Wednesday, 4 February 2026

நியூஏஜ் தலையங்கம் -- கம்யூனிஸ்ட் அறிக்கை

1848 பிப்ரவரி 21 லண்டனில் காரல் மார்க்ஸ் மற்றும் ஃபெடரிக் ஏங்கெல்ஸ் எழுதிய ‘த கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ’ எனப்படும் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்ட் லீக் அமைப்பு வேண்டி கேட்டுக் கொண்டபடி எழுதப்பட்ட அந்த அறிக்கை கம்யூனிசத் தத்துவத்தின் அடிப்படை நூலானது. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற அதன் புகழ் பெற்ற அறைகூவலுடன், முதலாளித்துவத்தைத் தூக்கி எறிந்து தங்களின் ஆட்சியை நிறுவுங்கள் என பாடுபடும் மக்கள்திரளை அது கேட்டுக் கொண்டது. புரட்சியின் விஞ்ஞானபூர்வ முறையைக் கோடிட்டு காட்டியதுடன், கம்யூனிஸ்டு அறிக்கை அதனைச் சாதித்து அடையும் பாதையையும் காட்டியது.

எல்லாக் காலத்திலும் உள்ள எல்லாப் புரட்சிகரப் புத்தகங்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் அறிக்கை உயர்ந்தோங்கி எங்கெங்கும் பரவி நிற்கிறது. அந்த அறிக்கை முதலில் வெளியான 178 ஆண்டுகளுக்குப் பிறகும் உலகின் பெரும்பான்மையான பல்வேறுபட்ட மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான முறை மறு பதிப்புக் கண்டு வருகிறது; புகழப்பட்டது, பழிக்கப்பட்டது, தடை செய்யப்பட்டது மற்றும் சிதைக்கப்பட்டது. எனினும் மறு பதிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. கம்யூனிஸ்ட் அறிக்கை அதன் விஞ்ஞானபூர்வ பார்வையுடன், இயக்கவியல் அணுகுமுறையுடன் இன்றைக்கும்கூட கூடுதல் பொருத்தப்பாடு உடையதாக விளங்குகிறது. காரல் மார்க்ஸின் புகழ் பெற்ற கூற்று, “இதுநாள் வரையான தத்துவவாதிகள் உலகைக் குறித்து விளக்கம் அளித்து வந்துள்ளனர்; எனினும், (நம்முன் உள்ள) பிரச்சனை அதனை எவ்வாறு மாற்றுவது என்பதுதான்”

காரல் மார்க்ஸ் மற்றும் ஃபெடரிக் ஏங்கெல்ஸ் இருவராலும் கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதப்பட்ட 1848ஆம் ஆண்டு, ஐரோப்பா முழுவதும் குழப்பமும் கொந்தளிப்பும் நிறைந்த காலம். பிரான்சில் அரசர் லூயி பிலிப்புக்கு எதிராக அதிருப்தி அதிகரித்து வந்த நேரம்.  ஆஸ்ட்ரோ ஹங்கேரியன் பேரரசுக்கு எதிராக நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த நேரம். ஜெர்மன் மற்றும் இத்தாலிய அரசுகளில் தேசிய ஐக்கியமாதல் கோரிக்கை வளர்ந்து வந்த நேரம்.

அறிக்கை உருவான சமூகச் சூழல்

1789ல் நிலப்பிரபுத்துவ ஆட்சியை வளர்ந்து வந்த குட்டி முதலாளிகள் (பூர்ஷ்வாசி) தலைமையிலான புரட்சிகர சக்திகள் தூக்கி எறிந்தது. நிலப் பிரபுத்துவத்துக்கு எதிரான இந்தப் பூர்ஷ்வா புரட்சியில் விவசாயிகளும் ஆலைத் தொழிலாளிகளான பாட்டாளிகளும் இணைந்தனர். பூர்ஷ்வா உற்பத்தி உறவுகள் உருவாகி மேம்பட சாதகமான வாய்ப்பு அமைந்தது; அப்படி முகிழ்ந்த அதே நேரத்தில் முதலாளித்து முறையிலான உற்பத்தியில் முரண்பாடுகளும் தோன்றின. பிரெஞ்சு புரட்சி அதனைத் தொடர்ந்த வளர்ச்சி நிலையான பாட்டாளி வர்க்க உணர்வு மற்றும் ஆலைத் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தியது; சோசலிசம் மற்றும் கம்யூனிசம் குறித்த பிரச்சனைகளைத் தெளிவுபடுத்தியது. ஓர் அரசியல் சக்தியாக நவீனத் தொழிலாளர் வர்க்கம் உருவானது, அது, 1840களின் பிற்பகுதியில் –அதற்கு முந்தைய ஆண்டுகளின் சமூக அரசியல் சூழலில் நொதித்து எழுந்த புரட்சிகரக் கூறுகளிலிருந்து தனித்துப் பிரிக்கும்– முக்கிய அம்சமாகும். [அதாவது வர்க்க உணர்வு பெற்ற நவீனத் தொழிலாளி வர்க்கம் வேறு; முந்தைய புரட்சிகளில் ஈடுபட்ட குழுக்களின் தன்மை வேறு].

