கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு -- 95
ராதா மோகன் கோகுல்ஜி : 1925ல் சிபிஐ அமைப்பு மாநாடு
–அனில் ரஜீம்வாலே
1925ல் கான்பூரில் நடந்த இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு மாநாட்டின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக ராதா மோகன்
கோகுல்ஜி பெயரை ஒரு சிலரே அறிந்திருப்பர். தற்போது அவரது பெயர் மறக்கப்பட்ட ஒன்று. இந்த
மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் சத்திய பக்தா, மௌலானா ஹஜ்ரத் மொஹானி, அர்ஜுன் லால் சேத்தி
மற்றும் பல முன்னணி செயல்பாட்டாளர்களுடன் அவர், எல்லா வகையிலும் மாநாட்டின் அமைப்பு
மற்றும் வரவேற்புக் குழுவாகச் செயல்பட்டார்.
தொடக்க வாழ்க்கை
ராதா
மோகன் கோகுல்ஜி 1865
டிசம்பர் 15ல்,
பிரிட்டிஷ் இந்தியாவின் அவுத் அல்லது அயோத்தி (தற்போது உபியில் உள்ளது) அரசின் கீழ்
அலகாபாத், கோபால் கஞ்ச் என்ற இடத்தில் பிறந்தார். அவரது மூதாதையர்கள் ராஜஸ்தான் ஜெய்ப்பூர்
எஸ்டேட்டின் கேத்திரியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் ஒருக்கால் 250 ஆண்டுகளுக்கும் முன்னால்
சொத்துக்களை இழந்த அல்லது வறுமை காரணத்தால் இடம்பெயர்ந்த அகர்வால் சிங்கானியாஸ் ஆவர்.
அவர்களில் ஒருவர் பத்ரி மகாராஜாவுக்கு பொடார் (Poddar, அதாவது ட்ரஷரர், பொக்கிஷதாரர்) ஆக இருந்தார். (பொடார் என்பது இந்தியாவில்
இருந்து வந்த மார்வாரி அகர்வால் மத்தியில் காணப்படும் குடும்பப் பெயரும் மற்றும் சில
வட இந்திய மாநிலங்களில் பனியா வணிகச் சமூகத்தினரின் இனச் சிறப்புப் பெயரும் ஆகும்.)
அந்த இடம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக 1857ல் கிளர்ந்து எழுந்து, அந்த இடத்தைப் பல நாட்கள் பிடித்து வைத்திருந்த
ராஜா ராணா பேணி மாதவ் சிங் உடன் தொடர்புடையது. அவருடைய தந்தை லாலா கோகுல் சந்த்.
ராதா
மோகன் ஆறு வயதில் அருகில் இருந்த புத்த விகாரில் தொடக்கக் கல்வி பெற்று அங்கு இந்தி
மொழி கற்றார். இதைத் தொடர்ந்து மௌல்வி ஃபிதா ஹுசைன் அவருக்குக் கல்வி கற்பித்தார்.
பின்னர் அவரது தந்தை அலகாபாத் மாவட்ட ஷஹ்ஜாத்பூருக்கு வந்தார்.
பிறகு படிப்புக்காகக் கான்பூருக்கு மாறி அவரது மாமாவுடன் தங்கினார். 13 வயதில் ராதா மோகனுக்குத்
திருமணம் நடந்தது. 1878ல்
ஆக்ராவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் உயர்கல்வி கற்றார். அங்கு அவர் ஆங்கிலம்
படித்தார்.
ஒருக்கால்
ராதா மோகன் அவரது தந்தையின் பெயரை இணைத்து ராதா மோகன் கோகுல்ஜி ஆகியிருக்கக்கூடும்.
1984ல்
அவரது தந்தையின் சொந்த வணிகம் நொடித்துப் போனதால் அவர் அகராவைவிட்டு நீங்க வேண்டியதாயிற்று.
