Saturday, 31 January 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு– 96 கே சத்தியநாராயணா –1930களின் தொடக்கத்தில் சிபிஐ கட்சியைக் கட்டியவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு– 96


கே சத்தியநாராயணா –1930களின் தொடக்கத்தில்
சிபிஐ கட்சியைக் கட்டியவர்

–அனில் ரஜீம்வாலே

அமீர் ஹைதர் கானுடன் சேர்ந்து தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி வளர்த்த நிறுவனத் தலைவர்களில் ஒருவர் கம்பம்பட்டி சத்யநாராயணா  (சீனியர்). அதற்கு முன் 1934ல் ஆந்திராவில் கம்யூனிஸ்ட் கட்சியை பி சுந்தரய்யாவுடன் நிறுவியவர்களில்  ஒருவராக எம். சிங்காரவேலர்  திகழ்ந்தார். 

கே சத்யநாராயணா 1909 ஜூலை 17ல் ஆந்திரா கிழக்குக் கோதாவரி மாவட்டம் ராஜோல் தாலுகாவில், தோத்தவாரம் என்ற கிராமத்தில் பிறந்தார். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவரது தந்தை தனது மகனின் பெயரையே கொண்டிருந்தார். தந்தை துனி ஜமீன்தாரின் சேவகத்தில் திவான் ஆக இருந்தார்.

1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்றபோது சத்தியநாராயணா காக்கிநாடாவில் படித்துக் கொண்டிருந்தார்; அந்நிகழ்வு  அவர் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி தன்னை விடுதலைப் போராட்ட இயக்கத்தில் அர்ப்பணிக்க முடிவெடுக்க வைத்தது. 1921 –22ல் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது புலுசு சாம்பமூர்த்தி, எம் ரங்கையா நாயுடு, டி சுப்பம்மா மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களின் சொற்பொழிவுகளைக்  கேட்டார். அப்போது எல்லா இடங்களிலும் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, அவர்கள் குவியல் குவியலாக வெளிநாட்டு துணிகளைச் சேகரித்துத் தீயிட்டுக் கொளுத்தினர்; சுதேசி மற்றும் காதி பொருட்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தனர். பல காங்கிரஸ் தலைவர்கள் நல்ல ஊதியம் தரும் அரசு வேலைகளை உதறிவிட்டு வெளியேறினர்,  காதி ஆடைகளில் மிகச் சாதாரணமாக வாழத் தொடங்கினர்.

காதி துணிகளை விற்றுக் கொண்டிருந்த முக்கிய தலைவர்களுடன் சத்யநாராயணா திரிந்தார். அவரே கைராட்டையில் நூல் நூற்கத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளில் நான்கு வேட்டிகளுக்கான கதர் ஆடை நூற்பு நூல் பிரிக்கட்டுகள் நூற்றார்; அதில் இரண்டு கட்டுகளைத் தந்தையிடம் வழங்கினார். அவர், பழங்குடி இனத் தலைவர் அல்லூரி சீதாராம் ராஜூ தலைமையில் நடத்தப்பட்ட கிளர்ச்சியால் உற்சாகமடைந்தார்.

காந்தியின் விஜயம் 

1929ல் ஆந்திரப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த காந்தி (காக்கிநாடா மாவட்டத்தின் ஒரு நகரமான, மாங்கனி மற்றும் வெற்றிலைக்குப் புகழ்பெற்ற) துனி நகரத்திற்கு வந்தார். ஒரு நிலச்சுவான்தார் அவருக்கு விருந்தளித்தார். ஒரு பெரிய ஹாலில் காந்தியுடன் பெண்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெண்கள் மிக தாராளமாகத் தங்கள் நகைகளைக் காந்தியிடம் நன்கொடையாக அளித்தனர். (இந்த நகரத்தில்தான் அல்லூரி சீதாராம் ராஜு படித்தார்).

