மார்க்சியம் இந்த நாட்டிற்கு வழங்கியது என்ன?
--டாக்டர் சி என் ஷேத்ரபால் ரெட்டி
சமூக வலைத்தள விவாதம் ஒன்றில் முற்போக்கு இலக்கியம்,
மார்க்சியம் மற்றும் எழுத்தாளர்கள் மீது அவற்றின் செல்வாக்குக் குறித்து ஓர் ஆசிரிய
நண்பர் எழுப்பிய கேள்விக்குப் பதிலாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.
கேள்வி
இதுதான், “மார்க்சியம் இந்த
நாட்டிற்கு வழங்கியது என்ன?” புறக்கணிக்கக் கூடாத கேள்வி இது. இந்தக் கேள்வியைக் கேட்டவர்க்கு மார்க்சியம் அளித்தது என்ன
என்பதை மட்டும் விளக்குவது அல்ல, மாறாக நமது தேசம் முழுமைக்கும் மார்க்சியம் வழங்கியதையும்கூட விளக்குவது
மிக முக்கியம் என நான் நினைத்தேன்.
தொழிலாளர்
வர்க்கத்துடன் அரசு ஊழியர்களுக்கும்கூட எட்டு மணி நேர வேலை நாள் உரிமைக்குப்
பின்னே இருந்த பெரும் சக்தி மார்க்சியம். மார்க்சியம்தான் நியாய ஊதியம் பெறுவது ஓர்
உரிமை என்ற கருத்தியலை ஏற்படுத்தியது. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஊதியங்களை உயர்த்த,
அல்லது அது சாத்தியமில்லாதபோது இடைக் கால நிவாரணங்களை அளிக்க ஊதிய மாற்றக் குழுக்களை நாம் கோர முடியும் என்ற யோசனை மார்க்சியத்திலிருந்து தொடங்கியது.
பல்வேறு அலவன்ஸ்கள், கிராக்கிப்படி (டிஏ) போன்ற பலன்களை உரிமையுடன் கோரவும், அவற்றிற்காகவும்
மற்றும் பல்வேறு நிலுவைத் தொகைகளுக்காகவும் ஊழியர்கள் போராட முடியும் என்றும் ஊழியர்களை
உணர வைத்தது மார்க்சியம்தான். ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் மனைவி உரிமையாக குடும்ப ஓய்வூதியம் பெறுவதும் மாக்சியம் அளித்த சிந்தனை முறையின் விளைவே.
அரசின் சூழ்ச்சிக் கொள்கைகளால் தற்போதைய அரசு ஊழியர்கள், இழந்து விட்ட பழைய பென்ஷன் முறையை (ஓபிஎஸ்) மீட்டு மீண்டும் கொண்டுவர இயக்கங்களைத் தலைமையேற்று நடத்தும் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மார்க்சியக் கருத்தாளர்களே. வாய்ப்பு ஏற்படும் எனில், சட்ட மன்ற அமைப்புகளில் உங்களுக்காக அவர்கள் குரல் எழுப்புகின்றனர் அல்லது வீதிகளில் உங்கள் பிரச்சனைகளைப் பேசிப் போராடுகிறார்கள். இவை எல்லாம் மார்க்சியம் வழங்கிய ஒளி விளக்குகள். வேலை வழங்குவது அரசின் பொறுப்பு, மற்றும் வேலைவாய்ப்புகளைப்
பொதுத்துறை பிரிவில் ஏற்படுத்த வேண்டும் என்ற முழக்கத்தைத் தந்தவர்கள் மார்க்சியவாதிகள். அரசு இதைப் புறக்கணிக்கும் எனில், வேலை- யில்லாதவர்கள் சார்பாக அவர்கள் போராடவும் செய்கிறார்கள். “அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை மற்றும் அனைவருக்கும் ஆரோக்கியம்/ சுகாதாரம்” என்ற முழக்கங்களும்கூட மார்க்சியர்கள் வழங்கியதே.தேசத்திற்கு மார்க்சியம் வழங்கியதைச் சுருக்கமாக விளக்குவதும் தேவை. மார்க்சியச் சிந்தனா முறை பெருவெள்ளம் இந்தியாவுக்குள் நுழைந்து நூறாண்டுகளுக்கும் மேலாகிறது. இந்தத் தேசத்தை முன்னேற்ற கடுமையாகப் பாடுபட்டதில் மார்க்சியர்கள் போல வேறு எந்தக் குழுவும் உழைத்ததில்லை. அந்நியக் காலனி ஆட்சி நுகத்தடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்வது மற்றும் அறிவார்ந்த சிறந்த சமூகத்தைக் கட்டி எழுப்புவது என்ற இலட்சியமுடன் இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி அமைக்கப்படுவதற்குக் காரணம் மார்க்சியம். (டோமினியன் அந்தஸ்துடன் கூடிய) “வெறும் சுதந்திரம் அல்ல, மாறாகப் பூரணச் சுதந்திரம்” என்ற முழக்கத்தை மைய அரசியல் நீரோட்டத்தில் முதலில் கொண்டு வந்ததும், அதனை அனைத்துக் கட்சிகளின் முக்கிய அரசியல் நிகழ்ச்சி நிரல் திட்டமாக மாற்றியதும் மார்க்சியம். இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் மார்க்சியம் வழங்கிய மாபெரும் வெற்றி, இது. பிரிட்டிஷ்
