கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு -- 123
பிரசண்டா சன்யால் :
AISF மாணவர் பெருமன்ற நிறுவனர்
மற்றும் கட்டி வளர்த்தவர்
--அனில் ரஜீம்வாலே
பிரசண்டா சன்யால் 1919 ஜனவரி 3ல், துறை சார்ந்த ஆளுமைகள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள்,
மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய கூட்டுக் குடும்பத்தில் பிறந்தார். பிரசண்டா
இரண்டு வயதாகும்போது அவரது தந்தை ஸ்ரீ ஹிராலால் சன்யால் இறந்தார். அவரது தாயார் ஸ்ரீமதி
ஸ்வர்ணலதா (தற்போது பங்களாதேஷில் உள்ள) பாப்னா மாவட்டத்தின் பல நிலபுலங்கள் உடைய புகழ்வாய்ந்த
குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரசண்டாவுக்கு இரண்டு சகோதரிகள். தந்தை இறந்த பிறகு (தந்தையின்
சகோதரரான (சித்தப்பா எனப் பொருள்படும்) ‘சிஜோ காகா’ டாக்டர் சுனிலால் சன்யால் என்ற
கல்கத்தாவின் புகழ் பெற்ற ஹோமியோபதி மருத்துவரால் அவர் வளர்க்கப்பட்டார்.
அவருடைய குடும்பம் அனைத்து முக்கிய மதங்களையும் பிரதிநிதித்துவப்-
படுத்துவதாகவும், இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களிலும், ஏன் உலகின் முக்கிய நாடுகளிலும்
கூட, விரிந்து பரந்து இருந்தது!
பிரசண்டா பவானிபூர் மித்ரா கல்வி நிறுவனத்தில் படித்தார்.
கல்லூரிக் கல்வியைப் புகழ்பெற்ற கல்கத்தா ஸ்காட்டீஷ் சர்ச் காலேஜ், மற்றும் பின்னர்
கல்கத்தா பல்கலைக் கழகத்திலும் பெற்றார். அக்கல்லூரி, மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிப்பதில்
போலீஸ் சரிபார்ப்பு என்ற பழக்கத்தைப் புறக்கணித்த கல்லூரிகளில் ஒன்று– பிரசிடென்சி கல்லூரி போன்ற கல்லூரிகளில் அந்த வழக்கம் அப்போது
பரவலான நடைமுறையாக இருந்தது.
கிரிக்கெட், பால்-பாட்மிட்டன் விளையாட்டை விரும்பிய அவர்
பாடத்திட்டம் சாராத பிற (எக்ட்ரா க்கரிகுலர்) நடவடிக்கைகளில் மிக ஆர்வம் உடையவராக இருந்தார்.
அந்த நாட்களின்போது, சிறந்த மாணவர்கள் அனைத்திந்திய மாணவர்
பெருமன்றம் (AISF) மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வழக்கமாக இணைந்தனர். 1930களின்போது
பொதுவான ஒரு நகைச்சுவை சொல்வதுண்டு -- சிறந்த அறிவுடையவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்ந்தெடுக்கிறார்கள், நடுத்தரமானவர்கள்
காங்கிரஸ் கட்சியையும் மற்றும் மூன்றாம் தரமானவர்கள் இந்து மகா சபாவையும் தேர்ந்தெடுக்கிறார்கள்
என்று!
அரசியலிலும் தேசிய இயக்கத்திலும்
கல்லூரித் தெரு மற்றும் கல்கத்தாவில் நிலவிய அரசியல் சூழ்நிலை
இயல்பாகப் பிரசண்டாவிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல
விரைவில் தொழிலாளர்கள் மத்தியிலுமிருந்தும் அவர் குறைகளைக் கேட்டறிந்து அவர்களை ஒன்று
திரட்டினார். உண்மையில் வெறும் 16 வயது இருக்கும்போதே, 1935ல் கல்கத்தா கித்னாப்பூர்
பகுதியில் துறைமுகம் மற்றும் சரக்குகளைக் கையாளும் ஊழியர்கள் (water-front workers) மத்தியில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு அவர்
சிறையில் அடைக்கப்பட்டார்.