மாலை கூட்டத்தில் பலரும் பணத்தை நன்கொடையாக அளித்தனர். உரையாற்றும் போது காந்தி, “எனக்கு, எளிய மக்கள் நன்கொடையாகத் தரும் ‘கானீஸ்’ (தம்படி காசு) அல்லது சிறு தொகை, பணக்காரர்கள் அளிக்கும் பெரும் தொகைகளைவிட விலை மதிப்பு மிக்கது” எனப் பிரகடனம் செய்தார். இந்நிகழ்வின்போது சத்யநாராயணா காக்கிநாடா கல்லூரியில் பி ஏ இளங்கலை  படித்துக் கொண்டிருந்தார். ஏறத்தாழ அந்த நேரத்தில் இந்தியாவுக்குச் சைமன் கமிஷன் விஜயம் செய்தது.’சைமன் குழுவே திரும்பிப் போ!’ என்ற முழக்கத்துடன் காக்கிநாடா கல்லூரியில் ஒரு வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்கள் பெரும் பேரணியை நடத்தினர், மாலையில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் புகழ்பெற்ற புரட்சிகரத் தலைவரும், கம்யூனிஸ்ட்டுமான சுவாமி குமாரானந்த் உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்த அடுத்த நாளில் சத்தியநாராயணா, பூரண சுதந்திரம் குழுவின் செயலாளர் சாம்பமூர்த்தி இல்லத்தில் குமாரானந்தை மீண்டும் சந்தித்தார். அவர்கள் நீண்ட நேரம் உரையாடினர். சுவாமி அவருக்கு ரெவி மில்லர் எழுதிய ‘போல்ஸ்விக்-இசத்தின் வலிமையும் புனைவும்’ (/கட்டுக்கதையும்’) என்ற தலைப்பிலான புத்தகத்தைக் (‘The Might and Myth of Bolshevism’ by Rewi Miller) கொடுத்தார். சத்யநாராயணா இரவு முழுதும் அந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்து காலையில் படித்து முடித்தார். சத்தியநாராயணாவின் ஓவியக் கலைஞரான ஒரு நண்பர் அதிலிருந்து லெனின் சித்திரத்தை வரைந்த பின் அப்புத்தகம் திருப்பித் தரப்பட்டது. 

தீவிர அரசியலில்

சத்தியநாராயணா 1929ல் பிஏ பட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். 21 வயதில் தனது நண்பர்களுடன் வாழ்க்கையை முழுமையாக நாட்டுக்கு அர்பணிப்பது என்று சபதம் செய்தார். ஒவ்வொரு ஞாயிறும் கதர் விற்பனை செய்ய ஒரு குழுவை அமைத்தனர். 

1929 டிசம்பர் 31 நள்ளிரவில்  காங்கிரஸ் கட்சி பூரண விடுதலை என்ற தீர்மானத்தை லாகூர் அமர்வில் நிறைவேற்றியது. ஜனவரி 26ம் நாளைச் சுதந்திர தினமாக அனுசரிக்க மக்களும் மாணவர்களும் முடிவு செய்தனர். மெட்ராஸில் 1930 ஜனவரி 26 அன்று சத்யநாராயணாவும் வேறு சிலரும் சேர்ந்து ஒரு முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். அவர்கள் மாணவர்களைத் திரட்டி திருவல்லிக்கேணி கடற்கரை வரை பேரணியாகச் சென்றனர்.

எம்.ஏ முதுகலை முதல் ஆண்டுக்குப் பிறகு அவர் தனது படிப்பைக் கைவிட்டு உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். சத்தியாகிரக முகாமில் மற்றவர்களுடன் சுந்தரையாவும் கூட இருந்தார்.

இதன் மத்தியில் சத்யநாராயணா முதலில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார், பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் (CSP) மற்றும் இறுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்தார். திரிபுரியில் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஆந்திராவில் இருந்து அவரும் வேறு பலரும் (நேதாஜி சுபாஷ் சந்திர) போஸுக்கு வாக்களித்தனர், பட்டாபி சீதாராமையாவைத் தோற்கடித்தனர்.