ஏதாவது வேலையைத் தேடி அலகாபாத் திரும்பினார். மாதம் இருபது ரூபாய் சம்பளத்தில் கணக்குத்
துறையில் பழகுநர் பணி கிடைத்தது. ஆனால் ஒரு பிரிட்டிஷ் ஊழியருடன் மோதல் ஏற்பட்டு அவரை
அடித்தார், பணிக்குச் சேர்ந்த 9
மாதத்திலேயே வேலையை விட்டு விலகினார். இனி பிரிட்டீஸ்க்குக் கீழ் வேலை செய்யக்கூடாது
என்று சபதம் செய்து வீட்டுக்குச் சென்றார். தனது எல்லாச் சான்றிதழ்கள்ளையும் தீயில்
எரித்தார். இது நடந்தது 1886 ஜூலை
மாதம். ஆக்ராவில் சமூக சீர்திருத்தப் பணியை மேற்கொண்டார். ஆக்ராவில் ஆரிய சமாஜ் அமைப்பில்
நடந்த ஒரு முஸ்லீம் ‘சுத்திகரிப்புச்: சடங்’கில் (மீண்டும் தாய் மதத்திற்கு மாறி திரும்ப
வருபவர்களுக்கு நடத்தப்படும் சடங்கு, ஆரிய சமாஜ் தொடங்கிய இயக்கம்) - அந்தச் சடங்கில்
இனிப்புகள் வழங்கப்படுவது வழக்கம். இதனால் பழமைவாத மக்கள் வெறுப்புற்றனர். ஆனால் ராதா
மோகன் அந்த இனிப்புச்
சாப்பிடுவதை வற்புறுத்தினார்.
ஆரிய
சமாஜ் சார்பாக விதவை மறுமணத்திற்கு ஆதரவாகவும் அவர் பிரச்சாரம் செய்தார்.
1885ல் அலகாபாத்தில் உள்ள ‘சுதேசி
வியாபாரக் கம்பெனி:யின் ரூ 25 மதிப்புள்ள பங்கினை அவர் பெற்றார். அது முதலாக அவர் எப்போதும்
சுதேசி ஆடைகளையே அணிந்தார்.
காங்கிரஸ் செல்வாக்கின் கீழ்
பம்பாயில்
இந்தியத் தேசியக் காங்கிரஸ் நிறுவப்பட்டது, 1885ல். அது குறித்த விளக்கக் கூட்டம் அலகாபாத் ஜான்சன்கஞ்ச் ஷிவ்ராகான் பாடசாலையில்
பண்டிட் சுந்தர்லால் தலைமையில் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பண்டிட்
மதன் மோகன் மாளவியா உரையாற்றினார். அதில் ராதா மோகன் உட்பட சுமார் 15 பேர் கலந்து
கொண்டனர். அவர் மனதில் அந்தக் கூட்டம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் வேலை
தேடி ரிவா என்ற இடத்திற்கு அவர் மாற வேண்டியதாயிற்று. ஆனால் மலேரியா பாதிப்புக்கு ஆளாகி
கான்பூர் திரும்பினார். அங்குப் பண்டிட் பிரதாப் நரைன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்ட
‘பிராமின்’ என்ற இதழில் பணியாற்றத் தொடங்கினார்.
கல்கத்தாவில்
பணி நிமித்தமாகக் கல்கத்தா
சென்ற அவர் சில மார்வாரி பையன்களுக்கு டியூஷன் எடுத்தார். மேலும் அவர் வணிகச் சமூகத்தில்
இணைந்தார்; ஜுகல் கிஷோர் பிர்லா உடன் அறிமுகம் ஏற்பட்டது --அவர் ஆரிய சமாஜத்தின் கீழ்
ஏராளமான சமூகச் சீர்திருத்தப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார். ராதா மோகன் 1908ல் ‘சத்திய சனாதன் தர்மம்’
என்ற பெயரிலான ஒரு இதழை வெளியிடத் தொடங்கினார். அதன் மூலம் ஏராளமான சீர்திருத்தப் பணிகளைச்
செய்தார். அது ‘ஸ்ரீ சனாதன தர்மம்’ என்ற பழமைவாதத்திற்கு எதிரான ஒரு சீர்திருத்தவாதியின்
பதிலாக அமைந்தது.
லஜபதி ராயைப் பின்பற்றுபவர்
அவர்
ஏராளமான தேசியவாத நூல்களைப் படித்தார், லஜபதி ராய் கருத்துக்களின் செல்வாக்கின் கீழ்
வந்தார். பின்னர் அவர் லாலா லஜபதி ராய் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.
