Sunday 10 March 2024

மார்ச் 8, சர்வதேசப் பெண்கள் தினம் -- பெண்களைத் தவிர்த்தால், சமூக வளர்ச்சி மாற்றம் சாத்தியமில்லை

 மார்ச் 8, சர்வதேசப் பெண்கள் தினம்

                                              

  பெண்களைத் தவிர்த்தால், சமூக வளர்ச்சி மாற்றம் சாத்தியமில்லை

--டாக்டர் பி வி விஜயலெட்சுமி

உலகம் முழுவதும் சர்வதேச நாள்கள், வாரங்கள் மற்றும் ஆண்டுகள் எனப் பல கொண்டாடப்படுகின்றன. ஆனால் சர்வதேசப் பெண்கள் தினம், ஆகக் கூடுதலான முக்கியத்துவம் பெற்றிருந்த போதிலும் மிகவும் காலம் தாழ்த்தி, 1975ம் ஆண்டுதான் பரவலாகக் குறிப்பிடப்பட்டது. சமத்துவத்திற்குப் போராடுகின்ற கால ஓட்டத்தில் பெண்கள் தாங்களாகவே அதைப் பிரகடனம் செய்தனர். சமத்துவம், வரலாறு நெடுக மறுக்கப்பட்டு ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சியில் நாம் நுழையும் இந்நாள்களில்கூட, பெண்களின் சமத்துவமற்ற அந்தஸ்து என்ற நிலையில் பெரிய மாற்றம் எதுவும் நடந்துவிடவில்லை.

இச்சூழலில், இன்றைய இந்த நாள், தங்கள் தினசரி வாழ்விலும் பெண்கள் சந்திக்கும் அநீதிகள் மற்றும் வரையறையற்ற பாடுகள் குறித்து உலகத்திற்கு நினைவூட்டும் நாளாக அமைகிறது. கடுமையான பணிசூழல்களில் அவர்கள் உழல வேண்டியிருக்கிறது. மக்கள் தொகையில் பெண்கள் செம்பாதியாக இருப்பினும் அவர்களிள் பாடுகளில் இளைப்பாறுதல், இடைவெளி என்பதும் இல்லை, நியாயமாக அவர்களுக்கு உரிய வசதிகளும் இல்லை. இந்த நாளில், போதுமான வாழ்வாதாரம் மற்றும் பணிநிலைகளுக்குப் போராடும் பெண்கள், கடந்த காலங்களில் இதுவரை அடைந்த வெற்றிகளைக் கொண்டாடுகிறார்கள்; மேலும் இன்னும்  முடிக்கப்படாத வரலாற்றுக் கடமைகளுக்குத் தயார் செய்து கொள்கிறார்கள்.

மக்கள் தொகையில், ஏழ்மை, சுகாரமின்மை, வேலையின்மை, எழுத்தறிவின்மை மற்றும் பாதுகாப்பு இன்மை எனபனவற்றால் பாதிக்கப்படும் பகுதியினராக உண்மையில் பெண்களே உள்ளனர். மேலும் தங்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படாத சூழ்நிலைகளில் அவர்கள் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது மிக முக்கியம். எந்தெந்தப் பணிகளைச் செய்வதற்கு அவர்கள் கல்வித் தகுதியையும் கூடுதல் பயிற்சிகளையும் பெற்றார்களோ அந்த இடங்களுக்குக்கூட அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. பெண்கள் கூடுதலாகத் தகுதி உடைய பணிகளுக்குக்கூட, எல்லா இடத்தும், ஆண்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது.

