கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 135
மோகன் குமாரமங்கலம்
--தலைசிறந்த கோட்பாட்டாளர் மற்றும் தலைவர்
–அனில் ரஜீம்வாலே
சுரேந்திர மோகன் குமாரமங்கலம் தலைசிறந்த கம்யூனிஸ்ட் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் கோட்பாட்டாளரும் (தியரிடிஷியன்) ஆவார். தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக்
கட்டியவர்களில் அவரும் ஒருவர். 1940களின் தொடக்கத்தில் புனையப்பட்ட புகழ்பெற்ற மெட்ராஸ்
சதி வழக்கில் ஈடுபட்டவர். பின்னர் அவர் இந்திய தேசியக் காங்கிரஸில் இணைந்தார்,
1966 முதல் 1967 வரை மெட்ராஸ் மாநிலத்திற்கு அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றினார். அவர்
ஒன்றிய அமைச்சராகவும் இருந்தவர். விமான விபத்தில் பிரபலமான பல ஆளுமைகளுடன் அவர் மரணமடைந்தார்.
லண்டனில் பிறப்பும் வளர்ப்பும்
மோகன் குமாரமங்கலம் திரு பி சுப்பராயன் மற்றும் திருமதி ராதாபாய் சுப்பராயன் இருவருக்கும்
மகனாக லண்டனில் 1916 நவம்பர் 1-இல் பிறந்தார். அவரது தந்தை அப்போது
கல்விக்காக லண்டன் வந்திருந்தார். அவர்களின் குடும்பம்
வாழ்வின் பல்வேறுபட்ட துறைகளில் தலைசிறந்து விளங்கிய பிரபலமானவர்களைச் சமூகத்துக்கு
வழங்கிய ஆளுமை பொருந்திய குடும்பம். மூத்த மகன் ஜெனரல் பரமசிவ பிரபாகரன் குமாரமங்கலம்
இந்திய இராணுவத்தில் ஏழாவது (சீஃப் ஆஃப் ஸ்டாப்) தலைமை படை அதிகாரியானார். உண்மையில்,
மோகனின் தாயார் ராதாபாய் 1938ல் மத்திய அசெம்பிளியின் முதல் பெண் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்;
மற்றும் மோகனின் சகோதரி பார்வதியை அரசியலுக்குள்
கொண்டு வந்ததில் அவரே முக்கிய பொறுப்பு. ராதாபாய் ஓர் அரசியல்வாதி, சமூக சீர்திருத்தக்காரர்
மற்றும் பெண் உரிமைகளின் தலைவர். அவர் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் கூட
கலந்து கொண்டவர்.
புகழ் பெற்ற பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் வரலாற்று
ஆசிரியர் எரிக் ஹாப்ஸ்பாவ் (Eric Hobsbawm) பெரு விருப்பத்துடன் பெருமைமிகு இந்தக் குடும்பத்தைப் பற்றி
‘இன்ட்ரஸ்டிங் டைம்ஸ்’ என்ற தனது சுயசரிதையில் விவரித்துள்ளார். பார்வதி கிருஷ்ணன்
தனது சகோதரர் மோகன் குமாரமங்கலத்தைச் சந்திக்க ஹார்வேர்ட்டுக்கு விஜயம் செய்ததை அவர்
குறிப்பிட்டுள்ளார்.
பி சுப்பராயன் அப்போது நாமக்கல் (சேலம்) மாவட்ட
திருச்செங்கோடு தாலுகா ‘குமாரமங்கலம்’
ஜமீன்தார். 5000 ஏக்கர்களுக்கு மேலாக நிலங்கள் வைத்திருந்தார். ஆனால்
அந்தக் குடும்பம் அந்த நிலங்களை நிலம் அற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தது –குடும்ப
உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் அவரவர் சொந்தப் பாதையை வகுத்துக் கொண்டனர்.