மாணவர் இயக்கத்தில்
30களின் மத்தியிலிருந்து
பிரசண்டா வங்காளம் மற்றும் இந்தியா முழுவதும் அலை புரண்டோடிய பெரும் மாணவர் இயக்கங்களில்
தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மிக விரைவில் பிரசண்டா தீவிரச் செயல்பாட்டாளராகவும் ‘வங்காள
மாகாண மாணவர்கள் சம்மேளன’ (BPSF) தலைவராகவும்
ஆனார். பின்னர் அவர் அதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இழிவான ஹோல்வெல் நினைவுச் சின்னத்தை அகற்ற சுபாஷ் சந்திர
போஸ் விடுத்த அறைகூவலுக்கு ஆதரவாக BPSF பொது வேலை நிறுத்தத்திற்கு
அழைப்பு விடுத்தது. (ஹோல்வெல் Holwell Monument என்று அழைக்கப்பட்ட அந்த நினைவுச் சின்னம் 14க்கு 18 அடி
அளவுள்ள சிறிய அறையாகும். கிழக்கிந்திய கம்பெனி முழுமையாக இந்தியாவில் கால் ஊன்றுவதற்கு
முன் வங்காள நவாப், சிராஜ் உத் தௌலத் 1756ல் அந்தச் சிறிய அறை சிறையில் அளவுக்கு அதிகமான
ஆங்கிலேயர்களைச் சிறைபிடித்து அடைத்தபோது, அதில் பலர் இறந்தும் போயினர் என்பது அதன்
வரலாறு. அதில் உயிர் பிழைத்தவர்களில் ஹோல்வெல் ஒருவர் – இணையத்திலிருந்து மொழிபெயர்ப்பாளர்
திரட்டியது).
பெருந்திரளான மாணவர்கள் அதில் கலந்து கொள்ள பிரசண்டா முன்னணி
தலைவர்களில் ஒருவராக விளங்கினார். இஸ்லாமியக் கல்லூரி (தற்போது மௌலானா ஆசாத் கல்லூரி)
அருகே மாணவர்களின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய பேச்சாளர்களில்
ஒருவரான பிரசண்டா, தர்க்க அடிப்படையிலான நல்லதொரு வாதங்களை நிரல்பட அடுக்கி முன்வைத்து
உரையாற்றினார்.
முஸ்லிம் மாணவர்கள் தனியாக ‘அனைத்து வங்காள முஸ்லிம் மாணவர்கள்
லீக்’ (ABMSL) என்ற அமைப்பின்
கீழ் திரட்டப்பட்டார்கள். தனியான முஸ்லிம் மாணவர் சம்மேளனம் MSF என்பதை மாணவர் பெருமன்றம் எதிர்த்தது. காலப்போக்கில் அவர்களின்
சில பிரிவுகள் AISF உடன் ஒத்துழைத்தது.
ஹோல்வெல் இயக்கத்தில் அவர்களுடன் ஐக்கிய முன்னணி கட்ட பிரசண்டா முன் முயற்சி எடுத்தார்.
அந்த இயக்கம் மிகப் பெரும் வெற்றியாகி நினைவுச் சின்னம் அகற்றப்பட வேண்டிதாயிற்று.
வங்கப் பஞ்சத்தின் போதும் BPSF மற்றும் ABMSL இணைந்து பணியாற்றினர்.
முப்பதுகளின் இறுதியில் அந்தமான் சிறைக் கைதிகளை விடுவிக்கக்
கோரி நாடு முழுவதும் இயக்கம் நடத்தப்பட்டது. மாணவர்கள் முன்னணியில் இருக்க வங்காளத்தில்
அது பெரும் இயக்கமாக இருந்தது. இந்த இயக்கத்திலும்கூட பிரசண்டா சன்யால் முன்னணிப் பிரமுகராக
இருந்தார்.