                            பொதுவாக உடல்ரீதியில் மட்டுமின்றி சமூக ரீதியிலும்கூட பெண்கள் எளிதில்

பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். சமூகம் அவர்களை, அவர்களுக்கென்ற உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலைக்குப் பிடித்துத் தள்ளுகிறது. இதில் மிகவும் கவலைக்குரியது, உலகம் முழுவதும் இது உண்மையாக  இருப்பதாகும். வளர்ச்சி அடைந்த சமூகங்களிலும்கூட பெண்கள் சமத்துவமற்று நடத்தப்படுகிறார்கள். நிறுவனங்களில் போர்டு அமைப்பு என்பது உச்சநிலை அதிகாரம் உடையது. நிறுவனங்களின் அத்தகைய போர்டு கூட்டங் களில் கலந்து கொள்ளும் பெண் உறுப்பினர்கள் பங்கு மிகச் சொற்பமானது –என்னதான் அவர்களுக்கு மேம்பட்ட கூடுதல் கல்வித் தகுதி, திறமை மற்றும் அனுபவம் இருந்த போதிலும் உயர் மட்டத்தில் பெண்களின் பங்கு என்பது அரிதாக உள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் ஆண் பெண் சமத்துவத்தை அடிக்கோடிட்டு வலியுறுத்திய போதிலும், நடைமுறையில் எங்குமது பின்பற்றப்படுவதில்லை. பெண்களின் தவறு அல்லது திறமையின்மை காரணம் எதுவுமே இன்றி, அவர்கள் சந்திக்கும் துயரங்களுக்கு எதிராகப் போராடுவதில், இந்தச் சமூகம் முழுமையும்தான் அவர்களுக்கு உதவிட உணர்வுடன் முன்வர வேண்டும். தன் சொந்த மக்களுக்கு எதிராக எந்த அநீதியும் நிகழாத சமூகத்தைக் காண்பதற்கு அது ஆண் பெண் இருவருமே இணைந்து நடத்தும் போராட்டமாக வேண்டும். குறுகிய சொந்த நலன்களுக்காக நீதியைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளும் கும்பலிடம் பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை முறியடிக்க சமூகம் உதவிக் கரம் நீட்ட வேண்டும்.

பெண்களை வேண்டுமென்றே அடிமையாக வைத்திருப்பது முதலாளித்துவச் சமூகத்தில் மிகவும் சாதாரண வழக்கம். அவளால் எதிர்த்துப் பேச முடியாது, அவர்கள் குரல் அற்றவர்கள். அத்தகைய சமூகத்தில் ஆண்கள் குடும்பத்திற்கான வருவாய் ஈட்டும் ஒரே நபராய் எந்தக் கடினப் பணியிலும் உழல வேண்டியவர்களாக உள்ளனர். அநீதியை எதிர்க்க அவனுக்கும் உரிமை இல்லை, அவன் தலைக்கு மேல்தான் வேலையின்மை என்ற கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறதே. குடும்பத்தை உயிரோடு வைத்திருக்க அவனுக்குக் கிடைத்த வேலைதான் வருவாய்க்கான ஒரே வழி. நாளும் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற இந்தப் பிரச்சனைக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு கண்டாக வேண்டும்.

இது தனிநபர் பிரச்சனை அன்று, சமூகப் பிரச்சனை. மக்களின் வாழ்வில் சூழ்ந்துள்ள துன்ப துயரப் பாடுகள் குறித்துச் சமூகம் முழுவதும் விழிப்புணர்வு பெற வேண்டும். அதிக எண்ணிக்கையில் பெண்கள் உட்பட மக்கள் உணர்வுநிலையையும் விழிப்புணர்வையும் எழுப்பி, அரசியல் உறுதிப்பாடு ஊட்டப்பட வேண்டும். இவற்றிற்கெல்லாம் மேலாக ஒரு தீர்வு காணப் போராட மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். சர்வதேச மகளிர் தினம் இவை எல்லாவற்றையும் உரத்து ஒலிக்கும் முக்கியத்துவம் உடையது. இந்த நாள் எதிர்காலத்திற்கும் அதன் பயன்பாடுகளை உடையது. ஆனால் இவற்றிற்கு மாறாக, இந்த நாளை வியாபார நோக்கங்களும் குறுகிய சொந்த நலன்களுக்கும் பயன்படுத்துபவர்களும் உள்ளனர் – மகளிர் தினத்தை முன்னிட்டு அவர்கள் தங்களின் பொருட்களை விளம்பரம் செய்கிறார்கள். எனவேதான இந்த நாளின் உண்மையான நோக்கங்கள் குறித்து நாம் விழிப்புடன் இருந்தாக வேண்டியுள்ளது.