சுப்பராயன் மெட்ராஸ் மாகாணத்தின் புகழ்பெற்ற
அரசியல்வாதியாகி, எண்ணற்ற பேர்களுடன் பெரும் மரியாதையுடன் கூடிய தொடர்பும், கம்யூனிஸ்டுகளிடம் நெருக்கமும் கொண்டு
1926– 30ல் மெட்ராஸ் ராஜதானியின் முதன்மை அமைச்சராக (முதலமைச்சர் ஆக) ஆனார்; இந்தோனேசியாவுக்குத்
தூதராகவும் நேரு அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராகவும் இருந்தார். அவர் அரசியலமைப்பு
நிர்ணய சபை உறுப்பினரும்கூட.
பாஜகவில் இணைந்த ரங்கராஜன் குமாரமங்கலம்
அவரது பெயரன்.
கல்வி
மோகன் குமாரமங்கலம் ஈடன் மற்றும் கிங்ஸ் கல்லூரியில்
கல்வி கற்றார். கேம்பிரிட்ஜில் படித்த காலத்தில் அவர் ஆழமான கம்யூனிசச் செல்வாக்குக்கு
ஆட்பட்டார். FEDIND அமைப்பில் அல்லது ‘வெளிநாட்டில் இந்திய மாணவர்களின் ஃபெடரேஷன்’ அமைப்பில் அவர் தீவிரமாகப் பங்கு பெற்றார்.
1937ல் ‘கேம்பிரிட்ஜ் மஜ்லிஸ்’ அமைப்பின் தலைவராக
அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். (மஜ்லிஸ் என்ற பெர்சியன் வார்த்தைக்கு அசெம்பிளி அல்லது
குழு என்று பொருள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தின் மஜ்லிஸ், இந்திய மாணவர்களின்
சமூக அறிமுகம், விவாத அரங்கு மற்றும் நடவடிக்கை செயல்பாட்டிற்கான மையம்). 1938ல் அவர்
கேம்பிரிட்ஜ் யூனியன் தலைவரானார்.
மேல் படிப்புக்காகக் கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்தபோது
இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வந்த கம்யூனிசக் கருத்துக்களால் மோகன் ஆழமாக ஈர்க்கப்பட்டார்.
பாசிச ஆக்கிரமிப்பு மற்றும் ஜெனரல் பிரான்சிஸ்கோ பிளாங்கோவின் எதிர்ப் புரட்சிக்கும்
எதிராக இளைஞர்கள் ஸ்பானிஷ் குடியரசை ஆதரித்தனர். அவர் பிரிட்டன் மாணவர் இயக்கத்தின்
முன்னணிப் படையில் ஒருவராக உருவானார்.
ஜவஹர்லால் நேரு ஐரோப்பாவிற்கு விஜயம் செய்த போது மோகன் அவருடன் நெருங்கிய
தொடர்பு கொண்டார். ஸ்பெயினுக்குச் சென்ற நேரு, அதன் போர்முனைகளுக்குச் சென்று (ஸ்பானியக்)
குடியரசைப் பாதுகாப்பவர்களை நேரடியாக வாழ்த்தினார். நேரு பயணம் செய்த காரை ஓட்டுவதற்கு அவர் தேர்ந்தெடுத்தது
மோகன் குமாரமங்கலத்தைதான். அது ‘பாதுகாப்பு’
வழங்குவதற்காக மட்டுமல்ல, அறிவார்ந்த பயணத் துணையை வழங்குவதற்காக -வும்கூட.
சுப்பராயனின் பெரும் நண்பரான நேரு, மோகனை வெகுவாக விரும்பினார்.
இந்தியாவுக்குத் திரும்பும் வழியில் மோகனின்
பெற்றோர்களைச் சந்தித்த பூபேஷ்
குப்தா, அந்தப் பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்ட தங்கள்
கம்யூனிஸ்ட் மகன் மோகன் மற்றும் மகள் பார்வதி குறித்து மிகவும் பெருமிதம் அடைந்ததைக்
கண்டார். ஒரு வகையில் சுப்பராயன்கள் தங்கள் இரு குழந்தைகளையும் கம்யூனிசத்தைத் தழுவச்
செய்ததில் பெரும் பங்கு வகித்தனர்!