இரண்டாம் உலகப் போர் வெடித்த பிறகு போருக்கு எதிரான இயக்கங்கள்
தொடங்கப்பட்டன. 1939ல் போர் எதிர்ப்புப்
போராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும் போரை எதிர்த்ததற்காகவும் கல்கத்தாவிலிருந்து முதலில்
வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவராகப் பிரசண்டா இருந்தார். அவரது ஸ்காட்டீஷ் சர்ச் கல்லூரியில்
சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாக்களின் முன்னணியில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார்
1942ல் நாடியா மாவட்ட மாணவர்கள் சம்மேளனத்தின் மாநாடு நடைபெற்றது.
புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் வரலாற்று ஆய்வாளர் கௌதம் சட்டடோபாத்யாயா அதன் செயலாளர். அப்போது
அவர் சிபிஐயில் இருந்து பிரிந்து சென்ற குழுவான தொழிலாளர் கட்சியில் இருந்தார். (வைணவ
ஆச்சாரியார் சைதன்ய மகாபிரபு பிறந்த இடமான Nabadwip) நவதீப் என்ற இடத்தில் மாநாடு நடத்தப்பட்டது.
அதை வழிநடத்தும் சக்தியாக BPSFன் பெருந்தலைவர் நிகில் மொய்த்ரா இருந்தார். அவரது அழைப்பின்
பெயரிலேயே பிரசண்டாவும் ஆமியா தாஸ்குப்தாவும் மாநாட்டில் மாகாணத் தலைவர்களாகக் கலந்து
கொண்டனர். கௌதம் பின்னர் தொழிலாளர் கட்சியின் சிலருடன் சிபிஐயில் இணைந்தார்.
மற்றொரு முக்கிய இயக்கமான சுபாஷ் போஸுக்கு நடத்திய பாராட்டு
விழா, அனைத்து கல்கத்தா இயக்கமாகப் பல்கி பெருகி விரிவடைந்தது. சுபாஷ் போஸ் சில ஆண்டுகள்
ஸ்காட்டீஷ் சர்ச் கல்லூரியின் மாணவராக இருந்தவர். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சித் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரி வளாகத்தில் அவருக்கு விழா நடத்தி பாராட்ட மாணவர்கள்
விரும்பினர். இது கல்லூரி முதல்வரை சீற்றமடையச் செய்தது – இந்தச் சாதாரண கோரிக்கையையும்
நிராகரிக்கும் அளவு அவர் பெருந்தன்மையற்றவராக இருந்தார்! இது மட்டுமல்ல, பிரசண்டாவையும்
வேறு சில மாணவர்களையும் கல்லூரியைவிட்டு வெளியேற்றுவதாகவும் மிரட்டினார்! பேராசிரியர்
நிர்மல் பட்டாச்சாரியா முன் முயற்சியில் சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது. கல்லூரி
முதல்வரிடம் பிரசண்டா தலைமையில் மாணவர்கள் குழு சென்றது. அவர்கள் எடுத்து வைத்த வாதங்களின்
முன், கல்லூரி முதல்வர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கேமரூன் நிலைகுலைந்து
நிராயுதபாணியானார்.
