதற்குப் பிறகும் சரி, இதுபோல் ஈர்க்கக்கூடிய மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்கதாக உண்மையான படப்பிடிப்பு –தொழிலாளி வர்க்கத் துன்ப துயரங்களின் சித்திரம்– தோன்றியதில்லை” என்றும்கூட லெனின் எழுதினார். 

இங்கிலாந்து வந்து சேர்ந்த பிறகு ஏங்கெல்ஸ் சோஷலிசவாதி ஆனார், மான்செஸ்டரில் தொழிலாளர் இயக்கத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டார். இந்நேரத்தில் மார்க்ஸும்கூட சோஷலிஸ்ட் ஆகி இருந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து “புனிதக் குடும்பம் அல்லது விமர்சனபூர்வ விமர்சனத்தின் மீதான விமர்சனம்” (அதாவது இளம் ஹெகலியர்களை  விமர்சித்து “The Holy Family, or Critique of Critical Criticism”) என்ற நூலை எழுதினர். அப்புத்தகம் புரட்சிகர பொருள் முதல்வாத சோஷலிசத்தின் அடிப்படைகளைக் கொண்டது.

1845லிருந்து 1847 வரை ஏங்கெல்ஸ், புரூசெல்ஸ் மற்றும் பாரிஸில் இருந்தார். இங்கே அவர்கள் இரகசிய ஜெர்மன் கம்யூனிஸ்ட் லீக் அமைப்புடன் தொடர்பில் இருந்தபோது, சோஷலிசத்தின் முக்கிய கோட்பாடுகள் குறித்து எழுதுமாறு வேண்டிக் கொள்ளப்பட்டனர் –அப்போது அவர்கள் அந்த விஷயம் குறித்துதான் தங்கள் ஆய்வை நடத்திக் கொண்டிருந்தனர். இவ்வாறுதான், கம்யூனிசத்தின் கோட்பாடுகளுடன், ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ (தி மேனிஃபெஸ்டோ ஆப் கம்யூனிஸ்ட் பார்ட்டி) வந்தது.

மார்க்ஸ் லண்டனில் குடியேறினார்; ஏங்கெல்ஸ் ஓர் எழுத்தர் பணியை மேற்கொண்டு பின்னர் மான்செஸ்டர் வணிக நிறுவனத்தில் பங்குதாரர் ஆனார். இருவருமாக இணைந்து விஞ்ஞான சோசலிசம் மீது தங்கள் ஆய்வு பணியை நடத்தினர். 1870ல் ஏங்கெல்ஸ் லண்டனுக்கு மாறி வரவும், விரைவில் இருவருமாகச் சேர்ந்து இணைந்த அறிவார்ந்த பணிகளில் ஈடுபட்டனர். ஏங்கெல்ஸ் படைப்புக்கள், பெரும்பாலும் சர்ச்சைக்குரிய தர்க்கரீதியான விமர்சனப்பூர்வமானவை: அறிவியல் பிரச்சனைகள் குறித்த அவை, வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கருத்துருவாக்கத்துடன் (conception) எழுதப்பட்டன. 1883 வரை அவர்கள் கடுமையாகப் பணியாற்றியபோது மார்க்ஸ் மரணமடைந்தார்.

அவரது மாபெரும் படைப்பு மூன்று தொகுதிகளைக் கொண்ட ‘மூலதனம்’ (கேப்பிட்டல்) –அவை, பதிப்பாசிரியராக மட்டுமில்லாமல் அதே நேரம் மீண்டும் ஏங்கல்ஸால் திரும்ப எழுதப்பட்டு வெளியிடப்பட்டன. அந்த மாபெரும் படைப்பாக்கத்தில் தனது இறுதி செம்மையாக்கல் சிறு திருத்தப் பணிகளைச் செய்து முழுமையாக்கும் முன் மார்க்ஸ் (மனித குலத்திற்கான தனது சிந்தனைகளை நிறுத்தி) இவ்வுலகை விட்டு மறைந்தார்.

ஏங்கல்ஸால் எழுதப்பட்ட பிறநூல்கள்: 

‘லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” (Ludwig Feuerbach and the End of Classical German Philosophy என்ற நூலின் தமிழாக்கம் பதிப்பு) ஃபாயர்பாக் பொருள்முதல் வாதம் குறித்து வலியுறுத்திய போதும், இயக்கவியல் (டயலெக்டிக்ஸ்) குறித்து வலியுறுத்தவில்லை. (எனவே அது குறித்த  ஏங்கெல்ஸ் விமர்சன நூல் இது).

மேலும் ‘தொடக்க கால கிறிஸ்டியானிட்டி மீது’ என்பது அவர் எழுதிய இன்னொரு நூல். மற்றொரு நூல் ‘டூரிங்குக்கு மறுப்பு’ மார்க்சியத்தின் மூன்று கூறுகளுடன்; வீட்டு வசதி பிரச்சனை மீது இரண்டு பெரும் கட்டுரைகள்; இயற்கையின் இயக்கவியல் முதலான நூல்கள்.  ஏங்கெல்ஸ் இயற்கை விஞ்ஞானம் மற்றும் இராணுவ விவகாரங்கள் மீது சிறப்பு நிபுணத்துவம் கொண்டிருந்தார். ஏங்கெல்ஸ் இரண்டாவது (கம்யூனிச) சர்வதேச அகிலம் அமைப்பை நிறுவியவரும் ஆவார்.

மார்க்சியத்தின் இணை நிறுவனரான பிரெட்ரிக் எங்கெல்ஸ் 1895 ஆகஸ்ட் மாதம் 5ஆம் நாள் இயற்கை எய்தினார். 

காரல் மார்க்சின் பெருங்கொடையை நமக்கு முழுமையாக்கித் தந்த மார்க்ஸின் இணைபிரியா நண்பர் பிரெட்ரிக் எங்கெல்ஸ் பிறந்தநாளில் அவர் புகழ் பாடுவோம்! 

–நன்றி : நியூ ஏஜ் (நவ. 23 –29)

–தமிழில் : நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்

 

    

.     

 

No comments:

Post a Comment