1951 வரை மோகன், கட்சி ஊதியத்தில் முழு நேர
உறுப்பினராக இருந்தார். சுதந்திர இந்தியாவில் தடுப்பு காவலில் முதலில் பாதிக்கப்பட்டவர்களில்
அவரும் ஒருவர். அவரே பின்னர் எஃகு மற்றும் சுரங்கத்துறை ஒன்றிய அமைச்சராகவும் ஆனார்.
நாடாளுமன்ற உறுப்பினரகச் செல்லும் வரை குமாரமங்கலம்
நீதிமன்றங்களில் அற்புதமாகச் சட்டப் போராட்டம் நடத்திய வழக்கறிஞராக இருந்தார். பொதுவாகச்
சட்ட உலகிலும், குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞராகவும் அவர் இருந்தார்.
சேவையில் மூத்த மூன்று நீதிபதிகளைத் தாண்டி
இளையவரைத் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு ஆதரவாக மோகன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை
ஆற்றல் மிக்கச் செயல்பாடு.
பிரிட்டனில் பாரிஸ்டர்களுக்கான பெருமைமிக்க
‘இன்னர் டெம்பிள்’ அமைப்பு குமாரமங்கலத்தை வழக்கறிஞர்கள்
பார் அமைப்பிற்கு அழைத்தது. [ஆங்கில வழக்கறிஞர்கள் அமைப்பான பாருக்குத் தனி நபர்களை
வழக்கறிஞராக அனுமதிப்பதற்கு உரிமை பெற்ற நான்கு அமைப்புகளில் ஒன்றுதான் இன்னர் டெம்பிள்.
அவை, கிரேஸ் இன், லிங்கன் இன், இன்னர் டெம்பிள் மற்றும் மிடில் டெம்பிள் என்ற பிரிட்டன்
பாரிஸ்டர்களுக்கான அமைப்புகள்–இணையத் தகவல்]. 1939ல் இந்தியா திரும்பிய மோகன் குமாரமங்கலம் இந்திய விடுதலை இயக்கத்தில்
பங்கு பெற்றார்.
லண்டனில் இருந்தபோது தான் மோகனுக்குப் பிரிட்டன்
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் தத்துவத்துடன் தொடர்பு ஏற்பட்டது. பார்வதி எக்ஸ்போர்ட்
மஜ்லிஸ் என்ற மாணவர் அமைப்பின் தலைவர் ஆனார்.

மேலும் அவர் FEDIND (இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இருந்த
இந்திய மாணவர் சமூகங்களின் சம்மேளனம், Federation of Indian Students Societies
in England and Ireland)
என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் செயல்பட்டார். இங்கிலாந்து மற்றும் ஆக்ஸ்போர்ட்
–கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் பயின்ற ஏராளமான இந்திய மாணவர்களில் என்கே கிருஷ்ணன்,
பூபேஷ் குப்தா, ஜோதிபாசு, மோகன் குமாரமங்கலம், இந்திரஜித் குப்தா, மோஹித் சென்
முதலான வாழ்வில் பின்னர் கம்யூனிஸ்டுகளான மாணவர்களும் அடங்குவர். ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகங்களில் மோகன் குமாரமங்கலம், பார்வதி குமாரமங்கலம், அருண் போஸ், இந்திரஜித்
குப்தா, ரொமேஷ் சந்திரா, ரேணு சக்கரவர்த்தி, என்கே கிருஷ்ணன், ஜோதிபாசு, பூபேஷ் குப்தா,
மோகித் சென் மற்றும் சிலர் போன்ற எதிர்காலத்தில் கம்யூனிஸ்டுகளாக மலர்ந்தவர்கள்
படித்தார்கள். இது தவிரவும் அங்கு இந்திரா காந்தி, PN ஹஸ்கர் மற்றும் பிறர் அன்ன ஒளி வீசிய ஆளுமையாளர்கள்
இருந்தனர். எரிக் ஹாப்ஸ்பாம் மோகனை நன்றாக அறிவார்.