பிரசண்டாவின் தலைமைப் பண்பு
எடுத்த செயலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் எப்போதும் கண்ணும்
கருத்துமாய் இருந்த பிரசண்டா தலைமைப் பண்பை இயற்கையாக பெற்றிருந்தார். 1939இல் ஸ்காட்டிஷ்
சர்ச் கல்லூரி நிர்வாகம் அரசியல் நடவடிக்கைகள் எனக் குற்றம் சாட்டி இரண்டு மாணவர்களைக்
கல்லூரியைவிட்டு வெளியேற்றியது. பிரசண்டா அப்போது BPSFன் பொதுச் செயலாளர். அவர் கல்கத்தாவின் அனைத்து மாணவர்களின்
பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டமும் கல்லூரி
வாசலுக்கு முன் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தப்பட்டன. விரைவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள்
வடக்கிலிருந்து கல்லூரி வாசலை நோக்கி அணிவகுத்து வந்து அதில் இணைந்தனர். போலீஸ் அவர்களைத்
தடுத்து நிறுத்தியது. சில மாணவர்கள் போலீஸ் தடுப்பை உடைத்து மேலும் முன்னேறிச் செல்ல
விரும்பினர். அவ்வாறு செய்வதிலிருந்து அவர்களைப் பிரசண்டா உறுதியாகத் தடுத்து தனது
உத்தரவுகளைப் பின்பற்றச் செய்தார். அவரும்கூட ஒரு திட்டம் வைத்திருந்தார். மற்றொரு
ஆர்ப்பாட்டத்தை அவர் திட்டமிட அது தெற்கிலிருந்து
15 நிமிடத்தில் தொடங்கியது. தற்போது போலீஸ் வடக்கிலும் தெற்கிலும் இருந்த மாணவர்கள்
மத்தியில் அகப்பட்டு முழுமையாகச் சிக்கிக் கொள்ள, போலீஸ் தடுப்பு அகற்றப்பட வேண்டியதாயிற்று!
இவ்வாறு பிரசண்டாவும் BPSF தலைமையும் போலீசை முறியடித்தனர்!
1940 நாக்பூர் AISF மாநாட்டில் பிரசண்டாவின் பங்கு
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் AISF அமைப்பு நாக்பூர்1940 மாநாட்டில் இரண்டாகப் பிளவுபட்டது நாம்
அறிந்த ஒன்று. பிளவிற்கான காரணம் அடிப்படையில் போரைக் குணாம்சப்படுத்தும் சர்ச்சை சம்பந்தமானது.
முக்கியமாகக் கம்யூனிஸ்டுகளை உள்ளடக்கிய பெரும்பான்மையினர் போரை ஏகாதிபத்திய யுத்தம்
என அழைக்க விரும்பினர் மற்றும் அனைத்துப் போர்
முயற்சி நடவடிக்கைகளையும் எதிர்க்க வேண்டும் என்றனர்; அதே நேரம் சிறுபான்மையினர் –
முக்கியமாக காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் CSP கட்சியினரும்-- அக்கருத்தை முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை.
பிரசண்டாவும் வங்காளச் சார்பாளர் குழுவும் அமைப்பு பிளவுபடுவதை
எதிர்த்தனர், சமரச பார்முலாவை எட்ட விரும்பினர். AISF பொதுச் செயலாளர் எம் எல் ஷா என்ற காங்கிரஸ்காரர், பேச்சுவார்த்தை
நடத்த ஒப்புக்கொண்டு, ஆனால் அதற்கு நிபந்தனையாக எதிர்த்தரப்பில் பிரசண்டா சன்யால் பிரதிநிதித்துவப்படுத்த
வேண்டும் என்றார் – இது எவ்வளவு உயர்வாக அவர் மதிக்கப்பட்டார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
ஆனால் இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்கவில்லை. பிரசண்டாவின் முயற்சிகள்
தோல்வியடைந்தன. எனினும் மாணவர்கள் ஒற்றுமைக்காகத் தொடர்ந்து பணியாற்றினார்.
ஒற்றுமை குறித்து விவாதிக்க இரண்டு அணிகளின் இணைந்த கூட்டம்
பேராசிரியர் சதீஷ் கலேல்கர் இல்லத்தில் கூடியது; சமரசம் செய்யும் பொறுப்பு பேராசிரியரிடம்
வழங்கப் பட்டிருந்தது. ஷா மற்றும் ஃபரூக்கி குழுக்கள் காலை உணவு நேர கூட்டத்தில் கலந்து
கொண்டன. கலந்து கொண்டவர்களில் AISF அமைப்பிலிருந்து பிரசண்டாவும் ஒருவர். 2-3 மணி நேரம் ‘கலேல்கர்
பார்முலா’ விவாதிக்கப்பட்டது.