ஆட்சியாளர் இரவுகளை உறக்கமில்லாது செய்த இந்திய மார்க்சியர்கள், மீரட், கான்பூர்,
பெஷாவர் போன்ற பல சதி வழக்குகளைச் சந்தித்தனர். இந்தியாவில் மார்க்சியம் வலிமை
பெறுவதைக் கண்டு நடுங்கிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியையும்
அதன் இணைப்பு அமைப்புகளையும் தடை செய்தனர். எனினும் மார்க்சியர்கள் பின்வாங்கவில்லை,
விடுதலைப் போராட்டம் மற்றும் தொழிலாளர் இயக்கங்களைத் தொடர்ந்து தலைமையேற்று நடத்தி,
தொழிலாளர்களை அதிகாரம் உடையவர்களாகச் செய்தனர். 1946ல் தபால் தந்தி மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் நடத்திய
வேலைநிறுத்தங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. தேசிய இயக்கத் தலைவர்களுடன் இணைந்து மார்க்சியர்கள் தலையேற்ற
இந்திய ராயல் கடற்படை (ரின்) வீரர்களின் போராட்டம் தனித்துவமானது.
1943 வங்கப்
பஞ்சத்தில் 35லட்சம் மக்கள் மடிந்தபோது உணவு நெருக்கடியைத் தடுக்க தீவிரமாகப் பணியாற்றிய
மார்க்சியர்கள், “வங்கம் இறந்தால், இந்தியா வாழ முடியாது” என்ற முழக்கத்தை எழுப்பினார்கள்.
இந்த அனுபவங்களின் அடிப்படையில், தேசத்தின் அனைத்துக் குடிமக்களுக்கும் உணவுப் பாதுகாப்பை
உறுதி செய்து ஐக்கிய முற்போக்கு ஆட்சி -1 காலத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை
ஏற்படுத்தக் காரணமாக இருந்தவர்கள் மார்க்சியர்கள். அந்தச் சட்டத்தின் காரணமாகவே நாட்டின்
85கோடி மக்கள் இன்றும், தற்போதைய மோடி அரசின் கீழும்கூட, இலவச ரேஷன் பொருட்களைப்
பெற்று வருகிறார்கள்.
“உழுபவருக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கம் இந்திய மார்க்சியர்கள் வழங்கியது. அம்முழக்கத்தின் அடிப்படையில் 10 லட்சம் ஏக்கர் நிலம், விவசாயிகளின் தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் போது, ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதற்காக 4,000 மார்க்சியக்
கருத்தியலாளர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். கேரளாவில் புன்னப்புரா வயலார் போராட்டம் (படம்) மற்றும் வங்கத்தின் தேபகா போராட்டம் அத்தகையதே. (நில உடைமையாளர்கள், குத்தகைய விவசாயிகளுக்கு உற்பத்தியில் பாதி பங்கே அளித்து வந்தனர்; அதனை ‘மூன்றில் இரண்டு பங்காக’ உயர்த்தக் கோரி குத்தகை விவசாயிகள் நடத்தியதே தேபகா போராட்டம். தேபகா எனில் ‘மூன்றில் இரண்டு பங்கு’ எனப் பொருள்). தேசிய
இயக்கத்துடன் ஒன்றுபட்டு பணியாற்றியபோது இந்திய மார்க்சியர்கள் தொழிலாளர் வர்க்க நலவாழ்வுக்காவும்
பாடுபட்டனர். தங்களின் பணிநேரம் எவ்வளவாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது சுரண்டப்பட்ட
எல்லா தொழிலாளர்களுக்கும் மார்க்சியம்
வழிகாட்டும் ஒளிவிளக்கு ஆனது.
தொழிற்சங்கங்கள் அமைக்கப்படுவதற்குக் காரணம் மார்க்சியம். இதன் ஓர் அங்கமாக இருந்து
இந்தியாவில் பல லட்சக் கணக்கான உழைப்பாளர்களுடன் நின்று மார்க்சியம் அவர்களுக்காகப்
போராடியது. 64 வகையான தொழிலாளர் நலச் சட்டங்களை ஏற்படுத்த அது வழி வகுத்தது.