இதன்
மத்தியில் முதலில் அவர் தனது மனைவியை இழந்தார், பின்பு அவரது மகளையும் பிறகு 1901ல் 16வயதேயான அவரது ஒரே மகனையும்
இழந்தார். மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அவர் வாழ்க்கை மோசமாக இருந்தது.
மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தப்பட்டார்; ஆனால்
அவரோ ஒரு கைம்பெண்ணை மட்டும்தான் மணப்பேன்
என்றார். யாரும் அதற்குச் சம்மதிக்கவில்லை. பின்பு அவர் ஒருபோதும் மீண்டும் மணம் செய்து
கொள்ளவில்லை. இந்தக் காலகட்டத்தின்போது முதலில் அவர் குர்கானுக்கும் பின்னர் மதுராவுக்கும்
சென்றார்.
ஏராளமாக எழுதினார்
ராதா
மோகன் 1908ல்
‘தேஷ் கா தன்’ (தேசத்தின் செல்வம்) என்ற நூலை எழுதினார். அந்நூல் காலனியச் சுரண்டலைக்
கூர்மையாக விமர்சனம் செய்து எழுதப்பட்ட காலனியப் பொருளாதாரத்தின் மீதான ஆழமான
விமர்சன நூல். அவர் தொழிலாளர்களின் பங்கை வலியுறுத்தினர். சமூகத்தை மேம்படுத்த சமூக
நல நடவடிக்கைகளை விவரித்து ‘நீதி தர்ஷன்’என்ற நூலை 1912ல் எழுதினார். பின்னர் அவர் ‘கம்யூனிசம் க்யா ஹை’ (கம்யூனிசம்
என்றால் என்ன?) என்ற புகழ்பெற்ற நூலை எழுதினார். ககோரி (ரயில் கொள்ளை) நிகழ்வை அடுத்து
அது தொடர்பாக ராம் பிரசாத் பிஸ்மில், அஸ்வகுல்லாகான் மற்றும் பிறர் கைது செய்யப்பட்டனர்
(ரயிலில் கொண்டு செல்லப்பட்ட பிரிட்டிஷ் அரசின் கஜானா பணத்தை இந்தியப் புரட்சியாளர்கள்
உபி அருகில் உள்ள ககோரி ரயில்வே நிலையத்தில், தங்கள் புரட்சிகர நடவடிக்கைகளுக்காக 1925 ஆகஸ்ட் 9ல், துணிச்சலாகக் கொள்ளை
அடித்தனர். இந்நிகழ்வே ககோரி சதி வழக்கு.) நடைமுறை தகவல்கள் மற்றும் ஞானத்தின் அடிப்படையில்
அந்த ஹிந்துஸ்தான் குடியரசு அசோசியேசன் (HRA) அமைப்பை முழுமையாக அங்கீகரித்தது ராதா
மோகன்தான். அவர் ஜான்சியில் இருந்த சந்திரசேகர் ஆசாத்திடம் விஜய்குமார் சின்ஹாவை
அனுப்பி அவரைத் தன் வீட்டுக்கு அழைத்தார். அவர் சசீந்திரநாத் சன்யால் மற்றும்
பிற அத்தகைய புரட்சியாளர்களுடன் தீவிரத் தொடர்பில் இருந்தார்.
ராதா
மோகன் பெண்கள் இயக்கத்திலும் கூட ஆழமான தடம் பதித்தார். பெண்கள் உரிமைக்கான பெரும்
ஆதரவாளரான அவர், கைம்பெண்கள் மறுமணத்திற்காகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் பழமைவாதத்திற்கு
எதிராகவும் ஓய்வின்றி உழைத்தார். அவருடைய கருத்துக்களும் மற்றும் பிறரது கருத்துக்களும்
இணைந்து 1917ல் ‘பாரதிய மகிளா சமிதி’ அமைப்பை ஏற்படுத்துவதில் பங்களிப்புச் செய்தன.
பகத்சிங்கும்
கூட அவரைச் சந்தித்து, பின்னர் கம்யூனிசம் குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து
வந்தார். 1924ல்
ராதா மோகன் இந்தியில் எழுதிய ‘கம்யூனிசம் என்றால் என்ன?’ என்ற நூல் மிகப் பிரபலம் அடைந்தது.