காங்கிரஸில் செயல்பாடு

அவர் காக்கிநாடா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டியில் இருந்தார், வேமூர் சத்தியாகிரக முகாமுக்குத் தன்னார்வத் தொண்டர்களைத் திரட்டினார். மேலும் அவர் தலைமறைவாக (இரகசியமாக) ‘ரண துந்துபி’ (போர் முரசு) என்ற சைக்ளோ-ஸ்டைல் செய்யப்பட்ட இதழைப் பல மாதங்களுக்கு நடத்தினார்.

இதன் மத்தியில் ஒத்துழையாமை இயக்கம் வேகம் பெற்றது. ஆயிரக்கணக்கானோர் சிறை புகுந்தனர். 1931 ஜனவரி 26ல் அவர் தானாக முன்வந்து கைதனார் ஆறு மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். ராஜமுந்திரி சிறைக்கு அனுப்பப்பட்ட அவர் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுதலையானார். இளம் உறுப்பினர்கள் காந்தி– இர்வின் உடன்பாட்டால் ஏமாற்றம் அடைந்தனர்.

காங்கிரஸ் அமர்வில் கலந்து கொள்ளல் 

சிறையிலிருந்து விடுதலையான பின் சத்யநாராயணா காங்கிரஸ் கராச்சி மாநாடு அமர்வில் ஆந்திர பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். பம்பாயில் இருந்து கராச்சிக்கு அவர்கள் கப்பலில் பயணம் செய்தனர். கப்பலில் ஏறுவதற்குச் சற்று முன் அவர்கள் பகத்சிங் மட்டும் கூட்டாளிகள் தூக்கிலிடப்பட்ட செய்தியை அறிந்தனர். காங்கிரஸ் அமர்வு தீர்மானத்தில் வன்முறையைக் கண்டித்த பகுதியை நீக்க வேண்டும் என்ற முன்மொழிவை ஆதரித்தார்.

கராச்சியிலிருந்து திரும்பிய பிறகு காக்கிநாடாவில் ஒரு காங்கிரஸ் தலைவருடன் இரகசிய அமைப்புக் குழுவில் அவர் சேர்ந்தார். தடை செய்யப்பட்ட டெல்லி அமர்விலும் கலந்து கொண்டார். டெல்லிச் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புரட்சியாளர் ஒருவருடன் அவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். 1932ல் அவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது ஒருக்கால் வைசம்பாயனன் ஆக இருக்கலாம். வைசம்பாயனன் வட இந்தியாவில் ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு (HSRA)ன் பொறுப்பாளராக இருந்தார். சத்யநாராயணா HSRA அமைப்பின் கிளை ஒன்றை ஆந்திராவில் தொடங்க அவரது ஒப்புதலைப் பெற்றார். அவர் ஒரு ரிவால்வர் மற்றும் சில தோட்டாகளையும் கூட பெற்றுக் கொண்டார்.  

அமீர் ஹைதர் கானுடன் சேர்ந்து சிபிஐ அமைத்தல்

அவர் தன் செயல்பாட்டை மேலும் தொடர்வதற்கு முன் மெட்ராசுக்குத் திரும்ப கேட்டுக் கொள்ளப்பட்டார். 1931 -32 ல் அங்குச் சென்ற அவர் தென்னிந்தியாவில் வேறு சிலருடன்

சேர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதில் ஈடுபட்டு இருந்த அமீர் ஹைதர் கானைச் சந்தித்தார். அப்போது கட்சி தடை செய்யப்பட்டிருந்ததால், அவர் தலைமறைவாகப் பணியாற்றி வந்தார். அமீர் ஹைதர் மெட்ராஸில்  ‘யங் ஒர்க்கர்ஸ் லீக்’ என்ற இளைஞர் அமைப்பை நிறுவினார். அதிலிருந்த இளைஞர்கள் அச்சகத் தொழில் மற்றும் பிற தொழிற்சாலைகளைச் சேர்ந்தவர்கள். சத்தியநாராயணா அந்த அமைப்பில் ஒருவரானார். அவர்கள் தொழிலாளர்கள் மத்தியில் வர்க்க உணர்வை ஊட்ட முயன்றனர்.