இந்தியா திரும்புதல்
1939இல் இந்தியா திரும்பிய மோகன் தொழிலாளர்கள்
மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் தீவிரமாக ஈடுபட்டார்.
1940களின் தொடக்கத்தில் மெட்ராஸ் ராயப்பேட்டையில் சுப்பராயன்கள் குடும்பத்தினரைச் சந்தித்த
புகழ்பெற்ற கம்யூனிசக் கோட்பாட்டாளர் மோகித் சென் பெரிதும் ஈர்க்கப்பட்டார். மோகனின்
பெற்றோர்கள் மட்டுமல்லாது லிபியாவில் இத்தாலியப் போர் கைதிகள் முகாமில் இருந்து அப்போதுதான்
விடுதலை செய்யப்பட்ட, பிற்காலத்தில் இந்திய இராணுவக் கமாண்டர் இன் சீப் ஆக பணியாற்றிய (P P) பரமசிவ பிரபாகர் குமாரமங்கலமும்கூட அங்கே இருந்தார்.

அப்போதுதான் கம்யூனிஸ்ட்
கட்சியில் முழு நேர உறுப்பினர்களாக இணைந்திருந்த மோகன் மற்றும் பார்வதி ஆகிய தங்கள்
குழந்தைகள் குறித்து பெற்றோர்கள் மிகுந்த பெருமிதம் கொண்டனர். மோகித் சென் மற்றும்
பிறரிடம் மார்க்ஸ் மற்றும் லெனினைப் படிக்குமாறு மோகன் கூறுவது வழக்கம். பம்பாய் கட்சித்
தலைமையகத்தில் இருந்த பிசி
ஜோஷி, கம்யூனிஸ்ட் அறிக்கை மற்றும் பிற கம்யூனிச
நூல்களைப் படிக்குமாறு தோழர்களைத் தூண்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருப்பார். பிசி ஜோஷி,
மோகன் மற்றும் பிறர், கட்சித் தலைமையகமான ராஜ் பவனில் அற்புதச் சூழலை ஏற்படுத்தினர்.
மோகன் மீது காந்திஜி தனது கடவுளின் (ஆசீர்வதிக்கப்பட்ட) குழந்தையாக (like
his godson) கருதி அன்பு கொண்டிருந்தார்.
முதலாவது கட்சி காங்கிரஸ், 1943
மோகன் 1940 ஏப்ரலில் ஆலடி கிருஷ்ணசாமி ஐயரால்
ஒரு வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டார்.
1939இல் இரண்டாவது உலக யுத்தம் வெடிக்க பிரிட்டிஷ்
அரசு பெரும் எண்ணிக்கையிலான கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆதரவாளர்களைக் கைது செய்து அவர்களுக்கு
எதிராகப் பல்வேறு ‘சதி வழக்குகள்’ தொடுத்தனர். அவ்வழக்குகளில் புகழ்பெற்ற ஒன்று 1941ன் ‘மெட்ராஸ் சதி வழக்கு’;
அதில் குமாரமங்கலம், சிஎஸ் சுப்பிரமணியம், பி ராமமூர்த்தி, கேரளீயன், எஸ் சுப்பிரமணியம்
சர்மா, ஆர் உமாநாத், ஹனுமந்த ராவ் மற்றும் சிலர் சிறை தண்டனை விதிக்கப்பட்டனர்.
மாதக் கணக்கில் நீண்ட அந்த வழக்குகள் குமாரமங்கலம்,
ராமமூர்த்தி மற்றும் பிற தோழர்களுக்குத் தங்களது லட்சியங்களையும் நோக்கங்களையும் விரிவான
மக்கள் திரளுக்கு அறிவிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது. அவர் ‘தேசத் துரோகப் பிரசுரங்கள்’ என்று அழைக்கப்பட்ட சுற்றறிக்கை கையேடுகளை
மக்களிடம் விநியோகித்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களை ஆயுதம் ஏந்தத் தூண்டியதாகக்
கூறி அவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் 1942லேயே
அவர் விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் அவர் மதுரை மாவட்டத்தில் பயணம் செய்து
மாணவர்கள், புகையிலை மற்றும் பஞ்சு நூற்பாலைத் தொழிலாளர்களைத் திரட்டினார்.