கான்பூரில் உள்ள பிரம்மன் அச்சகத்தில் சத்திய பக்தா அந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டார்.
அந்நூல் கம்யூனிசக் கோட்பாடுகள், ரஷ்யப் புரட்சி, அதன் தியரி மற்றும் செயலாக்கத்தின்
தகவல்களை மிக விரிவாகப் பேசியது. அக்காலத்தில் இந்தப் புத்தகம் புரட்சியாளர்களுக்குப்
பயிற்சி அளிப்பதில் பெரும் பங்காற்றியது. பின்பு இந்நூலின் சில 150 பிரதிகளை ஆக்ராவில் போலீஸ்
கண்டறிந்து அவற்றைக் கைப்பற்றியது. அவற்றைப் பல ஆண்டுகளுக்குப் பிறகே மீட்டெடுக்க
முடிந்தது.
புரட்சியாளர்களுக்கு ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் பணத்தையும்யும்கூட அவர் ஏற்பாடு செய்து தந்தார்.
காந்திய இயக்கத்தில்
ராதா
மோகன் 1921 ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.
அவர் பண்டிட் சுந்தர்லால் செல்வாக்கின் கீழ் நாக்பூர் சத்தியாகிரகம் அல்லது அ-சகயோக்
(Asahayog சமஸ்கிருதம்,
ஒத்துழைக்காமை) ஆசிரமத்தில் வாழத் தொடங்கினார்.
இதன் மத்தியில்
அவர் (இத்தாலியின் ஐக்கியம் மற்றும் சுதந்திரத்திற்குப் பாடுபட ‘இளம் இத்தாலி’
என்ற புரட்சிகர அமைப்பை உருவாக்கிய) மாஜினி, கரிபால்ட்டி,
நெப்போலியன் போனபார்ட் மற்றும் பிறர் குறித்த ஏராளமான வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதினார்.
நெப்போலியன் வாழ்க்கை குறித்த நூல் நகரி பிரச்சாரனி சபாவுக்காக எழுதப்பட்டது. அவர்
சிறிது காலம் இந்து மகாசபா உடன் இணைந்திருந்தார்.
1925 கான்பூரில் சிபிஐ கட்சி அமைக்கப்பட்டதும் கோகுல்ஜியும்
1923ல் நாக்பூரில் இருந்து ‘பிராண்வீர்’
(துணிச்சலான போர்வீரன்) இதழைக் கொண்டு வருவதில் ராதா மோகன் கோகுல்ஜியுடன் சத்திய பக்தா
இணைந்தார். பிராண்வீர் இதழ், கான்பூரில் சத்திய பக்தாவால் அமைக்கப்பட்ட ‘இந்தியன் கம்யூனிஸ்ட்
கட்சி’யின் முதலாவது காலாண்டு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் சத்திய பக்தா
செயலாளர் என்று கையெழுத்திட்டிருந்தார். கட்சியில், பெரும்பாலும் கான்பூர் மற்றும்
உபியில் இருந்து, 78 உறுப்பினர்கள் இருந்ததாக அந்த அறிக்கை கூறியது. அதன் புகழ்பெற்ற
உறுப்பினர்களில் மௌலானா ஹஸ்ரத் மொகானி, ராதா மோகன் கோகுல்ஜி, ராமசங்கர் அவஸ்தி (வர்த்தமான்
இதழ ஆசிரியர்), ராம் கோபால் வித்யாலங்கர் (பிரான்வீர் இதழ் ஆசிரியர்) மற்றும் பலர்
அடங்குவர்.