அவர் மாதம் 25 ரூபாய் என்ற குறைந்த ஊதியத்தில் முழு நேர கட்சி ஊழியர் ஆனார். அவரும் அவரது மனைவி மாணிக்யம்பா இருவரும் அந்தச் சொற்ப ஊதியத்தில் எப்படியோ வாழ்க்கை நடத்தினர். [மாணிக்யம்பா என்ற பெயர் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் திராக்ஷாராமத்தில் அமைந்த, 18 சக்தி பீடங்களில் ஒரு சக்தி பீடத் தெய்வத்தின் பெயர் –கூடுதல் இணைப்பு]. அவர்கள் மெட்ராஸ் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு டிராம்வே தொழிலாளியின் வீட்டில் வசித்தனர்.

கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையாக மெட்ராஸில் இருந்து “முன்னேற்றம்” இதழ் வெளியிடப்பட்டது. ராஜா வடிவேலு அதன் ஆசிரியராகவும் அச்சிடுபவர் மற்றும் பதிப்பாளராகவும் இருந்தார். அந்த இதழ் மீரட் சதி வழக்கு விசாரணை விபரங்களை விரிவாக வழங்கியது. விரைவில் சத்தியநாராயணா மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட வீரபாரதி இதழின் பிரதிகளை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரிக்கப்பட்டு ராஜமுந்திரி மற்றும் பெல்லாரி சிறைகளுக்கு அனுப்பப்பட்டார். 

அதன் பிறகு அவர் மெட்ராஸில் இருந்து பிரகாசம் பந்துலு நடத்திய ஸ்வராஜ் பத்திரிக்கைக்காகப் பணியாற்றினார்; பின்னர் அவர் சித்தி ராஜாவால் பிரசரிக்கப்பட்டு வந்த நியூ ஏஜ் இதழில் துணை ஆசிரியராக இணைந்தார். பின்னர் வந்த காலத்தில் காட்டே அதன் ஆசிரியரானார். நியூ ஏஜ் இதழ் விஞ்ஞான சோஷலிசத்தைப் பிரச்சாரம் செய்தது. 

தொழிலாளர் பாதுகாப்பு லீக் 

1935ஆம் வருடத்தின்போது அவர் தொழிலாளர் பாதுகாப்பு லீக் அமைப்பில் பணியாற்றினார். இதன் மத்தியில் தனித் தேர்வராகத் தனது முதுகலை எம்ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றார். லீக் அமைப்பு நெல்லூர் மற்றும் பிற இடங்களுக்கு பரவியது. தோழர் பி. சுந்தரய்யாவும்கூட அதில் பணியாற்றினார். அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளிப்படையான பொதுமேடை அமைப்பாகப் பயன்பட்டது.

இதன் மத்தியில் பல்வேறு பேரூர்கள் மற்றும் நகரங்களில் இருந்து ஏராளமான இதழ்கள் கொண்டு வரப்பட்டன. ஏ எஸ் கே அய்யங்கார், வடிவேலு, பாஷ்யம், மாணிக்கம் மற்றும் பலர் லீக் அமைப்பில் பணியாற்றினர். முனிசிபல் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றிய சத்யநாராயணா மேலும் அச்சகத் தொழில், ட்ரம்வே தொழிலாளர்கள் மத்தியிலும்கூட பணியாற்றினார். மெட்ராஸில் அனைத்து இந்திய அச்சகத் தொழிலாளர்கள் மாநாடு முதன்முறையாக நடத்தப்பட்டது –அந்த மாநாட்டிற்குத் தொழிலாளர்கள் பாதுகாப்பு லீக் ஏற்பாடு செய்தது