மோசமான நிலைமைகள் இருந்தபோதிலும், பெண்கள் அவற்றை மீறி வாழ்கிறார்கள், தடை ஏற்படுத்துவற்றை எதிர்த்துப் போராடுகிறார்கள், வெற்றி பெறுகின்றனர். சமூகத்தின் பல தளங்களில் அவர்கள் வெற்றிகரமாக உலா வந்து, பெரும் உயரங்களை எட்டுகிறார்கள். இப்பயணத்தில் அவர்களின் வீரம் மற்றும் தியாகங்களின் வரலாறுகளை ஆய்வு செய்வதும் தற்போதைய தலைமுறைக்காக அவற்றைப் பதிவு செய்வதும் நமது பொறுப்பாகும். பெண்கள் வளர்ச்சி பெற்று முன்னேறும்போது, அந்த முன்னேற்றம் முழு மனிதகுலச் சமூகத்திற்கானது. (ஒரு ஆண் கல்வி கற்றால் தனியொருவன் பயனடைவான், ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால், அவள் குடும்பமும் அவள் வாழும் சமுதாயமும் மட்டுமன்றி, ஒரு நாட்டுக்கே நற்பயன் கிட்டும்’ என்றார் மகாத்மா காந்திஜி).

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, ஆயிரக் கணக்கான பெண்கள் வாக்குரிமைக்காக, வேலை வாய்ப்புக்காக, நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் முதலிய கோரிக்கைகளுக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்கப் போராட்டங்களைத் தொடுக்க முன் வந்தனர். தொழிற்புரட்சியின் தொடக்க காலத்தில் பல்வேறு குடும்பங்கள் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தன. அவர்கள் பசி பட்டினியைச் சந்தித்துப் பரிதாபகரமான நிலைகளில் உழன்றனர். அங்கே சூரியன் உதிப்பதற்கு முன் அவர்கள் தங்கள் பணியிடங்களுக்குச் சென்று, சூரியன் மறைந்த பிறகு திரும்புவது வழக்கம். வாராந்திர ஓய்வுகூட இல்லாமல் சில நேரங்களில் 12 முதல் 16 மணி நேரம் வரை அவர்கள் உழைத்தார்கள். நல்ல காற்று, சூரிய வெளிச்சம் இல்லாத சிறிய குடியிருப்புகளில் வாழ்ந்தனர். 8 முதல் 10வயது வரையேயான குழந்தைகள்கூட அவர்களின் தாயார்களுடன் வேலைக்குச் செல்வது வழக்கம்.

மேற்கண்ட துன்பமயமான பரிதாப நிலைகளில் தொழிற்சங்கங்களும் பெண்கள் அமைப்புகளும் சேர்ந்து வலிமையான இயக்கங்களைக் கட்டினர். பெண்களை விழிப்புணர்வு பெறச் செய்ய பல முயற்சிகள் பெண்கள் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டன.

அமெரிக்காவின் நியூயார்க் நகர், மன்காட்டன் பகுதியின் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு ஆலைகளில் பணியாற்றிய 20 –30 பெண் உழைப்பாளர்கள் இணைந்து, 1909ல் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரபலமான வேலைநிறுத்தத்தை 11 வாரங்கள் தலைமையேற்று நடத்தினர். அந்த வேலைநிறுத்தம் நிர்ணயிக்கப்பட்ட வேலைநேரம், கூலி உயர்வு, வாராந்திர ஓய்வு முதலியவற்றைக் கோரி நடத்தப்பட்டது. மிக மோசமான கடுமையான பருவநிலை சூழல்நிலைகளிலும் அவர்கள் துணிவுடன் போராடினர். காவல் துறை, இராணுவம் மற்றும் கூலிப்படை கும்பல் பெண்களைக் கடுமையாகத் தாக்கிய போதிலும், எதற்கும் அஞ்சாமல் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அவர்கள் உறுதியுடன் போராடினர். மொத்தம்  353 கம்பெனிகளில் 339 முதலாளிகள் கோரிக்கைகளை ஏற்பதற்கு நிர்பந்திக்கப்பட்டனர்.