ராதா மோகன், கம்யூனிஸ்ட் முதல் மாநாட்டின் முன்னணி அமைப்பாளர்களில் ஒருவராக –சத்திய பக்தா, மௌலானா ஹஸ்ரத் மொகானி [இந்த வரலாற்றுக் கட்டுரைத் தொடரில் சத்யாபக்தா வரலாறு வரிசை எண் 57லிலும் மற்றும் மௌலானா ஹஸ்ரத் மொஹானி வரலாறு வரிசை எண் 47லிலும் இடம் பெற்றுள்ளது –மொழிபெயர்ப்பாளர் இணைப்பு] மற்றும் பிறருடன் –விளங்கினார் என்பது பரவலாகப் பெரிதும் அறியப்படவில்லை. 1924ல் அவர் ‘இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி’யில் பணியாற்ற சத்திய பக்தாவால் கான்பூருக்கு அழைக்கப்பட்டார். கான்பூரில் அவர் தங்கியிருந்தபோது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், (‘சொத்துரிமை என்பது திருட்டு’ என்ற பிரெஞ்ச் சோசலிசவாதியும் தத்துவவாதியும் அராஜகத் தத்துவத்தின் முன்னோடிகளில் ஒருவருமான) புரூதோன், (ரஷ்யப் புரட்சியாளர், அராஜகத் தத்துவ ஆதரவாளரான) பக்குனின் முதலானவர்களை ராதா மோகன் படித்தார். அவர் உறுதியான பகுத்தறிவாளரானார். இக்காலகட்டத்தில், ராதா மோகன் கம்யூனிசத்தின் பல அடிப்படை கோட்பாடுகளை ஒருங்கிணைத்து உட்கிரகித்தார். அவர் ஏற்கனவே ‘கம்யூனிசம் என்றால் என்ன?’ என்ற நூலை, மார்க்சியக் கோட்பாடுகளுக்கான விளக்கங்களுடன், எழுதியவர்.
ராதாமோகன் குறித்துப் பல அறிஞர்கள்
ராதா மோகன் குறிப்பாக இலக்கியம் மற்றும் மார்க்சியத்தின் மீதும் ஏராளமான நூல்களை எழுதினார். புத்தகங்கள் மட்டுமல்லாது பல இதழ்களுக்கும் ஆசிரியராக இருந்தார்.
முன்னணி இலக்கியப் பிரமுகராக அவர் பரவலாக அறியப்பட்டார். கவிஞர் நிராலா அவரைத் தனது முதல் அரசியல் குருவாகக் கருதினார். [இந்தி இலக்கியத்தின் 1910களின் நடுப்பகுதியிலிருந்து 1940களின் முற்பகுதி வரை பரவியிருந்த மாய-காதல் வாதத்தின் சகாப்தமே சாயவத் இயக்கம் எனப்படுகிறது. இது அதற்கு முந்தைய போதனை வாதம் மற்றும் அரசவை மரபுகளுக்கு எதிர்வினையாகத் தோன்றியது. அந்த இயக்கத்தின் முக்கிய நான்கு தூண்களாக ஜெய்சங்கர் பிரசாத், ‘நிராலா’ என்ற புனைப்பெயர் கொண்ட சூரியகாந்த் திரிபாதி, சுமித்ரானந்தன் மற்றும் மகாதேவி வர்மா குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களின் கவிதைகளில் காதலும் மனிதநேயமும் சிறப்பிடம் பெறுகின்றன. --கூடுதல் இணைப்பு]அவரைப் பற்றி எழுதும்போது பிரேம்சந்த், அவரை ‘நவீன சார்வாகத் தத்துவ இயலாளர்’ (நவீன லோகாயுத/ பொருள் முதல் வாத, பகுத்தறிவாளர்) என்று கூறுகிறார். பிரேம்சந்த்
கருத்தின்படி மதம், சமூகம், ஒழுக்க நெறி மற்றும் அரசியல் பிரச்சனைகள் மீது அச்சமற்று எழுதிய சிலரில் அவரும் ஒருவர். அவர் அனைத்து வகையான சமூக மற்றும் மத பழமைவாதத்திற்கு/ இருண்மைவாதக் கருத்துக்கு எதிரானவர். அவர் ‘மாதுரி’ என்ற இந்தி இதழில் தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் “கடவுளை வெளியே துரத்துதல்” (‘Expulsion of God’) என்று தொடங்கிய தொடரை எழுதினார்.டாக்டர் ராம்
விலாஸ் சர்மா
கூற்றுப்படி, ராதா மோகன் விவசாயத் தொழிலாளர்களுக்காக, அவர்கள் உழுது பயிரிடும் நிலம் அவரவர்க்கே சொந்தமாக
வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மேலும் அவர் ஏகாதிபத்தியம் மற்றும் வகுப்புவாதத்திற்கு
எதிராகத் தீவிரமாக இருந்தார். ராதா மோகனின் வாழ்க்கை கம்யூனிச இயக்கத்தின் இந்தக் கட்டத்துடன்
மிக நெருக்கமாக பிணைந்து இருந்தது என்று விஜயகுமார் சின்ஹா எழுதினார். கம்யூனிஸ்ட்
இயக்கத்தின் அந்தக் கட்டம் குறித்துத் தனியாக, குறிப்பாக ஆங்கிலத்தில், வெளியிட வேண்டும்
என்ற யோசனையை அவர் தெரிவித்தார்.