 முனிசிபல் தொழிலாளர்கள் மத்தியில் “மன பிரபா” (நமது வெளிச்சம்) பத்திரிக்கையை விநியோகம் செய்ததற்காக அவரும் வீ நரசிங்க ராவ் இருவரும் கைது செய்யப்பட்டனர். இரு காங்கிரஸ்காரர்கள் அவர்கள் தரப்புக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடினர். ஒருவர் உயர் நீதிமன்ற நீதிபதி, மற்றொருவர் தூய்மையான காந்தியர். அவர்கள்தான் என் எஸ் வரதாச்சாரி மற்றும் பி ஜெகன்நாத ராஜு; பின்னர் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் ஆனார். நரசிங்கராவும் சத்தியநாராயணாவும் கடலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். 1936ல் தான் அவர் விடுதலையானார். இதன் மத்தியில் கட்சி பின்பற்றிய பாதை குறிப்பிடத்தக்க அளவு மாறியது. ரஜினி பாமி தத் மற்றும் பிராட்லே தீசிஸ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நேர்மறையான முறையில் உதவியது.

[கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களான ஆர்பி தத் (ரஜினி பால்மே தத்) மற்றும் பென் பிராட்லே இருவரும் தத்–பிராட்லே கோட்பாட்டை முன்வைத்தனர். அக்கோட்பாடு இந்தியாவில் “ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் முன்னணி” அமைக்கும் யோசனையை முன்மொழிந்தது. அது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகளை, இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து பணியாற்றக் கோரியது– அதுவரை பின்பற்றப்பட்ட முந்தைய குறுங்குழுவாத கம்யூனிஸ்ட் கொள்கையிலிருந்து (செக்டேரியன்) அது குறிப்பிடத்தக்க பெரும் மாறுதலாகும். இந்தக் கொள்கை மாற்றம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நேர்மறையாகப் பெரிதும் உதவியது –கூடுதல் இணைப்பு]

சத்தியநாராயணா கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் (CSP) பொறுப்புகளை ஏற்று மெட்ராசைவிட்டு காக்கிநாடாவுக்குச் சென்றார். கோட்டி பள்ளியில் மாவட்ட விவசாயிகள் மாநாடு நடத்தப்பட்டது, விவசாயத் தொழிலாளர் அமைப்புகள் ஏற்பட்டன. பல்வேறு பேரூர்களில் தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டன. காக்கிநாடா கயிறு உற்பத்தித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். 

1937 மாகாணத் தேர்தல்கள்

1937 பிப்ரவரியில் மெட்ராஸ் மாகாணச் சட்டமன்ற குழுவுக்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன முக்கியமான போட்டி நீதிக்கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில். காங்கிரஸ் ஆதரித்த இரண்டு கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றனர். மற்ற எல்லா தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைக் கம்யூனிஸ்டுகள் ஆதரித்தனர் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் மூவர்ண கொடியும் செங்கொடியும் ஒன்றாக ஏற்றப்பட்டன. தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சத்யநாராயணாவும் மற்றவர்களும் கிராமம் கிராமமாக, வீடு வீடாகச் சென்றனர். அது உண்மையில் ஒரு பெரும் அனுபவம். சில தருணங்களில் அவர்கள் அடித்துத் தாக்கப்பட்டனர். ஆளுநரால் தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதும் மெட்ராஸ் மாகாணத்தில் காங்கிரஸ் அரசாங்கம் அமைந்தது.

விரைவில் மாகாணக் காங்கிரஸ் குழுக்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. வலதுசாரியான எம்சி ராஜுவை எதிர்த்துப் போட்டியிட்டு மாகாணக் காங்கிரஸ் கமிட்டிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் பள்ளியை நீதிக்கட்சி தடை செய்தது! 

முதலில் நீதி கட்சியின் ரெட்டி நாயுடு பிரதமராக (இன்றைய முதலமைச்சர் பதவி) நியமனம் செய்யப்பட்டார். இக்காலத்தின்போது குண்டூர் கொத்தப்பட்டினம் என்ற இடத்தில் ஆந்திர மாகாண இளைஞர் அமைப்பும் சோசலிஸ்ட் கட்சியும் இணைந்து ஓர் அரசியல் பள்ளியை ஏற்பாடு செய்து நடத்தியது. சத்யநாராயணாவும்கூட அங்கே பாடம் நடத்தினார். மாவட்டக் காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு நிதி அளித்து உதவினர். அவர்கள் அதற்காக அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று நிதி திரட்டினர்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு நீதிக்கட்சி அரசு அந்தப் பள்ளியைத் தடை செய்தது! வகுப்பில் கலந்து கொண்டவர்கள் தடையை மீற அவர்கள் மீது தடியடி நடத்தினர். பலர் கைது செய்யப்பட்டனர், கூட்டங்கள் பரவலாக நடத்தப்பட்டன; விரைவில் காங்கிரஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்தது. தடை நீக்கப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