இந்த வெற்றி பெண்கள் அமைப்புகளை ஊக்கப்படுத்த அவர்கள் சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடத் தயாரிப்புகளை மேற்கொண்டனர். பெண்கள் தினத்தைக் கொண்டாடுவது என்ற

யோசனை 1910ல் இரண்டாவது அகிலத்தின் அமர்வின்போது கிளாரா ஜெட்கின் அவர்களால் முன் வைக்கப்பட்டது. 1911ல் ஓர் ஆலை தீ விபத்தில் 146 உழைக்கும் பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர். சர்வதேசப் பெண்கள் தின விழாக்களில் இந்தத் தியாகிகளுக்கு உலகம் முழுவதும் பெண்கள் புகழ் அஞ்சலி செலுத்தினர். இத்தகைய வீரம் செறிந்த போராட்டங்கள் மற்றும் வெற்றிகளின் செழிப்பான கடந்த காலத்துடன் சர்வதேசப் பெண்கள் தினம் அனைத்து நாடுகளிலும் பெண்களை மிகப் பெரிதும் உற்சாகப்படுத்தியது. அது மட்டுமின்றி அந்த நாள், எந்த அநீதியுடனும் சமரசம் செய்யாது அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டுமென்ற படிப்பினையைக் கற்றுத் தரும் பாடமாகவும் நிரூபணமானது.

ஆணாதிக்கமுள்ள சமூகங்கள் பல நாடுகளில் மெல்ல கலகலத்து வருகின்றன என்பது உண்மையான போதிலும், இந்தியாவில் மனுஸ்மிருதி வழிகாட்ட வலது பிற்போக்கு சக்திகள் ஆட்சியில் உள்ளன. பெண்களுக்கு எதிரான பரவலான பாரபட்சம் நிலவுவதுடன், அது சமூகத்தைத் தனது பிடியில் வைத்துள்ளது. இத்தகைய விநோதத் தன்மை குறித்து ஆழமாக ஆராய வேண்டும். பாஜக ஆட்சியின் கீழ் இந்தியாவிலும், வலது பிற்போக்குவாதக் கட்சிகளால் ஆளப்படும் நாடுகளிலும்கூட, பெண்களின் பாதுகாப்பு என்பது எப்போதும் ஆபத்திலேயே உள்ளது. பத்தாண்டு காலத் தவறான ஆட்சியில், பெண்களின் பாதுகாப்பைப் பாஜக பெரிதும் ஆபத்துக்கு உள்ளாக்கி விட்டது. சோஷலிச ஆட்சி முறையில் பெண்கள் பாதுகாக்கப்படுவதுடன், அந்தச் சோஷலிச முறையே அவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நிகழாது தடுத்துப் பாதுகாப்பதை உத்தரவாதப்படுத்துகிறது. இதனை  எப்போதும் அனைவரையும் உள்ளிணைத்த அவர்களின் கொள்கைகளில் காணலாம்.

75வது சுதந்திரதின விழாவின்போது பாஜக அரசு, பெண்களுக்கு எதிராக மிகக் கொடூரமான பாதகங்களை இழைத்த குற்றவாளிகளை விடுதலை செய்தது. பாஜகவின அந்த நடவடிக்கை

பெண்களின் நலன் குறித்த அதன் அறிக்கைகளுக்கு நேர் எதிரானது. அது பன்மைத்துவக் கலாச்சாரம் மற்றும் தனிநபர்களின் சுதந்திரத்தில் தலையிட்டு சிதைப்பதாகும். குஜராத்தில் நிறைமாத கர்பிணியான பில்கிஸ் பானுவைக் கும்பல் வல்லுறவு செய்தும், அவர் குடும்ப உறுப்பினர்களைப் படுகொலையும் செய்தனர். நீதிமன்றத்தால் தாமதமாகவேனும் தண்டிக்கப்பட்ட அக்கொடூரக் குற்றவாளிகளின் தண்டளை காலத்தை வெட்கமற்று குறைத்த பாஜக அரசு அவர்களை விடுதலை செய்தது மட்டுமின்றி மாலையிட்டு வரவேற்கவும் செய்தது. இந்த நிகழ்வில் ஓர் அம்சத்தை நாம் நினைவூட்ட வேண்டும். இராமாயணத்தில் ஸ்ரீஇராமர் தனது மனைவி சீதாவை விட்டு நீங்கினார், ஆனால் பில்கிஸ் பானுவின் கணவர், இவ்வளவு நிகழ்வுகளுக்குப் பிறகும் தனது மனைவியை ஒருபோதும் விட்டுப் பிரியவில்லை, அவரது முழுமையான சட்டப் போராட்டத்தில் அவர் உறுதியாக உடன் இருந்தார்.