வகுப்புவாதக் கலவரங்களுக்கு எதிரான போராட்டம்
பிரசண்டாவின் வாழ்க்கையில்
பெருமிதம் மிகுந்த தருணங்களில், டாக்காவில் 1938 தொடக்கத்தில் வகுப்புவாத கலவரங்களுக்கு
எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டது முக்கியமானது. அந்த ஆண்டில் தீவிரக் கலவரங்கள்
காரணமாக டாக்கா பல்கலைக் கழகம் மூடப்பட்டது. வகுப்புக்களுக்கிடையே சமாதானம், நல்லிணக்கத்திற்குப்
பணியாற்ற பிரசண்டா மற்றும் பிறர் தலைமையில் BPSF மாணவர்கள் சென்றனர். அந்தப் பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற
பேராசிரியர் ஷாகித்துல்லா மற்றும் பேராசிரியர் சத்யன் போஸ் (போஸ் -ஐன்ஸ்டீன் புகழ்,
குவாண்டம் மெக்கானிக்ஸ் துறை பௌதீக ஆராய்ச்சிப் பேராசிரியர்) மாணவர்கள் குழுவினருக்குத்
தீவிரமாக உதவி புரிந்தனர்.
வந்தே மாதரம் பாடலைப் பாடுவது குறித்த கேள்வி தொடர்பாக டாக்கா
பல்கலைக்கழகத்தில் 1943 ஜனவரி பிப்ரவரியில் மீண்டும் கலவரங்கள் வெடித்தன. முஸ்லிம்
தீவிரவாதச் சக்திகளும் இந்து வகுப்புவாதிகளும் தீவிரமாகக் கலவரங்களில் ஈடுபட்டனர். AISF எதிர்த்துப் போரிட்டு நிலைமையை இயல்பு நிலைக்குக் கொண்டு
வர உதவினர். இந்த வகுப்புவாத சக்திகளை எதிர்த்துப் போரிடுவதில் AISF தலைவராகப் பிரசண்டா சன்யால் தீவிரப் பங்காற்றினார்.
சிறார்கள் AISFல் இணைதல்
தி ஸ்டூடண்ட் என்ற AISF இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரான பிரசண்டா, அதன் 1943 இதழில் எழுதிய கட்டுரையில் கல்கத்தா இந்தியன் அசோசியேஷன் ஹாலில் 300
சிறுவர்கள் கலந்து கொண்ட கூட்டம், AISFல் எப்படிச் சேர்வது மற்றும் எதற்காக என்பதை விவாதிப்பதற்காக நடந்தது என்ற தகவலைத் தருகிறார். அதற்கான ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. உலகப் போர் மற்றும் பெரும் பஞ்சம் நிலவிய பின்னணியில் இது நடத்தப்பட்டது.இக்காலகட்டத்தின்போது வங்காளம் முழுவதும் AISFன் எண்ணிறந்த கிளைகள் அமைக்கப்பட்டன. வங்கத்தின் பஞ்சம் மற்றும்
இரண்டாவது உலகப் போருக்காக மிகப் பெரும் அளவில் மாணவர் போராட்ட நிதி திரட்டப்பட்டது.
1943 ஆகஸ்டில் AISFன் பொதுச் செயலாளராகப் பிரசண்டா சன்யால் அப்போதைய பிரச்சனைகளை
எதிர்கொண்டு சந்திக்க மாணவர்களின் ஒற்றுமைக்காக வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார்.
மாணவர் உழைப்பாளர்கள் மாநாடு 1943 பம்பாய்
AISFன் செயலாளராகப் பிரசண்டா சன்யால் தி ஸ்டூடன்ட் 1943 அக்டோபர்
இதழில் ஆல் இந்தியா ஸ்டுடென்ட் ஒர்க்கர்ஸ் மாநாடு நடக்க உள்ளதாக அறிக்கை வெளியிட்டார்.