1937 இறுதியில் ஆந்திரா காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ‘நவசக்தி’ என்ற பத்திரிகையை வெளியிட்டது. சத்யநாராயணா ஆசிரியர் குழுவில் ஒருவர். எனவே அவர் பெஸ்வாடா (விஜயவாடா) குடிபெயர்ந்தார். காங்கிரஸ் அமைச்சரவையின் முற்போக்கான நடவடிக்கைகளை அப்பத்திரிக்கை ஆதரித்தது, பிற்போக்கானவற்றை விமர்சித்தது. 

முக்கியமான கம்யூனிஸ்டுகள் ஆந்திரா காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும், ஏன், அனைத்திந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும்கூட ஆனார்கள். சத்தியநாராயணா காங்கிரஸ் கட்சியின் 1938 ஹரிபுரா மற்றும் 1939 திரிபுரி மாநாட்டிலும் ஆந்திராவில் இருந்து கலந்து கொண்டார்.

(குண்டூர் மாவட்ட) மச்சாவரம் பாலம் என்ற இடத்தில் 1938ல் மற்றொரு அரசியல் பள்ளி நடத்தப்பட்டது. 300 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.  வகுப்பில் ஏறத்தாழ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களில் பாதிக்கு மேல் அதில் கலந்து கொண்டனர். குண்டூர் காங்கிரஸ் தலைவர்கள் அனைத்து உதவிகளையும் செய்தனர். இந்த அரசியல் பயிற்சி பள்ளியிலும் கூட சத்தியநாராயணா பாடம் நடத்தினார்.

இரண்டாம் உலகப் போரின்போது

‘நவசக்தி’ நிறுத்தப்பட்டு பலரும் தலைமறைவாகச் சென்றனர். சத்யநாராயணா இரகசியக் கூட்டங்களையும்,  வெளிப்படையான கூட்டங்களையும் நடத்தினார். (இரண்டாவது உலகப் போர் குறித்து) அவர் விரிவான வரைபடத்தைத் தயாரித்து எந்தெந்த நாடுகளின் படைகள் எங்கே நிலை கொண்டுள்ளன என்ற போர் நிலைப்பாடுகளை விளக்கினார். அவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் வேறு 200 பேருடன் அடைக்கப்பட்டார். 1941ல் சோவியத் யூனியன் (USSR) தாக்கப்பட்ட பிறகு சிறைக்குள் தீவிர விவாதங்கள் வெடித்தன.

அந்தச் சிறைவாசிகளுக்குள் ஒருவராக இருந்த மாபெரும் மார்க்சிய அறிஞர் கே பி கிருஷ்ணா அமெரிக்காவில் இருந்து திரும்பி இருந்தார்; மேலும் அவர் இந்தியத் தத்துவம் மற்றும் பிற பொருள்களில் உள்ள பொருள்முதல்வாத மற்றும் இயக்கவியல் குறித்து விரிவாக

எழுதியவர். சிறையில் நடந்த வகுப்புகளில் காரல் மார்க்சின் மூலதனம் குறித்து அவர் விளக்கினார். சோவியத் யூனியன் மீது நாஜிகள் தாக்குதலுக்குப் பிறகு அவர் சிபிஐ பின்பற்றிய அரசியல் பாதையில் (பொலிட்டிக்கல் லைன்) மாற்றத்தை ஆதரித்து ஓர் ஆவணம் தயாரித்து அதைச் சிறைக்கு வெளியே அனுப்பினார். பிந்தைய காலங்களில் கே பி கிருஷ்ணா வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்துச் சத்யநாராயணா எழுதினார். மெல்ல மெல்ல சிபிஐ மத்திய குழு பல பிரச்சனைகளில் கிருஷ்ணா ஆவணத்தில் கூறப்பட்ட நிலைப்பாட்டிற்கு வந்தது