ஆக்ரா பல்கலைக்கழகத்தின் தேவி தத் ஜோஷி கூற்றுப்படி இந்தியாவில் கம்யூனிசக் கருத்துக்களை இந்தி மொழியில் பெருந்திரள் மக்கள் மத்தியில் பரப்பியவர்களில் ராதா மோகன் முதலாமவர். புகழ்பெற்ற புரட்சியாளர் பகத்சிங்கின் தோழரும் நன்கறியப்பட்ட
கம்யூனிஸ்ட்டுமான ஷிவ் வர்மா, சத்திய பக்தா கூறியதை மேற்கோள்காட்டி கூறினார்: ராதா மோகனும், மௌலானா ஹஸ்ரத் மொகானியும் நடைமுறையில் எல்லா வகையிலும் கான்பூர் கம்யூனிஸ்ட் அமைப்பு மாநாடு வெற்றி பெறுவதற்கு ஆக கூடுதலாகப் பங்களிப்புச் செய்தனர். ராதா மோகன் நூலகத்திலிருந்துதான் ஷிவ் வர்மா, காரல் மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையை எடுத்துச் சென்றார்; சந்திரசேகர் ஆசாத்துக்குப் படித்துக் காட்டினார்.சிபிஐ-ன் கான்பூர்
அமைப்பு மாநாடு தேர்ந்தெடுத்த மத்திய செயற்குழுவில் ராதா மோகன் கோகுல்ஜி ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர். புதிய மத்தியச் செயற்குழுவின் முதல் கூட்டம் டிசம்பர் 28ல் நடைபெற்றது.
அது பல்வேறு மாகாணங்களுக்குப் பொறுப்பாளர்களை முடிவு செய்தது. ராதா மோகன் கோகுல்ஜி
மற்றும் முசாபர் அஹமத் வங்கத்தின் பொறுப்பாளர் ஆக்கப்பட்டார்கள். அவரவர் மாகாணங்களுக்கான
மாகாணக் குழுக்களை அமைத்திட, அவர்கள் முறையே அம்மாகாணச் செயலாளர்கள் ஆக்கப்பட்டார்கள்.
அமைப்பு ரீதியான
கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் சிபிஐ உடன் அவரது தொடர்பு சிறிது காலமே நீடித்தது. அவருக்குக்
கலவையான கருத்துக்கள் இருந்தன. 1926க்கு பின் அவர், சத்திய பக்தாவின் கான்பூர் குழுவின்
சில உறுப்பினர்களுடன் சேர்ந்து ‘இந்தி சாம்யவாதி கட்சி’யை (இந்தி கம்யூனிஸ்ட் கட்சி)
அமைக்க முயன்றார். எதார்த்தத்தில் இயல்பாகவே இது நீடிக்கவில்லை. பின்னர் அவர் சமூகப்
பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.
ஷிவ் வர்மாவுடன் தொடர்பு
1926 டிசம்பரில்
கோகுல்ஜி முதன் முறையாகப் புகழ்பெற்ற பகத்சிங் புரட்சியாளர்கள் குழுவைச் சேர்ந்த
ஷிவ் வர்மாவை விஜயகுமார் சின்ஹா மூலமாகச் சந்தித்தார். கோகுல்ஜி அந்நாட்களில் இரு சிறிய
அறைகள் மட்டுமே கொண்ட தொழிலாளர்களின் அடுக்கக் குடியிருப்புப் (chawl type) பகுதியில் தங்கி
வந்தார். தொழிலாளர்கள் வழக்கமாகக் கீழ்த்தளத்தின் அறைகளில் தங்குவர், கோகுல்ஜி மட்டும்
மேல் தளத்தில் தங்கினார். காலையில் ஷிவ் வர்மாவும் விஜய்யும் வந்தபோது அவர் காய்கறிகளை
வெட்டிக் கொண்டிருந்தார். ஷிவ் ஏற்கனவே அவரை 1925ல் கான்பூர் காங்கிரஸ் அமர்வில் சந்தித்துள்ளார்.