ஐரோப்பா முழுவதும் புதிய தொழிலாளர் வர்க்கம் இரகசிய புரட்சிகர அமைப்புகளுடன் வெளிவந்தது. அவற்றில் சில (19ஆம் நூற்றாண்டின்) முற்கால சோசலிசச் சிந்தனையாளர்களான செயின்ட் ஹென்றி டி சைமன் அல்லது சார்லஸ் ஃபூரிலே (Saint-Simon or Fourier) முதலானவர்களால் ஊக்கம் பெற்றன. மற்றவர்கள், பிரெஞ்சுப் புரட்சியின் சமத்துவக் கொள்கைகளுக்காகப் போராடிய தீவிர இடதுசாரி தலைவர்களான பிலிப் புனாரோட்டி மற்றும் கிராக்ஸ் பாபுஃப் (Philippe Buonarroti and Gracchus Babeuf) போன்ற சர்வதேசத் தலைவர்களிடமிருந்து ஊக்கம் பெற்றனர். பிரான்சில் லூயிஸ் ஆகுஸ்டே பிளாக்கி போன்ற தீவிரவாதிகள் கிளர்ச்சி ஆயுதப்படை தாக்குதல் குழுக்களை அமைக்க முயன்றனர். [பிளாங்கியின் சிந்தனை கருத்துகளே ‘பிளாங்கிசம்’ எனப்படுகிறது]

அறிக்கை உருவாதல் 

அத்தகைய குழுக்களில் ஒன்றான ‘நீதிக்கான கழகம்’ (த லீக் ஆப் ஜஸ்ட்) 1839ல் பிளாங்கி ஆதரவாளர்களுடன் பாரிஸில் நடந்த எழுச்சி கிளர்ச்சியில் கலந்து கொண்டது. இந்தக் குழுதான் 1847ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் வற்புறுத்தலால் கம்யூனிஸ்ட் லீக் என்று அமைப்பின் பெயரை மாற்றிக் கொண்டது. 1847 டிசம்பரில் இந்தக் கம்யூனிஸ்ட் லீக் தனது கட்சிக்கான செயல் திட்ட வரைவை எழுத அவர்களிடம் வேண்டியது. அதன்படி 1848 பிப்ரவரியில் கம்யூனிஸ்ட் லீக் அமைப்பின் செயல் திட்டமாகக் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ  கொண்டு வரப்பட்டது.

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் அன்றைய காலத்தின் மிகமேம்பட்ட அரசியல், பொருளாதார மற்றும் தத்துவச் சிந்தனைகளை விஞ்ஞான சோசலிசமாக மேம்படுத்தினர்: சமூகம் மாற்றமடைந்ததற்கான விதிகளை அவர்கள் கண்டுபிடித்தனர்; பின்னர் அந்த விதிகளைப் பயன்படுத்தி சோசலிசத்தைக் கொண்டு வருவதற்கும் மற்றும் கால ஓட்டத்தில் ஒரு கம்யூனிஸ சமுதாயத்தைப் படைப்பதற்கும் கட்டியம் கூறினர். முந்தைய புரட்சிகளின் கற்பனாவாதக் கம்யூனிசம் மற்றும் சோசலிசத்திற்கு மாறாக அவர்கள் விஞ்ஞான கம்யூனிசத்தை மேம்படுத்தினர். முதன்முறையாகக் கம்யூனிஸ்ட் அறிக்கை சமூக மாற்றத்திற்கு ஒரு வர்க்கத்தைக் கண்டுபிடித்தது, அது ஆலைத் தொழில் சார்ந்த பாட்டாளிகள், இன்னும் சிறப்பாகத் தொழிலாளி வர்க்கம் என்றழைக்கலாம். மேலும் ஏன் மற்றும் எவ்வாறு மிகச் சரியாக அவர்கள் புரட்சிகரமானவர்கள் என்பதை மார்க்சும் ஏங்கெல்சும் விளக்கினர்.

அவர்கள் ஜெர்மன் தத்துவவாதி ஹெகல் அவர்களின் இயக்கவியல் (டயலெக்டிகல்) முறையைப் பயன்படுத்தினர் –ஆனால் அப்படிப் பயன்படுத்தியபோது, ஹெகலின் கருத்தியலை (ஐடியலிசம்) கைவிட்டு, இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை மேம்படுத்தினர். வரலாற்றின் இயக்க சக்தியாக வர்க்கப் போராட்டத்தை அவர்கள் அடையாளப்படுத்தினர். முதலாளித்துவச் சமூகப் பொருளாதாரத்தையும், சமூக உற்பத்தி சக்திகளின் வரலாற்று ரீதியான மேம்பாட்டையும் பகுப்பாய்வு பரிசீலனை செய்த அடிப்படையில், தொழிலாளர் வர்க்கமே உண்மையில் புரட்சிகரமான வர்க்கம் என்று அவர்கள் அடையாளப்படுத்தினர் –அந்த வர்க்கம் தன்னைத்தானே விடுதலை செய்து கொள்வது மட்டுமின்றி,  முழுமையான மனித குலத்தை விடுவிக்கும் திறன் உடையது என அடையாளப்படுத்தினர்.