AISFன் 80, 000 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 14 மாகாணங்களிலிருந்து
93 பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாடு, 1943 நவம்பர் 25 முதல் 30 வரை நடைபெற்றது. அது
1943 ஜூலை முதல் நவம்பர் வரை நடந்த நிகழ்வுகளைப் பரிசீலனை செய்தது. அக்காலகட்டத்தின்போது,
வங்கத்தின் பஞ்ச நிவாரணப் பணிகளுக்காக ரூ65000 திரட்டப்பட்டது என்றும், 3000 AISF தன்னார்வலர்கள் ஒவ்வொரு நாளும்
26,000 மக்களுக்கு உணவளிப்பதற்காக 86 சமையல் கூடங்களை நிர்வகித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அசாமில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தல்
AISF பணி தொடர்பாகப் பிரசண்டா அசாம் செல்வது வழக்கம். அந்த மாகாணத்தில்
AISFஐ அமைக்க நடத்தப்பட்ட மாணவக் குழுவினர்களின் அனைத்து அசாம்
முகாமில் பிரசண்டா உரையாற்றினார். அவரது வழிகாட்டலில் 1942 செப்டம்பரில் ஒரு மாணவர்
முகாம் கோலகாட் என்ற இடத்தில் நடத்தப்பட்டது.
அதற்கு முன் 1941ல் பிரசண்டா மேல் அசாம் (Upper Assam) பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியை
அமைக்க அனுப்பப்பட்டார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கம்யூனிஸ்ட் கட்சி
அங்கே கால் ஊன்றி வளர்ந்து விடக்கூடாது என விரும்பிய சில நபர்கள் அவரைக் கடுமையாகத்
தாக்கி காயப்படுத்தினர். 1942 மத்தியில் அவர் அசாமை விட்டு புறப்பட்டார்; இருப்பினும்,
கட்சியின் மையக் கரு அமைப்பு ஏற்கனவே அங்கு வடிவம் பெற்றிருந்தது.
பம்பாய் கட்சித் தலைமையகத்தில்
பம்பாயில் பிரசண்டா முதலில் AISF பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். அந்த அமைப்பின் தி ஸ்டுடென்ட் இதழின் எடிட்டோரியல் போர்டு உறுப்பினராகவும் இருந்தார். ஏஐஎஸ்எப் மற்றும் கட்சியை அமைப்பதற்காக நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்தார். பின்னர் மத்தியக் கட்சியின் வார பத்திரிகையான பியூப்பிள் வார் (மக்கள் யுத்தம், பின்னர் அது பியூபிள்ஸ் ஏஜ் என்றான) வார இதழின் கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர் ஆனார்.
பிரசண்டாவின் மைத்துனர் சந்திரகுப்தா சௌத்ரி, மகாராஷ்டிரா
சிபிஐ தலைவரும் மற்றும் ஹைதராபாத்தில் (பிரிட்டிஷ் ராஜாங்க) மாகாணங்களின் மக்கள் இயக்கத்தின்
(States’ People’s movement) நிறுவனர்களில்
ஒருவரும் ஆவார். அவர் பம்பாய் கட்சி தலைமையகத்தில் பிரசண்டாவின் கம்யூன் வாழ்க்கை குறித்து
நினைவு கூர்ந்துள்ளார்:
‘பிசி ஜோஷி தலைமையின்
கீழ் சிபிஐ அலுவலகமான ராஜ்பவன், தேனீக்களின் இருப்பிடம்போலச் சுறுசுறுப்பான நடவடிக்கைகள்
ததும்பி நிரம்பிய இடம். தூய்மையான தோழமை மற்றும் (சுய) கட்டுப்பாடுகள் தவழும் அதன்
சூழல், எனினும் வெளிப்படைத் தன்மை மிளிர்ந்த இடம் அது. அங்கே பெரியவரோ சிறியவரோ ஒவ்வொருவரும் குறைந்த தேவைகளுடன் ஒன்றாக
வாழ்ந்தார்கள், ஒன்றாக உண்டார்கள், ஒன்றாக இணைந்து பணியாற்றினார்கள். தோழர்கள் அங்கே
வாழ்ந்த நாட்களைத் தங்கள் வாழ்வின் ஆகச் சிறந்த காலமாக நினைவு கூர்கிறார்கள். அத்தகைய
ஒரு சூழலில் பிரசண்டா ஓர் உண்மையான கம்யூனிஸ்டாகப் பயிற்றுவிக்கப்பட்டார்’.