மோகன், பார்வதி மற்றும் என் கே கிருஷ்ணனுடன்
கட்சி மற்றும் தொழிற்சங்க இயக்கங்களைத் தென்னகத்தில் கட்டியமைப்பதில் முன்னணி அமைப்பாளராகச்
செயல்பட்டார்.
1943, மே ஜூன் மாதங்களில் பம்பாயில் நடைபெற்ற
முதலாவது கட்சி காங்கிரசில் மோகன், சிபிஐ-யின் மத்திய குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சிப் பொதுச் செயலாளர் பிசி ஜோஷியின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த போதும், 1948 கல்கத்தாவில்
நடைபெற்ற இரண்டாவது கட்சி காங்கிரசில் பிசி ஜோஷியைக் கடுமையாக விமர்சித்தத் தோழர்களுடன்
மோகனும் சேர்ந்து கொண்டார்.
திருமணம்
காங்கிரஸ் தலைவர் அஜாய் முகர்ஜி மற்றும்
சிபிஐ தலைவர் பிஸ்வநாத் முகர்ஜியின் மருமகளான கல்யாணி முகர்ஜியை 1943ல் திருமணம் செய்து கொண்டார். (ஓவியம் நன்றி தோழர் அன்பு, காலந்தோறும் கம்யூனிஸ்ட்கள்)
கட்சித் தலைமையகத்தில்
1940களில் குமாரமங்கலம் பம்பாய் சந்தூர்ஸ்ட்
சாலையில் உள்ள மத்திய கட்சி தலைமையகமான ராஜ் பவனத்திற்கு (Raj Bhuvan) மாற்றப்பட்டார். எல்லோரிடத்தும் நட்புறவு
ஏற்படுத்திக் கொள்ளவும் மக்களுடன் ஒன்று கலக்க வல்லவருமான பிசி ஜோஷியுடன் அவர் நெருங்கிய
நட்பு கொண்டார்! நீங்காது நினைவில் நிற்கும் அந்தக் கம்யூன் வாழ்க்கையின் பிரிக்க
முடியாத அங்கமானார் மோகன். அங்கே அவர் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். மத்தியக்
கட்சியின் ‘பீப்பிள்ஸ் வார்’ அதன் பிறகு ‘பீப்பிள்ஸ் ஏஜ்’
ஆகிய இதழ்களில் பணியாற்றியவர், அவற்றின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றார்.
மோகன், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளில்
அவரது விரிவான, ஆழமான அறிவை வெளிப்படுத்தி அந்த இதழ்களில் உயர் கருத்தியல் மிக்க (தியரிட்டிகல்)
மற்றும் கல்விப் புலனத் தரத்திலான கட்டுரைகளை வழக்கமாக எழுதினார். அங்கிருந்தபோது அவர்
எழுதிய பல்வேறு சிற்றேடுகள்/கையேடுகள் (புக்-லெட்ஸ்) அவரது ஆழமான அறிவைக் காட்டின.
சீனாவின் ஒற்றுமையை யார் அச்சுறுத்துவது? (1944), ஈரான் மற்றும் ஜெர்மனி
குறித்து மற்றும் பிற விடயங்கள் குறித்து அவர் எழுதியவை அத்தகைய சிற்றேடுகளில்
அடங்கும்.
சீனா பற்றிய கையேட்டில் அவர், தேசிய முன்னணி அமைப்பதன் முக்கியத்துவம் குறித்த பிரச்சனையை எழுப்பினார்.