காலை இந்த முதல் சந்திப்பு ஷிவ் வர்மாவுக்கு ஏமாற்றம் தருவதாக இருந்தது. அடுத்த நாள்
காலை சந்திப்பு மிக உற்சாகமளிப்பதாக அமைந்தது; கோகுல்ஜி ஏராளமான கேள்விகளை, தனிப்பட்ட
வாழ்வு குறித்தும் அரசியல் ரீதியான கேள்விகளையும், எழுப்பினார். ‘கம்யூனிசம் கியா ஹை?’
புத்தகத்தை அவரிடம் தந்தார்.
ஷிவ் வர்மா முன்பு,
ராம் சந்திர வர்மா 1918ல் எழுதிய ‘சாம்யவாத்’ (கம்யூனிசம்)
உள்ளிட்ட, மார்க்ஸியம் குறித்த ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களைப் படித்துள்ளார்.கோகுல்ஜியின்
புத்தகம் மிக எளிமையாகவும் கற்றுத் தருவதாகவும் இருந்தது. அவரது புத்தகங்களை
ஷிவ் வர்மா திருப்பித் தரும்போது, கோகுல்ஜி அவரிடம் ‘கம்யூனிசம் என்றால் என்ன’ என்பது
உள்ளிட்ட ஏராளமான கேள்விகளைக் கேட்டார்.
அவர்களின் பரஸ்பர
உறவும் தொடர்பும் அதிகரித்தது, ஷிவ் வர்மா உறுதியான மார்க்சியவாதியாகவும் கம்யூனிஸ்ட்
ஆகவும் ஆனார். கோகுல்ஜி மார்க்சியத்தின் மீது அவரது ஆசிரியரானார். கோகுல்ஜி வீட்டில்தான்
சந்திரசேகர ஆசாத்தை ஷிவ் முதன் முறை சந்தித்தார். மேலும் ஷிவ் வர்மா மற்றும் சிலருக்கு
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கை துப்பாக்கிகளை ராஜஸ்தானில் இருந்து வாங்குவதற்குக்
கோகுல்ஜி உதவினார். அவரது நண்பர் ஃபதேக் பகதூர் தலையணையில் மறைத்து வைத்துக் கைத்துப்பாக்கிகளைக்
கொண்டு வந்தார். ஒரு துப்பாக்கி மணி பானர்ஜியால் அகமதாபாத் சிஐடி காவல் கண்காணிப்பாளர்
பானர்ஜியைச் சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது; மற்றொன்று (லாகூரில் 1928 டிசம்பர்
17ல் பிரிட்டிஷ் காலனிய காவல் அதிகாரி) சாண்டர்ஸ்-ஐ கொல்வதற்குப் பகத்சிங்கால்
பயன்படுத்தப்பட்டது. அதே கைத்துப்பாக்கி மத்திய சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில்
பகத்சிங்கிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
மேலும் கோகுல்ஜி
ராஜா மகேந்திர பிரதாப்பைச் சந்திக்க நேபாள் பகுதிக்கு விஜயம் செய்தார், ஆனால் அவரைச்
சந்திக்க முடியாமல் போனது.
மீரட் சதி
வழக்கின் போது போலீஸ் ஆக்ராவில் கோகுல்ஜி யின் இளைய சகோதரர் வீட்டைச் சோதனையிட்டது.
அவர்களுக்குக் கம்யூனிசம் க்யா ஹை? என்பதன் பிரதிகளைத் தவிர்த்து வேறு எதுவும் கிடைக்கவில்லை.