அதன் அடிப்படையில் பல உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பாதை அமைத்துச் சாதித்தது.
பிஎப்,
இஎஸ்ஐ, டிஏ, மிகுதி நேரப்படி, (ஊதியத்துடன் கூடிய) விடுமுறைகள், ஈட்டிய விடுப்பு, பேறுக்கால
விடுப்பு மற்றும் தந்தைமை விடுப்பு போன்ற வசதிகளுக்கான போராட்டங்கள் மார்க்சியத்திலும்,
மார்க்சியர்களிடத்தும் வேர் கொண்டுள்ளது. கூடுதல் பலன்களுக்காகப் பணியாற்ற ஊக்குவிப்பது
மார்க்சியமே. இந்திய மார்க்சியர்கள், அரசுகளைக் கட்டாயப்டுத்தி நவரத்னா நிறுவனங்களையும்
பிற பொதுத்துறை ஆலைகளையும் நிறுவிடப் போராடினார்கள்.
விடுதலைக்குப்
பிறகு மார்க்சியம், வங்கிகள் தேசியமயமாக்க, மன்னர் மானியம் ஒழிக்க, நிலச் சீர்திருத்தங்களை
அமலாக்க இந்திய அரசுக்கு அழுத்தம் தந்தது. அது நில உச்சவரம்பு யோசனையை முன் வைத்தது,
அரசு உபரி நிலங்களை தலித் மற்றும் ஏழை வகுப்பினர்- களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டியிருந்தது.
பல சீர்திருத்தச் சட்டங்களை ஏற்படுத்துவதற்கு பாடுபட்ட மார்க்சியம் அதிலும் வெற்றியும்
பெற்றது; நாடு முழுவதும் இன்றும் –கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், தகவல்
பெறும் உரிமை சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் வன உரிமைகள் சட்டம் போன்ற--
அத்தகையச் சட்டங்கள் அமல்படுத்தப்படுவது மட்டுமின்றி, அவை மக்களுக்குக் கிடைக்கக் கூடியதாகவும்
ஆக்கப்பட்டுள்ளன.
சமுதாயத்தின் செம்பாதியாக அமைந்துள்ள பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம் தேவை என மார்க்சியம் வலியுறுத்துகிறது. எல்லா அதிகார மட்டங்களிலும் பெண்களுக்கு
அரசியல் ரீதியான இடஒதுக்கீடு என்று எண்ணியது மார்க்சியர்களே. அதன் பொருட்டு நமது நாட்டில், மார்க்சியரான ஒரு பெண்மணி ஒரு மசோதா வரைவை முன் மொழிந்து தனது மக்கள் நலனுக்காகவும் கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். அவர்தான், தோழியர் கீதா முகர்ஜி! ஏழு முறை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் கொண்டு வந்த முன்னுதார அடையாளமான முக்கிய மசோதா நாடாளுமன்ற அவைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கி 2023 செப்டம்பர் 21ல் சட்டமானது. மார்க்சியத்தை
நம்பும் சக்திகள் அதிகாரத்தில் இல்லை என்றாலும், அவர்கள் சாதித்த வெற்றிகள் கொஞ்சம்
அல்ல. விடுதலை போராட்டம் தொடங்கி நமது தேசத்தைக் கட்டி எழுப்புவதிலும்கூட மார்க்சியம்
முக்கிய பங்களிப்புகளை அளித்தது, இன்னும் மேலும் சாதிக்க வேண்டியவை பல உள்ளன என்பது
உண்மையே. தேர்தல் வாக்குறுதிகளாக அரசுகள் இப்போது வழங்கிவரும் பல்வேறு நலவாழ்வுத் திட்டங்கள்
அனைத்தும், மார்க்சியர்கள் முன்பே கோரிக்கை வைத்து மக்கள் பக்கம் நின்று அவர்களைத்
திரட்டி அவற்றிற்காகப் போராடியதே காரணம் எனச் சொல்வது மிகையான ஒன்று அல்ல.
ஒடுக்கப்பட்டோர், சுரண்டப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், ஏழை, உழைப்போர், பலவீனமானவர்கள் மற்றும் விவசாய வகுப்புக்களைச் சார்ந்த ஒவ்வொரு குடும்பமும் இந்தியாவில் மார்க்சியத்தின் பலன்களை இன்னும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்தப் பலன்களை யார் பெறவில்லையோ, அவர்களுக்காகவும் மார்க்சியத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட சக்திகள் இன்னும் போராடி வருகிறார்கள்.
--நன்றி : நியூஏஜ் (ஆக.31 --செப்.6)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்.