விடுதலைக்குப் பின் சத்யநாராயணா மாவட்ட சிபிஐ பத்திரிக்கையான “பிரஜா சக்தி” ஆசிரியர் குழுவில் இணைந்தார். பிந்தைய நாள்களில் அவர் கட்சியின் 1942 பாதை அமலாக்க வழிமுறை குறித்துக் குறை கூறி விமர்சித்தார்.

அந்நாட்களில் ராயலசீமா பகுதியில் வங்கத்தைப் போல கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. கட்சி ஏராளமான நிவாரணப் பணிகளைச் செய்தது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு

1946 தேர்தல்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றது, மாகாணச் சட்டமன்றத்திற்கு ஒருவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்குப் பிறகு பிரகாசம் தலைமையில் மெட்ராஸில் புதிய அரசு அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கம்யூனிஸ்டுகள் செல்லப்பள்ளி ராஜாவை எதிர்த்து மாபெரும் விவசாயிகள் இயக்கத்தைத் தொடுத்தது. அரசு ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியது, அந்தச் சட்டம் பின்பு ‘பிரகாசம் அவசரச் சட்டம்’ என்று அறியப்பட்டது. சத்தியநாராயணாவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட பின் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ்காரர்களும் இணைந்து இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடினார்கள்.

தெலுங்கானாவில் ஆயுதப் போராட்டத்தைத் திரும்பப் பெற சத்தியநாராயணா ஆதரவாக இருந்தார்.

சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கம் மீது நிலைப்பாடுகள் 

ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலினின் ‘தன்னிச்சையான, அதிகாரத்துவ, மார்க்சிய விரோத மற்றும் அத்துமீறல்கள்’ குறித்த குருச்சேவின் பொதுவான விமர்சனத்தைச் சத்யநாராயணா ஆதரித்தார். சீனாவின் நிலைப்பாடுகளைச் சத்யநாராயணா கூர்மையாக விமர்சித்தார். அவர் நம் நாட்டின் நக்சலைட் இயக்கத்தை, ‘சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை நகலெடுத்துச் செயல்படும் அவர்களின் போக்கிற்காகவும் மற்றும் பரவலாக அக்கட்சியைப் புகழ்வதற்காகவும்’ கண்டித்தார். அவர்கள் பின்பற்றிய பாதை 1948 –50களின் ‘ஆந்திரா திசீஸ்’ கோட்பாட்டின் திருந்திய பதிப்புத் தவிர வேறில்லை என்றார் சத்யநாராயணா.

மறைவு 

கம்பம்பட்டி சத்யநாராயணா (சீனியர்) 1983 ஜனவரி 16ஆம் தேதி இயற்கை எய்தினார். அந்த நேரத்தில் அவர் ஆந்திரப் பகுதியின் கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு குறித்து எழுதுவதில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்.

சத்தியநாராயணாவின் மனைவி கம்பம்பட்டி மாணிக்யாம்பா, வாழ்க்கை முழுதும் அவருடன் சேர்ந்து பணியாற்றினார். அவரும் பலமுறை கைது செய்யப்பட்டு இருக்கிறார்; அரசியல் பள்ளிகளில் கலந்து கொண்டிருக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைத்த ஆந்திரா மாகாணப் பெண்கள் கூட்டமைப்பில் பணியாற்றிய அவர், சமூக மற்றும் அரசியல் வாழ்வில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா நிறைவின்போது சத்தியநாராயணா – மாணிக்யம்பா இணையர் புகழ் வாழ்க என வாழ்த்துவோம்! 


--நன்றி :
நியூ ஏஜ் (2023 அக். 15 –21) 

--தமிழில் : நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்.

 

No comments:

Post a Comment