சீனா குறித்த சிற்றேட்டிற்கான தேவை என்ன என்ற கேள்விக்கு அதில் அவர் பதிலளித்தார்;
மேலும் காலனியம் மற்றும் பாசிசத்தை எதிர்த்துப் போராடிய நேரத்தில், இந்தியா மற்றும்
சீனாவுக்கு இடையே நெருங்கிய உறவு இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார். சீனாவில் ஏகாதிபத்திய
எதிர்ப்பு, பாசிச எதிர்ப்புப் போராட்டம் வெறும் அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சனை மட்டும்
அல்ல, மாறாக இந்தியாவிற்கும் கூட அதன் பரவலான பின்விளைவுகள் உள்ளன. சீனாவில் தேசிய
முன்னணியின் பலவீனம் நமது சொந்த எல்லைகளுக்கு ஜப்பானின் ஆபத்தை அதிகரித்தது, மேலும்
“நமது மக்களைத் தாக்குவதற்கான அவர்களின் செயல்திறனை அதிகரித்தது.” சீனாவில் ஜப்பானுக்கு எதிரான சக்திகளுக்கு
உதவுவது நமது கடமை, என குமாரமங்கலம் விளக்கினார். சீனாவில் தேசிய முன்னணி, தீவிர வலதுசாரி
மற்றும் பாசிசச் சக்திகளால் சீர்குலைக்கப்படுவது பெரும் கவலைக்குரிய விஷயம்.
தெளிவாகவும் அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியில்
திறன் மிக்கதாகவும் தேசிய முன்னணியின் கேள்வியைச் சுற்றி எழுதப்பட்ட அற்புதமான கையேடு
அது
இரண்டாவது கட்சி காங்கிரஸ், 1948
பிப்ரவரி-- மார்ச் 1948ல் கல்கத்தாவில் நடைபெற்ற
சிபிஐ இரண்டாவது கட்சி காங்கிரஸ் மாநாட்டில் மோகன் குமாரமங்கலம் கலந்து கொண்டார். முன்பு
அவர் பிசி ஜோஷியுடன் மிக நெருக்கமாக இருந்த போதிலும், மாநாட்டின் தருணத்தில் பிசி ஜோஷியைக்
கூர்மையாகக் கண்டித்து மேற்கொள்ளப்பட்டட பிடிஆர் தலைமையிலான தாக்குதலில் அவரும் இணைந்தார். பிசி ஜோஷியே கூறினார்:
‘அதிகாரி, குமாரமங்கலம், என்கே கிருஷ்ணன் மற்றும் பிறர் தனக்கு எதிராகத் தொடுத்த தாக்குதலின்
மூர்க்கத்தைப் பார்க்கும்போது, பிடிஆர் கண்டனத் தாக்குதலின் மூர்க்கத்தால் தான் அவ்வளவாகக்
காயப்படுத்தப்படவில்லை’ என்றார்.
மோகன் பின்னர் தனது பாதையை மாற்றிக் கொள்ள
வேண்டி வந்தது; மற்றும் சிபிஐ வரலாற்றை மீண்டும் புதிதாகப் பரிசீலிப்பதற்கான தேவை எழ,
அது காங்கிரஸ் மற்றும் சிபிஐ இடையே பல அம்சங்களில் கருத்திணக்கம் குவிவதைக் காட்டியது. ஜோஷியைவிட அவர் இன்னும் சற்று மேலே
சென்று, ‘ஒன்றுபட்ட தேசிய முன்னணி’ என்ற கருதுகோளைத் ‘தேசிய முன்னணி’யாக மேலும் வளர்த்து, முன்மொழியப்பட்ட முன்னணி (திட்டத்தில்) யில் காங்கிரசுக்கு மைய முன்னணி இடத்தை அளித்தது. இவ்வாறு இந்தக் கருதுகோள் (கான்செப்ட்) ‘தேசிய
ஜனநாயக முன்னணி’ என்பதிலிருந்து வேறுபட்டு
இருந்தது.
இக்காலகட்டத்தின்போது, தமிழ்நாட்டில் விவசாயிகள்
போராட்டங்களில் அவர் கைது செய்யப்பட்டார்.
அதன் பிறகு கட்சியின் தேசியக் குழு உறுப்பினராகவும்
மற்றும் ஏஐடியுசி பேரியக்கத்தில் பல்வேறு பொறுப்புகளிலும் செயல்பட்டார்.