இந்த அனைத்தையும் பிடிஆர் காலம் சிதறடித்தது, தோழமையை அழித்துப்
பரஸ்பர சந்தேக விதைகளைத் தூவியது, அவ்வளவு ஏன், கட்சியையே சிதறடித்தது. ஆக கூடுதலான
குழுவாதப் போக்கு (செக்டேரியன்), இதயமற்ற கொள்கை அரசின் அடக்குமுறைகளுக்கு அழைப்பு விடுத்தது. பலர் தங்கள் அரசியல் வாழ்வை
இழந்தனர். கொந்தளிப்பான இந்தக் காலத்தின் ஊடாகப் பெரும் நெருக்கடிகளைப் பொறுமையாகவும்
ஒருமைப்பாட்டு உணர்வுடனும் பிரசண்டா வாழ்ந்தார்.
PPH பதிப்பகப் பொறுப்பாளராக
1950 வாக்கில் பம்பாயில் PPH மக்கள் பதிப்பகப் பொறுப்பாளராகப் பிரசண்டா நியமிக்கப்பட்டு, பின்பு அதன் பொது மேலாளராக ஆக்கப்பட்டார். நலிவுற்றுத் தடுமாறிய
அப்பதிப்பகத்தைத் தன் சொந்தக் காலில் எழுந்து நிற்க வைத்தார். பதிப்புகளை அதிகரித்தது மற்றும் புத்தகங்களின் விற்பனையை உயர்த்தியது மட்டுமல்ல, புதிய எழுத்தாளர்களையும், பதிப்பகத்துடன் இணைந்து செயல்படும் கூட்டாளிகளையும் அவர் கண்டறிந்தார். பல்வேறு விஷயங்கள் குறித்த புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிடுவது தொடங்கியது. PPH பதிப்பகத்திற்காக அவர் வடிவமைத்த ஒருங்கிணைந்த எதிர்காலச் செயல் திட்டம் அதன் பின்னரும் பதிப்பகத்திற்குத் தொடர்ந்து பயனளித்தது.திருமணம்
1946 பம்பாயில் சந்திரகுப்தா
சௌத்ரியின் சகோதரி கமல்சௌத்ரியைப் பிரசண்டா சன்யால் மணந்தார். அந்நேரத்தில் தொழிற்சங்க
முன்னணி அரங்கில் பணியாற்றினார். ஆனால் குடும்பம் மற்றும் குழந்தைகள் கட்டாயத்தால்
அவர் வேலை தேட நேரிட்டது. புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் வரலாற்றாளர் சின்மோகன் ஷேகானவிஸ்
(Chinmohan Sehanavis) இந்திய புள்ளியியல்
நிறுவனத்தில் அவருக்கு ஒரு வேலை வழங்கும்படி அதன் பேராசிரியர் பிரசண்டா மகளநோபிஸ் (Prasanta Mahalanobis)அவர்களை வேண்டினார்.
1955ல் PPH பதிப்பகம் டெல்லிக்கு
மாற்றப்பட்ட பிறகு, அந்த வேலையை விட்டுவிட்டு கல்கத்தா திரும்பினார்.
பிந்தைய வாழ்க்கை
அதைத் தொடர்ந்து பிரசண்டா, ஜே வால்டர் தாம்சன் கம்பெனியில்
காப்பி ரைட்டராகப் பணியாற்றினார். பின்னர் அவர் விளம்பரங்கள் உலகில் இணைந்து பணியாற்றியதில்
கிளாரியான் மெக்கான் (Clarion McCann) அட்வர்டைசிங் ஏஜென்சி மற்றும் இந்தியன் ஆக்சிஜன் லிட்.,
நிறுவனங்களில் ஆற்றிய பணிகள் ஆகும். கடுமையாகப் பணியாற்றுவது, நேர்மை மற்றும் பணியில்
அர்ப்பணிப்பு போன்ற அவரது குணங்கள் எல்லோரிடத்தும் எல்லா இடத்தும் ஏற்படுத்திய தாக்கம்,
பாராட்டு, மரியாதைகளை பெற்றுத் தந்தது. கிளாரியான் அட்வெர்டைஸ்ங்கில் அவர் மேனேஜிங்
டைரக்டராக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.