ராதா மோகன் நகருக்கு வெளியே இருந்தார். 1930ல் கைது செய்யப்பட்டு கான்பூர் சிறைக்கு
அனுப்பப்பட்ட அவர், ஹமிர்ப்பூரில் அவரது செயல்பாடுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற
வரையறை கட்டுப்பாடுடன் 1932ல் விடுதலை செய்யப்பட்டார். வயிற்றுப் போக்கு முதலான வயிறு
உபாதைகள் காரணமாகச் சிறையில் அவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இந்தப் பாதிப்புகள்
1935ல் அவர் இறக்கும் வரை நீடித்தது. அவர் பிராண்வீர், மத்வாலா, மனோரமா, மகா ரதி, நவ
யுகம் முதலான இதழ்களில் தீவிரமாக எழுதிக் குவித்தார்.
இறுதி நாட்கள்
ராதா மோகன் கான்பூருக்கு
அருகில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தின் போகி என்ற கிராமத்தில் தனது இறுதி நாள்களைக் கழித்தார்.
1933ல் சுவாமி பிரம்மானந்த் மற்றும் பிருந்தாவன் சிங் இருவரும் பசுமை சூழ்ந்த சிறு
குன்றுகளுக்கு மத்தியில் சிறு பள்ளியைத் தொடங்கினர். உண்மையில் அந்தப் பள்ளி பல்வேறு
சமூக மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளை மறைப்பதற்கான திரை. இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு
தலை மறைவு புரட்சிகரப் பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆயுதங்கள் திரட்டப்பட்டு
வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. பின்னரே போலீஸ் அந்த இடத்தைக் கண்டுபிடித்தது.
அவரது 70வது வயதுகளில்
ராதா மோகன் அவரைச் சுற்றி ஓர் இளைஞர் படையை அமைத்தார். அருகிலுள்ள கிராமங்களுக்கு விஜயம்
செய்து கல்வி கற்பிக்க மாணவர்களை ஒன்று திரட்டினார். இலக்கியங்களுக்கு மத்தியில் அவர்களுக்குப்
பண்டித நேரு எழுதிய “ஒரு தந்தையிடமிருந்து
மகளுக்குக் கடிதங்கள்” நூலையும் கற்பித்தார். பண விடை அஞ்சல் மூலம் மக்கள் அவருக்குப்
பணம் அனுப்பி உதவினர். பல மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளியிலேயே தங்கினார், உணவு சமைத்துக்
கூட்டாக உண்டனர்.
ராதா மோகன் நடவடிக்கைகளில்
காவல்துறை சந்தேகம் அடைந்தது. ஒரு பாபா சாமியார் வேடத்தில் இளைஞர்களைத் திரட்டி குண்டு
தயாரிப்பில் பயிற்சி அளிப்பதாக அறிக்கை அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவரை
அழைத்தார். உடல்நலம் இல்லாதபோதும் மோசமான சாலை வழியே ஒரு சிறு குதிரை அல்லது மட்டக்குதிரையில்
(pony) சென்றார். திரும்பி வரும்போது வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதியால் கடுமையாக
உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
பத்து நாட்களுக்குப் பிறகு 1935 செப்டம்பர் 3ம் தேதி அவர் மரணமடைந்தார். அவர் உறுதியான கடவுள் மறுப்பாளர், ஆனால் மரணமடையும் நேரத்தில் ‘ஹே ராம்’ என்று அவர் உதடுகள் உச்சரித்தன. அவர் கோகி (Khohi) அருகில் உள்ள வயல் வெளியில் அடக்கம் செய்யப்பட்டார். தற்போது இந்த இடம் இடிந்து சிதைந்த நிலையில் உள்ளது. அவருடைய பெரிய புகைப்படத்துடன் அவரது மறைவு செய்தி ‘தைனிக் விஸ்வமித்ரா, (தினசரி உலக நண்பன்) என்ற ஹிந்தி நாளிதழ் வெளியிட்டது.
அத்தகைய ஆளுமை மிக்க மனிதர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதுடன் இணைந்திருந்தார் என்ற பெருமிதத்துடன். கட்சி நூற்றாண்டின் இத்தருணத்தின்போது ராதா மோகன் கோகுல்ஜி-யின் நினைவைப் போற்றுவோம்!
–நன்றி : நியூ
ஏஜ் (2023 அக். 1 –7)
–தமிழில் : நீலகண்டன்,
என்எஃப்டிஇ,
கடலூர்