அட்வகேட் ஜெனரலாக
1960களில் மெட்ராஸ் மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலாகப்
பணியாற்றினார். இந்தப் பொறுப்பை அவர் மிகத் திறமையுடன் மேற்கொண்டார்.
காங்கிரஸ் கட்சியில் இணைத்தல்
1967 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக வெற்றி
பெற்றதைத் தொடர்ந்து குமாரமங்கலம் அந்த ஆண்டு சிபிஐயில் இருந்து விலகி காங்கிரஸில்
இணைந்தார். 1971ல் பாண்டிச்சேரியில் இருந்து (இந்திரா) காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு
அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1973ல் பணியில் மூத்த மூன்று நீதிபதிகளை விடுத்து, இந்தியத்
தலைமை நீதிபதியாக ஏஎன் ரே-வை நியமிக்க இந்திரா காந்தி எடுத்த
முடிவிற்குப் பின்புலச் சக்தியாக அவர் இருந்தார்.
இது குறித்துத் தனது கருத்தை நியாயப்படுத்தி அற்புதமான உரையை அவர் நாடாளுமன்றத்தில்
ஆற்றினார்.
1971ல் இருந்து 1973ல் அவர் மரணமடையும் வரை
குமாரமங்கலம், எஃகு மற்றும் சுரங்கத்துறை ஒன்றிய அமைச்சராகச் சேவை புரிந்தார்.
மக்களின் கட்டளையை அவர் மிகத் தீவிரமாகக் கருதினார். (இதன் காரணத்தால்) 700கும் மேற்பட்ட
நிலக்கரிச் சுரங்கங்கள் உட்பட தொடர்ச்சியான சுரங்கக் கையகப்படுத்தல் மற்றும் தேசியமயமாக்கல் நடவடிக்கைகள்
அவரது வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டன. தனது ஒப்பற்ற பணித் திறனுடன் அமைச்சராகப் பொறுப்பு
வகித்த இரு ஆண்டுகளில் அவர் அசாதாரணமான சாதனைகளை நிகழ்த்தினார்.
“குமாரமங்கலம் ஆய்வு அறிக்கை”,
1964
1964ல் குமாரமங்கலம் சிபிஐ தலைமையிடம் “குமாரமங்கலம்
தீசிஸ்” என்று
பிரபலமாக அறியப்படும் விரிவான ‘ஆய்வறிக்கை’யை வழங்கினார். கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள்
தீவிரமான விவாதங்கள் நடந்த நேரம் அது. அந்த விவாதத்திற்கு இந்த ஆவணம் முக்கியமான
பங்களிப்பு வழங்கியது. ஐயம் திரிபற கூர்மையான அந்த ஆய்வில் அவர், 1947ல் இருந்து
1964 வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவ மற்றும் கோட்பாட்டு நிலைப்பாடுகள்
பரிணாமம் அடைந்து உருவாகி வந்ததைப் பரிசீலித்திருந்தார். அது படிக்கப்பட வேண்டிய மதிப்புமிக்க
தீசிஸ் (ஆய்வறிக்கை).
அதன் அறிமுக உரையில் குமாரமங்கலம் கூறினார்:
”இந்தப் பங்களிப்பு, இந்தியா விடுதலை அடைந்த 1947ல் இருந்து இன்றைய தினம் வரை, நமது
கட்சியின் கொள்கை உருவாகி வளர்ந்து வந்ததைப் பரிசீலிக்கும் ஒரு முயற்சி.” அது முழுமையாகக் கட்சி ஆவணங்கள் அடிப்படையில்
அமைந்தது. அந்த ஆய்வு அறிக்கை புத்தக வடிவில் 1973ல், ‘காங்கிரஸில் கம்யூனிஸ்டுகள்–
குமாரமங்கலத்தின் ஆய்வறிக்கை’ என்ற தலைப்பில்
பிரசுரமானது.
எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள்
இக்கட்டுரையில் ஏற்கனவே சீனா மீது, மற்றும்
குமாரமங்கலம் தீசிஸ் ஆகிய சிற்றேடுகளைக் குறிப்பிட்டோம். இதனுடன் ஏராளமான கட்டுரைகள்,
புத்தகங்கள் மற்றும் கையேடுகளை அவர் எழுதினார். பீப்பிள்ஸ் வார், பீப்பிள்ஸ் ஏஜ் மற்றும்
அதன் பின்னர் கட்சியின் பிற இதழ்களில் அவர் விரிவாக எழுதினார். அவரது பிற நூல்கள் வருமாறு:
ஒரு புதிய ஜெர்மனி பிறக்கிறது (1944); தி ஐக்கிய
நாடுகள்; முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில்
ஈரான் (1946); தென்னாப்பிரிக்காவில் சமத்துவத்திற்காக இந்தியாவின் போராட்டம்
(1946); இந்தியாவின் மொழி நெருக்கடி (1965); இந்தியாவும் ஐக்கிய நாடுகள் அமைப்பும்
(1947); ஜனநாயகம் மற்றும் தனிநபர் நம்பிக்கைமுறை போக்கும் (Democracy and Cult of Individual) 1966; அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள்
–ஏன் என்ற காரணங்கள் (1971); இந்தியாவில் நிலக்கரித் தொழில்– தேசியமயமாக்கல் மற்றும் எதிர்காலக் கடமைகள் (1973); நீதித்துறை நியமனம்– சமீபத்திய சர்ச்சைகள் (1973) முதலியன. அவை அவரது பிரதானமான ஆய்வு
நோக்கிலான அறிவார்ந்த பங்கைப் பிரதிபலிக்கின்றன.
குமாரமங்கலத்தின் மறைவு
1973 மே 31ல், இந்திய ஏர்லைன்ஸ் போயிங்
737 பிளைட் 440 நொறுங்கி விழுந்த விபத்தில் மோகன் குமாரமங்கலம் கொல்லப்பட்டார். மரணமடைந்தபோது
அவருக்கு 56 வயதுதான். அதே விமானத்தில் பயணம் செய்த கே பாலதண்டாயுதம் மற்றும் சதீஷ்
லூம்பா போன்ற வேறு சில பிரபல ஆளுமைகளும் இறந்தனர். அது கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு
ஜனநாயக இயக்கத்தின் மீது விழுந்த பேரிடி. அதில் இறந்த பலரது உடல்கள் அடையாளம் காணப்பட
முடியவில்லை; ஆனால் குமாரமங்கலத்தின் உடல் அவர் பயன்படுத்தும் பார்க்கர் பேனா, காது
கேட்கும் கருவி மூலம் அடையாளம் காணப்பட்டது.
குமாரமங்கலம் இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு,
ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாதையில் இருந்து ஒருபோதும் தடுமாறியது இல்லை. பிற்போக்கு மற்றும் ஏகாதிபத்தியக் கருத்தியலுக்கு
எதிராக வெளிப்படையாகப் பேசுவதில் அவர் அச்சமற்றவராக இருந்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு
இறுதிவரை அவர் நெருங்கிய நண்பராகவும் கூட்டாளியாகவும் இருந்து, சாத்தியமான
எல்லா வகையிலும் அதற்குத் தொடர்ந்து உதவி வந்தார். தொழிலாளி வர்க்க விழைவுகளிலிருந்து
அவர் ஒருபோதும் பிரிந்து விலகியதில்லை. அதே நேரத்தில் அவர் தீவிரமான சுதந்திர மனப்போக்கு
உடையவராக இருந்தார். ஆழமான கோட்பாட்டு அறிவும், நுட்பமான நடைமுறை கண்ணோட்டமும்
கொண்டிருந்தார்.
கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், விரிந்த தேசிய
ஜனநாயகத்திற்கும் மறக்க முடியாத பங்களிப்புகளைச் செய்துள்ள மோகன் குமாரமங்கலத்தின்
புகழ் வாழ்க!
--நன்றி : நியூ ஏஜ் (ஆகஸ்ட் 10 –16)
–தமிழில் : நீலகண்டன்,
என் எஃப் டி இ, கடலூர்