1967ல் அவர் டைம்ஸ் ஆப் இந்தியா இதழின் லண்டன் பதிப்பின்
ஆசிரியர் குழு தலைவராகப் பொறுப்பேற்றார். அங்கே கம்யூனிசத்தின் பல்வேறு வகையான போக்குகள்
மற்றும் விளக்கங்களுடன் அவர் பரிச்சியமும் தொடர்பும் பெற்றார்.
இந்திரா காந்திக்கு உதவியாளராக
திருமதி இந்திரா காந்தி தகவல் ஒலிபரப்பு அமைச்சராக இருந்தபோது பிரசண்டா அவருக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார், அப்போது இந்தியன் ஆக்சிஜன் நிறுவனத்தில்
(தற்போது அது லின்டே பிக் என்ற பொதுத்துறை நிறுவனம்) பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த நாட்கள்பாகிஸ்தானுடன் போர் நடந்த கடுமையான நாட்கள்.அவர் (ஊடக விளம்பரப் பதிப்பு, சர்குலேஷன்களின் வெளிப்படைத்
தன்மையை உறுதிப்படுத்துவதற்கான) தணிக்கை பீரோ அமைப்பின் தேசியக் குழுவில், கல்கத்தா
சினிமா சென்சார் போர்டு உறுப்பினராக இருந்து சேவையாற்றினார். மேலும் குறும்படங்களின்
விருதுகளுக்கான ஜூரி தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்
அவர் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் என்ற பொதுத் துறை பிரிவு
நிறுவனத்திலும் பணியாற்றினார். 1976ல் அவர், (விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தலில்
வழங்கப்படும் HK McCann Award) ஹெச் கே மெக் கேன் விருது வழங்கப்பட்ட முதல் இந்தியர் ஆனார்.
பத்திரிக்கை இதழ்களுடன்
ஆனந்த பஜார் குழு பத்திரிகைகளுடன் அவர் நெருக்கமாக இருந்து,
டெய்லி டெலிகிராஃப் தொடங்கியதுடன் மற்றும் வீக்லி லிங்க், டெய்லி பேட்டரியாட் போன்ற
செய்திப் பத்திரிகைகளுடன் பணியாற்றினார். 1978ல் வங்க மொழி மாத இதழான பரோமாஸ் (‘ஆண்டைச்
சுற்றி அனைத்தும்‘) நிறுவுவதுடன் அவர் நெருக்கமாகச் சேர்ந்து
இருந்தார், அந்த நெருக்கமும் தொடர்பும் அவர் இறக்கும் வரை நீடித்தது. இது தவிரவும்,
அவர் பல்வேறு பிற பத்திரிக்கை, இலக்கியம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் நிறுவனங்களுக்குப்
பங்களிப்புச் செய்தார்.
மாணவர்,
கம்யூனிஸ்ட் மற்றும் பரவலான சமூக இயக்கங்களின் வரலாற்றின் மீது பிரசண்டா சன்யால், அழிக்க
முடியாத தனது அடையாள முத்திரையைப் பதித்துவிட்டு 1990 டிசம்பர் 10ல் மாரடைப்பு காரணமாக
மரணமடைந்தார்.
விளையும் பயிர் முளையிலே என்பது போல மாணவர் இயக்கம் தந்த
கொடை பிரசண்டா சன்யால் புகழ் வாழ்க!
--நன்றி : நியூஏஜ் (2025, பிப்.23 –மார்ச் 1)
– தமிழில் : நீலகண்டன்,
என் எஃப் டி இ, கடலூர்