நமது நெடிய போராட்டங்களின் பாரம்பரியத்தில், பாலினப் பிரச்சனைகளில் லெனின் மற்றும் கிளாரா ஜெட்கினின் வழிகாட்டல்கள் உள்ளன. அவ்வழிகாட்டல்கள் இன்றும்கூட பொருத்தமானவை ஆகும். பாலினச் சமத்துவத்தைச் சாதிப்பது சமூகத்தை மாற்றுவதன் மூலமே சாத்தியம் என அவர்கள் நம்பினர். எனவே இன்றைய சமூக முறையைக் கட்டாயம் மாற்ற வேண்டும். வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளும் இன்றைய வலதுசாரி பிற்போக்கு நடவடிக்கைகளை ஆராய்ந்து தெளிவாகப் புரிந்து கொள்ள அவர்களின் வழிகாட்டல்கள் மூலமே முடியும். வலதுசாரி பிற்போக்குக் கருத்தியல் பழமையான ஆணாதிக்க பங்கினைப் பலப்படுத்த அடிக்கடி முயற்சி செய்யும். அது பெண்களைக் கீழே தொலைவில் தள்ளி வைக்கும். ஆனால் இதற்கான மாற்றைச் சோஷலிச மற்றும் கம்யூனிச முறைகளில் காணலாம். அந்தச் சமூக முறைமையில் விடுதலையையும் பாலினச் சமத்துவத்தையும் நாம் காணலாம். பெண்களின் உரிமைகளுக்கானப் போராட்டம் சம்பந்தமாக லெனின் மற்றும் கிளாரா ஜெட்கின் திட்ட வடிவமைப்புகள், சமூகப் பொருளாதார சமத்துவமின்மைகளுக்கு எதிரான போராட்டங்களுடன் நெருக்கமாகத் தொடர்புடையனவாகும்.

இவற்றைத் தொகுத்தால், சர்வதேசப் பெண்கள் தினக் கொண்டாட்டங்கள், லெனின் மற்றும் கிளாரா ஜெட்கினின் திட்ட உத்திகளுடன் சேர்ந்து ஒரு வலிமையான செய்தியைத் தருகிறதென்று கூறலாம்: அது, எதிர்வரும் புரட்சிகர மாற்றங்கள் பெண்களின் நிலைமைகளை மேம்படுத்தி அவர்களின் உரிமைகளை மீட்டமைக்கும். பிற்போக்குப் பார்வை மற்றும் போக்குகளுக்கு எதிராக விஞ்ஞான உலகப் பார்வையை உணர லெனின் மற்றும் கிளாரா ஜெட்கின் மரபு உதவிடும். மேலும் அது அடிமைத் தளைகளிலிருந்து பெண்களை மட்டும் விடுதலை  செய்வது மட்டுமின்றி,  முழுமையான மனித குலத்தை விடுவிக்கும். பெண்களுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம், சமமான உரிமைகளை அடைவதற்கான போராட்டத்தில் பெண்களுக்கு உதவும். அதையும் தாண்டி, பொருளாதார, அரசியல் முறையில் பெண்களுக்குச் சமமான பங்கு மற்றும் சமத்துவ அங்கீகாரத்தைப் பெற உதவும்.

சர்வதேச உழைக்கும் மகளிர் தின விழாக்களில் இந்தச் செய்திகளைப் பெண்கள் மத்தியில் கொண்டு செல்வோம். நிச்சயமாக இது பெண்ணியம் அல்ல, ஆனால் மாறாகச் சமத்துவத்திற்கான நியாயமான போராட்டமாகும்.

அனைவருக்கும் மகளிர் தினத் தோழமை நல்வாழ்த்துகள்!

--நன்றி : நியூஏஜ் (மார்ச் 10 –16)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

No comments:

Post a Comment