அவர்களது அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வாசகமான, “இதுவரை நிலவக் கூடிய அனைத்துச் சமூகங்களின் வரலாறும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்ற கூற்றுடன் தொடங்கி அந்த இளம் புரட்சியாளர்கள் இருவரும், வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றை அதன் தொடக்கத்திலிருந்து 1848 வரையில் புகழ் பெற்ற வகையில் நிறுவினர். கம்யூனிஸ்ட் அறிக்கையின் வரலாற்று முக்கியத்துவம், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் விரிவுபடுத்திய அறிவார்ந்த கருத்துக்களின் காரணமாக மட்டுமல்ல. முதன்முறையாகப் புரட்சியின் செயல் உத்தி (ஸ்டேட்டர்ஜி), புரட்சியின் திட்டம் (ப்ரோக்ராம்) மேம்படுத்தப்பட்டது. மார்க்சும் ஏங்கெல்சும் அப்போதிருந்த சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களை அறிவியல் முறையில் பரிசீலித்தனர்; மேலும் தொழிலாளர் வர்க்கம்– அதன் தன்மையின் காரணமாகவே– உச்சபட்சமாகப் புரட்சிகர வர்க்கம் என எடுத்துக் காட்டினர்.

கம்யூனிஸ்ட் அறிக்கை (முதலாவது அகிலம் என்று அறியப்படும்) சர்வதேசத் தொழிலாளர்கள் கூட்டமைப்பை ஊக்குவித்தது: மேலும் ஜெர்மனி மற்றும் பிரான்சில் பெருந்திரள் சோஷலிஸ்ட் கட்சிகள் அமைக்கப்பட்டது, அதன் வீச்சை இருபதாம் நூற்றாண்டில் விரிவுபடுத்தியது. சில வழிகளில் ரஷ்ய புரட்சியை, விளாடிமீர் இலீச் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியின் கைகளில் கம்யூனிஸ்ட் அறிக்கை என்பதன் கூட்டு விளைவு எனக் கருதலாம்.

 அதன் பிறகு லெனின் தொடர்ந்து மேனிபெஸ்டோ அடிப்படையில் குறைந்தபட்சம் இரண்டு விஷயங்களைச் செய்தார்.  முதலில், முதலாளித்துவத்தின் உச்ச கட்டத்தை

ஏகாதிபத்தியமாகப் பகுப்பாய்வு செய்தார். இரண்டாவதாக அவர், நவீனப் புரட்சிகளை –அவற்றின் முன்னணியை ஜனநாயக கூட்டணிகளாக விரிவுபடுத்தி– ஏகாதிபத்தியத்துடன் தொடர்புபடுத்தினார். அவர் காலனிய எதிர்ப்புத் தேசிய விடுதலைப் போராட்டங்களை அல்லது தேசிய விடுதலை புரட்சிகளை நேரடியாக ஏகாதிபத்தியத்துடன் தேடிக் கண்டடைந்தார்; மற்றும் காலனிய நாடுகளின் கம்யூனிஸ்டுகளைத் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிகளில் தீவிரமாகக் கலந்து கொள்ள அறைகூவல் விடுத்தார். இவ்வாறு, கம்யூனிஸ்ட் அறிக்கையும் கூட காலனியத்திற்கு எதிராகப் போராடிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, மற்றும் விடுதலைக்கும், இறுதியாகச் சோசலிச வடிவங்களுக்கு இட்டுச் செல்வதற்கும் ஒரு செயல் திட்டமானது.

விஞ்ஞானத் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் தாக்கம் மேலோங்கிய நூற்றாண்டில் புதிய தொழிலாளர் வர்க்கம் உருவாகி வரும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட கம்யூனிஸ்ட் அறிக்கை நம்மை ஊக்கப்படுத்துகிறது.

சந்தர்ப்பச் சூழ்நிலைகள் மாறி உள்ளன, மாற்றத்திற்கான முறைகளும் கூட மாறி உள்ளன என்றாலும், அடிப்படையான முறையும் ஊக்கமும் அப்படியே நீடிக்கிறது. 

 கம்யூனிஸ்ட் அறிக்கை, ஜனநாயகத் திசை வழியில், பிற  ஜனநாயகச் சக்திகளுடன் கூட்டணியாக இணைந்து படிப்படியாகச் சமூகத்தை எவ்வாறு மாற்றுவது என்பதைக் கற்றுத் தருகிறது.

சமூகத்தை மாற்றி அமைக்க கம்யூனிஸ்ட் அறிக்கையை நாளும் கற்போம்!

–தமிழில் :நீலகண்டன்,

 என் எஃப் டி இ, கடலூர்

 

  

 

  .